தன்னுடைய முயற்சியில் சற்றும் மனம்தளராத விக்கிரமாதித்தன், பத்தாவது மாடியில் படுத்திருந்த வேதாளத்தைப் பிடித்து தோளில் தூக்கிக்கொண்டு கீழே இறங்கினான். லிஃப்ட் இன்னமும் சரிசெய்யப்படவில்லை என்பதால் வேதாளத்துடன் படிக்கட்டில் இறங்கினான். தோளில் இருந்த வேதாளம் விக்கிரமாதித்தனுக்கு அலுப்பு தெரியாமல் இருக்க ஒரு கதை சொல்லியது.
வரலெட்சுமியை புதுமைப் பெண் என்றெல்லாம் சொல்லமுடியாது. ஆனால் எதையும் நியாயமாகவும் நேர்மையாகவும் அணுகுவாள்.. யாருக்கும் தொந்தரவு கொடுக்கமாட்டாள், அதேபோன்று பிறருக்கு உதவும் குணமும் இல்லை. தானுண்டு தன் குடும்பம் உண்டு என்றபடி பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்து, ஒரு நல்ல நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தாள். அதுவரை வாழ்க்கை நன்றாகத்தான் இருந்தது.
பெற்றோர் பார்த்து செய்துவைத்த திருமணம், அவள் வாழ்க்கையை புரட்டிப்போட்டது. சாப்பிட்ட தட்டைக்கூட கழுவாமல் சொகுசாக இருந்தவளுக்கு, கணவன் விவேகானந்தன் வீட்டில் பிறர் தட்டையும் கழுவவேண்டிய அவசியம் ஏற்பட்டது. சினிமாவுக்கு கணவனுடன் செல்வதற்கும் மாமியாரிடம் அனுமதி கேட்கவேண்டிய நிலை. டிரெஸ் உடுத்துவது தொடங்கி வகிடு எடுப்பதுவரையிலும் விவேக் தலையிட்டான். இவளுக்குப் பிடித்த மஞ்சள் கலரை பட்டிக்காட்டு ரசனை என்று கிண்டல் செய்தான். சின்னச்சின்ன முடிவுகளைக்கூட கணவனே எடுத்தான். அதைக்கூட பொறுத்துக்கொண்டாள். ஆனால் அவள் சம்பளப் பணத்தை செலவு செய்வதற்கும் அனுமதி கேட்கவேண்டும் என்றதும் தாங்கமுடியாமல் பொங்கியெழுந்தாள்.
‘’நான் சம்பாதிக்கும் பணத்தை என் தோழிக்கு கடன் கொடுக்கக்கூடாதா… நான் என்ன உங்கள் அடிமையா?’’ என்று எதிர்த்துக்கேட்க விவேகானந்தன் பட்டென்று வாயில் அடித்துவிட்டான். உடனே கோபத்துடன் அம்மா வீட்டுக்குக் கிளம்பிவிட்டாள். விவேகானந்தன் வீட்டுக்கு வந்து ஸாரி சொன்னபிறகும் வரலெட்சுமியின் கோபம் தணியவில்லை. தங்கள் செல்லமகளுக்கு அடிவிழுந்ததை வரலெட்சுமியின் பெற்றோரால் தாங்கமுடியவில்லை. சண்டை, சண்டை மேலும் சண்டை ஏற்பட்டு ஒரு சுபயோக தினத்தில் விவாகரத்து கிடைத்தது.
விவாகரத்து வாங்கிய ஆறே மாதத்தில் கிராமத்தில் இருந்து ஒரு பெண்ணை திருமணம் முடித்துக்கொண்டான் விவேகானந்தன். இது வரலெட்சுமிக்கு மிகவும் அவமானமாக தெரியவே மறுகல்யாணத்துக்கு தயாரானாள். இந்த முறை நன்றாக விசாரித்து ராகவனை திருமணம் முடித்துவைத்தார்கள். பெண்ணைப்பற்றிய ராகவன் பார்வையே வித்தியாசமாக இருந்தது. ‘உன் விஷயத்தில் நான் தலையிட மாட்டேன். என் வழியில் நீ வராதே…’ எனனும் சுதந்திரவாதியாக இருந்தான். சம்பளப் பண விஷயத்தில்தான் முதல் கணவனுடன் விவாகரத்து என்று வரலெட்சுமி சொல்லியிருந்ததால், அவள் சம்பளத்தை கண்டுகொள்வதேயில்லை ராகவன். வீட்டுச்செலவுக்கு வரலெட்சுமியின் பணத்தைத் தொடமாட்டேன் என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டான். வீட்டில் இரண்டு வேலைக்காரிகள் இருந்ததால், வரலெட்சுமிக்கு வேலைகளே இல்லை.
வார நாட்களில் கால்களில் இறக்கை கட்டிக்கொண்டு பறக்கும் ராகவன், எந்த ஒரு காரியத்துக்காகவும் வரலெட்சுமியை எதிர்பார்ப்பதில்லை. வேலைக்காரியிடம் டீ வாங்கிக்குடித்து, வேலைக்காரியை சாப்பாடு வைக்கச்சொல்லி, வேலைக்காரியை அயர்ன் செய்யச்சொல்லி கிளம்பிவிடுவான். ஆரம்பத்தில் இதை சுதந்திரம் என்று விரும்பினாள் வரலெட்சுமி. ஆனால் ஒரு ஞாயிற்றுக்கிழமை அவளை மிகவும் யோசிக்கவைத்தது.
கணவனுக்காக விதவிதமாக சமைத்து வைத்திருந்தாள் வரலெட்சுமி. வேலைக்காரி சமையலுக்கும் தன் சமையலுக்கும் வித்தியாசம் தெரிகிறதா என்பதைப் பார்ப்பதற்குக் காத்திருந்தாள். ராகவன் ஒரு வாய் சாப்பிட்டதும் முகம் மாறினான், ‘உன்கிட்ட எத்தனை தடவை சொல்லியிருக்கேன். எனக்கு காரம் தெரியக்கூடாதுன்னு… முட்டாளா நீ’ என்று வேலைக்காரியை எகிறினான். உடனே பதறிய வரலெட்சுமி உண்மையைச் சொல்ல, அடுத்தநொடியே பாசமாக மாறினான் ராகவன். ’’சமையல் ரொம்ப டேஸ்ட்டா இருந்திச்சு. உண்மையை தெரிஞ்சுக்கத்தான் சும்மா கத்தினேன். சமையல் ஆஹா… ஒஹோ…. பிரமாதம்’ என்று புகழ்ந்து தள்ளினான். அப்போதுதான் வரலெட்சுமிக்கு தன்னுடைய கணவன் நேரத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் பச்சோந்தி என்பது புரிந்தது. வீட்டில் டி.வி., சோபா, ஏசி போன்று மனைவியையும் ஒரு சமூக அந்தஸ்துக்காக வைத்திருக்கிறான் என்பது புரிந்தது.
ஒரு குழந்தை பிறந்ததும் தன்னுடன் அன்பாகிவிடுவான் என்று நினைத்தாள். ஒரு வருடமாகியும் குழந்தை பிறக்கவில்லை. டாக்டரிடம் சிகிச்சை எடுத்துக்கொள்ள விரும்பி ராகவனையும் அழைத்தாள். ’உனக்கு குழந்தை வேண்டும் என்றால் நீ போய்ப்பார்…’ என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக்கொண்டான். பரிசோதனையில் வரலெட்சுமியிடம் குறை எதுவும் தென்படவில்லை, கணவனை பரிசோதிக்கவேண்டும் என்று மருத்துவர் சொல்ல, ’இது பணம் பறிக்கும் வேலை. என்னிடம் குறை எதுவும் இல்லை’ என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டான் ராகவன். நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும் என்று வரலெட்சுமி அடம்பிடிக்க, ‘உன்னிடம் ஏதோ தவறு இருக்கிறது. அதனால்தான் முதல் கணவன் உன்னை விரட்டியிருக்கிறான். இருக்கும்’ என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டான். மனவருத்தத்தில் அம்மா வீட்டுக்குத் திரும்பிவிட்டாள் வரலெட்சுமி.
ராகவன் கூப்பிட வரவில்லை என்றதும் வரலெட்சுமியே போன் செய்தாள். ‘என்னை கூப்பிட வரமாட்டீர்களா?’ என்று ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு கேட்டாள். ‘இங்கே இருக்கவிரும்பினால் நீதான் வரவேண்டும்…’ என்று போனை வைத்துவிட்டான். எனக்குப் பிடிக்காத விஷயத்தை செய்யச்சொன்னால் விவாகரத்து செய்யவேண்டி வரும் என்ரு சொல்லிவிட்டான். ஆனாலும், எப்படியும் வருவான் என்று வரலெட்சுமி காத்திருக்க, விவாகரத்து நோட்டீஸ்தான் வந்தது.
இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறாள் வரலெட்சுமி. அவள் வாழ்க்கையின் எதிரி விவேகானந்தனா, ராகவனா அல்லது வரலெட்சுமியா? இப்போது வரலெட்சுமி என்ன செய்யவேண்டும்? இந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிக்கவேண்டும். சரியான பதில் சொல்லவில்லை என்றால் உன் தலை வெடித்து சிதறிவிடும் என்று சொன்னது வேதாளம்.
சற்றுநேரம் யோசித்த விக்கிரமாதித்தன், ’’வரலெட்சுமி, விவேகானந்தன், ராகவன் ஆகிய மூன்று பேரிடமும் தவறு இல்லை. இந்த மூவரையும் தனித்தனி தீவுகளாக வளர்த்த அவர்களது பெற்றோர்களே குற்றவாளிகள். கணவன் – மனைவி இணைந்துசெல்லும் தாம்பத்ய பாதையில் மலர்கள் மட்டுமல்ல முட்களும் இருக்கும். அவற்றை எடுத்துப்போட்டு நடக்கவேண்டும் என்று சொல்லித்தராமல், புதுப்புது பாதையை தேட அனுமதித்த பெற்றோர்களே குற்றவாளிகள்.’’ என்றான்.
’’ம்… சரிதான். செல்லம் கொடுத்து வளர்ப்பதுமட்டுமின்றி பிறருடன் சேர்ந்துவாழும் கலையை பெற்றோர்கள் சொல்லித்தருவதில்லை. சரி, இனி வரலெட்சுமி என்ன செய்யவேண்டும் என்பதை சொல்…’’ குதூகலமாக கேட்டது வேதாளம்.
‘’வரலெட்சுமியிடம் வாழ்க்கை சிக்கலுக்குத் தீர்வுகாணும் பொறுமை இல்லை. புலி வாழும் காட்டில்தான் மானும் வாழ்கிறது என்பதைப்போல் ஆணும் பெண்ணும் நிச்சயம் சேர்ந்துவாழ முடியும் என்ற எண்ணம் அவளுக்கு வரவேண்டும். தவறு செய்யாத மனிதர்கள் என்று யாருமே இருக்கமுடியாது. அதனால் தவறுகளுடன் ஒருவரை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை வரலெட்சுமி வளர்த்துக்கொள்ள வேண்டும்.
உணவு சமைப்பதற்கு, துணிகளை துவைப்பதற்கு மற்றும் சேவை புரிவதற்குத்தான் ஆணுக்கு பெண்ணின் துணை தேவை. இந்த வேலைகளை எல்லாம் ஒரு வேலைக்காரியாலும் செய்துவிட முடியும். அதனால்தான் விவாகரத்துக்குப்பிறகு ஆணின் வாழ்க்கை சிக்கலாக இருப்பதில்லை.
தாய்மை அனுபவம், குடும்பசூழல் உருவாக்கம், அரவணைப்பு மற்றும் பாதுகாப்புக்கு ஆணின் துணை பெண்ணுக்குத் தேவைப்படுகிறது. இவற்றை வேலைக்காரன் மூலம் பெற்றுவிட முடியாது. அதனாலே விவாகரத்துக்குப் பிந்தைய வாழ்க்கை பெண்ணுக்கு மிகவும் கடினமாக இருக்கிறது. இப்படி அப்படியொரு கட்டத்தில் இருக்கும் வரலெட்சுமி, இனி வேலையில் மட்டும் கவனம் செலுத்தி, எதிர்காலத்தை நோக்கி நகரவேண்டும். அவளது வாழ்க்கைப் பாதையில் மீண்டும் ஆண் எதிர்ப்படலாம். அப்போது பண்பட்ட மனதுடன் இணைந்து சிறப்பாக வாழலாம்…’’
‘’இதுதான் நீ சொல்லும் தீர்ப்பா…’’ வாய் நிறைய புன்னகையுடன் கேட்டது வேதாளம்.
‘’ஆம்…’’ என்று விக்கிரமாதித்தன் சொன்னதும் அவன் தலை வெடித்து சிதறியது. கெக்கேபிக்கேவென்று சிரித்தபடி பத்தாவது மாடியில் போய் ஜம்மென்று படுத்துக்கொண்டது வேதாளம்.
விக்கிரமாதித்தன் சொன்ன பதில் தவறு என்றால், சரியான பதில் உங்களுக்காவது தெரிகிறதா…?