ஐம்பது வருடங்களுக்கு முன்பு பத்தில் எட்டுப் பேருக்கு சாமி பெயர் வைப்பதுதான் வழக்கம் என்பதால், தேவியின் பெயர்தான் உன் மனைவியின் பெயர் என்று தெம்பாக சொல்லிவைத்தேன். இந்தப் பதிலில் ஆள் காலி. என்னிடம் பவ்யமானார். ஏனென்றால் உண்மையில் அவர் மனைவியின் பெயர் தேவி. இதுபோன்ற  தற்செயல் அதிசயம் அவ்வப்போது நடப்பதுண்டு என்பதால் நான் வெறுமனே சிரித்துக்கொண்டேன்.

‘’வாங்க வீட்டுக்குப் போகலாம்… உங்ககிட்ட முக்கியமான விசயம் பேசணும்…’’. கெஞ்சினான்.

‘நான் உன்னுடன் வரவேண்டும் என்பதுதான் எழுதப்பட்ட விதி…’’ என்றபடி நடந்தேன்.

பத்து நிமிட நடையில் வீடு வந்தது. நான் எதிர்பார்த்ததைவிட பிரமாண்ட வீடு. லஞ்ச லாவண்யத்தில் புகுந்து விளையாடியிருக்கலாம். வாசல் போர்டில் ’ஜெகநாதன், ரிடர்யடு டி.எஸ்.பி.’ என்று போடப்பட்டிருந்தது. மெயின் கதவைத் திறந்தவர் வீட்டுக்குள் நுழையாமல், இடப்பக்கம் இருந்த சிறிய அறைக்கு அழைத்துப்போனார். அங்கு ஒரு இரும்புக் கட்டிலும் இரண்டு பிளாஸ்டிக் சேர்களும் கிடந்தன. ஒரு தட்டில் சாப்பாடு போட்டு, பிளாஸ்டிக் தட்டால் மூடப்பட்டிருந்தது. ஈக்கள் தட்டிலிருந்து எழுந்து ஒரு சுற்று சுற்றிவிட்டு மீண்டும் தட்டில் அமர்ந்தன.

‘’இதுதான் உன்னுடைய ஜெயிலா..?’’ என்றபடி கட்டிலில் அமர்ந்தேன்.

‘’தனிமை ஜெயில்ன்னு வைச்சிக்கலாம்…’’ சிரிக்க முடியாமல் சிரித்தார்.

‘இந்த நிலைக்கு காரணம் தெரியுமா?’’ ஜெகநாதனின் பல்ஸ் பார்க்க கேள்வியை வீசினேன்.

‘’யூனிஃபார்ம்ல இருந்த வரைக்கும் நல்லா சம்பாதிச்சேன். எங்க குடும்பத்துல யார் பேர்லேயும் சொத்து வாங்க முடியாதுன்னு, என் தங்கச்சி பொண்ணு பேர்ல டெபாசிட் பண்ணேன், சொத்து வாங்கினேன். அவளை என் மகனுக்குக் கட்டி வைச்சி, சொத்தையும் திருப்பிக்கிட்டேன். இப்ப, எல்லா சொத்தும் மருமக பேர்ல இருக்கு. என் பொண்டாட்டி இருந்த வரைக்கும் மருமக சத்தம் காட்டாம இருந்தா… அவ போனதும் எல்லாமே போச்சு. எங்க ரூமைக் காலி பண்ணிட்டு, என்னை மட்டும் ஸ்டோர் ரூம்ல போட்டுட்டா….’’

‘’சொத்து கொடுத்தும் ஏன் மதிக்கலை…?’’

‘’அவளுக்குப் பிறந்த பொண்ணு ராகவிக்கு ஆட்டிஸம்… அப்படின்னா என்னன்னு தெரியும்ல.’’

‘’அவ ஒரு தனி உலகத்தில் இருப்பா… யார் சொல்றதையும் கேட்க மாட்டா, செய்யவும் மாட்டா. மன வளர்ச்சிக் குறைன்னு சொல்லலாம், இவர்களை சுலபமான வாழ்க்கைக்கு பழக்கப்படுத்தலாம், ஆனால் குணப்படுத்த முடியாது’’ என்றதும் அயர்ச்சி அடைந்தார்.

‘’அதேதான். இப்பத்தான் தெரிய வந்திச்சு. பொண்ணுக்கு ஆட்டிஸம் வந்ததுக்கு நான்தான் காரணமாம். என்னோட பாவம் மொத்தமா அவ பிள்ளைக்கு வந்திருச்சாம். என் முகத்தைப் பார்க்கிறது பாவம்னு வெளியே தூக்கிப் போட்டுட்டா.. எப்பப்பார்த்தாலும் திட்டிக்கிட்டே இருப்பா… கேட்டுக்கேட்டு காது புளிச்சுப் போச்சு. அதான் காது கேட்கலன்னு நாடகம் போடுறேன்…’’

‘’பையன் என்ன சொல்றான்?’’

‘’ஒரே பிள்ளை. அம்மா பேச்சை மீறாத பிள்ளை, இப்போ பொண்டாட்டி பேச்சு கேட்கிறான். நான் என்ன சொன்னாலும் கேட்டுக்குவான், ஆனா, பொண்டாட்டிக்கிட்ட அவன் பேச்சு எடுபடாது… ’நிஜமாவே எல்லாமே என் பாவமா சாமி…?’’ கேள்வி எழுப்பினான் ஜெகநாதன்.

‘’இருக்கலாம் ஜெகநாதா… நீ பதவியில் இருக்கும்போது கொஞ்சம் நேர்மையாக இருந்திருக்கலாம். இப்போதாவது நல்ல சிந்தனையுடன் பிறருக்கு உதவுபவனாக மாறியிருக்கலாம்..’’ என்றதும் அமைதி காத்தான்.

‘’பணம் இல்லையா அல்லது மனம் இல்லையா..?’’

‘’எனக்கு பாவ புண்ணியத்தில் பெரிசா நம்பிக்கை இல்லை. என் பேத்தி விஷயத்தில்தான் கொஞ்சம் பயம் வந்திருக்கு. உங்களை நான் கூட்டி வந்தது பேத்திக்கு ஏதாச்சும் பரிகாரம் செய்ய முடியுமான்னு கேட்கத்தான்… அப்படியே மருமக வாயை மூடணும்…‘’  சினிமா வில்லன் போல பேசினார்.

‘’மருமகளை கொலை செய்ய திட்டம் போட்டு தோற்றுவிட்டாயோ..?’’’  என்று அழுத்தமாக கேட்டதும் திடுக்கிட்டவர், உடனே சுதாரித்துக்கொண்டு பேசினார்.

‘’சொந்த மருமகளை கொல்ல யாராவது யோசிப்பாங்களா? அவளைக் கொன்னுட்டு யார் மேல பழி போட முடியும்…? அதான் வேற மாதிரி அவளை சரிக்கட்டணும்… நீங்கதான் வழி காட்டணும்… என்ன செலவானாலும் பார்த்துக்கிடலாம்…’’ ஏன்றவர் கண்ணில் பேராசை மின்னியது. ஏராளமான தவறுகள் செய்தும் பிடிபடாத திமிர் பேச்சில் தெரிந்தது. மருமகளை தனக்கு பணியவைக்க திட்டம் போடுபவனைப்  பார்க்க அருவருப்பாக இருந்தது. ஆதிக்க திமிருடன் திரிபவனுக்கு தண்டனை தர முடிவு செய்தேன்.

‘’நமது வழிபாட்டில் உன் மருமகளை மடக்குவதற்கு முடியாது..’’ என்று கொஞ்சம் அமைதி காத்தேன்.

‘’அதான் பிளாக் மேஜிக்ன்னு சொல்றாங்களே… அதை செய்வீங்களா? எப்படியாவது அவ வாயை மூடணும். என் பையனுக்கு வேற பெண்ணை கட்டிவைக்கணும்… சொத்தை என் மகன் பேருக்கு மாத்தணும்…’’ ஆசைகளை சொல்லிக்கொண்டே போனார்.

‘’எனக்கு கொஞ்சம் வூடு மந்திரம் தெரியும். அதை செய்வதற்கு சில நிமிடங்கள் போதும். பிறகு மருமகள் நீ சொல்வதை மட்டுமே கேட்பாள்… உன் கைப்பாவை ஆகிவிடுவாள்…’’ என்றதும் கண்களில் குரூரம் மின்னியது.

‘’ம்.. இப்பவே செய்யுங்க…உங்க தட்சணை எவ்வளவு’’ என்று கேட்டான்.

‘’அந்தப் பெண்ணின் உள்ளாடை, புகைப்படம் இரண்டும் கொண்டுவா… உன்னால் கொடுக்க முடியும் அளவுக்கு தட்சணை வை…’’ என்றபடி கட்டிலுக்குக் கீழே அமர்ந்து, என்னைச் சுற்றி வெறும் கையால் வட்டம் போட்டு மந்திரம் சொல்வதாக உதடுகளை அசைத்தபடி அவன் நடவடிக்கைகளை வேடிக்கை பார்த்தேன்.

வீட்டைத் திறந்து உள்ளே போனவன் நாலைந்து உள்ளாடைகள், ஒரு போட்டோ எடுத்துவந்தான். அத்துடன் அவனுடைய கட்டிலுக்கு மேலிருந்த கப்போர்டைத் திறந்து 2000 ரூபாய் நோட்டு உருவியெடுத்து தட்சணை வைத்தான்.

‘’கேள்வி கேட்காமல் கட்டிலில் குப்புறப் படு…’’ என்றதும் யோசிக்காமல் படுத்தான். எப்போதோ படித்த வர்மக் கலையை ஞாபகத்தில் கொண்டுவந்து, ஜெகநாதனின் இரண்டு கால்களையும் தூக்கி கெண்டைக்கால் நரம்பைத் தேடிக் கண்டுபிடித்தேன். கொஞ்சம் அழுத்தமாக கெண்டை நரம்பைப் பிடித்து முறுக்கித் திருப்பியதும்… வலியில் துடித்தான்.

 ‘’ஆ… என்ன செஞ்சீங்க..?’’ என்று காலை உதறமுயன்று முடியாமல் துடித்தான்.

‘’கத்தாதீங்க… பூஜைக்கு கொஞ்சம் ரத்தம் வேணும்’’ என்றபடி அவன் தோள் பட்டையும் கழுத்தும் சேரும் இடத்தில் நரம்புகளை அழுத்த… கண்களும், கைகளும் அப்படியே நின்றன. வாய் குளறியது.

‘’என்ன செய்றீங்க? நான் யாருன்னு தெரியுமா…? ஜெயில்ல போட்டுருவேன்.. துப்பாக்கி இருக்கு’’ என்பதை மிகவும் சிரமப்பட்டு குளறலுடன் பேசினார். .அவனை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் மருமகளின் உள்ளாடைகளை உடம்பை சுற்றிலும் போட்டு வைத்தேன். போட்டோவை எடுத்து கதவுக்குப் பின்புறம் ஒட்டி வைத்தேன்.

‘’உன் மகனும், மருமகளும் வரும் வரையில் உன்னால் அசைய முடியாது. உன் மேல் கிடக்கும் அவள் துணியையும், புகைப்படத்தையும் பார்த்ததும் உன்னை இந்த அறையில் இருந்தும் விரட்டிவிடுவார்கள். இரண்டு வாரங்களில் உன் கால்கள் முழுமையாக செத்துப்போகும்.. கேவலமான மரணத்தை எதிர்நோக்கி காத்திரு…’’ என்று சொல்லிவிட்டு நிதானமாக எழுந்தேன்.

வர்ம முடிச்சு விரைவில் சரியாகிவிடும் என்றாலும், நான் சொன்ன வார்த்தைகள், இனி அவனை எழுந்து நடக்கவிடாது என்பது நிச்சயம். அவன் கட்டில் மேல் ஏறி கப்போர்டைத் திறந்தேன். 2,000 ரூபாய் கட்டுகள் நாலைந்து கிடந்தன. அவற்றில் மூன்றை மட்டும் எடுத்து மடியில் வைத்துக்கொண்டு, ஜெகநாதனுக்கு தண்டனை கொடுத்த திருப்தியில் சந்தோஷமாக வெளியே வந்தேன்.

வெயில் முழுமையாக இறங்கிவிட்டது. இரவு பணத்துடன் தூங்கும் பழக்கம் எனக்கு இல்லை.  அதனால் அதற்குள் செலவழிக்க வேண்டும். ஏதாவது நடக்கும் என்ற யோசனையுடன் நடை போட்டேன்.

கண் திறக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *