தோளுக்கு வளர்ந்த பிள்ளையை தோழன் என்பார்கள். ஆனால் செளந்தராஜன், அவருடைய தோளைத்தாண்டி வளர்ந்த பிள்ளையை அடித்து துவைத்துக்கொண்டு இருந்தார். அவரை தடுத்துநிறுத்தி காரணம் கேட்டபோது, வந்த பதில் அதிர்ச்சியாக இருந்தது. அவரது பையன் +1 வகுப்பில் மிகவும் நன்றாகப் படிக்கிறான். அடுத்தவருட பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து டாக்டர் படிப்பில் சேர்வதற்கு ஆசைப்படுகிறான். அதற்காக ஸ்கூல் டீச்சரிடம் பிரைவேட் டியூசன் படிக்க ஆசைப்படுவதாக சொன்னதற்குத்தான் அடிக்கிறார் செளந்தரராஜன்.

இதென்ன அநியாயம்… டியூசன் படிக்கிறேன் என்று ஆர்வத்துடன் சொல்லும் பிள்ளையை யாராவது அடிப்பார்களா என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா?

‘’நாடு எப்படியெல்லாம் கெட்டுக்கிடக்குது. சின்னப்பசங்களை ஏமாத்தி டீச்சர் இழுத்துட்டுப்போறது இப்போ அதிகமா நடக்குது. இவனுக்கு சொல்லித்தர்றதும் சின்ன வயசு டீச்சர். அவங்க இவனை ஆசைகாட்டி ஏமாத்தலாம். அதனால யாராச்சும் சார்கிட்டே டியூசன் படிக்கச் சொன்னேன். அதுக்கு, ’முடியாது.. டீச்சர் சொல்லிக்குடுக்கிறதுதான் புரியுது’ன்னு என்கிட்டேயே தெனாவெட்டா பேசுறான். அப்படின்னா என்ன சார் அர்த்தம். ஏதோ தப்பு நடக்கப்போகுது’ என்று மீண்டும் அடிக்கும் வேலையை செவ்வனே தொடங்கினார். இதனை அவரது சகதர்மினி தடுக்காமல் வேடிக்கை பார்த்ததுதான் ஆச்சர்யம். உண்மையில் செளந்தரராஜன் மகனை அடிக்கவில்லை, அவனுக்கு வக்கிரத்தைப் போதித்துக்கொண்டிருந்தார் என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால் இதுவரை அவனுக்கு அப்படியொரு பார்வை இல்லை என்றாலும், இனி நிச்சயம் உருவாகும்.

ஆசிரியர் தொழிலை புனிதமானது, உயர்வானது, தெய்வத்தைவிட மேலானது என்றெல்லாம் உயர்த்திப்பிடிக்க அவசியம் இல்லை. ஏனென்றால் இப்போது கல்வியும் வியாபாரப் பொருளாகிவிட்டது. மதிப்பெண்கள் போடும் பண்ணைக் கோழிகளாகத்தான் பிள்ளைகளை கல்வி நிறுவனங்கள் வளர்த்தெடுக்கின்றன. பள்ளியில் மட்டுமின்றி வீட்டிலும் மாணவனை எந்த நேரமும் புத்தகமும் கையுமாகப் பார்க்கத்தான் பெற்றோர் விரும்புகிறார்கள். ஆனால் இதனை எல்லா மாணவர்களாலும் கடைப்பிடிக்க முடிவதில்லை. இந்த டென்ஷன், பரபரப்புகளில் இருந்து விலக நினைப்பவர்களுக்கு வயதும் ஹார்மோன் சுரப்பிகளும் துணைபுரியும்போது, அவர்கள் மனம் அலைபாய்வது இயற்கையே. .

காதலுக்கு ஏங்கும் மாணவர்களின் முதல் பார்வை உடன் படிக்கும் மாணவி அல்லது ஆசிரியை மீதுதான் விழுகிறது. ஏனென்றால் இவர்களுக்குத்தான் அவனுடன் பேசவும் பழகவும் வாய்ப்பு அதிகம். இந்தக் காரணத்தால்தான் பெரும்பாலான மாணவனின் முதல் காதலி இந்த இருவரில் ஒருவராகவே இருக்கிறார்கள். ஆனால் இந்தக் காதல் நீர்க்குமிழி போல் சில நாட்களில், சில மாதங்களில் உடைந்துபோய்விடும் என்பதால் இதற்கு யாரும் அதிமுக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை என்பதுதான் உண்மை.

அதனால் ஆசிரியை மீது ஆர்வம் இருந்தாலும் அதனை நேரில் சொல்லும் துணிச்சல் லட்சத்தில் ஒரு மாணவனுக்குத்தான் இருக்கிறது. அப்படி தன்னை காதலிப்பதாக ஒரு மாணவன் சொன்னால்… அவன் மீது அக்கறை எடுத்து, அவன் இரண்டும்கெட்டான் வயதைக் காரணம் காட்டி, சரியான திசையில் அனுப்பும் ஆசிரியைகளே அதிகம். இதற்காக அவனை கண்டிப்பதும் தண்டிப்பதும் தேவையற்ற வீண்விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பது தெரியும். அதனால் முள் மேல் விழுந்த சேலையை எடுப்பதுபோல் நிதானமாக கையாள்வது அவசியம்.

ஆனால் இந்த உலகில் எல்லா விஷயங்களுக்கும் விதிவிலக்குகள் உண்டு. எங்கேனும், எப்போதேனும், யாரேனும் ஓர் ஆசிரியை இந்த இளமை குழப்பத்துக்குள் சிக்கி தவறு செய்துவிடலாம். ஏதோ ஒரு மூலையில் தவறு நடந்தது என்பதற்காக, அத்தனை ஆசிரியைகளையும் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பது வடிகட்டிய வக்கிரகுணம்.

பொதுவாகவே பெண்களைப் பற்றிய வக்கிர குணம் ஆண்களிடம் வண்டிவண்டியாக நிரம்பிக்கிடக்கிறது. தன் மனைவி, தன் தாயைத் தவிர ஊரில் இருக்கும் அத்தனை பெண்களும் ஆண்களை மயக்குவதையே முழுநேரத் தொழிலாகச் செய்வதாக எண்ணுபவர்களே அதிகம். பெண்களை கடவுளாக கையெடுத்துத் தொழும் இந்திய ஆண்கள்தான், தனிமையில் சிக்கும் பெண்ணை சீரழிக்க கொஞ்சமும் தயங்குவதில்லை. இதற்கு முக்கியமான காரணம், பெண் பற்றிய மிகச்சரியான பிம்பம் ஆணின் மனதில் இல்லை. பெண்ணை கடவுளாகப் பார்க்கிறான் அல்லது கழிசடையாகப் பார்க்கிறான். பெண்ணை எப்போதும் ஒரு மனுஷியாகப் பார்க்கவேண்டும் என்பதை எந்தக் கல்விக்கூடமும் பாடத்திட்டமும் அவனுக்கு கற்றுத்தரவில்லை.

இதில் நம் வீட்டுப் பெண்களுக்கும் மிகமுக்கியமான பங்கு இருக்கிறது. மற்ற பெண்களை மட்டம் தட்டியும் குறை சொல்லியும் பேசும் பெண்களே இங்கு அதிகம். நேருக்கு நேர் புகழ்ந்தாலும், முதுகுக்குப்பின்னே அவதூறு கிளப்புவார்கள். கணவன் மனதில் வேறு பெண் இடம் பிடித்துவிடக்கூடாது என்பதற்காக எல்லா பெண்களையும் கெட்டவளாக சித்தரிப்பவர்களே அதிகம். இந்தக் குணத்தை ஒவ்வொரு பெண்ணும் மாற்றிக்கொள்ளத்தான் வேண்டும். பெண் என்பது உடல் மட்டுமல்ல, ரத்தமும் சதையும் நிரம்பிய உயிர் என்பதை கணவருக்கும், ஆண் பிள்ளைக்கும் அழுத்தமாகப் புரியவைக்க வேண்டும். பெண்ணுக்கு மரியாதை கொடுப்பதற்குப் பழக்கவேண்டும்.

‘ஆசிரியை மாணவனை இழுத்துக்கொண்டு ஓடிவிட்டாள்’ என்று கணவன் கிண்டல் செய்தால், ‘உண்மை புரியாமல் எந்தப் பெண்ணையும் அவதூறாகப் பேசவேண்டாம். மாணவிகளை மிரட்டி பாலியல் ஆசையை தணித்துக்கொள்ளும் ஆயிரக்கணக்கான ஆண் ஆசிரியர்களைவிட, அந்தப் பெண் எவ்வளவோ மேல்” என்று பெண்ணுக்கு ஆதரவாகவே பேசுங்கள். இதனால் உங்களை மட்டமாக நினைக்க வாய்ப்பு இருக்கிறது என்று தயங்கி நிற்காதீர்கள். உங்கள் நடத்தையும் அன்பும் கொடுக்காத நம்பிக்கையை இந்த வார்த்தைகள் கொடுக்கப்போவதில்லை.

ஆண் பிள்ளைக்குக் கொடுக்கும் சுதந்திரத்தையும் மதிப்பையும் பெண் பிள்ளைக்கும் கொடுங்கள். எந்தக் காரணம்கொண்டும் சகோதரியை மட்டமாகப் பேசுவதற்கும், ஆண் என்று அகங்காரத்துடன் நடப்பதற்கும் மகனுக்கு வாய்ப்பு கொடுக்காதீர்கள். ஆணுக்கு இருக்கும் உரிமை, உணர்வு, அர்ப்பணிப்பு பெண்ணுக்கும் உண்டு என்று சொல்லியே பிள்ளைகளை வளருங்கள்.

தன்னுடைய தாயைப் பற்றி ஒரு வார்த்தை சொன்னாலே கோபப்படும் கணவர், சர்வசாதாரணமாக மாமியார் ஜோக்ஸ் சொல்வதும், மாமியாரை கிண்டல் செய்வதும் உண்டு. இதனை ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். எந்தக் காரணம் கொண்டும் நகைச்சுவைக்காக என் அம்மாவை கிண்டல் செய்வதற்கு சம்மதிக்க மாட்டேன் என்பதை ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டால், தேவையற்ற பிணக்குகள் வருவதை தவிர்த்துவிடலாம்.

இன்று பெண்ணுக்கு நள்ளிரவில் தனியே வெளியே போகும் சுதந்திரம் தேவை இல்லை. ஒரு மனுஷியாக வாழ்வதற்கான அங்கீகாரமும் பெண் என்ற மரியாதையும்தான் வேண்டும். இதற்கு முதல் விழிப்பு பெண்ணிடம் இருந்துதான் வரவேண்டும். இந்த விழிப்பு நிலை ஆணுக்கும் பரவவேண்டும்.

ஆண் வீட்டைவிட்டு ஓடினால் குடும்பப்பிரச்னையாக இருக்கும் என்று பரிதாபப்படும் சமூகம்தான், பெண் வீட்டைவிட்டு ஓடினால், ‘யாரோ ஒருத்தனை இழுத்துட்டுப் போயிட்டா’ என்று பரிகாசம் பேசுகிறது. இந்த அவமரியாதை நிறுத்தப்பட வேண்டும். இதற்கு முதல் கட்டமாக பெண்ணின் மதிப்பையும் மரியாதையையும் ஆண் உணரவேண்டும். அவனுக்கு உணர்த்தும்வண்ணம் பாடம் புகட்ட வேண்டியது மனைவியின் கடமையே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *