தன் தலையில் ஆசிட் ஊற்றிக்கொண்டு தூண்டில் மீனாக ஒருத்தி வேதனையில் துடிதுடிப்பதை முதன்முதலாக கண் எதிரே பார்க்கிறேன். எனக்குள் ஏதோ உடைந்து சிதறியது. முற்றும் துறந்தவன், எதற்கும் கலங்காதவன் என்று என்னை நானே ஏமாற்றிவருகிறேன் என்ற உண்மை முகத்தில் அறைந்தது.

‘அம்மா… அய்யோ… மாரியாத்தா… தாங்கமுடியலை… தண்ணி…. தண்ணி… எரியுது… உசுர் போகுது… நாசமாப் போறவனே…’’ என்று துண்டுதுண்டாக கதறியபடி தரையில் புரண்டு துடித்தாள் சாப்பாட்டுக்காரி. அவள் தலை முடி இன்னமும் புகைந்தது.

அடுத்த நிமிடங்களில் அங்கு நடந்ததுதான் விசித்திரம். அரிவாளுடன் பையன் குரல் விட்டதை வேடிக்கை பார்த்தகூட்டம், ஆசிட் அலறலைக் கண்டதும் மிரண்டு காணாமல் போனது. வேதனையில் துடிக்கும் தாயை என்ன செய்வது என்று தெரியாமல் ராமன் பிரமை பிடித்து நின்றான். தெருவில் வந்துகொண்டிருந்த சித்ரா, ஓடோடிவந்து சாப்பாட்டுக்காரியைக் கட்டுப்படுத்த முயல… அவள் பிடிக்குள் அகப்படாமல் துள்ளினாள்.

அந்த வேதனையை அதற்கு மேலும் பார்க்கமுடியாமல் சட்டென்று எழுந்தேன். சாப்பாட்டுக்காரி தாட்டிகையானவள் என்றாலும் திடமான நம்பிக்கையுடன் அவளை விருட்டென வாரியெடுத்து, என் தோளில் போட்டு, விறுவிறுவென நடந்தேன். என் தோளில் ஒரு பெண் வலியுடன் துடிப்பதைப் பார்த்த ஆட்டோக்காரன் ஒருவன் தானே முன்வந்து நிறுத்தினான்.

‘’வேமா உட்காரு சாமி… என்னாச்சு… தீ பிடிச்சிடுச்சா..’’

மிகவும் கஷ்டப்பட்டு அவளை ஆட்டோவுக்குள் திணித்த நேரத்தில், எனக்குப் பின்னே சித்ராவும், அவள் மகன் ராமனும் ஓடிவந்து சேர்ந்தனர்.

‘’தண்ணி…. தண்ணி’’ என்று அரற்றியவளை நெருக்கி அமர்ந்த சித்ரா, அவள் கையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு ஆட்டோ  டிரைவரிடம் பேசினாள்.

‘’அண்ணே…. கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்கு போண்ணே… ‘’

பின் ஸீட்டில் இடம் இல்லாததால் டிரைவர் பக்கத்தில் உட்கார முயன்றான் ராமன். இந்த சிக்கலில் சித்ராவை விலக்க நினைத்தேன்.

‘’பெண்ணே… பாவத்தை சுமக்கவேண்டியவள் நீயல்ல… நீ உன் பாதையில் செல்’’ என்று சித்ராவை இறங்கச்சொன்னதும், அவள் குழப்பமானாள். 

‘’இவங்க வீட்ல பொம்பளைங்க யாரும் இல்லை சாமி… இந்த நாயி என் மேல ஆசிட் வீசுறேன்னு வம்பு பண்ணான்… இப்போ என்ன நடந்திச்சு சாமி… எப்படி இவங்க மேல ஆசிட்…’’ என்று நடந்த விபரம் கேட்டாள். முன் ஸீட்டில் அமர்ந்திருந்த ராமனைப் பார்த்து ஆத்திரமானாள். ஆசிட் கேஸ் என்றதும் ஆட்டோ டிரைவர் ஜெர்க் ஆனான்.

‘’இது தாய்க்கும் மகனுக்குமான தகராறு. அதனால் இவளை கவனிக்கவேண்டிய கடமை அவள் மகனுக்கு மட்டும்தான்… நீ இதில் தலையிடாமல் கிளம்பு மகளே…’’ என்று வம்படியாக சித்ராவை கீழே இறக்கிவிட்டு, ராமனை என் அருகே அமரவைத்தேன்.

ஆட்டோ டிரைவர் வண்டியை எடுக்க தயங்க… அவன் தோளை ஆதரவாக தட்டிக்கொடுத்தேன். என்ன நினைத்தானோ எதுவும் பேசாமல் வண்டியைக் கிளப்பினான். கத்தமுடியாத அளவுக்கு தொண்டை வற்றி ஓய்ந்துபோயிருந்த சாப்பாட்டுக்காரியின் முகத்தை உற்றுப் பார்த்தேன்.

மினி நரகம் போன்று இருந்தது அரசு மருத்துவமனை. விதவிதமான நோயாளிகள்… விதவிதமான பிரச்னைகள். இரண்டு நாட்களில் சாப்பாட்டுக்காரம்மா முகம் பார்க்கமுடியாத அளவுக்கு கோரமாக மாறிப்போனது.

ஆசிட் கேஸ் என்றதும் என்னமோ ஏதோவென்று ஓடிவந்த மீடியாக்கள், அம்மா – மகன் தகராறு என்றதும் கண்டுகொள்ளாமல் நடையைக் கட்டின. உயிர் போகும் வேதனையிலும், ராமன் முகத்தைப் பார்க்காமல் சாப்பாட்டுக்காரம்மா வீம்புடன் இருந்தாள். தாயின் வேதனையைப் பார்த்துப்பார்த்து ராமன் மனம் குமைந்தான்.

திடீரென புயல்போன்று வார்டுக்குள் நுழைந்த ஒருவன், அக்கம்பக்க நோயாளிகளைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் ராமன் சட்டையைப் பிடித்து இழுத்து அடித்து நொறுக்கினான். அடி வாங்கி அலறினாலும், அந்த இடத்தைவிட்டு அசையாமல் நின்றான் ராமன். அடித்தவன் சாப்பாட்டுக்காரம்மாவின் உடன் பிறப்பு வேல்ராஜ் என்பது அப்புறம் தெரியவந்தது..

மற்றவர்கள் அடிதடியை வேடிக்கைப் பார்க்க, ‘’வேலுண்ணே… வேண்டாம் விட்ரு…’’ என்று வேதனையுடன் சத்தம் கொடுத்தாள் சாப்பாட்டுக்காரி. ஆனாலும் அடங்காமல் அவன் துள்ளவே, படுக்கையில் இருந்து எழுந்து அவன் கையைப் பிடித்து நிறுத்தினாள். அதுவரை அமைதியாக அடி வாங்கிக்கொண்டிருந்த ராமன், தாயின் முகத்தைப் பார்க்க முடியாமல் வேலுவின் மார்பில் சாய்ந்து கதறினான்..

‘’எங்கக்கா முகத்தைப் பார்க்கமுடியாம செஞ்சிட்டியே பாவி… ‘உங்கப்பனை மாதிரி எங்கேயாவது ஓடிப்போய் செத்துப்போடா…  உன்னை பெத்த பாவத்துக்கு அவளை உசுரோட கொன்னுட்டியே. இனிமே இங்க நிக்காதே..’’ என்று பல்லைக் கடித்தபடி அவனை தன்னிடம் இருந்து விலக்கப் பார்த்தான். 

‘’வேண்டாம்னே… அவன் எங்கே போவான். எல்லாம் என் தப்பு. வளர்க்கத்தெரியாம ஆம்பிளைத் திமிரோட வளர்த்துட்டேன்.  அம்மாவும் ஒரு பொம்பளைன்னு இப்பத்தான் அவனுக்குத் தெரிஞ்சிருக்கும்… நீ வீட்டுக்குப் போண்ணா. என் முகத்தைப் பார்த்தா உனக்கும் சாப்பாடு இறங்காது……’’ என்று முகத்தை சேலையால் மறைத்து அழுதாள்.

‘’இனிமே நீ சாப்பாட்டுக்கடையும் நடத்த முடியாது உன் மூஞ்சைப் பார்த்து யாரும் சாப்பிட வரமாட்டான். பொழப்புக்கு என்ன செய்வேன்னு சொல்லு.. செஞ்சு தர்றேன். இவனை எங்கேயாவது மெக்கானிக் வேலைக்கு அனுப்பு… பக்கத்தில வைச்சி குட்டிச்சுவராக்கிடாத…’’ இப்போது ராமன் கையை கட்டியாகப் பிடித்துக்கொண்டு சொன்னான். அந்த நேரத்தில் இடைபுகுந்தேன்.

‘’இனிமேல் ராமன் சுமைதாங்கியாக இருப்பான். தாய் என்ற ஸ்தானத்தில் இருந்து உயர்ந்து ஒரு தெய்வம் போன்று இவள் பாடம் புகட்டியிருக்கிறாள். பெண் அடிமை அல்ல, ஆண் ஆணவத்தின் பிள்ளையல்ல என்பதை மகனுக்கு புரியவைக்க மிகப்பெரிய விலை கொடுத்திருக்கிறாள். இப்போதுதான் அவளுக்கு மகன் நிஜமாகப் பிறந்திருக்கிறான்…’’ என்று சாப்பாட்டுக்காரம்மாவின் முகம் பார்த்து அழுத்தம்திருத்தமாகச் சொன்னேன். நான் சொன்னதைக் கேட்ட ராமன், தாயின் கையை கட்டியாகப் பிடித்துக்கொண்டான்.

‘’யாருக்கா இது…?’’  என்னைப் பார்த்துக் கேட்டான் வேலு.

கண்ணீர் மல்க என்னைப் பார்த்த சாப்பாட்டுக்காரி, ‘’ராமன் ஜெயிலுக்குப் போகாம காப்பாத்தினவருப்பா… ஒரு பொம்பளைப் பிள்ள குடும்பத்தை வாழ வைச்சவர். அவருக்கு ஏதாச்சும் நல்லது செய்யுப்பா…’’ என்று வேண்டுகோள் வைத்தார்.

அக்காவுக்குக் கொண்டுவந்த பழப்பைக்குள் கைவிட்ட வேலு, சட்டென்று அதை மறந்து தன் கையில் இருந்த மோதிரத்தை எடுத்து என் கையில் கொடுத்தான். அதை ஏன் வாங்கினேன் என்றே தெரியாமல் வாங்கி ஜிப்பாவுக்குள் போட்டுக்கொண்டு நடை போட்டேன். மருத்துவமனையில் இருந்து வெளியேறும் மனமின்றி, ஒவ்வொரு வார்டாக சுற்றிப் பார்த்தேன்.

வராந்தாவின் சுவரில் சாய்ந்து 35 வயது மதிக்கத்தக்க ஊதா நிற சட்டைக்காரன் அழுதுகொண்டிருந்தான். இந்த உலகத்தின் அத்தனை சோகத்திற்கும் சொந்தக்காரன் போன்று முகத்தில் துக்கம் மண்டியிருந்தது. அவனுக்கு எதிரே தெரிந்த வார்டுக்குள் கண்களை ஓடவிட்டேன். குழந்தைகள் பிரிவு அது. முகத்தில் மாஸ்க், கைகளில் கட்டு, தலையில் கட்டு, வாயில் டியூப் என்று ஒவ்வொரு குழந்தையும் ஒரு ரகம்.

குழந்தைகளை தெய்வத்தின் மறுபிறவி என்று சொல்பவனை செருப்பால்தான் அடிக்கவேண்டும் என்ற யோசனையுடன் நகர முயன்ற என் கால்களை கெட்டியாகப் பிடித்துகொண்டான் ஊதா சட்டைக்காரன்.

‘’என் புள்ளை இன்னைக்கு ராத்திரி தாங்கமாட்டான்னு சொல்றாங்க… எப்படியாச்சும் காப்பாத்துங்க சாமி…’’ என்றபடி அழுத அவன் கண்ணீர் என் கால்களைச் சுட்டது.

  • கண்கள் திறக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *