’நீங்கள் வாங்கும் நாப்கின் கவரில் என்னென்ன குறிப்புகள் எழுதியிருக்கும் தெரியுமா என்று மாணவிகள், குடும்பத்தலைவிகள், வேலைக்குச்செல்லும் பெண்களிடம் கேட்டபோது கிடைத்த பெரும்பான்மை பதில் என்ன தெரியுமா?

‘’ச்சீய்… அதைப்போய் யார் படிப்பா. யாருக்கும்தெரியாம ரகசியமா, அவசரமா அதை பயன்படுத்துகிறோம்’’ என்கிறார்கள். உண்மைதான். சானிடரி நாப்கின்களை கண்ணுக்குத் தெரியும் இடத்தில் எந்தப் பெண்ணும் வைப்பதில்லை. இருட்டான, யாரும் பார்க்கமுடியாத மூலையில், குப்பைக்கூடையின் பின்புறத்தில், பாத்ரூம் மேல்ஷெல்பில் ஒளித்துவைக்கிறார்கள். ஆண்கள் கண்ணில்பட்டால் அசிங்கம் என்றே பெண் நினைக்கிறாள். சுகாதாரமற்ற இடத்தில் நாப்கின் பத்திரப்படுத்துவது மிகவும் மோசமான பக்கவிளைவுகளை உருவாக்கும் என்பது புரிவதில்லை. மாதமாதம் பயன்படுத்தினாலும் நாப்கின் குறித்து தெளிவு இல்லாமல் பெண் இருப்பது சரிதானா?

பொதுவாக பெண் கிட்டத்தட்ட 13-வது வயதில் பருவம் அடைகிறாள். கிட்டத்தட்ட 48 வயதில் மெனோபாஸ் நிலையை அடைகிறாள். இடைப்பட்ட 35 ஆண்டுகள் சுமார் 10,000 முதல் 15,000 நாப்கின்கள் பயன்படுத்துகிறாள். அதனால் இந்த நாப்கின்களில் என்ன அடங்கியிருக்கிறது, பயன்படுத்தும்விதம், பக்கவிளைவுகள் பற்றி ஒவ்வொரு பெண்ணும் நிச்சயம் அறிந்திருக்கவேண்டும்.

இன்னமும் சில வீடுகளில் துணியை நாப்கின்களாக பயன்படுத்துகிறார்கள். கிராமப்புறங்களில் 80 சதவிகித பெண்கள் இன்னமும் துணிகளையே பயன்படுத்துகிறார்கள். கிழிந்து கந்தலான அல்லது மூலையில் முடக்கப்பட்ட துணிகளையே உபயோகப்படுத்துகிறார்கள். இவற்றை சரியான முறையில் துவைத்து உலர்த்துவது இல்லை என்பதால் எளிதில் தொற்றுக்கிருமிகள் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். சிறுநீர்த் தொற்று, அரிப்பு, சொறி, படை போன்ற பிரச்னைகள் ஏற்படுதலுக்கும் இவை காரணமாக இருக்கின்றன. துணி பயன்படுத்துவது சரியான விஷயம்தான். ஆனால் நன்றாக கிருமிநாசினி போட்டு துவைத்து வெயிலில் காய்ந்த துணியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பணத்தை மிச்சப்படுத்த நினைப்பவர்கள் உடல்நலனுக்காக இதனை செய்தே தீரவேண்டும். இந்தத் துணியை வெயிலில் காயவைக்க யோசிப்பவர்கள் நாப்கின் பயன்படுத்துவதே சரியான தீர்வு.

பொதுவாக இந்த நாப்கின்களில் மீள்சுழற்சி செய்யப்பட்ட காகிதம், பஞ்சு, மரக்கூழ், பிளாஸ்டிக் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. ஈரத்தை உறிஞ்சவும் வண்ணம் அளிப்பதற்காகவும் சில ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. எவ்வித ரசாயனமும் சேர்க்கப்படாத பஞ்சு கலந்த நாப்கின் பயன்படுத்துவதான் மிகச்சிறந்த நாப்கின். இவையே மனித உடலுக்கு கேடு விளைவிப்பதில்லை, சுற்றுச்சூழலுக்கும் ஆபத்து தருவதில்லை.

மாதவிலக்கு ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு வகையில் நிகழ்கிறது. ரத்தப்பெருக்கு அளவில் வித்தியாசம் இருக்கும். ரத்தப்பெருக்கு நாட்கள் மாறுபடும். அதனால் தன்னுடைய உடல் தேவைக்கு ஏற்ற நாப்கின் எதுவென தேர்ந்தெடுத்து உபயோகிக்க வேண்டும்.  உடல் அமைப்புக்கு ஏற்ற நீளம் எந்த நாப்கினில் இருக்கிறது, போதுமான அகலம் இருக்கிறதா, போதுமான உறிஞ்சும் தன்மை இருக்கிறதா, கசிவு ஏற்படாமல் இருக்கிறதா என்பதை எல்லாம் பரிசோதனை செய்து வாங்கவேண்டும்.

மருந்துக்கடைகளில் அல்லது பெட்டிக்கடைகளில் நாப்கின் வாங்குவதற்கு சங்கடப்படத் தேவையில்லை. பருப்பு, எண்ணெய் வாங்கும்போது என்ன எடை, என்ன விலை, எக்ஸ்பயரி டேட் இருக்கிறதா என்பதை வேறு பிராண்ட் பொருட்களுடன் ஒப்பிட்டு வாங்குவதுபோல் தைரியமாக தேர்வு செய்யுங்கள். இதில் வெட்கப்படவோ, கூச்சப்படவோ அவசியம் இல்லை.

சிந்தெடிக் கலந்த நாப்கின் நல்ல உறிஞ்சும் தன்மையுடன் இருக்கலாம் என்றாலும் உடல் சருமத்தை பாதிக்கல்லாம். அதனால் வசதியைப் பார்க்காமல் சரியான ஒன்றை தேர்வு செய்யுங்கள். இதுதவிர இதற்கு கொடுக்கும் விலை சரியானதா என்பதையும் பாருங்கள். பிரபல நிறுவனங்களின் நாப்கின்களின் விலை அதிகமாகத்தான் இருக்கும். ஏனெனில் அவர்கள் செய்யும் விளம்பர செலவையும் பொருளின் மீது ஏற்றியிருப்பார்கள். இப்போது சுய உதவிக் குழுக்கள், மகளிர் அமைப்புகள் குறைந்த விலையில் நாப்கின் தயாரிக்கிறார்கள். அவற்றில் சரியானதை தேர்வுசெய்து பயன்படுத்தி பணத்தை மிச்சப்படுத்தலாம்.

தேவையான நேரத்தில் நாப்கின்களை மாற்றிக்கொள்ள வேண்டும். நிறைய பெண்கள் இந்த விஷயத்தில் அதிக தவறு செய்கிறார்கள். காலையில் வைத்தால் இரவில்தான் மாற்றுகிறார்கள். ஒரே நாப்கினை நீண்ட நேரம் பயன்படுத்தினால், அது தரமானதாக இருந்தாலும் தொற்றுக்கிருமிகள் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். ஒரே வகையான நாப்கின் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. அதிக ரத்தப்போக்கு இருக்கும் நாட்களுக்கு ஒரு வகையான நாப்கின்களும் ஆரம்ப மற்றும் இறுதி நாட்களுக்கு வேறு வகையான நாப்கின்களையும் பயன்படுத்தலாம்.

நாப்கின்களை அப்புறப்படுத்துவதை பொறுப்புடன் செய்யவேண்டும். கழிவறை ஓட்டைக்குள் திணிப்பது, ரோட்டில் தூக்கி வீசுவது தவறு. எரித்துவிடுவதும் மண்போட்டு மூடுவதும் சரியான தீர்வு என்றாலும் இவற்றை வீட்டில் செய்யமுடியாது என்பதால் குப்பைத் தொட்டியில் பேப்பரை சுற்றி பாதுகாப்பான முறையில் போட்டு அப்புறப்படுத்தவேண்டும்.

உபயோகப்படுத்திய நாப்கின் மட்டுமின்றி புதிய நாப்கின் பயன்படுத்தும்போதும் கைகளை சுத்தமாக சோப் போட்டு கழுவவேண்டும். மாதவிடாய் வெளியேற்றம் காரணமாக துர்நாற்றம் வீசலாம் என்று சில பெண்கள் வாசனை திரவியங்களை நாப்கின்களில் தெளிப்பது உண்டு. இது மோசமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.

ஆண்கள் கண்களில் படக்கூடாது என்று ஒளித்துவைப்பதை தவிர்த்து பாதுகாப்பான இடங்களில் வையுங்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதவிடாய் நிகழ்வது இயற்கை என்பதையும், நாப்கின் பயன்படுத்துவது அவசியம் என்பதையும் குடும்பத்தினர் அனைவருக்கும் புரியவையுங்கள். அப்போதுதான் பெண் தயக்கமோ பதட்டமோ இல்லாமல் இயல்பாக செயலாற்ற முடியும்.

பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் பெண் பிள்ளைகளின் பைக்குள் கண்டிப்பாக ஒரு நாப்கின் இருக்கவேண்டும். ஏனெனில் எதிர்பாராத சூழலில் மாதவிலக்கு வருவது சகஜம் என்பதால் அதனை சமாளித்துக்கொள்ள முடியும். தன்னை அறியாமலே சில பெண்களின் ஆடை மாதவிடாய் காரணமாக கறைபடுவது உண்டு. இதற்காக அந்தப் பெண் பதட்டப்பட அவசியம் இல்லை. கறை ஏற்படுவதை இயற்கை செயலாக ஏற்றுக்கொள்ளுங்கள். அது பெண்மையின் அடையாளமே தவிர, அசிங்கம் அல்ல.

சூப்பர் மார்க்கெட்டில் பெண் குழந்தையை, அவளுக்கு உரிய நாப்கினை சரியாக தேர்வு செய்யச் சொல்லிக்கொடுங்கள். பில் போடும்போது கூச்சப்படாமல் நிற்க சொல்லிக்கொடுங்கள். ஒரு நாளைக்கு எத்தனை முறை மாற்றுவது, எப்படி அகற்றுவது என்பதையும் சொல்லிக்கொடுங்கள். சரியான முறையில் நாப்கின்களை பயன்படுத்தவில்லை என்றால், அலர்ஜி, தோல் நோய், சிறுநீரகத் தொற்று, கருப்பை புற்றுநோய், அதிக உதிரப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். இது பெண்ணின் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் அலட்சியம் வேண்டாமே…

டாம்பூன் தெரியுமா?

 சானிடரி நாப்கினுக்குப் பதிலாக டாம்பூன் உபயோகிப்பது பெருகிவருகிறது. உருண்டையான பஞ்சு போன்று இருக்கும் டாம்பூனை பிறப்புறுக்குள் செருகிக்கொள்ள வேண்டும். ரத்தக்கசிவினை டாம்பூன் உறிஞ்சுக்கொள்ளும். இதனை பயன்படுத்துவதால் கன்னித்திரை கிழிவதற்கு வாய்ப்பு இல்லை. சிறுநீர் கழிக்கவும், குளிக்கவும் இது இடைஞ்சலாக இருப்பதில்லை. ஆனால் இதனை மிகச்சரியாக உறுப்புக்குள் பொருத்தவும் போதிய இடைவெளியில் மாற்றுவதும் அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *