நாலைந்து தடியர்களுடன் பாண்டியன் கமுக்கமாகப் பேசியதைப் பார்த்ததுமே, அது எனக்கு விரிக்கப்படும் வலை என்பது புரிந்தது. திரும்பிச் செல்வதைவிட எதிர்த்து நிற்பது சுவாரஸ்யம் என்பதால் நிதானமாக அருகே சென்று, ‘’என்ன பாண்டியன்… இவங்கதான் என்னை அடிக்கப்போறாங்களா?’ என்று குறுகுறுப்புடன் கேட்டேன்.

ரத்தமெல்லாம் சட்டென்று தலைக்கு பாய்ந்ததுபோல் முகம் சிவந்தான் பாண்டியன். பதில் சொல்ல முடியாமல் தடுமாறினான்.

‘’என்ன ஸார், இதுதான் பார்ட்டியா?’’ என்று அடியாட்களில் ஒருவன் என்னைப் பார்த்து கோபத்துடன் முறைக்க, ஆதி காலத்து டெக்னிக்கை பயன்படுத்தினேன்.

வெறும் கையை காற்றில் வீசி, கை விரல்களில் இருந்து திருநீறு வரவழைத்தேன். திடுக்கிட்டு பதறி நின்றான் எல்லோரையும்விட பாண்டியன் பயந்திருந்தான்.

திருநீறு உருண்டை தயாரிக்கப்படும் விதத்தையும், அதனை விரல் இடுக்கில் சொருகி மந்திரம்போல் வரவழைக்கும் வித்தையையும் தொலைக்காட்சியில் ஆயிரம் முறை விளக்கியிருக்கிறார்கள். மேஜிக் என்றாலும் எதிர்பாராத கணத்தில் நேரில் பார்க்கும் மனிதனின் மிரட்சியில்தான் வெற்றி இருக்கிறது. அப்படித்தான் நடந்தது. பாண்டியன் மிரட்சியுடன் கண் காட்டிய நொடியில், அத்தனை பேரும் பறந்து போனார்கள். உடனே என்னை இன்னும் கொஞ்சம் மறைவான பகுதிக்கு பயபக்தியுடன் அழைத்துச்சென்றான்.

‘’சாமி, உங்களை ஏதோ சாதாரண பக்கிரின்னு நினைச்சுட்டேன்… மன்னிக்கனும்…’’ என்றபடி காலில் விழ இருந்தவனை தடுத்து நிறுத்தினேன்.

‘’ஒரு பெரிய பதவிக்கு ஆசைப்படுபவனின் பணியா இது பாண்டியன்..?’’ மிடுக்காக கேட்டேன்.

‘’எனக்குத்தான் பதவின்னு உறுதியா நம்புனேன்.. ஏமாற்றத்தை தாங்க முடியலை… தப்பு பண்ணிட்டேன் சாமி…’’ என்று நிஜமாகவே நடுங்கினான்.

‘’நீ புறக்கண்ணால் பார்ப்பதை நிறுத்தி, நெற்றிக்கண் திறந்து பார். பதவி, செல்வம், புகழ், மதிப்பை நீ தேடிச் செல்லாதே. நீ இந்தப் போட்டிக்கு ஆசைப்படவில்லை என்றால் தர்மராஜே இந்தப் பதவியை கொடுத்திருப்பான். பதவி கிடைக்கும் முன்பே நீ தலைவனாக மாறியதுதான் உன் சிக்கலுக்குக் காரணம்…’’

‘’அப்படின்னா பதவி உயர்வு இனிமே கிடைக்காதா…?’’ மிகப்பெரிய ஏக்கம் அவன் கண்ணில் தெரிந்தது.

‘’இப்போது நீ பார்க்கும் வேலையை இனி நிலைக்காது. நிறுவனம் உன்னை தள்ளும் முன்பு நீயே வெளியேறு. வரும் காலத்தை நெற்றிக்கண் கொண்டு பார். உண்மையான பதவி உயர்வு விரைவில் உன்னைத் தேடி வரும்…’’ என்ற நேரத்தில் பாண்டியன் செல்போன் அலறியது. நான் அனுமதி கொடுத்ததும் செல்போனை எடுத்து காதில் வைத்தவன் முகம் தாமரையாக மலர்ந்தது.

‘’ஆம்பளைப் பிள்ளையா… இதோ வந்துட்டேன்…’’ என்று சந்தோஷமானான். பட்டென்று என் காலில் விழுந்தான்.

‘’சாமி… நான் தாத்தாவாயிட்டேன். பேரன் பிறந்துட்டான். என் குலம் தழைச்சிடுச்சு… எல்லாம் உங்க வாய் முகூர்த்தம் சாமி… எனக்கு இந்த பதவி போதும்…’’ என்று மெய் சிலிர்த்துப் பேசினான். ‘’ஒரே ஒரு தடவை என் வீட்டுக்கு வந்து குழந்தையை ஆசிர்வாதம் பண்ணுங்க சாமி…’’ என்று கெஞ்சினான்.

‘’என் ஆசிர்வாதத்தை கொடு… அது போதும்…’’ என்றபடி பாண்டியனை திரும்பிப் பாராமல் ரோட்டில் இறங்கினேன். இதுபோன்ற தற்செயல் சம்பவங்களே என்னை காவியுடன் திரிய வைக்கிரது. உண்மையில் எனக்கு சக்தி இருக்கிறதோ என்று எழுந்த சிந்தனையை நசுக்கிவிட்டு நடை போட்டேன்.

ஜிப்பாவை துழாவியதில் சுருட்டு மட்டும்தான் கிடைத்தது. காலையில் இருந்து எதுவும் சாப்பிடவில்லை என்று வயிறு மெசேஜ் அனுப்பியது. உணவுக்கு என்ன பண்ணலாம் என்ற யோசனையுடன் நடந்தபோது, ரோட்டோர தள்ளுவண்டி சாப்பாட்டுக் கடை கண்ணில் பட்டது. பொரிக்கப்பட்ட சங்கரா மீன் தட்டு மீது நெளிந்து கிடந்தது. சாகும்போது மீனுக்கு வலித்திருக்க வேண்டும்.  தொழிலாளர்கள் இரண்டு பேர் பிளாஸ்டிக் சேரில் அமர்ந்து பிளாஸ்டிக் தட்டில் பிளாஸ்டிக் பேப்பர் விரித்து சாதத்தில் மீன் வைத்து அவசரம் அவசரமாக விழுங்கிக்கொண்டு இருந்தனர். 

தாட்டிகையான 45 வயதிருக்கும் குண்டுப் பெண் ஒருத்தி கீழே அமர்ந்து எச்சில் தட்டுக்களை அலம்பிக்கொண்டு இருந்தாள். தள்ளுவண்டிக்கு அருகே சொகுசாக சேரில் உட்கார்ந்து லாவா மொபைலில் ஏதோ ரசித்துக்கொண்டிருந்த இளைஞனுக்கு 20 வயசு இருக்கலாம். அந்தப் பெண்ணின் மகனாக இருக்க வேண்டும். நான் அருகில் நெருங்கியதைக் கவனிக்காமல் செல்போனில் ஆர்வமாக இருந்தான். எட்டிப்பார்த்தேன். ஒரு நீக்ரோவும் வெள்ளைக்காரப் பெண்ணும் கெட்ட சமாச்சாரம் செய்துகொண்டு இருந்தனர். பிளாஸ்டிக் தட்டில் ஒரு மீன் எடுத்துவைத்த நேரத்தில்தான் உஷாருக்கு வந்தான்.

‘’யேய்… யார் நீ….? காசு இருக்கா, இல்லைன்னா கை வைக்காதே…’’ என்று முறைப்பு காட்டினான்.

‘’என்னிடம் நடிகை கவித்ராவின் தமிழ் வீடியோ இருக்கிறது…’’ விஷமச்சிரிப்பு சிரித்தேன்.

‘’நிஜமாவா…?’’ என்றவன் நான் கேட்காமலே தட்டை வாங்கி சாதம் போட்டு மீன் குழம்பு ஊற்றினான். கையில் தட்டைக் கொடுத்தவன் என் காதில் மட்டும் கேட்கும்படி, ‘’உங்க செல்போன்ல இருக்கா… குடுங்க காப்பி பண்ணிக்கிறேன்…’’ என்றான்.

‘’எவ்வளவு பணம் கொடுத்தேன் தெரியுமா?’’ என்றபடி முதல் கவளத்தை உள்ளே தள்ளினேன். பசிக்கு அமிர்தமாக இருந்தது. அவன் மீண்டும் கேள்வி கேட்கும் முன்பு, அவனது அம்மாவின் அருகில் அமர்ந்தேன். அவள் வெள்ளந்தியாக சிரித்தாள்.

‘’எந்த ஊரு சாமி…?’’ என்ற அம்மாவின் கேள்விக்குப் பதில் சொல்லாமல், ‘’ஆமா, உன் பையனை ஏன் படிக்க வைக்கலை..?’’ என்று கேட்டேன்.

‘’ம்… என் தலையெழுத்து சாமி. சொல்லிக்குடுக்குற வாத்தியார் மண்டையை உடைச்சுட்டான். அவங்கப்பனை மாதிரி இப்பவே தண்ணியடிக்கிறான்… கேட்டா அடிக்க வர்றான்…’’ என்பதற்குள் அவள் கண்ணில் நீர் எட்டிப் பார்த்தது.

‘’ஏய்… எல்லார்கிட்டேயும் ஒப்பாரி வைச்சேன்னா மிதிச்சுப்புடுவேன்…’’ என்று அவன் ஆங்காரம் காட்டிய நேரம், அதிநவீன டியூக் பைக்கில் ஒரு இளைஞன் கடை அருகே சர்ரென்று வந்து நின்றான். அவன் ஒரு மெக்கானிக் என்பதும், சர்வீஸ்  வண்டியை ஓட்டிவந்து ஸீன் போடுவதும் ஆடையில் தெரிந்தது. அந்த பைக்கை பார்த்ததும் மகன் துள்ளினான்.

‘’மச்சி குட்ரா… ஒரு ரவுண்ட் போயிட்டு வர்றேன்….

‘’நான் சாப்பிடுறதுக்குள்ள வந்திடு….‘’என்று வண்டியில் இருந்து கீழே இறங்க… வேகவேகமாக சாதம் போட்டு அவனிடம் நீட்டினான். திடீரென நினைவு வந்தவனாக, என்னைக் கைகாட்டி ஏதோ சொன்னதும் அந்தப் பையன் முகத்தில் ஆயிரம் வாட் பிரகாசம்.

‘’இந்தக் காலத்துல சாமியாருக்குத்தான் யோகம்…’’ என்ற சப்பாட்டுத் தட்டுடன் என் அருகில் அமர்ந்தான் மெக்கானிக். ‘’எவ்வளவு வேணும்னாலும் தர்றேன்… ஆனா சாம்பிள் பார்க்கணும்…’’ என்றான்.

‘’சரி… அட்வான்ஸ் 500 ரூபாய் கொடு…’’

கொஞ்சமும் யோசிக்காமல் பணம் எடுத்துக்கொடுத்தான். இடது கையில் பணத்தை வாங்கி முகர்ந்து பார்த்தேன்.

‘’திருட்டு வாசம்…’’ என்றதும் அவன் முகத்தில் திகில் படர்ந்தது.

‘’நீங்க நிஜ சாமியாரா..?’’ அதிர்ந்து கேட்டான்.

பதில் சொல்லாமல் தட்டை கழுவினேன். அவன் கொடுத்த பணத்தை, அம்மாவின் கையில் கொடுத்த நேரம், அவள் மகன் வண்டியில் பறந்துவந்தான்.  கடைக்கு அருகே, ஸ்டான்ட் போடாமல் வண்டியை பொத்தென்று கீழே போட்டான்.

‘’டேய்… வண்டிக்காரன் கொன்னுப்புடுவான்…’’ என்று மெக்கானிக் பதற அதை கண்டுகொள்ளாமல் கத்தினான்.

‘’சித்ரா மூதேவி மேல ஆசிட் அடிக்கப்போறேன்…’’ என்று கோபம் அடங்காமல் கை கழுவ வைத்திருந்த தண்ணீர் குடத்தை எட்டி உதைத்தான்.

எனக்கு இங்கு நிறைய வேலை இருப்பது புரிந்தது. நடப்பதை வேடிக்கை பார்த்தபடி பிளாட்ஃபாரத்தில் கட்டையை சாய்த்தேன்.

  • கண் திறக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *