கூண்டுக்கிளி

பிரமிப்பூட்டும் பங்களாவில் செதுக்கிய சிற்பம் போன்று காட்சியளித்த அழகியின் கைகள் வேகமாக செல்போனில் விளையாடின. அவள் ஆர்வத்தைக் கண்டுகொள்ளாமல் ஒவ்வொரு செடியாக வேடிக்கை பார்த்தேன். பெரும்பாலான செடிகள் நிஜமல்ல, அவை நிஜம் போன்று காட்சியளிக்கும் போலிகள் என்பது பேரதிர்ச்சியாக இருந்தது.

போனில் பேசி முடித்ததும் சந்தோஷ துள்ளலுடன் என்னிடம் வந்தாள். ‘’சாமி… நீங்க சொன்னது சரி. ஒரு கிளி ஜோசியக்காரன் ரோட்டைக் கடக்கும்போதுதான் என் புருஷன் கார்ல சிக்கியிருக்கான். அவனை சமாதானப்படுத்தி கேஸ் போடாம இருக்கிறதுக்கு என் வீட்டுக்கரர் 1 லட்சம் ரூபாய் கொடுத்தாராம். உங்களுக்கு எப்படி சாமி இது தெரியும்? நீங்க வரும்போது விபத்தைப் பார்த்தீங்களா?’’ என்றவள் சட்டென்று யோசித்து, ‘’மன்னிக்கணும் சாமி, விபத்து நடந்தது வேற இடம். நீங்களோ இங்க இருக்கீங்க… நீங்க உண்மையிலே பெரிய ஞானிதான், எனக்கு தயவுசெய்து உதவுங்கள்’’ என்று கை குவித்து தலை குனிந்தாள்.

‘’எல்லாமே போலியா…?’’ என் கையில் இருந்த பிளாஸ்டிக் இலையை அவளிடம் காட்ட, கொஞ்சம் தடுமாற்றத்துடன் பதில் பேசினாள்.

‘’நிஜ செடி வைச்சா குப்பை சேரும், பூச்சிங்க வரும், பட்டுப் போகும். அதான் வெளிநாட்டுல இருந்து கொண்டுவந்தோம்… தப்புன்னா மன்னிச்சிடுங்க சாமி. நிஜ செடி வைக்கிறேன்…’’ என்றாள்.

அழகு என்பது நிஜமல்ல. அழகு என்பது நிரந்தரமல்ல. இந்த உண்மை தெரிந்தும் வீட்டையும், செடிகளையும் கண்டு பிரமித்ததை நினைத்து அவமானப்பட்டேன். என் கண்களை ஏமாற்றிய செடிகளைத் தொட்டுப்பார்த்தேன்.

‘’என் கண்ணை திறந்துவிட்டாய் பெண்ணே… மிகவும் நன்றி’’

‘’சாமி… நீங்க என்ன சொல்றீங்கன்னு தெரியலை. நான் ஏதாவது தப்பு பண்ணிட்டேனா?’ என்றவளை தடுத்து நிறுத்தி, ‘’இப்போது உனக்கு என்ன தேவை?’’ என்று கேட்டேன்.

‘’இந்த வீட்டுக்கு திருஷ்டி இருக்கக்கூடாது. வாஸ்து சரியா அமையணும், என் கணவரோட படங்கள் எல்லாமே நல்லா ஓடணும்’’ என்று கடகடவென ஒப்பித்தாள்.

‘’உனக்கு என்ன வேண்டும்?’’ மீண்டும் உனக்கு என்பதை அழுத்திக் கேட்டேன். அவள் யோசிப்பதற்கு நேரம் கொடுத்து, புல்வெளி ஊஞ்சலில் அமர்ந்தேன். சிறிது நேரத்தில் அவளும் ஊஞ்சலுக்கு அருகே நின்றாள்.

‘’சாமி எனக்கு என்ன வேணும்னு எனக்கு நிஜமாவே தெரியலை. நான் கேட்டது எல்லாமே கிடைச்சிருக்கு, ஆனா எதுவுமே எனக்கு சந்தோஷம் குடுக்கலை. இத்தனை பெரிய அழகான வீட்டுல இருந்தாலும், ஜெயில் போல இருக்கு…’’ கன்னங்களில் சரசரவென நீர் வழிந்தது. அவள் பேசட்டும் என்று அமைதியாகக் காத்திருந்தேன்.

‘’என் பேர் ஜெயலஷ்மி சாமி, ஆனா சினிமாக்காரங்களுக்கு ஜெமின்னாத்தான் தெரியும். ஸ்கூல்ல, காலேஜ்ல என் அழகை பாராட்டுனாங்க. சினிமாதான் எனக்கு ஏத்த இடம்னு சொன்னாங்க. எனக்கும் ஆசை வந்திச்சு. சென்னைக்கு குடும்பத்தோட வந்தோம். நடிகையாகுற ஆசையும் வெறியும் இருந்திச்சு, என்ன செஞ்சாலும் தப்பில்லைன்னு தோணுச்சு. ஜெயிச்சுட்டா எல்லாமே மாறிடும்னு நினைச்சேன்.

உங்களுக்குத் தெரியாது சாமி. ஐந்து வருஷத்துக்கு முன்னாடி நான் இந்த தமிழ்நாட்டுக்கு கனவுக்கன்னி. தியேட்டர்ல நான் வந்ததும் கை தட்டுனாங்க, அதைப் பார்க்க பர்தா போட்டுக்கிட்டு தியேட்டர் தியேட்டரா போனேன். பணம் வந்திச்சு, புகழ் வந்திச்சு ஆனா, எதுவுமே மாறலை. பழைய சகவாசத்தை விட முடியாத அளவுக்கு அசிங்கமா மாட்டியிருந்தேன்.

எப்படியாவது அவங்ககிட்டே இருந்து தப்பிச்சு ஒரு சாதாரண குடும்பப் பொண்ணா வாழ ஆசைப்பட்டேன். தற்செயலா தொடர்ந்து எட்டு படம் ஃப்ளாப் குடுத்த சஞ்சயன்கூட ஒரு படம் நடிச்சேன். அது சூப்பர்டூப்பர் ஹிட். நான் சேர்ந்ததும் அவர் நிலைமை மாறிச்சு. அவர் கூட நான் நடிச்ச அடுத்த படமும் ஹிட்.

நான் அவரோட அதிர்ஷ்ட தேவதைன்னு நம்புறார். அதனால என்னை மானசீகமாக கல்யாணம் முடிச்சு இத்தனை பெரிய வீடு கட்டிக் கொடுத்து தங்க வைச்சிருக்கார். அவருக்கு ஏற்கெனவே மனைவி, பிள்ளைங்க இருக்காங்க. ஆனாலும் நான் சம்மதிச்சிட்டேன். ஏன்னா, யாராவது ஒரு ராஜகுமாரன் என்னை இந்த நரகத்துல இருந்து காப்பாத்த மாட்டானான்னு காத்துக்கிடந்தேன்.

இப்போ பழைய ஆளுங்க யாரும் என்னை தொல்லை பண்ண முடியாது. ஆனா, ஜெயில்ல வாழ்றேன் சாமி. வெளியே இருந்து பார்க்கிறதுக்கு இது ராஜபோக வாழ்க்கைன்னு தோணும். ஆனா, நான் தனியா செத்துக்கிட்டு இருக்கேன். நான் சம்பாதிச்சதை எங்க அம்மா, அப்பா எடுத்துட்டுப் போயிட்டாங்க. எங்க சொந்தக்காரங்க யாரும் என்னை பார்க்க வரக்கூடாது, நானும் போகக்கூடாதுன்னு சொல்லிட்டார்.

நிறைய கட்டுப்பாடுகள் சாமி. தினமும் நான் ரெண்டு வேளை குளிக்கணும், எட்டு தடவை பூஜை செய்யணும். டயட் சாப்பாடு வெளியே இருந்து வரும். நான் இங்கே சமைக்கக்கூடாது. வீட்ல இருக்கும்போது மேக்கப் போடக்கூடாது.

அவர் சொல்ற சேனல்தான் பார்க்கணும், அவரைத் தவிர வேறு யார்கிட்டேயும் போன் பேசக்கூடாது. திடீர்னு வந்து செக் பண்ணுவார்.. அவருக்கு நல்லது நடந்தா நான்தான் காரணம்னு ரெண்டு நாள் தூக்கிவைச்சு கொண்டாடுவார், அவருக்கு ஏதாவது சிக்கல்ன்னா என்னைத்தான் நாலு நாள் பந்தாடுவார். இப்போ திடீர்னு ஆக்சிடென்ட் ஆனதும் என்ன செய்வாரோன்னு பயமா இருக்கு. அதான் உங்களைப் பார்த்ததும் கூப்பிட்டேன் சாமி…’’ என்று அவள் முடிக்கும் முன்னரே சின்ன ஹார்ன் சத்தம் கேட்டது. கூர்க்கா பரபரப்பாகி கதவைத் திறப்பதைக் கண்டதும் மிரண்டாள்.

‘’சாமி… இனிமே நீங்க போகமுடியாது. வாஸ்து விஷயமா பேசினேன்னு சொல்லுங்க… ஏதாவது சொல்லி சமாளிங்க.’’ என்று என்னிடம் சொல்லிவிட்டு, வேகவேகமாக காருக்கு அருகில் போனாள். அவள் ஒரு அபாரமான நடிகை என்பதை ஒரு நொடியில் நிரூபித்தாள். அவள் உடல் மொழி மாறியிருந்தது.

‘’ஹாய் டியர்.. விபத்து நடந்ததும் உங்களுக்கு திருஷ்டி கழிஞ்சிருச்சாம்.. வாஸ்து சரிபார்க்க சாமியார் வந்திருக்கார்..’’ என்றபடி கணவனிடம் என்னை அறிமுகப்படுத்தினாள்.

‘’இவர் எப்படி வந்தார்… இவர்தான் ஜோசியக்காரர் பத்தி கேட்டாரா..?’’ என்றபடி அறைகுறையாக வணக்கம் வைத்தான்.

‘’நம்ம நம்பூதிரியோட ஆளுன்னு நினைக்கிறேன்..’’ என்று அவள் அரைகுறையாக சொன்னதும் அவன் முகத்தில் கொஞ்சம் தெளிச்சி வந்தது.

‘’சாமி, கோடி கோடியா கொட்டி வீடு கட்டியிருக்கேன். ஆனா சந்தோஷம் இல்லை. வீட்ல ஏதோ குறை இருக்குன்னு நினைக்கிறேன். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, சரி செஞ்சி குடுங்க. அடுத்த மாசம் படம் வெளிவருது… வீடு சரியா இருந்தாத்தான் படம் சக்சஸ் ஆகும்…’’ என்றான்.

‘’சரி, நீங்கள் குளித்து வேட்டி, சட்டை மாற்றிக்கொண்டு குகை கோயிலுக்கு வாருங்கள், அதற்குள் நான் பிரசன்னம் பார்த்துவைக்கிறேன்’’ என்றபடி குகைக்குள் நுழைந்தேன். எனக்கு கண்களால் நன்றி சொன்ன ஜெயலஷ்மி, தேர்ந்த காதலி போன்று சஞ்சயன் கைகளுக்குள் கை கோர்த்தபடி வீட்டுக்குள் நுழைந்தாள்.

முள்ளில் விழுந்த சேலையாக ஜெயலஷ்மி மாட்டியிருக்கிறாள்.. அழகுக்கு அலையும் ஆண்களை பெண் வரவேற்பதுதான் பிரச்னைகளுக்குக் காரணம். அழகு என்று பாராட்டும்போது வெட்கப்படும் பெண், வலையில் வலியச்சென்று சிக்கும் மான் போன்றவள். அழகினால் அவளுக்கு ஆரம்பத்தில் மரியாதையும், பின்னர்   அவமரியாதையும் கிடைக்கும். இதனை உணரும் பெண் மட்டுமே அழகுச் சுழலில் இருந்து தப்பிக்க முடியும். மலைப் பாம்புக்கு இரையாக சிக்கியிருக்கும் ஜெயலஷ்மிக்கு என்ன தேவை என்று யோசித்த நேரத்தில் சஞ்சயன் கோபமாக உள்ளே வந்தான்.

‘’நீ நம்பூதிரியோட ஆள் இல்லைன்னு சொல்லிட்டார், யார் நீ?’’ என்று ஆக்ரோஷமாகக் கேட்டான்.

  • கண்கள் திறக்கும்.
What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.


Contact Us skmnila1@gmail.com

© 2020 www.gyanaguru.com. All Rights Reserved.

Designed and Developed by www.infords.com
Scroll To Top