இருள் கவியத் தொடங்கியது. வேட்டியின் இடுப்பு மடிப்பில் இறுக்கிக் கட்டியிருந்த ஆறு லட்ச ரூபாய் பணத்தைத் தொட்டுப்பார்த்தேன். இரவுக்குள் இந்தப் பணம் யாருக்கேனும் கிடைக்குமா அல்லது கூவத்தில் சங்கமிக்குமா என்பது கால ரகசியம். மனம் போனபோக்கில் கால்கள் நடை போட்டதில் மேற்கூரை சிதைந்த ஒரு பஸ் ஸ்டாப் ஓய்வெடுக்கும் இடமாகத் தென்பட்டது. நவீன சேர்கள் உடைந்துகிடந்ததால் ஆட்கள் தள்ளிப்போய் ரோட்டில் நின்றார்கள். பஸ் ஸ்டாப்பையொட்டி ஒரு பழைய சிமென்ட் திண்டு காலியாக இருக்கவே, அதில் ஏறி அமர்ந்தேன். கப்பென்று வாடை மூக்கைத் துளைக்க, பின்பக்கம் திரும்பினேன், மூடப்படாத கால்வாயில் சாக்கடை பொங்கி வழிந்தது. இந்த சாக்கடை நாற்றத்தால்தான் பயணிகள் விலகிநிற்பது புரிந்தது.
அசுத்தத்திற்கு நான் கடுமையான எதிரி என்றாலும், இந்த இடத்தில் ஏதோ சூட்சுமம் தென்பட்டதால் திண்ணையில் இருந்து எழுந்துகொள்ளாமல் பஸ்க்கு காத்திருந்த கூட்டத்தை வேடிக்கை பார்த்தேன். இவர்களில் ஒருவருக்கு பணம் கிடைக்குமா அல்லது இந்த சாக்கடை தின்னப்போகிறதா என்ற கேள்வி எனக்கும் ஆர்வம் கொடுத்தது.
இயர்போனில் பேசியபடி இளைஞன் ஒருவன் என பக்கத்தில் குறுக்கும்நெடுக்குமாக நடை போட்டான். அவன் என்னை திரும்பிக்கூட பார்க்காமல் எதிர்ப்புற நபருடன் கெஞ்சிக்கொண்டு இருந்தான். இன் செய்யப்பட்ட சட்டை, தோளில் பை, படிய வாரிய தலை போன்ற அறிகுறிகள் ஒரு தனியார் நிறுவனத்தில் குறைந்த சம்பளத்தில் கூலிக்கு மாரடிப்பவனாக இருக்கலாம்.
‘’மச்சி, எப்படியாவது ஏற்பாடு பண்ணிடு, சம்பளம் வந்ததும் சரிக்கட்டிருவேன்… ………. இல்லை மகேஸ் முடியாதுன்னு சொல்லிட்டான் …. சுந்தரம் போனை எடுக்கவே மாட்டேங்கிறான்…. பளீஸ் மச்சி.’’ என்று கெஞ்சிக்கொண்டு இருந்தான். அலுவலக பணத்தை சொந்த செலவுக்கு எடுத்திருக்கிறான், மாதக் கடைசியில் அதனை சரிக்கட்ட முடியாமல் தள்ளாடுவது தெள்ளத்தெளிவாகப் புரிந்தது. இத்தனைக்கும் அவனுக்குத் தேவை என்னவோ மூவாயிரம் ரூபாய்தான். ஒருவேளை மடியில் இருக்கும் பணம் இவனுக்குத்தானோ என்ற நம்பிக்கையில் அவனை அழைத்தேன். அதுவரை என்னைக் கவனிக்காமல் அலைபேசியில் பேசிக்கொண்டு இருந்தவன் சட்டென்று நின்றான். என் அழைப்பை ஏற்பதா… வேண்டாமா என்று தடுமாறினான்.
‘’தம்பி… அருகே வா.. உன் பணப் பிரச்னையை நான் தீர்க்கிறேன்…’’ என்றபடி என் ஜிப்பாவை மேலே தூக்கி இடுப்பில் கட்டியிருந்த பணக்கட்டை சுட்டிக் காட்டினேன். அவன் என்ன புரிந்துகொண்டானோ, பயந்து சட்டென்று பின்வாங்கினான். என்னைத் திரும்பிக்கூட பாராமல் வேகமாக தள்க்ச் சென்று தூரத்துக் கூட்டத்தில் ஒருவனாக கலந்து கொண்டான். அப்படியென்றால் அந்த அதிர்ஷ்டக்காரன் இவன் இல்லை என்று நான் சிந்திப்பதற்குள் ஒரு குரல் உலுக்கியது.
‘’பப்ளிக்கில எதுக்கு வேட்டியைத் தூக்கிக் காட்டுறே… அறுத்துப்புடுவேன். உன்னையெல்லாம் போலீஸ்ல பிடிச்சுக் குடுத்தாத்தான் அடங்குவ.’’ – நாற்பது வயதைத் தொடும் பெரிய வட்டப் பொட்டு பெண் ஒருத்தி கடுமையான கோபத்துடன் மூச்சிரைக்கப் பேசினாள். அப்போதுதான், நான் சட்டையைத் தூக்கி வேட்டி மடிப்பைத் தொட்டதற்கு வேறு தப்பான அர்த்தம் தெரிவது புரியவந்தது. இது நானே எதிர்பார்க்காத ட்விஸ்ட்.
‘’இதோ… இதைத்தான் காட்டினேன்…’’ – வேண்டுமென்றே மீண்டும் நான் ஜிப்பாவை சந்தோஷமாக தூக்கியதும் ஆவேசமானாள்.
‘’வக்கிரம் பிடிச்ச நாயி… இருடா உன்னை போலீஸ்ல பிடிச்சுக் குடுக்கிறேன்…’’ என்று வேகமாக கிளம்பியவள் என்னை மீண்டும் திரும்பிப்பார்த்து, ‘’சாமியார் வேஷம் போட்டு ஏமாத்துற, நீ சரியான ஆம்பிளைன்னா நான் வர்ற வரைக்கும் இங்கேயே இரு…’’ என்று வேகமாக நடை போட்டாள். அந்த வட்டப் பொட்டுக்காரி கத்துவதைக் கவனித்த கும்பலுக்கு ஏனோ இந்த பிரச்னையில் அத்தனை ஆர்வம் வரவில்லை,.
அந்தப் பெண் போலீஸை அழைத்துவந்தால், பணம் நிச்சயம் போலீஸுக்குத்தான் போய்ச் சேரும். அதற்குப் பதில் சாக்கடைக்குள் வீசலாம் என்று எழுந்த எண்ணத்தை சட்டென்று தட்டிக்கழித்தேன். இன்னும் கொஞ்சம் வசதியாக சாய்ந்து உட்கார்ந்து ஆட்களை வேடிக்கை பார்த்தேன்.
சற்று தூரத்தில் பிளாட்பாரத்தை ஒரு குடும்பம் சுத்தப்படுத்திக்கொண்டு இருந்தது. அங்கேயே சமைத்து, சாப்பிட்டு படுக்கும் ஆயத்தம் தென்பட்டது. இது அவர்களது அன்றாட காரியம் என்பது போல் செயல்பட்டனர். இடுப்பில் கால் சட்டை இல்லாத சிறுவனும், ஒரு பெரிய சுடிதாரால் உடல் முழுவதும் மறைத்திருந்த சிறுமியும், பெற்றோரை கண்டுகொள்ளாமல் கையில் இருந்த ஏதோ ஒன்றை பகிர்ந்து தின்றனர். இன்று இரவு இவர்களுடன் சாப்பிட்டு, இங்கேயே படுக்கலாம் என்ற எண்ணம் ஏனோ திருப்தியைக் கொடுத்தது. போலீசைக் கூட்டிவரச் சென்ற பெண்ணைக் காணவில்லை என்றதும் கவலையாக இருந்தது. ஊருக்கு நல்லது செய்ய விரும்பும் பெண் நல்லபடியாக திரும்பி வரட்டும் என்ற எண்ணத்துடன் அப்படியே பெஞ்சில் சாய்ந்து படுத்தேன். தெரு விளக்கை மீறி தூரத்து வானில் நட்சத்திரங்கள் கண் சிமிட்டின. அவற்றைப் பார்த்தபடி கண்களை மூடினேன்.
யாரோ தொட்டு உசுப்பியதும், உடனடியாக கண்களைத் திறக்காமல் யாராக இருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன். போலீஸ் என்றால் நிச்சயம் இத்தனை மெதுவாக தொட்டு எழுப்ப வாய்ப்பே இல்லை. பெண்ணின் கை அல்ல. யாரோ அறிமுகமில்லாத ஆண் என்ன காரணத்துக்காக என்னை மென்மையாக எழுப்பவேண்டும் என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல் கண் திறந்தேன்.
பிச்சை எடுப்பதை வாழ்நாள் லட்சியமாக கொண்டவன் போன்று ஏகப்பட்ட குப்பை மூட்டைகள் சுமந்தபடி ஒருவன் நின்றான். தாடி, மீசை எல்லாம் காட்டுத்தனமாக வளர்ந்து கிடந்தன. வெள்ளை சட்டையும், வேட்டியும் பழுப்பேறிக் கிடந்தன. அவற்றைக் கழட்டி ஒரு மாதம் இருக்கலாம் எனும் அளவுக்கு முடை நாற்றம்.. அதிகபட்சம் 35 வயது இருக்கலாம். ஆனால் முகத்தில் அலாதி சாந்தம்.
‘’என் இடம்….’ ரத்தினச் சுருக்கமாகப் பேசினான் என் பதில் எதிர்பார்க்காமல் பிளாஸ்டிக் குப்பை மூட்டைகளை திண்ணைக்குக் கீழே அழகாக அடுக்கி வைத்தான். குப்பை மூட்டைக்குள் இருந்து ஒரு பொட்டலம் பிரித்து என்னை கண்டுகொள்ளாமல் சாப்பிட அமர்ந்தான். அந்தப் பொட்டலத்தில் மூன்று இட்லியும் ஒரு புரோட்டாவும் சேர்த்தே கட்டப்பட்டிருந்தது. பிச்சைக்காரன் என்றால் ஹோட்டல்காரனுக்கும் இளக்காரம்தான். கையில் இருக்கும் பணத்தை இவனுக்கு கொடுக்க முடிவு செய்தேன்.
‘’ஆறு லட்சம் பணம் தருகிறேன்… பிச்சை வாழ்க்கையில் இருந்து வெளிவந்து ஏதேனும் தொழில் செய்வாயா?’’
என் கேள்வியை புரிந்துகொள்ளாதவன் போன்று அசட்டையாக திரும்பி உட்கார்ந்து சாப்பிடத் தொடங்கினான். நான் சொன்னதை சரியாக கேட்கவில்லை என்ற எண்ணத்தில் மீண்டும் மிகவும் தெளிவாகக் கேட்டேன்.
‘’என்னிடம் ஆறு லட்சம் பணம் இருக்கிறது. அது உனக்கு வேண்டுமா?’’ காது கேளாதவன் போன்று சாப்பிடுவதைத் தொடர்ந்தான். பணம் மீது பிரியம் இல்லாதது மகா யோகம். செல்வத்தை விரும்பாதவனுக்கு கொடுப்பது மகா பாவம். அதனால் பிளாட்பார குடும்பத்தை நோக்கி நடை போட்டேன். கல் வைத்து மூட்டப்பட்ட அடுப்பில் சாப்பாடு பொங்கியது. அந்தக் குடும்பத்தில் ஒருவன் போன்று சகஜமாக அமர்ந்தேன்.
அப்போது ஒரு போலீஸ் ஜீப் வேகவேகமாக பஸ் ஸ்டாப்பில் நின்றது. அதில் இருந்து இறங்கிய ஒரு காவலர், திண்ணையில் படுத்திருந்த பிச்சைக்காரன் காலில் லத்தியால் சொத்தென அடித்தார்.
- கண் திறக்கும்