- கேள்வி : ஆண்கள் புத்திசாலிகளா, பெண்கள் புத்திசாலிகளா? விளக்கமாக சொல்லுங்கள்! முருகேசபாண்டியன், சத்திரப்பட்டி.
ஞானகுரு :
பாரதத்தில் அற்புதமான ஒரு காட்சி. பாண்டவர்கள் சூது விளையாடி தோற்றுப்போய் கானகத்தில் வசிக்கும்போது, ஸ்ரீகிருஷ்ணர் அவர்களைக் காண வருவார். கிருஷ்ணரிடம் உரிமை எடுத்துக்கொண்டு பேசும் திரௌபதி அப்போது, ‘‘என் கணவர் சூதாட்டத்தில் நிச்சயம் தோற்றுவிடுவார் என்பது உனக்குத் தெரியும். அப்படியிருந்தும் ஏன் அவரைக் காப்பாற்ற வரவில்லை?’’ என்று கேட்பாள். அதற்கு கிருஷ்ணர், ‘‘தான் செய்வது தவறு என்று தெரிந்தே தர்மன் அந்தக் காரியத்தில் ஈடுபட்டான். மேலும் எனக்கு அந்த தவறு தெரியக்கூடாது, நான் அங்கே வந்துவிடக்கூடாது என்றும் வேண்டிக்கொண்டான். அதனால்தான் நான் அங்கே வரவில்லை. உண்மையை சொல்வது என்றால் என்னை கட்டிப்போட்டான்’’ என்கிறார்.
‘’உனக்குப் பிரியமான அர்ஜூனன் அடிமையான நேரத்திலும் காப்பாற்ற வரவில்லையே…’’
‘’அர்ஜூனன் அப்போது அண்ணன் மீது கோபத்திலும் கௌரவர்கள் மீது வன்மத்திலும் இருந்தான். என்னை அவன் நினைக்கவில்லை. நீ ஒருத்திதான் அதுவும் ஆடை களையப்பட்ட நேரத்தில்தான் நினைத்தாய்…’’ என்று சொன்னார் கிருஷ்ணன்.
‘’துன்பம் வராமல் தடுக்கவேண்டும் அல்லது வந்த துன்பத்தை நீக்க முயல வேண்டும். அழைத்தால்தான் வருவேன் என்று சொல்லும் நீ கடவுளா அல்லது அடியாளா?’’ என்று கேட்டாள் பாஞ்சாலி. ‘’புத்திசாலித்தனமாகப் பேசுகிறாய் சகோதரி. ஆனால் வினைப்பயன் இருக்கிறதல்லவா?’’ என்று சமாளிப்பார் கிருஷ்ணர். அதனை புரிந்துகொண்டு மேற்கொண்டு எதுவும் கேட்காமல் சிரிப்பாள் பாஞ்சாலி. ஆம், புத்திசாலித்தனம் கடவுளுக்குக்கூட சொந்தமில்லை. சிந்திக்கும் மனிதர்கள் அத்தனை பேருக்கும் பால்பாகுபாடு இல்லாமல் கிடைக்கக்கூடியது.