சித்ரா முகத்தில் ஆசிட் அடிக்கப்போவதாகச் சொன்ன சாப்பாட்டுக் கடைப் பையன் பெயர் ராமனாம். பெற்ற தாய்க்குக் கேட்கும்படி பேசக்கூடாத அத்தனை கெட்ட வார்த்தைகளாலும் சித்ராவை தெளிவான உச்சரிப்புடன் திட்டினான். மெக்கானிக் நண்பன் நன்றாகவே எண்ணெய் ஊற்றினான்.

‘’மச்சி, உன்கிட்ட சொல்லக்கூடாதுதான். ஒரு நாள் சித்ரா என்னைப் பார்த்து சிரிச்சு போன் நம்பர் கேட்டா.. நான்தான் உன் ஆளுன்னு நம்பர் கொடுக்கல…’’

‘’அப்பவே சொல்லியிருந்தா அறுத்திருப்பேன்டா…’’

‘’நீ டென்ஷனாகாத மச்சி. அந்த ஜெராக்ஸ் கடை முதலாளி அவளை பிராக்கெட் போட்டுட்டான். அதான் துள்ளுறா… அவளை விடாதடா…’’

இருவரது அலம்பலையும் பொறுக்கமுடியாமல் சாப்பாட்டுக் கடையம்மா கத்தத் தொடங்கினாள். ‘’நாசமாப் போறவனுங்களா… அந்த ஒத்தைப் பிள்ளை உழைச்சு குடும்பத்தைக் காப்பாத்துறா… அதுல மண் அள்ளிப் போடாத…’’

‘சும்மா கூவிக்கிட்டே இருந்தீன்னா உன்னையும் போட்டுத்தள்ளிட்டுப் போயிட்டே இருப்பேன்…’’

‘’உங்கப்பனை மாதிரி என்னத்தையாவது எக்குத்தப்பா பண்ணிட்டு ஜெயிலுக்குப் போயிடாத உருப்படுற வழியப்ப்பாரு……’’

‘’எப்பப்பார்த்தாலும் உருப்படமாட்டேன்னு  இழவெடுக்காதே…’’ என்ற தாயைத் திட்டிய ராமன் நான் படுத்துக்கிடப்பதைப் பார்த்தான். அதை புரிந்துகொண்ட மெக்கானிக் பேசினான்..

‘’அட்வான்ஸ் குடுத்திட்டேன் மச்சி… அவன் ஆளு கொண்டு வருவான்னு நினைக்கிறேன், அதான் காத்துக்கிடக்குது…’’ என்ற மெக்கானிக் மீண்டும் நாரதர் வேலையைத் தொடங்கினான்.

‘’இன்னிக்கு சாயங்காலம் அவ வீட்டுக்குப் போறப்ப தெளிவா பேசிடு. ஒழுங்கா இருப்பாளான்னு கேளு. சரிப்படலைன்னா… என்ன செய்யணுமோ செஞ்சிடலாம்…’’

ராமன் மீண்டும் உச்சிக்குப் போனான். ‘’அவ இனிமே சரிப்பட மாட்டா மச்சி…. இன்னைக்கு சாயங்காலமே செஞ்சிப்புடலாம்…’’

‘’டேய், அவசரப்படாதே. நான் சாயங்காலம் வேலையை முடிச்சுட்டு சீக்கிரம் வர்றேன்…’’ என்ற மெக்கானிக், அந்த வண்டியின் சீட்டைக் கழட்டி பிளாஸ்டிக் பையை எடுத்து ராமனிடம் நீட்டினான். புதிய வண்டிகளின் ஒரிஜினல் பாகங்களை மாற்றி பணம் சம்பாதிக்கிறான் என்று நான் நினைத்தது சரிதான். அதனால்தான் மெக்கானிக் கையில் சரளமாக பணம் புரளுகிறது.

‘’புளூமூன் கடையில கொடுத்துடு, நான் கணக்குப்பண்ணி காசு வாங்கிக்கிறேன்..’’ என்றபடி வண்டியில் பறந்தான்.

கையில் இருந்த பொருளை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த ராமன், சட்டென்று சாப்பாட்டுக்கடை டப்பாவில் இருந்து இருநூறு ரூபாயை எடுத்தான். மரத்தடியில் நிறுத்தப்பட்டிருந்த அவனுடைய அப்பாச்சியை எடுத்துக் கிளம்பினான்.

 ‘’ஐயோ மாரியாத்தா… டேய், வட்டிக்காரன் என் மானத்தை வாங்கிப்புடுவான்… அதை வைடா…’’ என்றமவள் கத்தியது வீணாக காற்றில் கரைந்தது.

அடுத்தடுத்து வந்த ஒருசில ஆட்களுக்கு சாப்பாடு போட்டுமுடித்தவள், பாத்திரங்களை கழுவி ரோட்டில் ஊற்றிவிட்டு, முந்தானையில் கை துடைத்தபடி என் அருகில் அமர்ந்தாள். காலம் முழுவதும் உழைக்கும் களைப்பு முகத்தில் தெரிந்தது.

‘’சாமி, வெத்தலை போடுறீங்களா…’’ என்றபடி முந்தானையில் முடிந்திருந்த வெத்தலை, பாக்கு, சுண்ணாம்பு பாக்கெட் எடுத்து வைத்தாள். பல் தேய்க்கும் அவசியம் வரும் என்பதால் நான் வெற்றிலை தொடுவதில்லை. எழுந்து சுவற்றில் சாய்ந்து அமர்ந்தபடி, ஒரு கொட்டைப் பாக்கு எடுத்து கன்னத்தில்  ஒதுக்கினேன்.

‘’சாமி… ஜோசியம் பார்ப்பீங்களா? இந்தப் பையன் வில்லங்கத்துல மாட்டிருவானோன்னு பயமா இருக்கு…’’’

‘’உன் வளர்ப்புக்கு யாரை குற்றம் சொல்வாய்… கள்ளிச்செடியாக வளர்த்திருக்கிறான்’’ என்றதும் ரோஷத்துடன் உற்றுப் பார்த்தாள்.

‘’ஒத்தப்பிள்ளைன்னு செல்லம் குடுத்தா தப்பா…’’

நிலத்தில்தான் தவறு என்பது புரிந்தது. ‘’படிக்கவேண்டியவனை கடையில் நிறுத்துவதுதான் பாசமா?’’ ரோட்டை பார்த்தபடி கேள்வி கேட்டேன்.

‘’அவனுக்கு படிப்பு ஏறலை சாமி… நான் என்னா பண்றது…’’ என்றவளை நான் உற்றுப் பார்த்ததும் யோசித்து பேசினாள்.

‘’முதல்ல பெரிய ஸ்கூல்ல அவனை சேர்த்தோம். வீட்டுப்பாடம் எழுதலைன்னு வாத்தியார் அடிச்சுட்டார்ன்னு வந்து அழுதான். பெத்த மனசு தாங்கலை வாத்தியாரை திட்டிட்டு வந்தேன். என் வீட்டுக்காரர் அந்த வாத்தியாரை இழுத்துப்போட்டு அடிச்சிட்டார். அதனால பையனை அந்த ஸ்கூல்ல இருந்து அனுப்பிட்டாங்க, அடுத்து கவர்மென்ட் ஸ்கூல்ல போட்டோம். ஏழாப்பு வரைக்கும் படிச்சான். வாத்தியார் திட்டுனாருக்கு அவர் மண்டைல கல் எறிஞ்சுட்டான். அவங்கப்பனுக்கு இருக்கிற அதே புத்தி. ஸ்கூல்ல மன்னிப்பு கேட்டா சேர்த்துப்போம்னு சொன்னாங்க. அப்படி படிக்கவே வேண்டாம்னு நிறுத்திப்புட்டோம்..’’ தன் பாச வரலாற்றை சொல்லிமுடித்தாள்.

‘பையன் படிக்கலைன்னு வருத்தம் வரலையா..?’’

‘’அவன்கூட படிச்ச பசங்க காலேஜ்க்கும், வேலைக்கும் போறதைப் பார்க்கும்போது வயித்தெரிச்சலாத்தான் இருக்கு. ம்… மன்னிப்பு கேட்கறதான்னு வீம்பா இருந்துட்டோம்… எல்லாம் விதி….’’ என்றபடி தலை குனிந்தாள்.

‘’உன் மகன் வாழ்க்கையை கெடுத்துவிட்டு பாசம் என்கிறாய்..’’

‘’புள்ளைங்கள வாத்தியார் அடிக்கக்கூடாதுன்னு கவர்மென்ட்ல ரூல்ஸ் போட்டுருக்காங்க சாமி…

‘’பிளாட்ஃபாரத்தில் கடை வைக்கக்கூடாது என்றும்தான் சட்டம் சொல்கிறது,..’’ நாக்கை சொரசொரப்பாக்கிய பாக்கை வெளியே துப்பினேன். என்ன செய்தாலும் பெற்றோர் ஊக்குவிப்பார்கள் என்பது ராமன் மனதில் பதிந்துவிட்டதால் சொகுசுக்கு ஆசைப்பட்டு படிப்பை கடாசிவிட்டான். சண்டிக்குதிரையாக திரிபவனை இவள் இன்னமும் ரசிப்பதுதான் அத்தனை பிரச்னைக்கும் காரணம் என்பது புரிந்தது.  

‘’உனக்கு சித்ராவை தெரியுமா?’’

‘’ம்… முந்தி எங்க வீட்டுக்குப் பக்கத்துல இருந்தா. இவன் ஆசைப்பட்டான். நான்கூட கல்யாணம் முடிச்சுடலாம்னு நினைச்சேன். ஆனா, திடீர்னு அவ அப்பன்காரன் செத்துப்புட்டான். இப்ப அம்மா, தம்பியை அவதான் வேலை செஞ்சு காப்பாத்துறா. என் பின்னாடி சுத்தாதேன்னு வீட்டை காலி பண்ணி போயிட்டா…, இவன் மனசு தாங்காம இன்னமும் அவ பின்னாடி சுத்துறான்…’’

‘’உனக்கு ஒரு பெண் குழந்தை இருந்தால், படிக்காத, அம்மா சம்பாத்தியத்தில் வயிறு கழுவும் ஒருவனுக்கு அவளைக் கட்டிக்கொடுப்பாயா..?’’ என்றதும் நிமிர்ந்து பார்த்தாள்..

‘’என் பையனுக்கு என்ன குறை சாமி.. அவன் சாப்பாட்டுக் கடை போட்டு பிழைச்சுக்குவான்…’’ அவள் சமாளிப்பது தெரிந்தது.

.’’பெண் பாவம் பொல்லாதது. அதுவும் அனாதைப் பெண் பாவம் உன் சந்ததியை முழுமையாக அழித்துவிடும். உன் மகனுக்கு ஆபத்து நெருங்குகிறது… ’’ வசதியாக படுத்தபடி சொன்னேன். அவள் முகத்தில் கலவரம், கோபம், அச்சம் தென்பட்டது. அவளுக்கு இன்னும் பயம் காட்ட ஆசைப்பட்டேன்.

‘’உன்னால்தானே உன் கணவன் ஜெயிலுக்குப் போனான்..’’ குத்துமதிப்பாக கேட்டேன்.

‘’ம்… கடன் கேட்க வந்தவன் என் கையைப் பிடிச்சு இழுத்தா சும்மாவா இருப்பார்.. அவன் கையை வெட்டப்பார்த்தார், கையைத்தூக்கி தடுத்தவனுக்கு தலை துண்டாயிருச்சு. ஆயுள் தண்டனை குடுத்துட்டாங்க… என் பையனுக்கு அப்படி எதுவும் சிக்கல் ஆகக்கூடாதுன்னு தினமும் சாமி கும்பிடுறேன்’’ என்று வானத்தைப் பார்த்து கும்பிடு போட்டாள்.

‘’உன் மகன் வாழ்க்கை இன்னமும் உன் கையில்தான் இருக்கிறது… உன்னால் மட்டும்தான் அவனை காப்பாற்ற முடியும்.’’ என்ற நேரத்தில் ராமன் இறுகிய முகத்துடன் வண்டியில் இருந்து இறங்கினான். அவன் கையில் மடிக்கப்பட்ட சாக்குப் பை இருந்தது. அதை மிகவும் பத்திரமாக சாப்பாட்டு வண்டியின் அடியில் வைத்தான். அவன் நடவடிக்கையைக் கண்டு அதிர்ச்சியடைந்தவள்… வேகமாகச் சென்று அந்தப் பையைத் திறந்து பார்த்தாள்.

ஒரு மிகப்பெரிய வெட்டரிவாளும், இரண்டு ஆசிட் பாட்டில்களும் இருந்தன.

  • கண் திறக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *