எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேண்டும் என்ற கேள்விக்கு பெண்ணிடம் நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. படிப்பு, வேலை, உயரம், குணம், உடன்பிறந்தோர், சொத்து என்று ஏராளமான அம்சங்கள் தேடப்படுகிறது. ஆனால் எப்படிப்பட்ட பெண் வேண்டும் என்று ஆணிடம் கேட்டால், ‘அழகா இருந்தா போதும்’ என்று சுருக்கமாக முடித்துக்கொள்கிறான்.

அழகு என்பது ஆளுக்கு ஆள், நேரத்துக்கு நேரம், இடத்துக்கு இடம் மாறுபடும் என்ற உண்மை தெரிவதில்லை. அப்படி தெரிந்தாலும் அழகு எனும் மாயமான் வேட்டையை விரும்பவே செய்கிறார்கள். அதனால்தான் பெண்ணிடம் அழகைத் தேடுகிறான் ஆண். அவனுக்காக அணிகலன்கள் மற்றும் செயற்கைப் பொருட்களில் அழகைத் தேடுகிறாள் பெண். இந்த உலகத்திலேயே கொள்ளை லாபம் வைத்து விற்பனை செய்யப்படுவது இரண்டே பொருட்கள்தான். ஒன்று ஆண்களை ஏமாற்றும் மது, இரண்டாவது பெண்களை ஏமாற்றும் அழகுப்பொருட்கள்.

தன்னை அழகுபடுத்திக்கொள்ள விரும்புவது பெண்ணின் உடன்பிறந்த குணம். இன்னொருவகையில் சொல்வது என்றால் இது இயற்கையின் விளையாட்டு. ஏனென்றால் மற்ற உயிரினங்களில் ஆண்களே பெண்ணைக் கவர்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. ஆண் மயில் தன்னுடைய தோகையை விரித்து நடனமாடுகிறது. சேவல் கொக்கரிக்கிறது. சிங்கம் கர்ஜிக்கிறது, ஆண் யானை தந்தத்தையும் வீரத்தையும் காட்டுகிறது. ஆனால் மனிதகுலத்தில் மட்டும் ஆணை கவரவேண்டிய நிலையில் பெண் இருக்கிறாள் என்பதுதான் உண்மை.

அழகை பெண் எப்படியெல்லாம் தேடுகிறாள் என்பதைப் பார்க்கலாம். பெண்ணின் முதல் தேர்வு, தங்க நகைகள். ஆணை கவரும்வகையில் அணிகலன்கள் அணியும் வழக்கம் பண்டைய காலம் முதல் நடந்துவருகிறது ஆம், அந்தக் காலத்திலேயே தமிழ்ப்பெண்கள் வகைவகையான ஆபரணங்களை அணிந்திருக்கிறார்கள். முத்தாரம், வாகுமாலை, சவடி, மத்தகமணி, புல்லகம், பூரப்பாளை, தொய்யகம், செவிப்பூ, அளகச்சூடம், ஏகதளம், குதம்பை, தோள்வளை, மோதரம், பரியகம், சூடகம், ஆடைக்கட்டு, கடகவளை, முத்துவடம், உடைதாரம், சிலம்பு, பாடகம், பரியகம் என்று தலைமுதல் பாதம் வரையிலும் அங்குலம் அங்குலமாக அணிகலன்கள் அணிந்து ஆண்களை அசத்தியிருக்கிறார்கள்.

இன்றைய பெண்கள் அந்தக்காலப் பெண்களை எல்லாம் மிஞ்சிவிட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும். ஆம், தொப்புள், நாக்கு, தாடைகளில்கூட நகை அணியமுடியும் என்று கண்டுபிடித்தது இன்றைய நவநாகரிகப் பெண்கள்தான். இப்படி ஒரு பெண் தன்னை நகைகளால் அலங்கரித்துக்கொள்வதன் காரணத்தை சொல்லவே வேண்டியதில்லை. ஆம், நகை அலங்காரம் பெண்ணின் அழகை மட்டுமின்றி அந்தஸ்தையும் காட்டுகிறது. தங்கம், வைரம், பிளாட்டினம் போன்ற நகைகளை அணியும் பெண்கள் மேல்மட்ட அழகு தேவதைகளாக கருதப்படுகிறார்கள். இவர்களே ஆண்களின் கனவு தேவதையாக இருக்கிறார்கள்.

இந்த விலை உயர்ந்த உலோகங்களில்தான் அழகு இருக்கிறது என்பது பிரமையே. ஆம், ஒயிட் மெட்டல், பிளாக் மெட்டல், கிறிஸ்டல், எஃகு, பாசி, முத்து, பேப்பர் நகைகள் போன்ற விலை குறைந்த பொருட்களை அணியும்போதும் தனித்தன்மையுடன் திகழமுடியும். உடல் அமைப்பு, நிறம் மற்றும் உடைக்கு ஏற்ற அணிகலன்கள் தேர்வுசெய்வதே முக்கியம் தவிர, விலை உயர்ந்த பொருட்கள் அல்ல என்பதுதான் உண்மை.

பெண்ணின் அழகை மேம்படுத்துவதில் மூக்குத்திக்கும் தனி இடம் உண்டு. இது மருத்துவரீதியாகவும் பெண்ணுக்கு நன்மை செய்வதாக கருதப்படுவதால் அனைத்துப் பெண்களுக்கும் மூக்குத்தி மீது ஒரு மையல் உண்டு. மூக்குத்தி அணிந்த பெண் மீது ஆணுக்கும் மையல் உண்டு. மூக்கு வளைவுக்கு ஏற்ப மூக்குத்தி அணிந்துகொண்டால் எளிதில் ஆண்களை வசப்படுத்த முடியும். பெரிய மூக்கு உடையவர்கள் ஐந்து அல்லது ஏழு கல் மூக்குத்தியும் நீண்ட மூக்கு உடையவர்கள் ஒற்றைக்கல் அல்லது மூன்றுகல் மூக்குத்தியும் அணிந்துகொண்டால் அழகாக இருக்கும். மூக்குத்தியின் நிறமும் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆம், தங்கள் நிறத்துக்கு ஏற்ப பசைக்கல், வெள்ளைக்கல், சிவப்புக்கல் மூக்குத்தி குத்திக்கொண்டால் முகத்தில் வசீகரத்தன்மை அதிகரிக்கிறது. இதற்காகவும் அதிகம் செலவழிக்க வேண்டியதில்லை.

நகைகளை அடுத்து ஆடைகளில்தான் தங்கள் அழகைத் தேடுகிறார்கள் பெண்கள். ‘ஆள் பாதி, ஆடை பாதி’ என்பது பெண்களுக்காகவே உருவாக்கப்பட்ட பழமொழி. ஆடைகளுக்கு ஏற்ப அணிகலன்கள் அணிந்துகொண்டால் சாதாரண பெண்ணும் பேரழகியாக தோற்றம் அளிக்கமுடியும் என்பது உண்மைதான். ஆனால் ஆடைகளைத் தேர்வுசெய்யும்போது, தங்கள் நிறத்துக்கும் உடல்வாகுக்கும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். ஷோரூமில் அழகாக தெரியும் உடை, தனக்கும் பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறார்கள். ஷோரூம் பொம்மையின் நிறம், அதன் உடல் அளவு போன்றுதான் தன்னுடைய உடல் அளவு இருக்கிறதா என்பதை பெண் பார்ப்பதேயில்லை.

உயரம், குட்டை, குண்டு, ஒல்லி, கருப்பு, வெள்ளை, மாநிறம் என ஒவ்வொரு தன்மைக்கும் ஏற்ப ஆடைகளைத் தேர்வுசெய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, காலம், நேரம், சூழ்நிலை போன்றவைகளுக்கு ஏற்பவும் ஆடைகளைத் தேர்வுசெய்ய வேண்டும். டிசைனர் ஆடைகளும் விலை உயர்ந்த ஆடைகளும் மட்டுமே அழகைக் கூட்டுவதில்லை. மிகச்சாதாரண பிளாட்ஃபார்ம் உடைகளையும் உடலுக்குத் தகுந்தபடி மாற்றம்செய்து அணிந்துகொண்டால் நிச்சயம் ஆண்களின் பார்வையைத் திருடமுடியும். ஆயிரமாயிரமாய் செலவழிக்காமல் ஏழெட்டு கடைகளில் தேடியலைந்து விலை குறைவான, வித்தியாசமான ஆடைகளைத் தேர்வுசெய்ய முடியும். ஆம் விலை குறைந்த ஆடைகளைக்கொண்டும் அழகியாக ஜொலிக்கமுடியும்.  

நகை, ஆடையுடன் பெண்ணின் அழகுத்தேடல் முடிவடைவதில்லை. இன்னும் சொல்லப்போனால் இனிமேல்தான் ஆரம்பிக்கவே செய்கிறது. ஆடைகளுக்கு ஏற்ற செருப்பு, கைப்பை, கைக்கடிகாரம் போன்றவையும் தேவைப்படுகின்றன. ஒருசில பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்ட காலணிகள் வைத்திருக்கிறார்கள் எனும்போதே இதன் முக்கியத்துவம் புரிந்திருக்கும். இதற்கு அடுத்த முக்கியத்துவம் பெறுவது வாசனை திரவியங்கள்தான். இவை எல்லாம் பிறர் கண்களுக்குத் தெரியும்வகையில் அழகு தரும் பொருட்கள். அதனால் இந்தப் பொருட்களுக்காக பெண்கள் செலவு செய்வதைக்கூட ஏற்றுக்கொள்ள முடியும்.

ஆனால், ஆடை மற்றும் அணிகலன்களைவிட அழகு கிரீம்களுக்காகத்தான் பெண்கள் அதிகம் செலவழிக்கிறார்கள். சூரியக்கதிர் தாக்காமல் இருப்பதற்காக ஒன்று, அழுக்கை நீக்குவதற்கு ஒன்று, வெள்ளை நிறம் தருவதற்கு ஒன்று, பரு, மருவை நீக்குவதற்கு ஒன்று, பவுடர் போடுவதற்கு முன்பு ஒன்று, பவுடர் போட்டபிறகு ஒன்று, கை, கால்களில் போடுவதற்கு ஒன்று, முடி நீக்குவதற்கு ஒன்று என்று பெண்களுக்குத் தேவைப்படும் கிரீம்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஒரு பெண்ணின் கைப்பையை சோதனை செய்தால் உள்ளே பணம் இருக்கிறதோ இல்லையோ நிச்சயம் ஒரு அழகு கிரீமாவது இருக்கும். இந்த கிரீம் தரும் விளம்பர நம்பிக்கைகளுக்காக மனம் தளராமல் பணத்தை செலவழித்து வாங்கிக்கொண்டே இருக்கிறார்கள்.

பெண்களுக்கு இந்த கிரீம் விஷயத்தில் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய ஓர் உண்மை இருக்கிறது. அதாவது அழகு கிரீம்களால் கிடைக்கும் அழகுக்கு மிகக்குறைந்த கால எல்லையே உண்டு. ஆம், அழகு நிலையத்தில் போய் ஃபேஷியல், பிளீச் செய்துகொள்ளும் பெண்ணின் அழகு இரண்டு நாட்களில் மீண்டும் சாதாரண நிலைக்குப் போய்விடும். அதனால் இதுபோன்ற கிரீம்களுக்கு செலவழிக்கும் பணத்தை சரியான வழியில் திசைதிருப்ப வேண்டும்.

பெண்ணுக்கு சாப்பிடும் உணவில்தான் உண்மையான அழகு கிடைக்கிறது. எப்படிப்பட்ட சரிவிகித உணவுகளை எடுத்துக்கொள்கிறாள், நிறைய தண்ணீர் குடிக்கிறாளா, உடலை சரியாக பராமரிக்கிறாளா என்பதைப் பொறுத்தே அவள் அழகு அதிகரிக்கிறது. வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது உடம்பை சரியானபடி மறைத்துக்கொள்வது, அடிக்கடி சோப்பு போட்டு கழுவுவது, நிறைய தண்ணீர் குடிப்பது, காட்டன் ஆடை அணிவது போன்றவை உடலுக்கு தெளிச்சி, மலர்ச்சியுடன் நம்பிக்கையையும் கொண்டுவரும். நம்பிக்கை அதிகரித்தால் முகத்தில் புன்னகை மலரும். நம்பிக்கையும் புன்னகையும் ஒன்றுசேரும் அத்தனை பெண்ணும் அழகாகிவிடுகிறாள். 

இப்படிப்பட்ட பெண்ணைத்தான் ஆண் விரும்புகிறான். பணம் இருந்தால்தான் அழகு கிடைக்கும் என்பது மூடநம்பிக்கை. அதனால் இயற்கை முறையில் அலங்கரிக்கும் கலையை கற்றுக்கொண்டால் எல்லா பெண்ணும் அழகிதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *