திரைப்படம் பார்த்துவிட்டு இரவு 10 மணி சமயத்தில் வீட்டுக்கு வருகிறீர்கள். ரோட்டில் ஓர் ஆண் தனியே நிற்கிறான். அவனைப்பற்றி என்ன நினைப்பீர்கள்? அவனும் சினிமா பார்த்துவிட்டு வந்திருக்கவேண்டும், பஸ் அல்லது நண்பனுக்காக காத்திருக்கலாம் என்று எண்ணியபடி அந்த இடத்தைக் கடந்து செல்வீர்கள்.

அதுவே ஒரு பெண் தனியே நின்றால்..?

எந்த சிந்தனைக்கும் இடமின்றி, அந்தப் பெண் நடத்தை கெட்டவள் என்ற உறுதியான முடிவுக்கு வருவீர்கள். இதுதான் இந்திய ஆண்களின் மனநிலை என்று வெளிச்சம்போட்டு காட்டியிருக்கிறது, ‘இந்தியாவின் மகள்’ ஆவணப்படம். இப்படி கேவலமாக ஆண் வளர்ந்து நிற்பதற்கு காரணம் என்ன தெரியுமா? அவன் வளர்ப்பு சரியில்லை என்பதுதான். குறிப்பாக, ‘ஆண் என்றால் உசத்தி’ என்று பாரபட்சத்துடன் வளர்க்கும் பெற்றோரே முக்கிய காரணம்.

பெண்ணைப் பற்றிய ஆணின் எண்ணம் எப்போதும் இப்படித்தான் இருக்கிறது. ஆண்  பார்வையில் பெண் என்பவள் இரண்டாம்தர அடிமை என்பதைத்தான் கொஞ்சமும் குற்ற உணர்வு இல்லாமல் வெளிப்படையாகப் பேசியிருக்கிறான் முகேஷ் சிங்.

டெல்லியில் கடந்த 2012, டிசம்பர் 16 அன்று பிசியோதெரபி மருத்துவ மாணவி நிர்பயா என்ற ஜோதிசிங் தனது ஆண் தோழருடன் ஒரு பேருந்தில் ஏறினாள். அந்த பேருந்தில் இருந்த மிருக கும்பல் நிர்பயாவை ஈவு இரக்கமின்றி வேட்டையாடியது. அதுமட்டுமின்றி, அவளுடைய பிறப்புறுப்பு வழியே குடலை உருவும் அளவுக்கு வன்முறை வெறியாட்டமும் நடத்தியது. உயிருக்குப் போராடியவளை பஸ்ஸில் இருந்து வீசிவிட்டு காணாமல் போனார்கள். சில நாட்கள் சிகிச்சையில் இருந்து செத்துப்போனாள் நிர்பயா.

இந்த கொடூரத்தைக் கண்டு அதிர்ந்து நாடே கொந்தளித்து எழுந்தது. குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். சிறைத்தண்டனை அந்தக் குற்றவாளிகள் மனநிலையை மாற்றியிருக்க வேண்டும். ஆனால் அப்படியொரு மாற்றம் நிகழவே இல்லை. தாங்கள் செய்தது தவறு அல்ல என்ற மனநிலையில்தான் அந்த குற்றவாளிகள் இருந்தனர். அந்த பஸ் டிரைவரும் குற்றவாளிகளில் ஒருவனுமான முகேஷ் சிங் அப்போது அளித்த பேட்டி, இந்திய ஆண் பிள்ளைகள் வளர்ப்பையே கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது.

அவன் பேசியது இதுதான், ‘’பாலியல் பலாத்காரம் எல்லா இடங்களிலும் நடக்கிற சாதாரண விஷயம்தான். பணக்காரர்கள் பணத்தைக்கொண்டு சாதிக்கிறார்கள். நாங்கள் தைரியம் மூலம் சாதிக்க விரும்பினோம். அன்றைய இரவு அவர்களைக் கண்டோம். “ஏன் இந்த நேரத்தில் ஒரு ஆணுடன் வெளியே வந்தாய்?” என்று கேட்டோம். அந்தப் பையன் எங்களை கோபத்துடன் அறைந்தான். அதன்பிறகே அவனை நாங்கள் கடுமையாக தாக்கினோம். பயந்துபோன அந்தப் பையன் பேருந்து இருக்கைக்குள் ஒளிந்து கொண்டான். அந்தப் பெண் வன்புணர்வுக்கு ஒத்துழைக்காமல் அடம்பிடித்ததால், வன்முறை நடந்தது. அவள் எதிர்க்கவில்லை என்றால் நிச்சயம் அவளை தாக்கியிருக்க மாட்டோம்.

