போலீஸ் ஜீப்பில் இருந்து இறங்கிய காவலர், திண்ணையில் படுத்திருந்த பிச்சைக்காரனை லத்தியால் அடிப்பதைப் பார்த்தேன். அது என் காலில் விழவேண்டிய அடி.

என்னை போலீஸில் மாட்டிவைப்பதாக சொன்ன வட்டப் பொட்டுக்காரியும் ஜீப்பில் இருந்து அவசரமாக இறங்கினாள். இந்த இரவு நேரத்தில் மனவுறுதியுடன் போலீஸை அழைத்து வந்திருக்கிறாள். யாருக்கோ, எங்கோ நடக்கும் அநியாயம் என்று விட்டுப்போகாமால், தவறை தட்டிக்கேட்கும் தைரியக்காரியைப் பார்க்க ஆச்சர்யம் வந்தது. 

எதிர்பாராமல் விழுந்த அடியால் அலறியபடி கண் விழித்த பிச்சைக்காரன், எதிரே போலீஸைக் கண்டதும் அதிர்ந்து எழுந்தான். என்னமோ ஏதோவென்று பயந்து சட்டென்று அந்த இடத்தில் இருந்து ஓட்டம் பிடித்தான். அந்த இடம் இருட்டுக்குள் ஒளிந்து நின்றதால், வட்டப் பொட்டுக்காரியால் ஓடுபவனை மிகச்சரியாக அடையாளம் கண்டுபிடிக்க இயலவில்லை.

‘’சார்… அவனை விரட்டிப் பிடிங்க’’ என்று போலீஸுக்கு உத்தரவு போட்டாள்.

‘’சும்மா இரும்மா. அவன் என்ன கொலையா பண்ணிட்டான். அந்த பிச்சைக்காரப்பய எப்பவும் இங்கதான் படுத்திருப்பான். திரும்பிவரும்போது நாலு தட்டு தட்டி வைக்கிறோம்… நாங்க பாத்துக்கிடுறோம், நீங்க கிளம்புங்க…’’ என்றபடி அவர் போலீஸ் ஜீப்பில் ஏறினார். இத்தனை கஷ்டப்பட்டு போலீஸை இழுத்துவந்தும், அவனை பிடித்துக்கொடுக்க முடியவில்லையே என்ற ஆற்றாமையுடன் வட்டப் பொட்டுக்காரி பஸ் நிறுத்தத்தில் ஆற்றாமையுடன் நிற்பதைக் கண்டு நிதானமாக அருகே சென்றேன். அவளை பயமுறுத்திவிடாத தூரத்தில் நின்றபடி பேசத் தொடங்கினேன்.

‘’ஊருக்கு நல்லது செய்ய நினைக்கிறாய். ஆனால், நிஜத்தை அறிந்துகொள்ள நீ நெற்றிக்கண் பார்வைக்குப் பழக வேண்டும்…’’ என்றேன். என் குரல் கேட்டு திரும்பியவள் மிக அருகில் என்னைப் பார்த்ததும் மிரண்டாள். போலீஸுக்குப் பயந்து படுவேகமாக எதிர்ப்புறம் ஓடியவனால் நிச்சயம் அதற்குள் திரும்பி வந்திருக்க முடியாது என்ற குழப்பத்துடன் என்னைப் பார்க்க, மனம் திறந்து புன்னகைத்தேன்.

‘’நீ பார்த்தது, கேட்டது எதுவும் உண்மை அல்ல. அப்பாவி ஒருவனின் தூக்கத்தைக் கெடுத்துவிட்டாய்..’’ என்றதும்தான் போலீஸிடம் அடிவாங்கி ஓடியவன் வேறு யாரோ ஒருவன் என்பதைத் தெளிவாக உணர்ந்தாள். அதற்குள் கையில் எடுத்து வைத்திருந்த மூன்று கட்டு நோட்டுகளை அவளிடம் காட்டினேன்.

‘’இடுப்புக்குள் முடிந்திருந்த பணம் வேண்டுமா என்றுதான் அந்த இளைஞனிடம் கேட்டேன். அவனும் நீயும் தவறாக புரிந்துகொண்டீர்கள். நியாயத்துக்குப் போராடும் உனக்கு இந்தப் பணம் நிச்சயம் உதவியாக இருக்கும். சங்கோஜப்படாமல் பெற்றுக்கொள்’’ என்று நீட்டியதை மிரட்சியுடன் பார்த்தவள்,  பதட்டம் தணியாத குரலில் பேசினாள்.

‘’யார் நீங்க… எனக்கு எதுக்கு பணம் தர்றீங்க. பார்க்கிறவங்க தப்பா நினைப்பாங்க..’’  என்று அவள் சொன்ன பிறகுதான் பஸ் ஸ்டாப்பில் வைத்து பணம் தருவதை தவறாகப் பார்க்க வாய்ப்பு இருக்கிறது என்பதை உணர்ந்தேன்.

‘’அடுத்தவர் என்ன நினைப்பார் என்று யோசிப்பதில்தான் மனிதனின் காலம் வீணாகிறது பெண்ணே.. இத்தனை நேர்மையான பெண்ணை பாதுகாக்க எந்த ஆண் மகனாலும் முடியாது. உண்மையைச் சொல், உன் கணவன் உன்னுடன் இல்லைதானே..?’’ என் கேள்வியில் மிரண்டு நின்றாள்.

‘’எங்க குடும்பத்தைப் பத்தி எப்படித் தெரியும். உங்களுக்கு என்ன வேணும். திரும்பவும் போலீஸைக் கூப்பிடணுமா?’’ என்று கேட்டாள்

‘’அவசரம்தான் உன் எதிரி. இந்த உலகில் எல்லோருமே தவறானவர்கள் அல்ல. சந்தேகப் பார்வை பாராதே. நிதானம் கொள். நேர்மையைவிட நிதானம் நல்லது. நீ வீட்டுக்குச் சென்று திரும்பும் வரை அவகாசம் தருகிறேன். என் மீது நம்பிக்கை வை… உன் வாழ்க்கையை மாறவேண்டும் என்று விரும்பினால் என்னை சந்திக்க வா…’’ என்று சொல்லிவிட்டு அவள் பதில் எதிர்பாராமல் திரும்பி நடந்தேன். பிளாட்பார குடும்பம் சமையல் முடித்து சாப்பிட தயாராகிக்கொண்டு இருந்தது. குழந்தைகளுடன் நானும் சாப்பிட அமர்ந்தேன்.

என்னைப் பார்த்து குழந்தைகள் சினேகமாக சிரிக்க, அம்மாவுக்கு ஆத்திரம் வந்தது.

‘’பிச்சை எடுத்துச்சாம் பெருமாளு, அதைப் பிடுங்கித் தின்னுச்சாம் அனுமாரு… நீ யாரு, எதுக்குய்யா இங்க வந்து சாப்பிடுற…’’’ என்றவள் கணவன் பக்கம் திரும்பி, ‘’யோவ், இவரை அடிச்சு விரட்டு’’ என்று எகிறினாள். ஆனால் அவளது புருஷனோ,  ‘’ஏ… விடு புள்ளே. ஒரு கை சோறு போட்டா குறைஞ்சா போவ, சாப்பிட உட்கார்ந்தவரை எழுப்பாத…’’ என்று வக்காலத்து வாங்கினான். நான் எதுவும் பேசாமல் அமைதி காக்கவே, நெளிந்திருந்த வட்டிலில் சொத்தென கொஞ்சம் சோறு போட்டு, ரசம் போன்ற சாம்பாரை ஊற்றினாள். குழந்தைகளுக்கு வெஞ்சனம் வைத்தவள் என்னை கண்டுகொள்ளாமல் நகர்ந்தாள்.

‘’ம்மா…தாத்தாவுக்கு வெஞ்சனம் வைம்மா’’ என்று குழந்தைகள் சட்டென உறவு சொல்லி ஞாபகப்படுத்த, ‘’ஆமா, இங்கே கொட்டிக்கிடக்குது..’’ என்று நொடித்துக் காட்டினாலும் உருளைக்கிழங்கு எடுத்து வைத்தாள். பசிக்கு அந்த உணவு அமிர்தமே. இன்னும் கொஞ்சம் சாப்பிடும் எண்ணம் வந்தாலும், சட்டென எழுந்தேன். அம்மாக்காரி டம்ளரில் தண்ணீர் கொண்டுவந்து கொடுக்க, பாதி டம்ளரில் கையைக் கழுவி, மீதியைக் குடித்தேன்.

‘’என்னா, இன்னைக்கு பிச்சை கிடைக்கலையா?’’ கோபம் குறையாமல் கேட்டாள்.

‘’நீதான் போட்டுவிட்டாயே…’’ என்று அவளைப் பார்த்து சிரிக்க அவள் கோபம் சட்டென வடிந்தது. அவள் முகத்தை உற்றுப்பார்த்து,. ‘’உனக்கு ஏதேனும் வரம் வேண்டுமா?’’ என்று கேட்டதும் சிரித்தாள்.

‘’உனக்கே நான் சோறு போடுறேன், நீ எனக்கு வரம் தரப்போறியா? பேசாம போயி அந்த மூலையில படு. காலையில பேப்பர் பொறுக்க வந்தீன்னா நல்ல காசு கிடைக்கும். எப்படி பொறுக்கிறதுன்னு சொல்லித்தர்றேன்…’’ என்றாள். கொஞ்ச நேர பழக்கத்தில் வாழ்க்கைக்கு வழி காட்டினாள். 

‘’உனக்கு திடீரென லட்ச ரூபாய் பணம் கிடைத்தால் என்ன செய்வே?’’’

‘’அடப்போ சாமி, வீடு சல்லிசா கிடைக்குதுன்னு ஆசைப்பட்டு நகை, பணத்தை குடுத்து ஏமாந்துதான் நடுத்தெருவுக்கு வந்திருக்கோம். காசும் வேணாம், ஆசையும் வேணாம்.’’ என்றாள்.

‘’சந்தோஷம் பெண்ணே…’’ என்றபடி மீண்டும் பஸ் ஸ்டாப் வந்தேன். இன்னமும் பிச்சைக்காரன் வரவில்லை என்பதால் காலியான அவன் இடத்தில் மீண்டும் அமர்ந்தேன்.

‘’அந்தக் குடும்பம் நடுரோட்டுல இருக்கு. அவங்களுக்கு ஏன் பணம் குடுக்கலை…’’ கேள்வி கேட்டபடி வட்டப் பொட்டுக்காரி தள்ளிநின்று கேள்வி கேட்டாள்.  அவள் பஸ் ஏறி போகாமல் இத்தனை நேரமும் என் நடவடிக்கையை கவனித்து வந்திருக்கிறாள்.

‘மீண்டும் யாரிடமாவது மொத்தமாக பணம் கொடுத்து ஏமாந்துபோவார்கள். …’’ என்றபடி மடியில் இருந்த பணத்தை எடுத்து அவள் கையில் கொடுத்தேன். ஆனால் அதை வாங்காமல் பின்வாங்கினாள்.

‘’இந்தப் பணம் கள்ள நோட்டா, எதுக்கு இந்தப் பணத்தை என்கிட்ட கொடுக்கிறீங்க? இதுக்குப் பதிலா நான் என்ன செய்யணும்?’’ படபடவென கேள்விகளாகக் கேட்டாள்.

‘’புதையல் கிடைத்ததாக நினைத்துக்கொள்…’’ என்றபடி பணத்தை அவள் கையில் திணித்துவிட்டு சரசரவென நடக்கத் தொடங்கினேன். எப்படியோ பணத்தை தொலைத்துவிட்டேன் என்பதால் திருப்தி வந்தது. யாரோ பின் தொடர்வது போல் தெரிய திரும்பிப் பார்த்தேன்.

பிச்சைக்காரன் பல்லிளித்தான்.

  • கண்கள் திறக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *