ஏழைகளுக்கு மருத்துவமனை என்பதே ஆடம்பரம்தான். குழந்தை உயிர் பிழைப்பதற்காக, பாக்கியம் மீண்டும் மீண்டும் கையேந்தி கடனாளியாக வேண்டாம் என்பதற்காகவே, அந்தக் குழந்தையின் உயிரை பிடித்துவைத்திருந்த ஆக்சிஜன் டியூப்பை உருவினேன். சட்டப்படி இது கொலை, மருத்துவத்தின் படி கருணைக்கொலை, மனசாட்சியின் படி களை எடுத்தல். எனக்கு இந்த மூன்றின் மீதும் நம்பிக்கை இல்லை என்பதால், கடமை என்று எடுத்துக்கொண்டேன்.

மருத்துவமனைக்குள் நுழைந்த பாக்கியம் எந்த நேரமும் கதறியழுதபடி வெளியே ஓடி வரலாம் என்பதால், அந்த இடத்தைவிட்டு நகர்ந்தேன். கொஞ்ச நேரம் முன்புவரை வயிற்றைக் கிள்ளிக்கொண்டிருந்த பசி, இப்போது செத்துப் போயிருந்தது. ஓர் உயிரைக் குடித்த திருப்தியாக இருக்கலாம் என்ற நினைப்புடன் நிதானமாக நடை போட்டேன்.

உச்சி வெயில் தலையில் நுழைந்து நாக்கு வரை சுட்டது. எங்காவது படுத்து ஓய்வெடுக்கச் சொல்லி உடல் கெஞ்சியது. சொகுசான இடம் தேடி நடந்து களைத்த நேரத்தில் பூங்கா கண்ணில் பட., சட்டென நுழைந்தேன்.

மரங்களுக்குக் கீழிருந்த அத்தனை பெஞ்ச்களையும் மக்கள் ஆக்கிரமித்திருந்தனர். தூரத்தில் நல்ல நிழலுக்குக் கீழிருந்த பெஞ்சில் ஒருவர் மட்டும் அமர்ந்திருப்பதை பார்த்து நடந்தேன். என்னை முந்திச்சென்ற ஒருவர் அந்தப் பெஞ்சில் உட்கார்ந்தார்.

‘’ஹேய்… வேற எங்காவது போ…’’ என்று ஏற்கெனவே உட்கார்ந்திருந்த மனிதர் அதிகார தோரணையில் விரட்ட, புதியவர் மிரண்டுபோய் நழுவினார்.. பொதுச் சொத்தை சொந்தம் கொண்டாடும் நபர் எனக்கு ஆத்திரமூட்டினார். அவருக்குப் பின்னிருந்த மகிழம் மரத்தின் வேரில் அமர்ந்து, முதுகை மரத்தில் சாய்த்து கால்களுக்கு ஓய்வு கொடுத்தேன். இலைகளை தள்ளிய சலசலப்பு கேட்டு, பெஞ்ச் மனிதர் என்னை திரும்பிப் பார்த்தார். நான் கண்டுகொள்ளாமல் படுக்க… அவரும் வேகவேகமாக பெஞ்ச் முழுவதும் ஆக்கிரமித்து படுத்துக்கொண்டார். என்னை உறக்கம் உற்சாகமாக வரவேற்றது.

‘’அப்பா… அப்பா… எந்திரிங்க… …’’ என்று என் அருகே படுத்திருந்தவரை, அவர் மகன் மெதுவான குரலில் அழைப்பதைக் கேட்டு விழிப்பு வந்தது. கண்ணைத் திறக்க விருப்பமின்றி பேசுவதை ஒட்டுக் கேட்டேன்.

‘’அப்பா…. அப்பா…’’ மீண்டும் மகன் அழைத்தான்.

‘’ம்… அதுக்கு காது கேட்கலைன்னு எத்தனை தடவை  சொல்றது. செவிட்டு பிணத்தை தொட்டு எழுப்புங்க. வீட்ல இருந்தா வேலை சொல்லிடுவேன்னு, இங்கே வந்து படுத்திருக்கார்…’’ எரிச்சலாக பேசிய பெண் குரல் மருமகளாக இருக்கவேண்டும்.

‘’அப்பா… அப்பா…’’ என்று அவன் தோள் தொட்டு எழுப்பியதும், விசுக்கென அவர் எழுவதை என் மூடியிருந்த கண்கள் வழியே பார்த்தேன்.

‘’அப்பா… நாங்க ரெண்டு பேரும் வெளியே போறோம்… உங்ககிட்ட சாவி இருக்குல்லே… இப்ப வீட்டுல போய் இருங்க… நைட்டுக்கு சாதம் இருக்கு.…’’ கொஞ்சம் உரக்கப் பேசியவனிடம் வைணவ வாடை தெரிந்தது.

‘’ராகவி’’ என்று பெரியவர் இழுத்தார்..

‘’அவளை நாங்க பிக்கப் பண்ணிக்குவோம்… நீங்க சீக்கிரம் வீட்டுக்குப் போய் கதவை நல்லா பூட்டிக்கோங்க..’’ என்று உரக்க சொல்லிவிட்டு, பதில் எதிர்பார்க்காமல் நகர்ந்தனர். நான் கண்களைத் திறந்து பார்த்தேன்.

அறுபதைத் தாண்டிய நடுத்தர தேகம். அரசு பதவியில் இருந்து ஒய்வு பெற்றவராக இருக்கலாம்.  சட்டை, பேன்ட், பெல்ட் போன்றவற்றை சரிசெய்து கிளம்ப யத்தனித்தவர், அவரையே உற்றுப் பார்க்கும் என்னை கவனித்தார்.

‘’காது கேட்கலேன்னு ஏன் பொய் சொல்றீங்க..?’’ என்றதும் கையும் களவுமாக பிடிபட்ட குற்றவாளி போன்று முறைத்துப் பார்த்தவர்,  அப்படியே சரிந்து பெஞ்சில் அமர்ந்தார். நான் சாவகாசமாக எழுந்து அவருக்கு அருகில் அமர்ந்து சிரித்தேன். நான் மரத்தடி இலைகளைத் தள்ளிய சலசலப்புக்கே கண் திறந்து பார்த்தவர், மகன் கூப்பிட்ட பிறகும் காது கேட்காதவர் போல் நடிப்பதற்கு காரணம்அறிய விரும்பினேன்.

‘’எப்படி கண்டுபிடிச்சீங்க..?’’ குரலில் சத்து இல்லாமல் கேட்டார்.

‘’இதென்ன பிரம்ம ரகசியம்? அதைவிடுங்க. மனைவி இல்லாத வாழ்க்கை நரகம் இல்லையா..?’’ என்றதும் அவர் முகத்தில் பிரகாசம் எரிந்தது.

‘’உங்களுக்கும் மனைவி இல்லையா..?’’ மென்மையாகக் கேட்டார். என்னைப் பற்றி நான் உண்மை சொல்வதில்லை, பொய்யும் பகிர்வதில்லை. அதனால் அந்தக் கேள்வியை கண்டுகொள்ளாமல், ‘’வாருங்களேன்… உங்கள் வீட்டுக்குப் போய் பேசலாம்…’’ என்று எழுந்தேன். நான் வீட்டுக்கு வருவதை அவர் விரும்பவில்லை என்பது முகத்தில் பளீச்சென தெரிந்தது.

‘’வேண்டாம்… நிச்சயம் பிரச்னையாயிடும், இப்ப யாரையும் நம்ப முடியலை..’’

அந்தப் பதில் என்னை உசுப்பேற்ற, அவர் வீட்டுக்குள் போயே தீர்வது என்று முடிவு செய்தேன். 

‘’பெத்த பிள்ளையை மட்டும் நம்ப முடியுமா என்ன..? சரி, உங்க வீடு வரைக்கும் பேசிக்கிட்டே போகலாம்…’’ என்ற பிறகும் தயங்கினார்.

‘’நாம என்ன பேசணும்…’’

‘’ம்.. உங்க எதிர் காலம், உங்க மனைவியின் இறந்த காலம்…’’ என்றதும் அவர் முகத்தில் கலவரம் குறைந்தது. ஜோசியம் பார்த்து காசு கேட்க ஆசைப்படுகிறேன் என்று நினைத்திருக்கலாம்.

‘’உங்களுக்கு சொல்ல வேண்டியதை சொல்லிட்டுப் போயிடுறேன். பயப்பட வேண்டாம்… கடவுள் சத்தியமாக நான் யாரையும் ஏமாற்ற மாட்டேன்…’’ என்று சொன்னதும் நம்பிக்கையுடன் எழுந்தார். கண்ணுக்கு முன் நிற்கும் மனிதனை நம்பாமல், பார்த்தேயிராத கடவுளை  நம்புகிறார் என்றதும் சிரிப்பு வந்தது. மெல்லிய புன்னகையுடன் அவருக்கு ஜோடியாக நிதானமாக நடை போட்டேன்.

‘’உங்களுக்கு என்னைவிட வயசு கம்மிதானே..?’’ சந்தேகம் கேட்டார்.

நான் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல விரும்பாமல், ‘’உங்க மனைவி உயிருடன் இருந்தபோது, அவளை மதித்ததே இல்லைன்னு என்கிட்ட வருத்தப்பட்டாங்க…’’ என்று அடிக்குரலில் சொன்னேன். நடையை தளர்த்தியவர்,  என் வலையில் விழுந்துவிட்டார் என்று நினைத்தேன். ஆனால் நான் எதிர்பார்க்காத ஒரு கேள்வியைத் தூக்கிப் போட்டார்.

‘’உங்ககிட்ட பேசுனாளா… அப்படின்னா என் மனைவி பேரை சொல்லுங்க பார்ப்போம்..’’ என்றார். இவரை சாதாரண பெரிசு என்று எடை போட்டது தவறு… காவல் துறையில் இருந்து ஓய்வு பெற்றிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன்.

‘’காவல் பணி எவரையும் நம்பவிடாது… மனைவியிடம் நம்பிக்கை வைத்ததில்லை. குடும்பக் கோபுரத்தை பொம்மை தாங்குவதாக நினைத்தாய். அந்தக் கோபுரம் அதாவது மனைவி இறந்த பிறகுதான் நிஜம் புரிந்திருக்கிறது…’’ என்று பேச்சை மாற்றினேன்.

அவர் முகத்தில் மாற்றம் தெரிந்தது. அப்படியென்றால் காவல் துறை என்று நான் சொன்னது சரி. ஆனாலும், அவர் மனைவி பெயரைச் சொன்னால்தான் என்னை முழுமையாக நம்புவார் என்பதால் சிந்திப்பதாக வானத்தைப் பார்த்தேன். என்னை ஆர்வமாகப் பார்த்தவர் முகத்தில் புன்னகையும், என்னை தோற்கடித்த வெறியும் தெரிந்தது. இனியும் தாமதிப்பதில் அர்த்தம் இல்லை என்பதால் தெம்பாக அம்பு எய்தேன்..

‘’தேவியின் பெயர் என்பதை மட்டும் சொல்வதற்குத்தான் எனக்கு உத்தரவு.…’’ என்றபடி தெருவோர வீட்டு வாசலில் அமர்ந்தேன்.

  • கண் திறக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *