ஒவ்வொரு பயிருக்கும் குறிப்பிட்ட விளைச்சல் காலம் உண்டு. உதாரணமாக பீன்ஸ், காலிஃப்ளவர், முட்டைக்கோஸ் போன்ற பயிர்கள் மூன்று மாத காலம் முழுமையாக விளைந்தபிறகே பலன் கொடுக்கும். இந்தக் காலகட்டத்தில் களை எடுப்பது, ஊட்டச்சத்து கொடுப்பது, நீர் மேலாண்மை, பூச்சிக்கொல்லி, காவல் போன்ற பல்வேறு விஷயங்களில் போதுமான அக்கறை செலுத்த வேண்டும். விளைச்சலுக்கு இயற்கையும் கைகொடுக்க வேண்டும். அதன்பிறகுதான் எதிர்பார்க்கும் விளைச்சல் கிடைக்கும். கடுமையாக இரண்டு மாதங்கள் மட்டும் உழைத்துவிட்டு, இன்னமும் விளைச்சல் கிடைக்கவில்லை என்ற ஏமாற்றத்துடன் பயிரை அழிப்பது புத்திசாலித்தனம் இல்லை.

பயிருக்கும் வாழ்க்கைக்கும் நெருங்கிய உறவு உண்டு. ஆம், திருமணம் என்பதும் ஆயிரங்காலத்துப் பயிர். அந்தப் பயிர் வேர்விட்டு பலன் தரும் காலம் வரையிலும் காத்திருக்கத்தெரிந்தவர்கள் மட்டுமே, விளைச்சலை அறுவடை செய்யமுடியும். ஆனால் முதிர்வடையும் காலம் வரையிலும் காத்திருக்காமல், இடையிலேயே உறவை முறித்துக்கொள்ளும் முட்டாள்தனமான காரியத்தையே இன்றைய இளையதலைமுறை செய்துவருகிறது. ஆம், திருமணம் முடித்த ஒரே ஆண்டுக்குள் விவாகரத்து கோரி விண்ணப்பம் செய்யும் தம்பதியர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்த விவகாரத்தில் உளவியல் மருத்துவர்களும், சமூகநல ஆர்வலர்களும் சொல்லும் கருத்து என்ன தெரியுமா? திருமண வாழ்க்கையை மூன்றாண்டு பயிராக கருதவேண்டும் என்கிறார்கள். ஆம், எத்தனை பிரச்னைகள் இருந்தாலும் குறைந்தது மூன்று ஆண்டுகளாவது கணவன் – மனைவி சேர்ந்து வாழ்ந்தால்தான், அவர்களுக்குள் ஒற்றுமை எனும் பூ மலர்ந்து இன்பம் எனும் கனி கிடைக்கும் என்கிறார்கள்.

காதலித்து திருமணம் முடித்தவர்கள் என்றாலும், சம்பிரதாய முறைப்படி குடும்பத்தினரால் திருமணம் முடிக்கப்பட்டவர்கள் என்றாலும் இதுதான் நிலைமை. எதற்காக மூன்று ஆண்டு காலம் காத்திருக்கவேண்டும் என்பதற்கு விடையும் தருகிறார்கள். இந்த மூன்று ஆண்டுகளே களை எடுத்தல், நீர் ஊற்றுதல், உரம் வைத்தல் போன்றவைகளை செய்வதற்கான காலங்கள். ஏன் ஆரம்பத்திலேயே பிரியக்கூடாது என்பதற்கு அவர்கள் சொல்லும் விளக்கம் இதுதான்.

போலியான முதல் ஆண்டு :

திருமணம் ஆன புதிதில் ஆணும், பெண்ணும் தனி உலகத்தில் பறப்பார்கள். இந்த உலகத்திலேயே தங்களுக்கு மட்டும்தான் திருமணம் முடிந்திருப்பது போல் பெருமைப்படுவார்கள். அதனால் தங்கள் உண்மையான, இயல்பான குணத்தை அப்பட்டமாக காட்டவிரும்பாமல்… கொஞ்சம் போலியாகத்தான் வாழ்க்கையைத் தொடங்குவார்கள். இயல்பாக இல்லாமல் கூடுதல் அன்பு செலுத்துவது, கூடுதலாக அக்கறை செலுத்துவது, இழுத்துப்போட்டு வேலைசெய்வது என்று நடிப்பார்கள். தன்னால் அதைச் செய்யமுடியும், இதை செய்யமுடியும் என்று வீண் பந்தா, பகட்டு புனைவார்கள். தங்கள் உறவு, நட்புகளைப்பற்றி உயர்வாகப் பேசுவார்கள். இவை எல்லாமே தங்கள் துணையைக் கவர்வதற்கான முயற்சியாகத்தான் பார்க்கவேண்டும். ஆனால், இதனை பொய் என்று ஒருவர் கண்டுபிடிக்கும்போது பிரச்னையாகிறது. ஒருவர் பொய்யை மற்றவர் சுட்டிக்காட்டும்போது ஈகோவினால் சண்டை பெரிதாகிறது. ஏமாற்றியதாக குற்றம் சாட்டி பிரிகிறார்கள்.

கமலினிக்கு சேலை கட்டுவதே பிடிக்காது. ஆனால் திருமணம் முடித்து மாமியார் வீட்டுக்குப் போனதும் நல்ல மருமகள் என்று காட்டுவதற்காக எப்போதும் சேலையிலே வலம் வந்தாள். ஒருநாள் மாமியார் வெளியே போனதும் சேலையைத் தூக்கிவீசிவிட்டு நைட்டிக்கு மாறினாள். தற்செயலாகத் திரும்பிவந்த மாமியார் இந்தக் காட்சியைப் பார்த்து அதிர்ந்து, ’அநியாயத்துக்கு நடிக்கிறாள்’ என்று மகனிடம் வத்திவைக்க… பிரச்னை பெரிதாகி பிரிவு வரையிலும் போய்விட்டது. அதேபோல் தனக்கு 50 ஆயிரம் சம்பளம் என்று சொல்லியிருந்தான் கோபாலன். உண்மையில் சம்பாதிப்பது 28 ஆயிரம் என்பதை மனைவியிடம் சொல்லக்கூடாத நேரத்தில் சொல்ல… ஏமாற்றிவிட்டதாக சண்டை வந்து… குடும்பத்து சண்டையாக மாறி பிரிந்துவிட்டார்கள். நைட்டி போட்டதும், சம்பளத்தை குறைவாகச் சொன்னதும் குற்றமே கிடையாது. ஆனால், இவற்றை குற்றமாக எடுத்துக்கொண்டு பிரிந்ததுதான் தவறு. நைட்டியைப் பார்த்து மாமியார் கோபப்பட்டால்… அவள் அதிர்ச்சியைப் புரிந்துகொண்டு மன்னிப்பு கேட்டிருக்கலாம். எந்த ஆணும் சம்பள விஷயத்தில் உண்மையும் பொய்யும் கலந்துதான் பேசுவார்கள் என்பதைப் புரிந்து மன்னித்திருக்கலாம். பற்றியதும் வெடிக்கும் பட்டாசாகத்தான் முதல் வருடம் ஆணும் பெண்ணும் இருப்பார்கள். அதனால் இந்த வருடம் எந்த பிரச்னை வந்தாலும்… தள்ளிப்போட முயற்சிக்க வேண்டுமே தவிர பிரிவது பற்றி யோசிக்கவே கூடாது.

உண்மைகள் தெரியவரும் இரண்டாம் வருடம் :

வீட்டுக்கு வீடு வாசப்படி என்பது இப்போதுதான் புரியத்தொடங்கும். தன்னுடைய குடும்பத்தில் போலவே இந்தக் குடும்பத்திலும் பிரச்னைகள், சிக்கல்கள் இருப்பது  கணவன், மனைவிக்குத் தெரியவரும். எவ்வளவு கடன் இருக்கிறது, எவ்வளவு சொத்து இருக்கிறது என்ற உண்மைகள் தெரியவரும். உறவினருடன் எப்படிப்பழகுவது, அக்கம்பக்கத்தினருடன் என்ன பிரச்னை என்பதெல்லாம் புரியத்தொடங்கும். எந்த விஷயத்தைப் பற்றி பேசினால் கணவனுக்குக் கோபம் வரும் என்று மனைவிக்குப் புரியவரும். எந்த விஷயம் மனைவிக்கு எரிச்சலைத் தரும் என்பது கணவனுக்குப் புரியும். இதனை புரிந்துகொண்டு தவிர்க்கவேண்டுமே தவிர… தூண்டிவிடக் கூடாது.

இப்போதுதான் ஆணும் பெண்ணும் இயல்புக்குத் திரும்புவார்கள். திருமணம் முடித்துவந்த காலங்களில் அதிகாலை ஐந்து மணிக்கு குளித்துக்கொண்டிருந்த ராகினி, கொஞ்சம்கொஞ்சமாக நேரத்தை மாற்றி இப்போது அவளுக்குப் பிடித்த மாலை நேரத்தில் குளிக்கிறான். அதேபோல் வேலை முடிந்ததும் வீட்டுக்குத் திரும்பிய ராஜசேகர், இப்போது நண்பர்களுடன் அரட்டையடித்துவிட்டு சாப்பிடும் நேரம்தான் வீட்டுக்குத் திரும்புகிறான். இதுதான் அவனது இயல்பு. இந்த இயல்பு வாழ்க்கையை கணவனும் மனைவியும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இத்தனை நாளாக தன்னை ஏமாற்றிவிட்டதாக ஆதங்கப்படுவதில் அர்த்தம் இல்லை. குற்றம் குறைகளோடு ஒருவர் மற்றொருவரை புரிந்துகொள்ளும் நிலை இந்த ஆண்டுதான் வரும். அதனால் நிச்சயம் என்ன பிரச்னைகள் இருந்தாலும் இரண்டாம் ஆண்டு விவாகரத்து வரை போகக்கூடாது.

குழந்தைக்காக மூன்றாம் ஆண்டு

ஒருவரையொருவர் அனுசரித்துச்செல்லும் மனப்பான்மை இப்போதுதான் உருவாகும்.. இருவருக்கும் வீட்டு நிலவரம் தெரியும் என்பதால் ஒருவர் பாதையில் மற்றவர் குறுக்கிடாமல் வாழத் தொடங்குவார்கள். இதற்கு உதவிசெய்யும் வகையில் பெரும்பாலான தம்பதிகள் இந்த ஆண்டுக்குள் குழந்தை பெற்றுவிடுவார்கள். அப்படியில்லை என்றால் குழந்தை பெறுவதற்கான முயற்சியில் இறங்குவார்கள்.  கணவன், மனைவி என்று இருந்த உலகம் மாறி, குழந்தைக்காக புது உலகத்தை உருவாக்க நினைப்பார்கள். நான் என்ற நிலை மாறி நாம் என்ற உலகத்திற்குள் நுழைவார்கள். இதற்குள் பல்வேறு நண்பர்களின் வாழ்க்கையில் கிடைத்த அனுபவங்களை, விளைவுகளைப் பார்த்திருப்பார்கள். மற்றவர்களுக்கு நமது வாழ்க்கை எவ்வளவோ மேல், என்ன பிரச்னை இருந்தாலும் இப்படியே காலத்தை தள்ளிவிடலாம் என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள்.

அதனால்தான் திருமணம் முடித்தவர் என்ன பிரச்னை என்றாலும் மூன்று ஆண்டுகள் காத்திருப்பது நல்லது. மூன்று ஆண்டுகளுக்குப்பிறகு விவாகரத்து கேட்டுவரும் தம்பதியர் எண்ணிக்கை மிகமிகக் குறைவே. விவாகரத்துக்குப் பிறகான வாழ்க்கையானது சுகமான தென்றலாகத்தான் இருக்கும் என்பது உறுதியில்லை. அதனால்தான் விவாகரத்து வாங்க நினைத்தால்… மூன்று வருடங்கள் காத்திருக்கச் சொல்கிறார்கள் உளவியல் ஆலோசகர்கள்.

அதுசரி, கணவன், மனைவி பிரியாமல் வாழ்வதற்கு ஏதாவது வழி இருக்கிறதா?

எளிய வழி இருக்கிறது. தன்னுடைய குழந்தை தவறு செய்யும்போது தாயும் தந்தையும் கடுமையாக தண்டிக்கலாம் அல்லது கண்டிக்கலாம். ஆனால் ஒருபோதும் தன்னுடைய பிள்ளை இல்லை என்று உறவை முறித்துக்கொள்வதில்லை. அதனால் தாய்க்கும் பிள்ளைக்கும் உள்ள உறவுபோல் கணவு மனைவி உறவு மாறவேண்டும் என்கிறார்கள். ஆம், ஒருவருக்கொருவர் பிள்ளையாக மாறிப்போனால் வாழ்வில் பிரிவு என்பதே இல்லை… இல்லை… இல்லவே இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *