- கேள்வி : வாழ்க்கையில் சந்தோஷமான தருணம் எது? எம்.கணேஷ், அருப்புக்கோட்டை.
ஞானகுரு :
குழந்தைகள் மட்டுமே சந்தோஷ தருணத்தை அவ்வப்போது அனுபவிக்கிறார்கள். தூங்கியெழும் பிள்ளையிடம், ‘இன்று பள்ளிக்கு விடுமுறை‘ என்று சொல்லிப்பார். முகமெல்லாம் மத்தாப்பூவாய் மலர்ந்துவிடும். அன்றைய நாளை சந்தோஷமாக கொண்டாடுவார்கள். பெரியவர்கள் சுற்றுலாவுக்குப் போனாலும், ‘முன்பு இருந்ததுபோல் இந்த இடம் இல்லை’ என்று அலுத்துக்கொள்வார்கள். கடந்த காலங்களில் மட்டுமே சந்தோஷம் இருந்ததாக நம்புவதால், இன்றைய சந்தோஷங்களைக் காண மறுக்கிறார்கள். பூவின் மலர்ச்சியில், குழந்தையின் சிரிப்பில், உணவின் சுவையில், மனிதனின் குணத்தில் சந்தோஷத்தை அனுபவிக்கக் கற்றுக்கொண்டால், நாளெல்லாம் ஆனந்தமே.