கணவரை காதலிக்க வேண்டும் என்று நான் ஜெயலஷ்மியிடம் சொன்னதும், அவள் பளீரென சிரித்தே விட்டாள். அந்த சிரிப்புக்குப் பின்னே பெரும் வேதனை ஒளிந்திருந்தது. சிரித்து முடித்த பின்பு இதழோரத்தில் இகழ்ச்சி வந்தது.
‘’சஞ்சயனுக்கு ஏற்கெனவே மனைவியும் ரெண்டு குழந்தைகளும் இருக்காங்க. ராசிக்காக மட்டும்தான் என்னை அவர் ரகசிய கல்யாணம் பண்ணிக்கிட்டார். இது அவர் மனைவிக்கும் தெரியும். திடீர்னு கிரகத்துல ஏதாச்சும் பிரச்னையாகி அவருக்கு தொடர்ந்து சிக்கல் வந்துச்சுன்னா என் முகத்தைக்கூட பார்க்க மாட்டார். அது எனக்கு நல்லாவே தெரியும். இப்போதைக்கு எனக்கும் வேற வழி இல்லை. அதனால இந்த கூண்டுக்குள்ள வந்து உட்கார்ந்திருக்கேன். நல்ல வழி தெரிஞ்சா நான் விலகிப் போயிடுவேன். இது சஞ்சயனுக்கும் தெரியும். ஆக, நாங்க ரெண்டு பேரும் வெவ்வேற கணக்கு போட்டு புருஷன் – பொண்டாட்டியா நடிச்சுக்கிட்டு இருக்கோம். இதுல எப்படி சாமி காதல் வரும்…’’
‘’நீ யாரையாவது காதலித்திருக்கிறாயா?’’
‘’ஸ்கூல்ல படிக்கும்போது என் அழகைப் பார்த்து அத்தனை பேரும் அலைவானுங்க. ஆனா, ஒருத்தனும் தைரியமா லவ் பண்றேன்னு வந்ததில்லை. காலேஜ் படிக்கும்போது எனக்கு சினிமா கனவு வந்திடுச்சு. அதனால புத்தி முழுசும் கண்ணாடி முன்னாடி நடிக்கிறதுல போயிடுச்சு. சினிமாவில் நுழைய முயற்சி செஞ்சப்போ நிறைய பேர் என் உடம்பை பிச்சித்தின்னாங்க. அதை பெருமையா நினைச்சேன். என்னென்னமோ செஞ்சு நடிகை ஆயிட்டேன். அப்புறம் பெரிய நடிகையாக ஆசைப்பட்டேன். அதுவும் அட்ஜெஸ்ட்மென்ட் அப்படிங்கிற வார்த்தையிலே நடந்திச்சு. பணம், புகழ், பந்தா, முகஸ்துதின்னே காலம் போயிடுச்சு. இதுவரைக்கும் யார் மேலேயும் காதல் உணர்வு வந்ததே இல்லை. உண்மையை சொல்றதுன்னா செக்ஸ்லேயும் எனக்கு பெருசா சந்தோஷம் கிடைச்சதில்லை. சந்தோஷமா இருக்கிற மாதிரி சும்மா கத்தி கூப்பாடு போட்டு நடிப்பேன் அவ்வளவுதான். என் உடம்பும் மனசும் மரத்துப்போச்சு. என்னைப் பொறுத்தவரை எல்லோருக்கும் ஏதாச்சும் ஒரு அட்ஜெஸ்ட்மென்ட் தேவைப்படுது. இதுல காதலாவது, கத்திரிக்காயாவது…’’ விரக்தியுடன் பேசி முடித்தபோது அவள் கண்கள் நீரால் நிறைந்திருந்தது.
‘’நீ இத்தனை நாளும் உடல் அழகு மீது மட்டுமே கவனம் செலுத்தியிருக்கிறாய். செயற்கையாக வாழ்ந்திருக்கிறாய். அதனால் உன் பார்வையில் இந்த உலகமே போலியாகத் தெரிகிறது. உண்மையில் இந்த உலகம் அன்பால்தான் கட்டப்பட்டுள்ளது…’’ நான் பேசி முடிக்கும்முன் கேலியாகச் சிரித்தாள்.
‘’இந்த உலகத்தில் அன்புங்கிறதே கிடையாது சாமி. பெத்தவங்களே பணம்தான் முக்கியம்னு என்னை விட்டுட்டுப் போயிட்டாங்க. நான் பெருசா நம்புன மேனேஜர் எனக்கு தூக்க மருந்து குடுத்து தப்பா படம் எடுத்திருக்கான். நேர்ல சிரிக்கிற அத்தனை பேரும் முதுகுக்குப் பின்னாலே குத்துறாங்க. அன்பு, காதல், பாசம்னு சொல்லி ஏமாத்தப் பார்க்காதீங்க சாமி…’’
‘’பசியில் இருப்பவனுக்கு முதலில் உணவு கொடுத்து இயல்புக்குக் கொண்டுவர வேண்டும், அதன்பிறகு போதனை செய்தால்தான் புத்தியில் உரைக்கும். இப்போது நீ வெறுப்புடன் இருக்கிறாய், அந்த வெறுப்பை அகற்றிய பிறகே உனக்கு காதலை புரியவைக்க முடியும்…’’ என்று நான் சொன்னபோது, வேட்டி, பைஜாமாவில் சஞ்சயன் வந்து சேர்ந்தான்.
சஞ்சயனை எதுவும் பேசவிடாமல் விநாயகரைப் பார்த்து அமரச் செய்தேன். அவன் அருகே ஜெயலஷ்மியை அமரவைத்து, இருவரது கண்களையும் மூடச்சொன்னேன்.
‘’இருவரும் கடவுளின் சந்நிதியில் இருக்கிறீர்கள். உங்கள் மனதில் இருப்பதை தயங்காமல் சரளமாகப் பேசுங்கள். ஆனால் இந்த இடத்தில் பொய் சொன்னால், அது ஆயிரம் மடங்கு சாபமாக உங்களிடமே திரும்பிவரும். அதனால் நான் கேட்கும் கேள்விக்கு இருவரும் ஒரே நேரத்தில் பதில் சொல்லுங்கள். யோசிக்காமல் பதில் சொல்ல வேண்டும். மொத்தம் மூன்று கேள்விகள் மட்டுமே. இந்தக் கேள்விகள் உங்கள் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் மாற்றிவிடும்.
இந்த உலகத்திலேயே உங்களுக்கு மிகவும் பிடித்த நபர் யார்?’’
‘’ராகவ்’’ என்று சஞ்சயன் சட்டென பதில் சொல்ல ஜெயலஷ்மி யோசித்துக்கொண்டிருந்தாள். உடனே அடுத்த கேள்விக்குத் தாவினேன்.
‘’எதிர்கால லட்சியம் என்ன?’’
‘’சூப்பர்ஸ்டார் இடத்தைப் பிடிப்பது’’ இப்போதும் சஞ்சயன் மட்டுமே பதில் சொன்னான். ஜெயலஷ்மி யோசித்துக்கொண்டிருந்தாள்.
‘’ஒரே ஒரு நபரை கொல்வதற்கு அனுமதி கொடுத்தால் யாரை கொல்ல ஆசைப்படுவாய்..?’’
‘’என் அம்மா…’’ என்று ஜெயலஷ்மி பட்டென்று பதில் சொல்ல, சஞ்சயன் யோசித்துக்கொண்டு இருந்தான்.
‘’இருவரும் கண் திறக்கலாம்..’’ என்றதும் மலங்க மலங்க விழித்தார்கள்.
‘’உங்க பையன் மேல உங்களுக்கு அவ்வளவு பாசமா?’’ என்று ஜெயலஷ்மி ஆர்வமாக கேட்க, ‘’ம். பையனைப் பார்க்காம ரெண்டு நாள் இருந்தாக்கூட ஏதோ இழந்த மாதிரி இருக்கு. அவன் அம்மா செல்லம். என்னை மதிக்க மாட்டேங்கிறான். ஆனாலும், எப்பவும் அவன்கூடவே இருக்கணும்போல இருக்கு..’’ மனம் விட்டுப் பேசியவன் சட்டென, ‘’நிஜமாவே உனக்குப் பிடிச்ச நபர் ஒருத்தர்கூட இந்த உலகத்தில் இல்லையா?’’ என்று ஆச்சர்யமாகக் கேட்டான்.
இல்லை என்பதுபோல் ஜெயலஷ்மி தலையாட்ட நான் பலமாக சிரித்தேன்.
‘’பொய் சொல்லாதே ஜெயலஷ்மி. உனக்கு உன் அம்மாவை ரொம்பவும் பிடிக்கும். அவளை கொலை செய்யும் அளவுக்குப் பிடிக்கும்’’ என்று சொன்னேன். என் பதிலில் சட்டென உறைந்தாள்.
‘’நிஜமா உங்க அம்மாவை உனக்குப் பிடிக்குமா?’’ சஞ்சயன் ஆச்சர்யமாகக் கேட்டான். கண்கள் கலங்க உதடு மடித்து வெடித்து அழுதாள் ஜெயலஷ்மி. அவள் அழுகையைப் பார்த்து சஞ்சயன் உறைந்துபோனான்.
‘’முதன்முதலாக நீ அழுவதை இன்றுதான் பார்க்கிறேன் ஜெமி…’’ ஆறுதலாக அவள் கைகளைப் பிடித்தவன், ஏதோ ஒன்றை சொல்வதற்குத் தயங்கினான்.
‘’உன் மனதில் இருப்பதை சொல்லிவிடு’’ என்று எடுத்துக்கொடுத்ததும் தைரியமாகப் பேசினான்.
‘’நீ எப்பவும் உங்க அம்மாகூட சண்டை போடுவ. அதனால உனக்கு உங்க அம்மாவை பிடிக்காதுன்னு நினைச்சேன். அவங்களை இங்கே வரக்கூடாதுன்னு நான்தான் விரட்டியடிச்சேன். உன் பணத்தை உங்க அம்மா எடுத்துட்டுப் போகலை, நீ எனக்கு மனைவியா நல்லபடியா இருந்தா போதும்னு பணத்தை வாங்காமப் போயிட்டாங்க… இங்க வரக்கூடாதுன்னு உங்க அம்மாவை நான் மிரட்டித்தான் அனுப்புனேன். உன் நன்மைக்குத்தான் உங்க அம்மா எட்டிப் பார்க்காம இருக்காங்க. உன் பணத்தை வைச்சுத்தான் இந்த வீடு கட்டினேன். இன்னமும் உன் மிச்ச பணம் எங்கிட்டத்தான் இருக்கு…’’
இந்த உண்மையைத் தாங்க முடியாமல் விம்மி வெடித்து அழுதவள், திடீரென ஆவேசத்துடன் சஞ்சயன் நெஞ்சில் அறைந்து, அதன்பிறகு அப்படியே அவன் மார்பில் சாய்ந்து அழுதாள்.
‘’என் தீர்ப்பை சொல்கிறேன். ஏற்பதும் ஏற்காததும் உங்கள் விருப்பம். நீங்கள் ஒன்றாக இருந்த நேரத்தில்கூட தனித்தனியே வாழ்ந்திருக்கிறீர்கள். அதனால் இனி சேர்ந்து வாழ அவசியமில்லை. சஞ்சயா, இனி இந்தத் திக்கில் எட்டிப் பார்க்காதே. உன் சந்தோஷம், உன் எதிர்காலம் எல்லாமே உன் இல்லத்தில்தான் இருக்கிறது. இன்னொரு பெண்ணை இனி மனதாலும் நினையாதே… ஒரு நல்ல நடிகன் என்று பெயர் வாங்குவதற்கு ஆசைப்படு, உன்னுடைய படத்தின் வெற்றிக்கு ஆசைப்படாதே. வெற்றியையும் தோல்வியையும் சமமாகப் பார். பட்டம், பதவி, பணத்தை தேடிச் செல்லாதே…. உன் தொழிலை மட்டும் ரசித்து செய்.
ஜெயலஷ்மி இனி உன் கண்ணுக்குத் தெரியாத தேவதையாக இருந்து உனக்கு வெளிச்சம் கொடுப்பாள். நீயும் அவளுக்கே தெரியாமல் அவளுக்குப் பாதுகாப்பு கொடு. அவள் பாதையை இனி அவளே முடிவு செய்யட்டும். இந்த இல்லத்தை ஜெயலஷ்மியிடமும் ஒப்படைத்துவிட்டு வெளியேறு. அவள் அம்மாவின் அன்பை அவள் இனியாவது அனுபவிக்கட்டும்…
இனி வாஸ்து, நல்ல நேரம் போன்றவற்றில் தலையிடாதே… எல்லாம் நல்லவண்ணம் நடக்கும்…’’ என்றபடி எழுந்தேன். இருவரும் சட்டென என் காலில் விழுந்தனர். அவர்கள் எழுவதற்குள் இல்லத்தில் இருந்து வெளியேறினேன்.
- கண்கள் திறக்கும்.