எங்களுக்குத் தூக்குத்தண்டனை கிடைத்தால், இனி பெண்களுக்குத்தான் ஆபத்து அதிகரிக்கும். அதாவது இதுவரை பலாத்காரம் நடந்தால், பெண்ணை மிரட்டி மட்டும் அனுப்பிவிடுவார்கள். இனிமேல் காட்டிக்கொடுத்தால் தூக்குத்தண்டனை என்பதால் நிச்சயம் கொலை செய்துவிடுவார்கள். இப்படிப்பட்ட பலாத்கார சம்பவங்களுக்கு ஆண்களைவிட பெண்களே அதிகம் பொறுப்பேற்க வேண்டும். இரவு நேரங்களில் பெண்கள் வெளியே சுற்றக்கூடாது… பலாத்காரத்தை எதிர்த்து அந்தப் பெண் போராடியிருக்கக்கூடாது…” என்று ஆண் திமிருடன் பேசியிருக்கிறான்.

இவனைவிட மோசமாகப் பேசினார் அவனது வழக்கறிஞர் எம்.எல்.சர்மா. ‘’என்னுடைய மகள் இரவு நேரத்தில் வெளியே சுற்றினால் நானே பெட்ரோல் ஊற்றிக் கொழுத்துவேன்’’ என்கிறார்.

தவறு இழைத்துவிட்ட குற்றவுணர்வு இல்லாமல் முகேஷ் சிங் பேசியதும், அவனுக்கு ஆதரவாக சர்மா பேசியிருப்பதும் ஒட்டுமொத்த இந்திய ஆண்களின் குரலாகத்தான் ஒலிக்கிறது. இவர்கள் ஆசைப்படி நடக்கவேண்டும் என்றால், சூரியன் மறைந்ததும் பெண்கள் வீட்டுக்குள் முடங்கிவிட வேண்டும். யாரேனும் பலாத்காரம் புரியவந்தால், மனமுவந்து மண்டியிட்டு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இதுதான் பெண்களை இந்தியா கொண்டாடும் லட்சணமா? ஆண்கள் இப்படித்தான் பேசவும் சிந்திக்கவும் செய்வார்களா? பெண் என்றால் ஆணுக்கு அத்தனை கேவலமா? சிறைத்தண்டனையால் குற்றவாளியை மாற்றமுடியாதா? ஆண் மனநிலையை மாற்றவே முடியாதா?

நிச்சயம் முடியும். அதற்கு தாயும் தந்தையும் மனசு வைக்கவேண்டும். அதாவது ஆண் மகனை இனியாவது நல்லவனாக வளர்க்க வேண்டும். ஆம், பெற்றோர்கள் மனதில், ஆண் என்றால் உசத்தி… பெண் என்றால் மட்டம் என்ற நினைப்பே தோன்றவே கூடாது. ஆணைவிட பெண்ணோ, பெண்ணைவிட ஆணோ உசத்தியும் இல்லை, தாழ்த்தியும் இல்லை. இருவரும் சமம் என்பதே நிஜம். இந்த எண்ணத்தை ஆண் பிள்ளை மனதில் ஆழமாகப் புகுத்த வேண்டியது பெற்றோரின் கடமை.

சின்ன வயதிலேயே, ‘அவனுக்கென்ன ஆம்பிளைப் பையன். இஷ்டம் போல சுத்திட்டு வருவான். நீ வீட்டுக்குள்ளே முடங்கிக்கிட’ என்று பெண்ணை மட்டும் முடக்கிப்போட்டு ஆணை ஊர்சுற்ற அனுமதிக்கும் நிலை மாறவேண்டும். தின்பண்டம் முதல் உணவு வரையிலும் ஆண் பிள்ளைக்கு முதல் உரிமையும் பெண் பிள்ளைக்கு மிச்சமும் என்ற பாகுபாடு மாறவேண்டும். இன்னும் சொல்லப்போனால் பிரசவத்தில் இருந்தே மாற்றம் தொடங்கவேண்டும். எந்தப் பிள்ளை என்றாலும் சமமாக கொண்டாடும் மனநிலை வரவேண்டும். விளையாடும் வயதில் ஆணுக்கு துப்பாக்கியும் பெண்ணுக்கு சோற்றுப்பானையும் வாங்கித்தரும் மனப்பான்மை மாறவேண்டும்.

சின்ன வயதில் இருந்தே ஆணும் பெண்ணும் சேர்ந்து படிக்கும் பள்ளியில், படிக்க அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் பெண் பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவழிக்கும் சுழல் அமையும். தன்னைப் பெற்ற தாயைப் போலவும், தன் தமக்கையைப் போலவும்தான் மற்ற பெண்கள் இருக்கிறார்கள் என்ற உண்மை புரியவேண்டும்.

பருவ வயதில் ஆண் பிள்ளையை தோழனாக எண்ணி, அவன் மனதில் இருப்பதை பேசவும் சந்தேகங்களைத் தீர்ப்பதற்கு பெற்றோர் உதவிபுரிய வேண்டும். ஏனென்றால் விஞ்ஞான வளர்ச்சி காரணமாக பருவ வயதில் இருக்கும் அத்தனை பையன்களும் நிறையநிறைய பாலியல் படங்களைப் பார்க்கமுடிகிறது. அதனால் அவர்கள் மண்டைக்குள் ஆயிரத்தெட்டு சந்தேகங்கள் தோன்றுகின்றன. ஏன் பெண்ணுக்கு மட்டும் மார்பகம் இருக்கிறது, எப்படி குழந்தை பிறக்கிறது, காண்டம் விளம்பரம் என்ன சொல்கிறது, பாலியல் இணையதளங்களில் காணப்படும் படங்களும், வீடியோக்களும், கதைகளும் உண்மையா என்று தேடுகிறான். இதுகுறித்துப் பேசுவதற்கு பெற்றோர், ஆசிரியர் என யாரும் முன்வருவதில்லை. இதுகுறித்து சந்தேகம் கேட்கவும் அனுமதிப்பதில்லை. அதனால் அவனாகவே ஒரு தவறான முடிவுக்கு வருகிறான்.

பாலியல் பாடங்களும் வகுப்புகளும் அவனுக்கு இல்லை என்பதால் தனக்கு சாதகமான ஒரு முடிவை எடுத்துக்கொள்கிறான். தன்னுடைய இன்பத்துக்கு பெண் படைக்கப்பட்டிருக்கிறாள் என்று நினைக்கிறான். பாலியல் பக்கங்களில் இருப்பதுபோலவே, பெண் என்பவள் இன்பம் தரும் அடிமை என்று நினைக்கிறான். இந்த நிலையை மாற்றுவதற்கு தாயினால் மட்டும் முடியாது. நிச்சயம் தந்தையும் உதவ வேண்டும். பெற்றோர்களால் முடியவில்லை என்றால் மருத்துவர் ஆலோசனையை நாடவேண்டும்.

பெண் என்பவளும் ஆணைப் போலவே ரத்தமும் சதையும் நிரம்பிய உணர்வுபூர்வமான உயிர் என்பதை ஆணுக்குப் புரியவைக்க வேண்டும். தன்னுடைய ஆசைக்காக ஒரு பெண்ணை ஆட்டுவிக்கும் உரிமை எந்த ஆணுக்கும் இல்லை என்பது தெரியவேண்டும். ஆண் தனியே செல்வதுபோல், பெண்ணும் வெளியே செல்வதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அதனால் தனியே செல்லும் பெண்ணை தவறாகப் பார்க்கும் பார்வை மாறவேண்டும்.

ஆண் மகனை வல்லவனாக வளர்ப்பது முக்கியமல்ல, நல்லவனாக வளர்க்க வேண்டும். பெண்ணுக்கு மரியாதையும் மதிப்பும் கொடுப்பவனாக அவன் இருக்கவேண்டும். பெண்ணை பாதுகாக்கும் கடமையும் ஆணுக்கு உண்டு. ஆக, பெண் என்பவள் மதிக்கப்பட வேண்டிய உயிர் என்பதை ஆண் உணரவேண்டும். அப்படி  வளர்க்கவேண்டியது பெற்றோரின் கடமை.

இதனை கண்டுகொள்ளாமல், ஆண் பிள்ளைதான் சம்பாதித்துக்கொடுக்கும், பிற்காலத்தில் காப்பாற்றும் என்று செல்லம்கொடுத்து வளர்த்தால், அவன் குற்றவாளியாகத்தான் வளர்வான். எதிர்காலத்தில் முகேஷ் சிங் போலவே பாலியல் பலாத்காரம் செய்வான். தூக்கில் தொங்குவான். உங்கள் மகன் முகேஷ் சிங் போன்று மாறவேண்டுமா என்பதை இப்போதே முடிவு செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published.