‘’என் குழந்தை உசுரு இன்னைக்கு ராத்திரி தாங்காதுன்னு சொல்றாங்க, எப்படியாவது காப்பாத்துங்க சாமி..’’ என்று கதறிய ஊதா சட்டைக்காரனை தூக்கி நிறுத்தினேன். அவன் கையைப் பிடித்தபடி வார்டுக்குள் நுழைந்தேன். சாதாரண வார்டுக்குள்ளேயே ஒரு தடுப்பு அமைத்து, ஐ.சி.யூ செட்டப் செய்து, அதற்குள் இரண்டு குழந்தைகளை வைத்திருந்தனர்.
ஐந்து வயதுக் குழந்தையின் தலையில் ஒரு பெரிய கட்டு போடப்பட்டிருந்தது. கை, கால்களில் ஏராளமான சிராய்ப்புகள்… வயிற்றில் போடப்பட்டிருந்த கட்டைத்தாண்டி ரத்தம் கசிந்தது. குளுக்கோஸ் கையில் இறங்கிக்கொண்டிருக்க, முகத்துக்குப் பொருந்தாத மாஸ்க்கில் ஆக்சிஜன் போய்க்கொண்டு இருந்தது.
‘’செல்வம்… செல்வம்… கண் திறந்து பாருப்பா, சாமி வந்திருக்கார்…’’ என்று சிறுவனை எழுப்பினான். ஆனால் அவனிடம் எந்த அசைவும் இல்லை. பேச்சு சத்தம் கேட்டதும், தடுப்புக்குப் பின்புறமிருந்து ஒரு நர்ஸ் ஓடோடி வந்தாள்.
‘’யோவ் நீ உள்ளே வரக்கூடாதுன்னு எத்தனை தடவை சொல்றது கிளம்பு… இவர் யாரு… இங்கே யாரும் வரக்கூடாது சாமி, கிளம்புங்க……’’ என்று கறாராக சொன்னவளை உற்றுப் பார்த்து, ‘’டாக்டர் தீன்ஸ் அனுப்பியிருக்கிறார்’’ என்று அந்தப் பெயரை கொஞ்சம் ஸ்டைலாக அதேநேரம் தெளிவில்லாமல் சொன்னேன். அந்தப் பெயர் உச்சரிப்பில் யாராவது ஒரு டாக்டர் இருக்கலாம் என்ற அனுமானம் பலித்தது.
‘’ஆர்த்தோ டாக்டர் தனசேகருங்களா… அப்பப்போ கிறிஸ்தவங்க வந்து ஜெபம் பண்ணுவாங்க… இந்து சாமியார் யாரும் வர்றதில்லையா… அதான் தெரியலை’’ என்றவளை தடுத்து நிறுத்தி, சிறுவன் நிலவரத்தைக் கண்களால் கேட்டேன்.
‘’இவர் ஸ்கூலுக்கு சைக்கிள்ல கூட்டிப் போகும்போது லாரி இடிச்சு ஆக்சிடென்ட். பையன் கீழே விழுந்து சிராய்ச்சி, தலையில கல்லு பட்டு நிறைய ரத்தம் போயிருச்சு. மூணு நாளாச்சு… வந்ததில் இருந்தே கண் திறக்கலை… ஆபரேஷன் செஞ்சும் சரியாகலை… இப்போ பல்ஸ் குறையுது… கஷ்டம்தான்..’’ என்று சொன்னாள்.
‘’இவள் அம்மா எங்கே…?’’ நீல நிற சட்டைக்காரனைக் கேட்டேன்.
‘’பாக்கியம் வேலை செஞ்ச வீட்ல கடன் வாங்கப் போயிருக்கா சாமி. ரெண்டாயிரம் ரூபா குடுத்தா ஏதோ ஊசி போட்டு பிழைக்க வைக்கிறதா சொல்லியிருக்காங்க..’’ என்றான். உடனே அந்த நர்ஸ் பதறினாள்.
‘’அப்படி சொல்லலை சாமி…’’ என்று பதறியவள் அவன் பக்கம் திரும்பி கடுமையாக முறைத்தாள். சட்டென்று நர்ஸ் தலையில் என் கை வைத்து அழுத்தினேன். நான் என்ன செய்யப்போகிறேன் என்று தெரியாமல் விழித்தாள்..
‘இறைவனுக்கு சேவை செய்வதைவிட உயர்ந்த பணியில் இருக்கிறாய், இங்கு நீ செய்யும் பாவம் ஏழு மடங்காக உன் பிள்ளையிடம் திரும்பவரும்…ஜாக்கிரதை’’ என்று எச்சரித்து கை எடுத்தேன். பயம் அவள் கண்களில் தெரிந்தது. பிள்ளைக்கு ஆபத்து என்றால் நடுங்காத அம்மாக்கள் கிடையாதே…
அந்த நர்ஸை புறக்கணித்து சிறுவன் உடலில் கை வைத்தேன். உடல் சூடும் நாடித் துடிப்பும் தணிவாக இருந்தது. நிறைய மரணங்களை நேரில் தரிசித்தவன் என்பதால் இறுதிப் போராட்டம் புரிந்தது. இனி கடவுளும் காப்பாற்ற முடியாது. சட்டென்று நீலச் சட்டைக்காரன் தோளில் கைபோட்டு வெளியேற செல்ல நகர்ந்தேன்…
‘’சாமி… என் தப்புக்கு ஏதாச்சும் பரிகாரம் சொல்லிட்டுப் போங்க..’’ நர்ஸ் பவ்யமாகக் கேட்டாள்.
‘’ஒவ்வொரு குழந்தையையும் உன் குழந்தை போல் கவனி… அதுதான் பரிகாரம்’’ என்றபடி நடை போட்டேன். மருத்துவமனை வாசலைத் தொடும் முன்னரே, அவன் மனைவி பாக்கியம் கையில் பணத்துடன் ஓடோடி வந்தாள். அவளை தடுத்து நிறுத்தினேன். யாரென்று தெரியாமல் விழித்தவளை நீலச்சட்டைக்காரன் அமைதிப்படுத்தினான்.
‘’நம்ம பிள்ளையை பார்த்தார்..’’ என்று நீலச்சட்டைக்காரன் சொன்னதும், ‘’சாமி, பிழைச்சுக்குவானா…?’’ என்று ஆர்வமாகக் கேட்டாள். நான் எந்தப் பதிலும் சொல்லாமல் இருவரையும் அழைத்துக்கொண்டு எதிரே தெரிந்த உணவகம் நோக்கி நடந்தேன்…
‘’சாமி… என் கிட்டே காசு இல்லை..’’ என்று தடுமாறினான்.
‘’இந்தக் காசு ஊசி போடத்தான் இருக்கு…’’ என்று பாக்கியம் தயங்கி நின்றாள். என் பையில் கை விட்டுப் பார்த்தேன். நானூற்று சொச்சம் இருந்தது. இருவரையும் இழுத்தபடி தைரியமாக நகர்ந்தேன்.
‘’உங்களிடம் தேவ ரகசியம் பேசவேண்டும், அதற்காகவே ஆண்டவர் அனுப்பியிருக்கிறார். வயிறு பசிக்கும்போது வேதம் ஓத முடியாது.. அமைதியாக வாருங்கள்..’’ என்று உள்ளே நுழைந்தேன்.
‘’நான் நர்ஸ்கிட்ட ரூபாயைக் குடுத்துட்டு வந்துட்டா, ஊசி போட்ருவாங்க…’’ என்றபடி குழந்தையிடம் செல்ல முயன்ற பாக்கியத்தை வம்படியாக உட்கார வைத்தேன். நான் விரதம் என்று சொல்லி, அவர்களுக்கு மட்டும் உணவு வாங்கினேன்.
இருவரும் மூன்று நாட்களும் நிம்மதியாக சாப்பிடவில்லை என்பது சாப்பிடும் அவசரத்தில் புரிந்தது வேகவேகமாக சாப்பிட்டு முடித்தனர். பில் கொடுத்துவிட்டு வெளியே வந்தேன். நான் எதிர்பார்த்தது போலவே அந்த சாலையின் ஓரத்தில் சின்னதாக ஒரு பிள்ளையார் கோயில் இருந்தது. அங்கு அவர்களை அழைத்துச்சென்றேன்.
நான் சொல்வதை அவர்கள் நம்பவேண்டும் என்றால் சித்து விளையாட்டு அவசியம். அதனால் காற்றில் கைகளை வீசி, மனதுக்குள் மந்திரம் ஓதி, இருவரது கைகளையும் ஒன்று சேர்த்து… அந்தக் கைகளின் மீது என் உள்ளங்கையை விரித்தேன்.
தங்க மோதிரம் கண் சிமிட்டியது. ஆச்சர்யத்தில் வாய் பிளந்தவர்களுக்குக் கொடுத்தேன். அது சாப்பாட்டுக்காரியின் அண்ணன் கொடுத்தது.
இருவரும் என் சித்துவிளையாட்டை உண்மை என்று நம்பி கன்னத்தில் போட்டுக்கொண்டனர். மெல்லிய குரலில் அதேநேரம் அழுத்தமாகப் பேசினேன்
‘’நான் சொல்லும் தேவ ரகசியத்தை யாரிடமும் சொல்லக்கூடாது, நீங்களும் இதனை விவாதிக்கக்கூடாது..’’ என்றபடி இருவரிடமும் சத்தியம் கேட்டேன். உதவிக்கு யாருமில்லாத அந்த அன்றாடக்கூலிகள் என்னை முழுமையாக நம்பி சத்தியம் செய்தனர்.
‘’உங்கள் பாவத்தின் சம்பளம்தான் அந்தக் குழந்தை. உங்கள் முன்வினைகள் அந்தக் குழந்தையின் வாழ்க்கையுடன் முடிவுக்கு வருகிறது. உங்களுக்குப் பிறக்கும் அடுத்த குழந்தை உங்கள் வாழ்க்கையை மாற்றுவான்… அதனால் இந்தக் குழந்தைக்கு விடை கொடுக்கத் தயாராக இருங்கள்…’’ என்று சொல்லி முடிக்கும் முன் பாக்கியம் இடை புகுந்தாள்.
‘’சாமி… எங்க உசுர் போனாலும் பரவாயில்லை… இந்தப் பையனை காப்பாத்த முடியாதா…?’’ என்று பரிதவித்தாள்.
‘’இது ஆண்டவன் கட்டளை மகளே. அந்த விபத்து ஆண்டவனின் விருப்பம். விதியை யாராலும் மாற்ற முடியாது. உங்கள் துன்பத்திற்கு விடிவுகாலம் வந்துவிட்டதால், இனி நீங்கள் இங்கு இருக்க வேண்டாம். கிழக்கே ஏதேனும் ஒரு கிராமத்திற்கு சென்று கன்றுக்குட்டி வாங்கி வளருங்கள்… ஒன்று பத்தாகும்.. பத்து நூறாகும்.. உங்கள் வாழ்க்கையும் வளமாகும்…’’ என்றபடி அவர்களைவிட்டு விலகி நடந்தேன். அந்த ஏழைத் தம்பதியருக்கு மரண தத்துவத்தை விளக்குவதைவிட, நம்பிக்கை விதையே முக்கியம்.
அந்தத் தம்பதியர் மருத்துவமனைக்குள் நுழைந்ததும் கதறி அழப் போகின்றனர். ஏனென்றால் அந்தப் பையன் இறந்திருப்பான். எனக்கு எப்படி குழந்தையின் மரணம் தெரியும் என்று கேட்கிறீர்களா…? ஆக்சிஜன் டியூபை நான் உருவிவிட்டுத்தான் வந்திருக்கிறேன்.
- கண் திறக்கும்