பக்கத்து வீட்ல வாங்கிட்டாங்க, எதிர் வீட்ல வாங்கிட்டாங்க, உங்க வீட்ல வாங்கியாச்சா என்று உருப்படாத பொருளை எல்லாம் விளம்பரங்களில் பார்த்து வீட்டிற்கு வாங்கிப்போடும் நம் மக்களிடம்தான், இன்னமும் கழிவறை வசதி குறித்த விழிப்புணர்வு வளரவே இல்லை.

இது நம் நாட்டின் சாபக்கேடு என்றே சொல்லலாம். ஏனென்றால் உலகம் புகழும்வண்ணம் கோயில், அரண்மனை கட்டிய நம் அரசர்கள்கூட கழிவறை வசதிக்கு எந்தவொரு வழிவகையும் செய்ததாக ஆவணங்கள் இல்லை. இயற்கை உபாதைகளை, திறந்தவெளியில் கழித்து, மண்ணுக்கும் பயிருக்கும் உரமாக்கவேண்டும் என்று நினைத்தார்களோ, என்னவோ?

சமீபத்தில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வு மாபெரும் அதிர்ச்சியைக் கொடுக்கிறது. இன்று இந்தியாவில் சுமார் 87 சதவிகித வீடுகளில் செல்போன் இருக்கிறது. 78 சதவிகித வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டி இருக்கிறது. ஆனால் மொத்தமே 41 சதவிகித வீடுகளில் மட்டுமே கழிவறை வசதி இருக்கிறது. மற்ற அனைவருமே தங்கள் இயற்கை உபாதையைத் தீர்த்துக்கொள்வதற்கு திறந்தவெளியைத்தான் நாடுகிறார்கள். ரயில்வே தண்டவாளங்கள், ஆற்றங்கரை, ஹைவேஸ் ரோடு, கம்மாய், குளத்தங்கரை, ஊருக்கு ஒதுக்குப்புறம் போன்ற இடங்களில் எல்லாம் இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு ஒதுங்குகிறார்கள். சென்னையின் ஒதுக்குப்புறத்தில் குடியிருக்கும் பெண் ஒருத்தி, சுமார் 20 நிமிடங்கள் கழித்துத்தான் ஓரளவு பாதுகாப்பான இடத்தைத் தேர்வுசெய்து இயற்கை உபாதையைக் கழிக்க முடிகிறது.

தமிழ்நாட்டில் 15 சதவிகித – அரசுப் பள்ளிகளில் அதாவது 5,720 அரசுப் பள்ளிகளில் – கழிப்பறை வசதிகள் இல்லை என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (மத்திய கல்வி அமைச்சகம்) வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. இவற்றில்  1442 பள்ளிகள் – பெண்களுக்கான பள்ளிகள் என்பது அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உரிய செய்தி.

கழிவறை என்பது வெறும் கழித்தலுக்கான இடம் மட்டுமே அல்ல. கண்ணியமான வாழ்க்கையின் தொடக்கமும் அதுதான். கழிவறை இன்மையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். பாலியல் சீண்டல்களையும் வல்லுறவுகளையும் எதிர்கொள்ளும் இடமாக இருப்பது அவர்கள் இயற்கை உபாதைகளை தீர்க்கச் செல்லும் போதுதான்.

ஆம்பிளைகளுக்குப் பிரச்னையில்லை. பொம்பளைங்க பாடுதான் கஷ்டம். அதுவும் சின்னப்புள்ளைங்க ரொம்பவே சிரமப்படுதுங்க. காலையில சூரியன் கிளம்புறதுக்கு முன்னாடியே எழுந்திரிச்சுப் போயிட்டு வந்துறணும். அதுக்கப்புறம் போகணும்னா ராவான பின்னாடிதான் முடியும். அதுலயும் திடீர்னு அந்தப் பக்கம் ஆம்பிளைங்க வந்துட்டா அலறி அடிச்சுக்கிட்டு எழுந்திருக்கணும். பகல்ல எல்லாத்தையும் அடக்கிக்கணும். ஆத்திரம் அவசரத்துக்குக் கூட எங்கேயும் ஒதுங்க முடியாது. ரொம்ப அவஸ்தைன்னா வீட்டுக்குப் பக்கத்துல எங்காவது போயிட்டு மண்ணைப் போட்டுத்தான் மூடணும். மாதாந்திர நேரத்துல பொம்பளப்புள்ளைங்க படுற கஷ்டம் கொஞ்சமில்லை. பல நேரங்கள்ல அவமானமா இருக்கும். 

இந்த மாதிரி இருட்டுல போகும்போது பாம்பு, பூரான்னு விஷங்க தீண்டிரும். அப்படி ஏகப்பட்ட புள்ளைக செத்துப் போயிருக்குக. எங்க கிராமம் காரைக்குடி – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில இருக்கு. இயற்கை உபாதைக்கு ரோட்டோரமாத்தான் போகணும். ஒரு பஸ்ஸோ, காரோ வந்தாக்கூட எழுந்து நிக்கணும். ரோட்டுல போறவங்க பாக்குற பார்வையே சங்கடமா இருக்கும். டாய்லெட் கட்ட அரசாங்கம் நிதியுதவி செய்யுதுன்னு சொல்றாங்க. ஆனா, அது அவ்வளவு எளிதா எல்லா மக்களுக்கும் கிடைக்கிறதில்லை. யாரை அணுகணும்னு கூட நம்ம மக்களுக்குத் தெரியிறதில்லை. காலனி வீடுகள்ல டாய்லெட் கட்டிக் கொடுக்கிறாக. ஆனா, அதை பயன்படுத்த யாரும் தயாரா இல்லை. காலங்காலமா இல்லாம பழகிட்டதால அது பாட்டுக்கு மூடிக்கிடக்கு.  

காடு, கரைக்குப் போயிட்டு வர்ற நேரத்தில ஆம்பிளைங்க சீண்டுறதும் நடக்குது. யாரும் தட்டிக் கேட்க முடியாது. தட்டிக்கேட்டா ஊருக்குள்ள வாழ முடியாது. அதனால பெத்தவங்களே பிரச்னையை அமுக்கிடுவாங்க. சில புள்ளைங்க அவமானம் தாங்கமுடியாம மருந்தை தின்னுட்டோ, தூக்குப்போட்டுக்கிட்டோ தற்கொலை செஞ்சுக்கிறதும் நடக்குது… என்று குமுறுகிறார்கள்.

நம்நாட்டில் தெருவுக்குத் தெரு, வீதிக்கு வீதி விதவிதமான கடைகள் பல இருக்கின்றன. ஆனால் கழிப்பறை மட்டும் நாம் தேடும் இடத்தில் அல்லது தேவைப்படும் இடத்தில் இருப்பதில்லை. இதனால் பலர் வீட்டை விட்டுப் புறப்படுவதற்கு முன்பே எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு புறப்பட வேண்டிய கட்டாய நிலை உள்ளது. நகர்ப்புறத்திலும், கிராமத்திலும் பலர் அவசரத்திற்கு இடம் கிடைக்காமல் உரிய இடம் தேடி அலைந்து அல்லல்படும் சூழல் இருக்கிறது. இதில் அவசரத்திற்கு ஒதுங்க எவரும் தன் வீட்டில் இடம் தருவதில்லை. இதற்குச் செல்லவேண்டும் என முகம் தெரியாத ஆட்களிடம் எப்படிக் கேட்பது? என்ற தயக்கத்தால் கழிவுகளை அடக்கி வைக்கும் நிலை உருவாகிறது. இதனால் பல சிறுநீரக சம்பந்தமான, மூலம் சம்பந்தமான நோய்கள் வருவதை நமக்கு நாமே உருவாக்கிக் கொள்கிறோம் என்பது பலர் அறியாத உண்மையாகும்.

தமிழ்நாட்டில் மக்கள் கூடும் இடங்களில் பெரும்பாலும் கழிப்பறைகளே இருப்பதில்லை. ஆயிரம், ஆயிரம் பேர் கூடும் கோயில்களில் கூட வரும் பக்தர்கள் ஒதுங்குவதற்கு கழிப்பிடங்கள் இல்லை. தவிர பேருந்து நிலையங்கள், நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்கள், கடைவீதிகள், புகைவண்டி நிலையங்கள், கடற்கரைகள் , பூங்காக்கள், காய்கறிச் சந்தைகள் என மக்கள் கூடும் பெரும்பாலான இடங்களில் போதிய கழிப்பிட வசதிகள் இல்லை. இதனால் பொது இடத்தையும், வெட்ட வெளிகளையும், வீட்டுச்சந்துகளையும், மின்சாரக் கம்பங்களையும் மக்கள் பயன்படுத்தும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர். அவ்வாறு பயன்படுத்துவதால் பொதுமக்கள் பல நோய்களுக்கு ஆளாக வேண்டியுள்ளது.

ஆளுக்கு ஒரு செல்போன் வைத்திருக்கும் இந்த காலத்தில், வீட்டுக்கு ஒரு டாய்லட் இன்னமும் வரவில்லை என்பதுதான் வேதனையிலும் வேதனை. இந்த வேதனை அத்தனை மனிதருக்கும் தோன்றும்போதுதான் மனிதகுலம் விடுதலையை சந்திக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *