பிரபல நடிகனின் ரகசிய மனைவியாக வாழும் ஜெயலஷ்மி எப்படிப்பட்ட விடிவுக்கு ஆசைப்படுகிறாள் என சிந்தித்த நேரத்தில், புயல் போன்று நுழைந்தான் சஞ்சயன்.
‘’நீ நம்பூதிரி அனுப்புன ஆள் இல்லைன்னு சொல்லிட்டார். யார் நீ…?’’ என்று ஆவேசமாகக் கேட்டான். அவன் பின்னே ஓடிவந்த ஜெயலஷ்மி தர்மசங்கடத்தில் விழித்தாள். திருதிருவென விழித்த ஜெயலஷ்மியையும் அவன் விட்டுவைக்கவில்லை.
‘’யார் வந்தாலும் திறக்கிற புத்தி இன்னமும் உனக்குப் போகலை. என்கிட்டே கேட்காம இவரை எதுக்கு வீட்டுக்குள்ள விட்டே..?’’ என்று அவளிடம் கொந்தளித்தவன் மீண்டும் என்னிடம் கோபமானான்.
‘’நீ எதுக்கு இங்கு வந்திருக்கிறாய் என்பதை சொல்லிவிடு, உன்னை போலீஸிடம் பிடித்துக் கொடுத்து ஜெயலில் போடப்போகிறேன்…’’ என்று மிரட்டினான். நான் கொஞ்சமும் பதறாமல் சஞ்சயனை அழுத்தமாகப் பார்த்தேன்.
‘’இன்று நீ மரண கண்டத்திலிருந்து எப்படி தப்பினாய் என்று தெரியுமா?’’ அழுத்தமாக கேட்ட பிறகும் திசை மாறாமல் அவன் கேள்வியில் உறுதியாக நின்றான்.
‘’முதல்ல நீ யாருன்னு சொல்லு… எதுக்கு பொய் சொல்லி வீட்டுக்குள்ள நுழைஞ்சே..?’’ நான் பதில் யோசிக்கும் முன்பு ஜெயலஷ்மி என்னை காப்பாற்ற முயற்சி செய்தாள்.
‘’நீங்க ஆக்சிடென்ட் செஞ்சதை நினைச்சு ரொம்பவும் பயந்துட்டு இருந்தேன். அப்பத்தான் இவர் வாசலுக்கு வந்தார். இந்த வாரம் நம்பூதிரி ஆள் அனுப்புறேன்னு சொல்லியிருந்தாரா… இவரை நம்பூதிரி ஆளுன்னு நினைச்சு நான்தான் கூப்பிட்டேன். இவர் உள்ளே வந்ததும் உங்களுக்கு திருஷ்டி கழிஞ்சிடிச்சுன்னும், ஜோசியக்காரனை இடிச்சீங்கன்னும் சரியா சொன்னதும் முழுசா நம்பிட்டேன்…’’ திரைக்கதை, வசனம் எழுதி ஜெயலஷ்மி சிறப்பாக நடித்தாள். நான் சட்டென்று எழுந்தேன்.
‘’எந்தச் செடியில் பூத்தாலும் மல்லிகையின் மணம் ஒன்றுதான். யோகியரை சந்தேகிப்பது பெற்ற தாயின் கற்பை சோதிப்பதற்கு சமம். என்னை சிறையில் தள்ள ஆசைப்பட்டால் போலீஸை அழைக்கலாம். சில கோடிகளை கொள்ளையடித்தேன் என்று புகார் கொடுத்தாலும் சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறேன். எனக்கு ரோடு, வீடு, சிறை, கோயில் எல்லாமே ஒன்றுதான்…’’ என்று கறாராகப் பேசியபடி எழுந்து சோம்பல் முறித்தேன்.
அதை கோபமாக நினைத்த ஜெயலஷ்மி, சட்டென தணிந்த குரலில் கணவனிடம் ஏதோ கிசுகிசுத்தாள். அவள் பேசப்பேச அவன் கோபம் தணிந்து தலையாட்டத் தொடங்கினான். சற்று நேரத்தில் அமைதியாக வந்தான்.
‘’மன்னிச்சுக்கோங்க சாமி. நதிமூலம், ரிஷிமூலம் பார்க்கக்கூடாதுன்னு சொல்வாங்க. தெரியாமப் பேசிட்டேன். இன்னைக்கு கிளைமேட் மோசமா இருந்திச்சா, அதான் காலையில இருந்து மூடு அவுட், ஆக்சிடென்ட் ஆனதும் ரொம்பப் பயந்துட்டேன். எனக்கு எதைப் பார்த்தாலும் சந்தேகம் வருது, அதனாலதான் உங்களையும் சந்தேகமா பார்த்துட்டேன். மன்னிச்சிடுங்க. தப்புக்கு சாபம் குடுத்துடாதீங்க…’’ என்று கிளிப்பிள்ளை போன்று ஒப்பித்தான்.
சட்டென சிரித்தேன். என் சிரிப்புக்கு காரணம் தெரியாமல் விழித்தான்.
‘’மோசமான வானிலை என்று ஒன்று இருக்கிறதா சஞ்சயா?’’ என் கேள்வியைக் கேட்டு திருதிருவென விழித்தான்.
‘’கார்காலம், கூதிர்காலம், முன்பனிக் காலம், பின்பனிக் காலம், இளவேனில் காலம், முதுவேனில்காலம் உண்டு.. நீ சொன்னது போன்று மோசமான வானிலையைக் கேள்விப்பட்டதே இல்லையே…’’
‘’கசகசன்னு வியர்வையும் வெட்கையுமா இருக்கிற இந்த வெயில் காலத்தைத்தான் சொல்றேன் சாமி…’’ என்று புரியாமல் எடுத்துக்கொடுத்தான்.
‘’வெயில் என்பது இறைவனின் பாசப்பார்வை. சூரியனின் அதிவெப்பத்தாலே உலகம் இன்னமும் இயங்குகிறது. மனிதனைத் தவிர அத்தனை உயிரினங்களும் வெப்பத்திற்கு ஏங்குபவையே. வெயிலில் இறங்கி விளையாடு, எலும்புக்கும் சதைக்கும் போதிய பலம் கிடைக்கும். மூளை கூர்மையடையும். எந்த ஒரு பருவத்தையும் மோசமான வானிலை என்று பழிக்காதே..’’ சட்டென்று ஒரு ரசிகன் போன்று கை தட்டினான்.
‘’பிரமாதம்… பிரமாதம். இப்படி ஒரு விளக்கத்தை நான் எங்கேயும் கேட்டதில்லை சாமி. இனி காலத்தைப் பழிக்க மாட்டேன். ஆனால் நல்ல நேரம், கெட்ட நேரம் உண்மைதானே சாமி, காலண்டரில்கூட போட்டிருக்கிறார்கள்…’’ என்று ஆர்வமாக கேள்வி கேட்டான்.
‘’காலண்டர் வானத்தில் இருந்து விழுந்ததா என்ன, அதுவும் உன்னைப் போன்ற மனிதன் உருவாக்கியதுதானே? நேரம் என்பது மனிதன் உருவாக்கிய கற்பனைக் கணக்கு. நேற்றைய காலத்துக்கும் இன்றைய காலத்துக்கும் நாளைய காலத்துக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. மனிதன் உருவாக்கிய 12 ராசிகள் 27 நட்சத்திரங்களால் காலத்தைக் கணக்குப்போட முடியாது. உயிர் இருக்கும் வரை உன் உடலுக்கு நல்ல நேரம் என்று அர்த்தம். நல்லதும் கெட்டதும் மனிதன் சிந்தனையில் உள்ளதே தவிர காலங்களில் இல்லை’’ சட்டென அடுத்த சந்தேகம் கேட்டான்.
‘’இப்போ ராக்கெட் விடுறதுக்குக்கூட நல்ல நேரம் பார்க்கிறாங்க, அப்படின்னா அவங்க முட்டாளா?’’
‘’ராக்கெட் விடுபவன் விஞ்ஞானி வேலை பார்க்கிறானே தவிர, அவன் மெய்ஞானி அல்ல…’’
‘’என்ன சாமி, இப்படி சொல்லிட்டீங்க அவங்க எவ்வளோ பெரிய அறிவாளிங்க. ராக்கெட் விடுறது எவ்வளவு பெரிய தொழில்நுட்பம். அவ்ளவோ தெரிஞ்சவங்க நல்ல நேரம் தெரியாமலா இருப்பாங்க?’’
‘’ராக்கெட் தொழில்நுட்பம் தெரிந்தவனுக்கு விவசாய தொழில்நுட்பம் புரியாது. நீ ஒரே டேக்கில் நடிப்பதை விஞ்ஞானியால் நிச்சயம் செய்யமுடியாது. பூஜை போட்டு தேங்காய் உடைத்தால்தான் ராக்கெட் வெற்றிகரமாக மேலே எழும்பும் என்று நினைத்தால் அவன் துறையில் அவனுக்கே நம்பிக்கை இல்லை என்று அர்த்தம்… சரி, வீண் பேச்சு வேண்டாம். போலீஸில் பிடித்துக் கொடுக்கப்போகிறாயா அல்லது பிரசன்னம் பார்க்க வருகிறாயா?’’ முறைப்பாகக் கேட்டேன்.
‘’நான் பேசுனதை மறந்திடுங்க சாமி. இதோ குளிச்சிட்டு வந்துடுறேன். பூஜைக்கு வேண்டியதை செஞ்சு குடு ஜெமி, இதோ வந்துடுறேன்…’’ என்று சந்தோஷமாக துள்ளியோடினான். ஜெயலஷ்மி முகத்தில் பரிபூரண நிம்மதி.
‘’பயந்துட்டேன் சாமி…’’ என்று நமஸ்கரித்தாள்.
‘’நீ மிகச்சிறப்பாக சமாளித்தாய் பெண்ணே. ஆனால் வாழ்க்கையிலும் நீ நடிக்க வேண்டிய அவசியம் என்ன?’’
‘’சாமி… நீங்க என்ன கேட்கிறீங்கன்னு புரியலை…’’
‘’நீ இங்கு நிம்மதியாக இல்லை என்பதை வெளிப்படையாகச் சொல்வதில் என்ன தயக்கம்? எதற்காக பூலோகத்திலே மிகுந்த ஆனந்தம் கொண்ட பெண்ணாக அவனிடம் நடிக்கிறாய்?’’
‘’இந்த இடம் இல்லையென்றால் என் கதி என்னவென்று எனக்கே தெரியவில்லை சாமி. தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க அழைக்கிறார்கள். நடிப்பு மீது ஏனோ வெறுப்பு வந்துவிட்டது. வேறு ஒரு பெண்ணாக வேடம் போடப் பிடிக்கவில்லை. தேவைக்கும் அதிக பணம், போலியான வேலை ஆட்கள், பொய்யான புகழ் பார்த்து சலித்துவிட்டது. நான் எதற்கு ஆசைப்பட்டு சென்னைக்கு வந்தேனோ, அதுவே தவறு என்று நினைக்கிறேன். வெளியே சுதந்திரமாக திரிவதைவிட, இந்த சிறை வசதியாகவும் தெரிகிறது…’’ விரக்தியுடன் பேசினாள்.
‘’உனக்கு குழந்தை மீது ஆசை இருக்கிறதா?’
‘’எந்தப் பெண்ணுக்குத்தான் ஆசை இருக்காது. ஆனால் குழந்தை பெற்றுக்கொள்ள அச்சம் இருக்கிறது. ஆணோ, பெண்ணோ சினிமா துறையில்தான் கால் பதிக்கும். என்னைப் போலவே போலியான ஆட்கள், வீண் புகழ்ச்சியில் காலம் தள்ளும். நான் என் கணவனிடம் நடிப்பது போல, அம்மாவிடமும் குழந்தை நடிக்கும்..’’ என்றபடி பூஜை அறையில் இருந்த விநாயகரை முறைத்தாள்.
‘’கடவுள் மீது உனக்கு கோபமா ஜெயலஷ்மி…?’’
‘’இல்லை சாமி. நான் ஆசைப்பட்ட அனைத்தும் கிடைப்பதற்கு விநாயகர் வழி செய்திருக்கிறார். இப்போது எனக்குத்தான் என்ன கேட்பது என்று தெரியவில்லை…’’
‘’போலியாக இல்லாமல் நிஜமாக வாழ வழி சொல்கிறேன்..’’
‘’நிஜமாகவா.. அது என்ன வழி?’’
‘’உன் கணவனை நீ காதலிக்க வேண்டும்…’’
கையால் வாய் பொத்தி மிகவும் அழகாய் சிரித்தாள் ஜெயலஷ்மி.
- கண்கள் திறக்கும்.