கையில் இருக்கும்வரை ஒரு பொருளின் மதிப்பு எவருக்கும் தெரிவதில்லை. அது காணாமல் போனபிறகுதான், ‘அரிய பொருளைத் தொலைத்துவிட்டேனே’ என்று நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுவார்கள். இது மனிதகுலத்துக்கே உரித்தான சாபம் என்றாலும், இந்தச் சிக்கலில் அதிகம் சிக்கிக்கொள்வது பெண்கள்தான். அவளால் தொலைக்கப்படுவது பொருள் அல்ல, புருஷன்.

என்ன புரியவில்லையா?

திருமணம் முடிந்த சில வருடங்கள் கணவன் மீது மனைவி உயிராக இருப்பாள். அவருக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்பதில் கவனம் செலுத்துவாள். கண்ணும்கருத்துமாக ஒவ்வொரு நொடியும் அவனையே கவனிப்பாள். சுருக்கமாகச் சொல்வதென்றால் ஒரு மகாராஜாவை கவனிக்கும் சேவகி போல் செயல்படுவாள். இது எல்லாமே ஒரு குழந்தை பெறும் வரையில்தான். அதன்பிறகு அவளுடைய முழுபார்வையும், கவனிப்பும் குழந்தைக்குச் சென்றுவிடும். குழந்தை சிணுங்கினாலே பதறிப்போகும் மனைவி, கணவன் நாலைந்துமுறை கூப்பிட்டாலும், ‘நீங்களே உங்க வேலையை பார்த்துக்க முடியாதா?’ என்றரீதியில் எகிறத்தொடங்குவாள். இதற்குப் பயந்து சில கணவன்மார்கள் மனைவியிடம் பேசுவதை தவிர்க்கத் தொடங்குவார்கள்.

இதுதான் ஆரம்பம். இந்த நேரத்தில்தான் கணவன் திசை மாறுகிறான். தன்னுடைய குறைகளை, தன்னுடைய ஆசைகளை கேட்டு, தன்னுடைய வெற்றியைக் கொண்டாடி, குறைகளை அனுதாபத்துடன் கேட்கும் பெண்ணிடம் தஞ்சம் அடைகிறான். இது எல்லா குடும்பத்திலும் நடக்கும் என்பதில்லை, ஆனால் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் ஆண்கள் எல்லோருமே பூனையைப் போன்றவர்கள். அதற்கு ருசியாக உணவு கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். நீங்கள் கொடுக்கவில்லை என்றால் தானே எடுத்துத்தின்ன முயலும். அதற்கும் வழியில்லை என்றால் அக்கம்பக்கத்தில் திருடியாவது சாப்பிட்டுவிடும். எந்தக் காரணம்கொண்டும் பட்டினியாக இருப்பதில்லை.

இந்த உண்மை புரியாமல், ‘என் புருஷன் எனக்கு மட்டும்தான் சொந்தம்’ என்று தெனாவெட்டாக நீங்கள் இருந்தால், மன்மதராசாவாக மாறிவிடுவார் கணவர். எந்தப் பெண் சிக்குவாள் என்று பார்த்து சிக்ஸர் அடித்துவிடுவார். அதெப்படி திருமணம் முடித்த ஆணை நம்பி ஒரு பெண் வருவாள் என்று அப்பாவியாக கேட்காதீர்கள். இந்த விஷயத்தில் அனுபவத்திற்கு இருக்கும் மரியாதையே தனிதான். ஒருவனுக்கு போதிய வருமானம், அந்தஸ்து, மனைவி மீது அக்கறை காட்டும் மனம் இருப்பது தெரிந்தால் நிச்சயம் திருமணத்துக்கு சம்மதித்துவிடுவாள். இந்த சைக்காலஜியில்தான் பெரும்பாலான நடிகைகள் திருமணமான ஆண்களையே தேர்வு செய்கிறார்கள். ஆரம்பத்தில் ரகசியமாகப் பழகும் ஆண்கள், ஒரு கட்டத்தில் வெளிப்படையாக பழகத் தொடங்குவார்கள். நீங்கள் தட்டிக்கேட்டால், ‘அப்படித்தான் இருப்பேன். வேண்டுமானால் விவாகரத்து வாங்கிக்கொள்’ என்பார்கள். இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது என்று பதைபதைப்பாக இருக்கிறதா?

தலைக்கு மேல் வெள்ளம் போனபிறகு அழுதுபுலம்புவதில் அர்த்தம் இல்லை. அதனால் உங்கள் கணவன், ஸ்ரீராமனைப் போன்று ஏகபத்தினி விரதன் என்று உறுதியாகத் தெரிந்தாலும், எப்போதும் அவர் மீது ஒரு கண் வைத்திருப்பதில் தவறில்லை. அவர் திசை மாறும் ஆட்டுக்குட்டி என்றால், அவரது நடவடிக்கை எப்படி இருக்கும் என்பதை இனி பார்க்கலாம்.

  1. செயற்கை பாசம் : வழக்கத்தைவிட அதீத பாசம் வழிந்தோடும். ரோட்டுல வரும்போது மல்லிகைப்பூ மணம் இழுத்திச்சு. உடனே உனக்கு அள்ளிட்டு வந்திட்டேன் என்று பத்து முழம் வாங்கி வந்திருப்பார். சம்பந்தமே இல்லாமல் இனிப்பு வாங்கித்தருவார். தலைவலிக்கிறது என்று நீங்கள் சாதாரணமாக சொன்னால்கூட, அருகில் இருந்து மருந்து தடவி கால் வரையிலும் பிடித்துவிடுவார். இவை எல்லாமே அவர் செய்யும் தவறுக்கான பிராயசித்தம். அதாவது குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பார்களே, அதனால்தான் இதுபோன்ற தாஜா பிடிக்கும் காரியங்களில் இறங்குவார்.
  2. ரகசிய பேச்சு : இதுவரையிலும் நடுக்கூடத்தில் வைத்து சத்தமாக போன் பேசியிருப்பார். இப்போது திடீர்திடீரென எழுந்து அறைக்குள் போய் பேசுகிறாரா என்று பாருங்கள். அதேபோல் உங்கள் கணவர் எதுவும் பேசாமல் ‘ம்’ மட்டும் போடுகிறாரா… சிக்னல் இல்லை… பிறகு பேசுகிறேன் என்று தவிர்க்கிறாரா என்பதையும் உன்னிப்பாகக் கவனியுங்கள். அதேபோல் சம்பந்தமே இல்லாமல் ஆணிடம் பேசுவதை உறுதிபடுத்துவதுபோல் பேச்சுக்குப்பேச்சு, ‘சொல்லுடா… ஆமாடா’ என்று பேசுகிறாரா? இவை எல்லாமே தப்பு செய்யத்தெரியாமல் செய்யும் சின்னச்சின்ன ஆரம்ப தப்புகள். கணவருக்குத் தெரியாமல் அடிக்கடி பேசும் நம்பரை எடுத்து, வேறு ஒரு எண்ணில் இருந்து போன்செய்து யார் என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.
  3. கணக்குவழக்கு : வரவு – செலவு பற்றிய குறிப்புகளை மறைப்பது மிகவும் முக்கியமான ஆதாரம். ஏனென்றால் புதிய உறவுக்கு நிச்சயம் அவ்வப்போது செலவழிக்க வேண்டிய அவசியம் வரும். பெரிய செலவாக இல்லை என்றாலும் ஹோட்டலுக்கு கூட்டிப்போவது, சின்னச்சின்ன பரிசுகள் வாங்கித்தருதல் கண்டிப்பாக இருக்கும். இவற்றுக்கு பெரும்பாலும் கார்டுதான் பயன்படுத்துவார் என்பதால், கணக்குகளை மறைப்பதற்கு முயற்சி செய்வார். இல்லையென்றால் புதிதாக ஏதேனும் கணக்கு தொடங்கியிருக்கிறாரா என்பதை பாருங்கள்.
  4. நேரம் குறைவு : வீட்டில் தங்கும் நேரம் குறைவதுதான் மிகமுக்கியமான சந்தேகக் குறிப்பு. ஓவர்டைம் செய்யவேண்டி இருக்கிறது என்று தாமதமாக வருவார். ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆடிட்டிங் இருக்கிறது என்று ஏதேனும் காரணம் சொல்லி காணாமல் போவார். ஆபிஸ் நண்பர்கள் டூர் போகிறோம் என்று சொல்வார். வீட்டைவிட்டு வெளியே செல்வதற்கு ஏதேனும் காரணங்கள் தேடுபவராக இருந்தால், நிச்சயம் நீங்கள் கண்காணிக்க வேண்டிய நேரம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
  5. நடவடிக்கையில் மாற்றம் : ஹேர் கட் பண்ணிக்கலாம்னு போனேன், அவன் வேண்டாம்னு சொன்னாலும் கேட்காம டை அடிச்சுவிட்டு ஃபேஷியல் பண்ணிட்டான். நல்லாத்தான் இருக்கு என்கிறாரா? முழங்கை சட்டையை மடித்துவிடுதல், இன் செய்தல், டை கட்டுதல் என்று ஏதேனும் திடீர் மாற்றம் நிகழ்கிறதா, திடீரென புதுவகை வாசனைத் திரவியங்கள் அடிக்கிறாரா? தனக்குள் ஏதேனும் முனகுதல், பாட்டுப்படித்தல் என்று தன்னை இளமையாக காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார் என்றால் அலாரம் அடிக்கவேண்டும்.
  6. நெருக்கம் குறைவு : இதுதான் கடைசி ஆனால் முக்கியமான அறிகுறி. உடல் நெருக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கத் தொடங்கியிருப்பார். மனைவியே வலியப்போனாலும், ‘பாவம் நீ ரொம்ப டயர்டா இருப்பே’ என்று மறுத்துவிடுவார். மனைவி படுக்கைக்கு வரும்முன்பு தூங்கிவிடுவார் அல்லது தூங்குவதுபோல் நடிப்பார். அதேபோல் சின்ன தவறுக்கும் பெரிய அளவில் ரியாக்‌ஷன் கொடுப்பார். ஒரு டம்ளர் பால் கொட்டிவிட்டது என்றால், லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டதுபோல் குதிப்பார். தன்னுடைய சொத்துக்களை எல்லாம் நஷ்டப்படுத்த வந்திருக்கிறாய் என்றபடி வேண்டுமென்றே சண்டைக்கு இழுப்பார். இதுபோன்ற சின்னச்சின்ன சண்டைகளை மையமாக வைத்து, திடீரென ஒரு நாள் பெரிய சண்டை போட்டு பிரிந்துவிட நினைப்பார்.

நாம் இதுவரை சொன்னவை எல்லாமே திருட்டுப்பார்வை கொண்ட கணவன் நடவடிக்கையில் எப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்படலாம் என்பதற்கான உத்தேச குறிப்புகள்தான். தற்செயலாகவே மிகவும் நல்லவராக இருக்கும் உங்கள் கணவரிடமும் இந்த மாற்றங்கள் இயல்பாகத்தோன்றவும் வாய்ப்பு உண்டு. அதனால் இந்த அறிகுறிகள் தென்பட்டால் ஒன்றுக்கு பலதடவை உறுதிசெய்தபிறகே, கணவரை மீட்கும் முயற்சியில் இறங்கவேண்டும்.

கணவர் செய்யும் தவறை தெரிந்ததாக காட்டிக்கொள்ளாமலே, மீண்டும் போதிய அன்பு செலுத்துவதன் மூலம் நிச்சயம் அவரை உங்கள் வழிக்குத் திருப்பிவிட முடியும். கடைசிவரையிலும் இந்த விஷயங்களைக் கண்டுகொள்ளாமல் கண்களை மூடிக்கொண்டிருந்தால், திருட்டுப்பூனை நழுவிவிடும். நல்ல மனுஷன், நான் சரியா கவனிக்கலை என்று புலம்பும் நிலைக்கு ஆளாகாதீர்கள், ஜாக்கிரதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *