ஒரு புரட்சிப்பெண் எப்படி இருப்பாள் என்று யாராவது பார்க்கவிரும்பினால், வினோதாவை தைரியமாக சுட்டிக் காட்டலாம். கல்லூரி காலத்தில் பையன்களுடன் சகஜமாகப் பழகுவாள். தினமும் ஒரு பையன் வண்டியில் கல்லூரிக்கு வருவாள். அவளை கூட்டிச்செல்வதற்கு பையன்கள் போட்டி போடுவார்கள். ‘எனக்கு இந்தக் காலேஜ்ல ஏகப்பட்ட டிரைவர்ஸ்…’ என்று பையன்கள் முன்னே ஊசிப்பட்டாசு போல் சிரிப்பாள். அதைக் கேட்கும் பையன்கள் அசடு வழிவார்களேதவிர கோபப்படுவதில்லை.

வினோதாவின்  அப்பாவுக்கு துபாயில் வேலை. அவர் அனுப்பும் பணத்தை செலவழிக்கும் கடினமான வேலைச்சுமை அவள் அம்மாவுக்கு இருந்ததால், வினோதாவை கவனிக்கவோ, கண்டிக்கவோ இல்லை. கேட்கும்போது பணம் கிடைத்தது என்பதால் தெனாவெட்டும் தைரியமும் நிரம்பி வழிந்தது. அவள் எப்படிப்பட்ட தீப்பொறி என்பதை அறிந்துகொள்வதற்கு கல்லூரியில் நடந்த இந்த சம்பவத்தைத்தான் உதாரணமாக சொல்வார்கள்.

 ஒரு பையன் அவளை உரசிவிட்டுப் போனதற்காக விரட்டிப்பிடித்து செருப்பால் அடித்தாள். அவன் சட்டையைப்பிடித்து, ‘என் விருப்பம் இல்லாம என்னைத் தொட்டா கொன்னுப்புடுவேன். என்னைத் தொட்டுப்பார்க்க ஆசை இருந்தா தைரியமா என்கிட்டே வந்து கேளு, எனக்கும் சம்மதம்னா தொடலாம்’ என்று அவள் விடுத்த புரட்சிகர ஸ்டேட்மென்ட் கல்லூரி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

நுனிநாக்கு ஆங்கிலம் உதவியதால், ஒரு நிறுவனத்தில் எளிதாக வேலைக்கு சேர்ந்துவிட்டாள். அந்த நிறுவனத்தில் வெளிமாநிலப் பெண்கள் நிறைய பேர் இருந்தார்கள். அவர்களுடன் சேர்ந்து வினோதா சிகரெட் புகைக்கவும், மது குடிக்கவும் கற்றுக்கொண்டாள். வினோதாவின் சனி, ஞாயிறு கொண்டாட்டங்கள்தான் திங்கள் முழுவதும் அலுவலகத்தில் பேசுபொருளாக இருக்கும்.

இவளது உச்சபட்ச புரட்சி என்றால் ஆண் தோழனுடன் கல்யாணம் முடிக்காமல் சேர்ந்து வாழ்ந்ததுதான். தன்னுடன் வாழ்பவன் கணவன் அல்ல தோழன் என்பதில் தெளிவாக இருந்தாள். தாலி, மெட்டி, புடவை எல்லாமே அடிமை சின்னங்கள் என்றாள். அதனால் இந்த முயற்சியை மூன்று ஆண்களிடம் செய்துபார்த்தாள்.

நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவருடன் நான்கு மாதம் வாழ்ந்தாள். அவ்வப்போது அவன் மனைவியையும் திருட்டுத்தனமாக பார்க்கப்போவது தெரியவந்ததும் கழட்டிவிட்டாள். அடுத்து கல்லூரித் தோழன் ஒருவனுடன் ஒரு வருடம் வாழ்ந்துபார்த்து, அவனும் சரிப்படவில்லை என்று விரட்டிவிட்டாள். அதன்பிறகு சின்னத்திரையில் வளரும் நட்சத்திரம் ஒருவனுடன் எட்டு மாதங்கள் சேர்ந்துவாழ்ந்தாள். அவன் மூலமாகத்தான் பல பத்திரிகைகளில் வினோதாவின் பெயரும் படமும் வந்தது. ‘நமக்குச் சொந்தக் குழந்தை வேண்டாம், தத்துக் குழந்தை வளர்க்கலாம்’ என்று வினோதா சொன்னதை நடிகர் ஏற்காமல் போகவே, சண்டை ஏற்பட்டு வழக்கம்போல் வினோதா சுமுகமாக(?) பிரிந்துவிட்டாள். இப்போதும் வினோதா குடிக்கிறாள், புகைக்கிறாள், பார்ட்டிகளுக்குப் போய் கொட்டம் அடிக்கிறாள். ஆனால் ஏனோ ஆண்கள் பக்கம் திரும்பியே பார்ப்பதில்லை.

பிறர் கண்களுக்கு புரட்சி நாயகியாகத் தெரியும் வினோதா, சமீபத்தில் ஒரு மனநல மருத்துவமனைக்கு வந்தாள். மருத்துவர் வழிகாட்டுதல்படி கவுன்சிலிங் செய்துகொள்வதற்காக வந்தாள். மனம்விட்டு பேசினாள்.

’’ நான் தன்னம்பிக்கையுடன் தலைநிமிர்ந்து வாழ்ந்தேன். இப்போது என்னுடைய தைரியம் எல்லாமே சிதைதுவிட்டது. திருமணம் முடிக்காமல் சேர்ந்துவாழும் ஆசையுடன் நிறைய ஆண்கள் அணுகுகிறார்கள். முடியாது என்றாலும் முரண்டு பிடிக்கிறார்கள். அவர்களை சமாளிக்க முடியவில்லை. ஆண்களைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது… தூக்கம் வரவில்லை, வேலைக்குச்செல்ல விருப்பமில்லை, எப்போதும் ஏதோ ஒன்றை இழந்துவிட்ட ஏக்கம் தெரிகிறது. என்னை பழைய நிலைக்கு மாற்றமுடியுமா?’ என்று கேட்டார்.

’சேர்ந்துவாழும் கலாசாரம் உங்களுடைய விருப்பம்தானே…’  என்று கேட்டதும், வரிசையாக அந்த உறவினால் உருவான சிக்கல்களைப் பட்டியல் போட்டாள்.

 • நான் வாழ்நாள் முழுவதும் சேர்ந்துவாழும் ஆசையுடன் ஆணை தேர்வு செய்கிறேன். ஆனால் ஆணோ, ‘என்னுடன் ஆசைதீர வாழ்ந்துவிட்டு நகர்ந்துவிடலாம்’ என்ற திட்டத்துடனே இணைகிறார்கள்.
 • என்னுடன் இருந்த மூன்று ஆண்களுமே வீட்டுச் செலவுக்கு பணம் கொடுத்ததே இல்லை. ஆனால் விதவிதமாக உணவு கேட்பார்கள். நான் சமைக்கவில்லை என்றால் ஹோட்டலில் ஆர்டர் கொடுத்துவிட்டு என்னை பில் கொடுக்கச்சொல்வார்கள்.
 • என்னுடைய பணத்தை கேட்காமலே எடுத்துச்செல்கிறார்கள். இதற்குக்கூட உரிமை இல்லையா என்று கேட்கிறார்கள்.
 • அவர்கள் கூப்பிடும் நேரத்தில் எல்லாம் படுக்கைக்குப் போகவேண்டும், ஆசைப்படும் வகையில் திருப்தி செய்யவேண்டும். வரமுடியாது என்று மறுத்தால், ‘ஓகே… நான் ஒரு கால்கேர்ள்கிட்டே போயிட்டு வர்றேன்’ என்று மிரட்டுகிறார்கள்.
 • சொல்லிக்கொள்ளாமல் இரண்டு மூன்று நாட்கள் காணாமல் போகிறார்கள். நான் தாமதமாக வந்தால் அல்லது வேறு ஓர் ஆணிடம் பேசினால், ‘நம் உறவை முறித்துவிட்டு அவனிடம் போ’ என்று கத்துகிறார்கள். இதனை சாக்காகவைத்து ஓடுவதற்குத் தயாராக இருக்கிறார்கள்.
 • ஒரு வாரம் காய்ச்சலில் கிடந்தவனுக்கு சேவைசெய்திருக்கிறேன். எனக்கு இரண்டாவது நாள் காய்ச்சல் குறையவில்லை என்றதும், ‘அடுத்து செக்கப் பண்றப்ப ஹெச்.ஐ.வி. டெஸ்ட் ஒண்ணும் எடுத்துப் பார்த்துடு’ என்று கூசாமல் சொன்னான் ஒருவன்.
 • குழந்தை பெற்றுக்கொள்ளவும், அப்பாவாக இருக்கவும் இந்த உறவுக்குள் வரும் எந்த ஆணும் தயாராக இல்லை. அவர்களைப் பொறுத்தவரை இந்த உறவு ஒரு டைம்பாஸ்.
 • என்னிடம் இருந்து விலகிய மூவரும் திருமணம் முடித்து செட்டில் ஆகிவிட்டார்கள். இப்போது என்னை அப்ரோச் செய்யும் ஆணிடம், ‘திருமணம் முடித்துக்கொள்ளலாமா?’ என்று கேட்டால், ‘ஜோக் அடிக்காதே… நீதான் புரட்சிப் பெண்ணாச்சே. எதுக்குக் கல்யாணம்?’ என்று கேட்கிறார்கள்.
 • இப்போது தொழில்ரீதியாக ஒரு ஆணை சந்தித்தால்கூட, ‘என்னை படுக்கக்கூப்பிடுவானோ?’ என்று பயமாக இருக்கிறது.
 • என்னுடைய ஏடாகூட படங்கள் பலரிடம் இருக்கிறது. எந்த நேரம் என்ன செய்வார்களோ என்று பயமாக இருக்கிறது.
 • எந்தப் பெண்ணும் என்னிடம் தோழியாகப் பழகுவதில்லை,  மனம்விட்டுப் பேசுவதில்லை. அம்மாவும் அப்பாவும் தலைமுழுகி விட்டார்கள்.
 • இனி என்னை திருமணம் செய்துகொள்ள எந்த ஆணும் வரப்போவதில்லை. அதை நான் எதிர்பார்க்கவில்லை என்றாலும் என் கடந்த காலம் அறிந்த ஒருசில ஆண் பச்சையாகப் பார்க்கிறான்.
 • எனக்கு ஆதரவாக எந்த சட்டமும் இல்லை. ஏனென்றால் நான் சட்டத்தை மதிக்காமல் நடந்துகொண்டேன். ஆனால் இதற்கு மேல் நான் எதற்காக உயிர்வாழ வேண்டும் என்ற எண்ணம் தோன்றிக்கொண்டே இருக்கிறது.

இன்னும் நிறையநிறைய பேசினாள் வினோதா. நான் அவளை குணப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தேன் என்பது உங்களுக்குத் தேவை இல்லாதது. ஆனால் திருமணம் முடிக்காமல் சேர்ந்துவாழும் உறவு எத்தனை கொடூரமானது, முட்டாள்தனமானது என்பதை புரிந்திருப்பீர்கள். வினோதாவின் உண்மையான அனுபவத்தைவிட மேலான ஆசான் எதுவுமில்லை என்பதை, ‘புரட்சி’ விரும்பும் பெண்கள் புரிந்துகொண்டால் சரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *