கிளி ஜோசியக்காரனுக்கு இன்று ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கும் என்று நான் ஆருடம் சொல்லியிருக்கத் தேவையில்லை. ஆனாலும் அப்படி சொல்லிவிட்டேன்.  நான் குருட்டாம்போக்காகச் சொல்லும் வார்த்தைகள் எப்படியோ பல நேரங்களில் பலித்துவிடுவதால் வந்த திமிராக இருக்கலாம். இந்த தற்செயல் அதிசயங்களுக்கு விடை தேடுவதே என் வாழ்க்கையாகிப் போனது. வேதங்களிலும் கோயில்களிலும் காணமுடியாததை என் பாணியில் இன்னமும் நான் தேடிக்கொண்டு இருக்கிறேன்.

ஜோசியக்காரன் நகர்ந்த தெற்கு திசையில் நானும் நடை போட்டேன். அரை மணி நேரத்தில் ஆங்காங்கே சில வீடுகள் தென்பட்டன. அதன்பிறகு சின்னச்சின்ன சந்துகளும், பஸ் செல்லும் அளவிலான பெரிய பெரிய ரோடுகளும் கண்ணில்பட, எந்தத் திசையில் பயணிப்பது என்று புரியாமல் தடுமாறினேன். அவன் சென்றதாக நான் நினைத்த பாதையில் ஏதோ ஒரு சிறுகூட்டம் தென்பட்டது. அந்த நேரத்தில்தான் சட்டென ஒரு கேள்வி என் நெஞ்சில் தைத்தது.

‘எதற்காக நான் ஜோசியக்காரனை பின்தொடர வேண்டும்?’ என்னை நானே கேட்டுக்கொண்டேன். நான் பேசிய வார்த்தைகள் மீது எனக்கு எந்த உரிமையும் கிடையாது. அது பலிப்பதை நான் ஏன் சோதிக்க வேண்டும்? பணமின்றி வருந்திய ஜோசியனுக்கு நம்பிக்கை கொடுத்தேன். இன்றில்லையேனும் என்றாவது பணம் கிடைக்கும் என்று தேடிக்கொண்டு இருப்பான். கிடைத்தால் நல்லது, கிடைக்காவிட்டால் இன்னமும் நல்லது. அவனுக்கு பக்கத்தில் நின்று உதவுவது முட்டாள்தனமாகத் தோன்றியது. உடனே திசையை மாற்றி மேற்குப்பக்கம் நகரத் தொடங்கினேன்..

இலக்குகள் இல்லாததே இலக்கு என்பதை நெஞ்சில் நிறுத்தி நடந்தேன். எப்போதும் ஏதேனும் சிந்தனையுடன் மல்லுக்கட்டுவதால், அக்கம்பக்கத்து மனிதர்கள் பேசுவதை காதில் ஏற்றிக்கொள்வதில்லை. பிச்சைக்காரன், சீட்டிங் பார்ட்டி, சாமியார், துறவி, ஃப்ராடு, பெரியவர் என்று அவரவர் மனதுக்குத் தோன்றும் விதத்தில் என்னை குறிப்பிடுவார்கள். நிர்வாண நகரத்தில் கோவணம் கட்டியவன் வேடிக்கைக்காரன் என்பதுபோல், காவி உடையைக் கண்டதும் என்னென்னவோ பேசுவார்கள். விமர்சனம் செய்பவரை சில நொடிகள் உற்றுப் பார்த்தாலே, பல்டி அடித்து பவ்யமாவார்கள். ஏனென்றால் எல்லோருக்கும் சாமியார்களிடம் பயம் இருக்கிறது. நாத்திகர்களும் விதிவிலக்கல்ல. இந்த பயத்தைத்தான் கார்ப்பரேட் சாமியார்கள் மிகத்திறமையாக அறுவடை செய்கிறார்கள். அமைதியாக வாழவேண்டும் என்பதை ஆடம்பரமாக சொல்லித் தருகிறார்கள். ஆறுதலுக்குத் தோள் தேடும் மனிதர்கள் இருக்கும்வரை சாமியார்களுக்குப் பஞ்சம் இருக்காது என்ற எண்ணத்துடன் நடை போட்ட என்னை, ஒரு வீட்டின் அட்டகாச வடிவமைப்பு தடுத்து நிறுத்தியது.

அக்கம்பக்கம் முழுவதும் காலி மனைகளாக இருக்க, தன்னந்தனியே ஒரே ஒரு வீடு மட்டும் பங்களா பாணியில் கம்பீரமாக எழுந்து நின்றது. வீட்டுக்கு முன் அழகான தோட்டம், செயற்கை நீருற்று, ஊஞ்சல், சறுக்குமரம் என  பணக்காரத்தனம் வெளிப்பட்டது. தோட்ட செடிகளுக்கு இடையில் வண்ணமயமான கூழாங்கற்கள். அங்குலம் அங்குலமாக ரசித்து கட்டப்பட்ட வீடு என்பது தூரப் பார்வையிலே தெரிந்தது. அருகே நெருங்கி வேடிக்கை பார்த்தேன். 

நான் நகராமல் வேடிக்கை பார்ப்பதை அறிந்த செக்யூரிட்டி லத்தியுடன் வேகமாக வந்தான். சுவர் ஓர டப்பாவில் இருந்த இரண்டு ரூபாய் நாணயத்தை  என் கையில் திணித்து, ‘ஜாவ், ஜாவ்’ என்று விரட்டினான். அவன் மிரட்டலை கண்டுகொள்ளாமல் அவனைப் பார்த்து சந்தோஷமாக புன்னகைத்து, ஆசிர்வதிக்க  கை தூக்கினேன்.

உடனே பவ்யமாக தலை வணங்கினான். சில சமஸ்கிருத மந்திரங்கள் சொல்லி, அவன் கொடுத்த இரண்டு ரூபாயை அவனிடமே திருப்பிக்கொடுத்தேன்.

‘’’இதை ஒரு வாரம் பூஜை செய்து, அதன்பிறகு தண்ணீரில் போடு. உன் ஒட்டுமொத்த பாவமும் கரைந்துபோகும்…’’ என்று கொடுத்தேன்.

இப்போது அவன் தமிழுக்கு மாறி, ‘’சந்தோஷம்… சந்தோஷம்’’ என்றபடி பவ்யமாக வாங்கினான். அந்த நேரம், அவன் தலைக்கு அருகே இருந்த தொலைபேசி அலறியது.

அதனை எடுத்துப் பேசியவன் தலையாட்டியபடி, என்னிடம் தொலைபேசியைக் கொடுத்தான். தொலைபேசியில் பேசியது ஒரு பெண் குரல்.

‘’சுவாமிஜி உங்களுக்கு வாஸ்து பரிகாரம் தெரியுமா? எங்கே இருந்து வர்றீங்க? கொஞ்சநேரம் வீட்டுக்குள்ளே வந்துட்டுப் போக முடியுமா?’’ படபடவென கேள்விகள் விழுந்தன. அந்தக் குரலுக்கு 35 வயது இருக்கும் என்று கணித்தேன். சிசிடிவியில் என்னை பார்த்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்து பேசினேன். .

‘’உன் கேள்விகளுக்குப் பதில் வேண்டுமா அல்லது நான் உள்ளே வர வேண்டுமா?’’

‘’மன்னிச்சுக்கோங்க சாமி… போனை வாட்ச்மேனிடம் கொடுங்க’’ என்று பவ்யமானாள். ரிசீவரை வாங்கிய செக்யூரிட்டி அவள் சொன்னதைக் கேட்டு என்னை வீட்டுக்குள் அழைத்துச் சென்றான்.

பரமேஸ்வரன் தலையில் இருந்து கங்கை நீர் பொங்குவது போன்று வடிக்கப்பட்டிருந்த நீரூற்று மனதை அள்ளியது. நீர் விழுந்த தண்ணீர் குளத்தில் பெரிய பெரிய மீன்கள் சாந்தமாக நீந்திக்கொண்டு இருந்தன. சினிமா துறையை சார்ந்தவர் வீடாக இருக்கலாம் என்ற யோசனையுடன் வீட்டுக்குள் நுழைந்தேன். வீட்டு வாசலுக்கு வலப்புறம் மலையை செதுக்கி குகைக்குள் கோயில் போன்று பூஜை அறை வடிவமைக்கப்பட்டிருந்தது.

அந்த அறையில் இருந்து தங்கச் சிலை போன்ற ஒரு பெண் வந்து வணங்கினாள். இவள்தான் என்னிடம் பேசியவள். 35 வயதுக்கு மேல் இருக்கும் என்றாலும் மேக்கப் மூலம் 22 வயதுக்கு மாறியிருந்தாள்.

‘’வணக்கம் சாமி ஒரு சின்ன குழப்பம்..’’ என்று பணிவுடன் பேசினாள்.

‘’ம்…’’ என்று உறுமியதும் தொடர்ந்து பேசினாள்.

‘’இந்த பூஜை ரூம்தான் பிரச்னை சாமி. வீட்டுக்கு உள்ளே மட்டும்தான் பூஜை ரூம் இருக்கணுமாம், வீட்டுக்கு வெளியே வைக்கக்கூடாதாம். உடனே இதை இடிக்கலைன்னா ஆபத்துன்னு பயமுறுத்துறாங்க…’’ என்றார்.

அந்த குகை கோயிலை நிதானமாக சுற்றிப் பார்த்தேன். வெளிச் சத்தம் கேட்காதபடி மிகச்சிறப்பான வடிவமைப்பு. மூடிய அறைக்குள் சூரிய ஒளி விழுந்தது. தியானம் செய்ய வசதியாக தரையோடு ஒட்டிய ஆசனங்களும், மணம் பரப்பும் பூச்செடிகளும் அங்கேயே வளர்ந்திருந்தன. .

‘’இதனை இடிக்கவில்லை என்றால் அடுத்த படம் ஓடாது என்கிறார்களா?’’ பொத்தாம்பொதுவாக கேட்டு வைத்தேன்.

‘’சாமி, சினிமாகாரர் வீடுன்னு உங்களுக்குத் தெரியுமா?’’ ஆச்சர்யம் விலகாமல் கேட்டாள்.

அரசியல்வாதிக்கும் சினிமா கலைஞருக்கும்தான் திடுமென எதிர்பாராமல் பணம் குவிய வாய்ப்புகள் அதிகம். எதிர்பார்ப்புக்கும் மேல் பணம் கிடைக்கும்போதுதான் இப்படி வீடு கட்டுவதற்கு ஆர்வம் வரும். இத்தனை அழகான பெண்ணை இந்த வீட்டுக்குள் அடைத்து வைத்திருப்பதும், வீட்டு அலங்காரத்தின் ஒரு பகுதி என்பது தெரிந்தது.. அவள் ஆச்சர்யத்தைக் கண்டுகொள்ளாமல் பேசினேன்.

‘’இத்தனை சிறப்பாக வீடு கட்டியபோது நிச்சயம் வாஸ்து ஆலோசனை செய்திருப்பாயே, பிறகு ஏன் கலக்கம்?’’

‘’ஒரு பெரிய ஜோதிடர் சொன்ன மாதிரிதான் இந்த பூஜை அறை கட்டியிருக்கோம். ஆனா, நேத்து வந்த ஒரு மலையாள நம்பூதிரி பயம் காட்டினார். இன்று ஏதேனும் கெட்ட அறிகுறி காட்டும்னு சொன்னார். அவர் சொன்ன மாதிரியே நடந்திருச்சு…’’ என்று பெருமூச்சு விட்டாள்.

‘’இன்று என்ன நடந்த்து?’’

‘’ஹிட் ஸ்டார் சஞ்சயன்தான் என் வீட்டுக்காரர். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவர் ஒருத்தரை கார்ல இடிச்சிட்டாராம். எப்படியோ போலீஸ் கேஸ் போடாம பணம் குடுத்து தப்பிச்சிட்டார்… ஆனா, இது மலையாள நம்பூதிரி சொன்ன மாதிரி மோசமான அறிகுறி. இப்பத்தான் இந்த தகவல் வந்திச்சு. இதைக் கேட்டு நான்  நடுங்கிக்கிட்டேன். கூர்க்காவுக்கு நீங்க ஆசிர்வாதம் செய்றதைப் பார்த்தேன். எனக்கும் ஆறுதல் தேவைப்பட்டுச்சு, கூப்பிட்டேன்’’ என்றாள்.

என் மனதுக்குள் ஏதோ மணியடித்தது. உடனடியாக ஆர்வமாக, ‘’உன் கணவரின் காரில் சிக்கியவர் ஒரு கிளி ஜோசியக்காரரா என்று கேள்…’’ என்றபடி ஒரு செடியின் இலையைக் கிள்ளிப் பார்த்து, சட்டென அதிர்ந்தேன்.

  • கண் திறக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *