ராமன் கொண்டுவந்த சாக்குப்பைக்குள் அரிவாளும், ஆசிட் பாட்டில்களும் இருப்பதைக் கண்டு சாப்பாட்டுக்காரி மிரண்டுவிட்டாள். வாய்ப்பேச்சில் உதார் விடும் மகன் இப்படி நிஜமாகவே செயலில் இறங்குவான் என்று எதிர்பார்க்காத  அதிர்ச்சி ஆத்திரமாக வெளிப்பட்டது.

‘’நாசமாப் போறவனே… என்ன காரியம்டா செஞ்சிக்கிட்டு இருக்கே. முதல்ல இதைக் கொண்டுபோய் குப்பைத்தொட்டியில போட்டுட்டு வா..’’ என்றபடி சாக்குப்பையை தூக்க முயல… அவள் கையை ராமன் அழுத்தமாகப் பிடித்தான். மகனின் முறைப்பிலும் இரும்புப்பிடியிலும் இருந்த உறுதியைக் கண்டு வெலவெலத்தாள்.

‘’த்தோ பார்… பொம்பளை மாதிரி சமைச்சுப்போடுற வேலை மட்டும் பாரு… எங்களுக்கு அட்வைஸ் புடுங்குற வேலைலாம் வேணாம்… என்ன செய்யணும், எப்படி செய்யணும்னு தெரியும். அந்த சித்ரா முண்டய வெட்டிப்போட்டு வாய்க்குள்ள ஆசிட் ஊத்தப் போறேன்… அப்பத்தான் என் வெறி அடங்கும். நான் பார்க்கும்போது வேணும்னே அந்த ஜெராக்ஸ் கடைக்காரனைப் பார்த்து சிரிக்கிறா. அவ கதையை முடிச்சுட்டு உடனே என் வண்டியில பெங்களூரு போறேன்… நாலைஞ்சு நாள்ல அங்கே ஒரு இடம் பார்த்துட்டு வர்றேன்.. நீயும் என் கூட வந்துடு. அங்கே தள்ளுவண்டி போட்டு பிழைச்சுக்கலாம்… அதுவரைக்கும் யார்கிட்டேயும் மூச்சு காட்டக்கூடாது..’’

மகனுக்கு பதில் பேச முடியாமல் ஸ்தம்பித்து நின்றாள். மனதில் நினைப்பதெல்லாம் நடக்கும் என்ற ராமனின் அறியாமையைக் கண்டு எனக்கு சிரிப்பு வந்தது. இன்னமும் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்குள் இந்தக் கடையை சித்ரா கடந்துசெல்வாள் என்பதும், ஆட்கள் நடமாட்டமில்லாத தெருமுனை சாக்கடை திருப்பத்தில் சம்பவம் நிகழ்த்த இருப்பதையும் அம்மாவிடம் தைரியமாக விவரித்தான். சித்ரா தப்பான பெண் என்பதாலே தண்டிக்க இருப்பதாகவும் சொன்னான். செலவுக்காக அம்மாவின் பெயரைச் சொல்லி சேலைக்கார பாபுராஜிடம் ஐந்தாயிரம் கடன் வாங்கி இருப்பதையும் சொன்னான்.

இதற்கு அம்மா காட்டுத்தனமாகக் கத்துவாள் என்று ராமன் எதிர்பார்க்க… அவள்  அமைதியாக இருந்தாள். அந்த அமைதியை சாதகமாக எடுத்துக்கொண்டு மேலும் பேசினான்.

‘’போலீஸ்காரன் வந்து நோண்டுவான். என்னைப் பத்தி வாயைத் திறக்காத. நாலைஞ்சு நாள்ல தகவல் சொல்றேன்… வந்திடு உன்னையும் கூட்டிட்டுப் போயிடுவேன். அதுக்குள்ள நீ எதிலும் மாட்டிக்காதே. அப்பன்கிட்டேயும் சொல்லிட்டு வந்திடு… வீட்ல எதையாவது வித்து காசாக்க முடியும்னா அதையும் செய்..’’ தொடர்ந்து ஆர்டர் போட்டுக்கொண்டே இருந்தவன் நான் அவர்கள் பேசுவதை உற்றுக் கவனிப்பதைப் பார்த்தான்.

நேராக என்னிடம் வந்தவன், ‘’ஏய்.. எந்திரிச்சு போயிக்கிட்டே இரு.. உன்கிட்ட இருந்து எனக்கு எதுவும் வேண்டாம்’’ என்று உத்தரவு போட்டான். நான் பதில் சொல்வதற்கு விரும்பாமல் திரும்பி படுத்துக்கொண்டேன். அவன் என்னை முறைப்பது என் மூடிய கண்களுக்குள்ளும் தெரிந்தது. என்னை என்ன செய்வது என்று புரியாமல் ராமன் விழித்த நேரத்தில், ‘’நான் நைட்டுக்கு மாவு வாங்கிட்டு, மார்க்கெட்ல காய் வாங்கிட்டு வர்றேன்…’’ என்று சாப்பாட்டுக்காரி பை எடுத்துக் கிளம்பினாள். உடனே என்னைவிட்டு நேரடியாக அம்மாவிடம் போனான்.

‘’நைட்டு கடை போடமுடியாதுன்னு சொல்றேன் புரியலையா…  இப்ப நீ வீட்ல போய் படு.’’ என்றவன் அவள் கையிலிருந்த பையைப் பிடுங்கி தூக்கிப் போட்டான்.

‘’சரி…….’’ என்றவள் வீறாப்புடன் என்னைத் தாண்டிச் சென்று சுவரில் சாய்ந்து அமர்ந்துகொண்டாள். அவளைப் பார்த்து புன்னகைத்தேன்.

‘’உன் கண்களை மூடிக்கொள். வீட்டுப்பாடம் எழுதவில்லை என்று வாத்தியார் அடித்தபோது உன் மகனை கண்டித்திருந்தால் என்ன மாதிரி விளைவுகள் ஏற்பட்டிருக்கும் என்று பார். இன்று அவன் ஏதாவது ஒரு நிறுவன  வேலையில் சேர்ந்திருந்தால் உன் வாழ்க்கை எப்படி மாறி இருக்கும் என்று உன் அகக் கண்களால் பார்…’’ என்றபடி என் கண்களை மூடினேன்.

எப்படி கண் அசந்தேன் என்று தெரியவில்லை, மெக்கானிக்கின் வண்டிச் சத்தம் கேட்டு விழிப்பு வந்தது. கண்களைத் திறக்காமல் நடப்பதைக் கேட்டேன்.

‘’மச்சி, இதுல கொஞ்சம் பணம் இருக்கு பத்திரமா வைச்சுக்கோ. என் போனுக்குக் கூப்பிடாத. எங்க கம்பெனி நம்பருக்குக் கூப்பிட்டு பேசு. நீ தைரியமா காரியத்தை செஞ்சிட்டு போய்க்கிட்டே இரு. நான் எங்காவது தள்ளி இருந்து நீ பண்றதை பார்த்துட்டு இருப்பேன். உன்னை யாராவது பிடிக்கவந்தா, நான் குறுக்கே வந்துடுறேன்… என்னைத் தெரிஞ்ச மாதிரி காட்டிக்காத…’’ என்றவன் அரைவட்டம் போட்டு வந்த வழியில் திரும்பினான். அதைக் கேட்டும் சாப்பாட்டுக்காரி அமைதியாகவே இருந்தாள்.

ராமன் நம்பருக்கு போன் வந்ததும் வேகமாக எடுத்துப்பேசினான். ‘’ம்…கிளம்பிட்டாளா. சரி, சரி… நான் பார்த்துக்கிடுறேன்..’’ என்று செல்போனை அணைத்தான்.

அதுவரை எனக்குப் பக்கத்தில் சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருந்த சாப்பாட்டுக்காரம்மாள் ஒரு முடிவோடு எழுந்து தலையைக் கட்டினாள்.  சேலையை அந்த இடத்திலேயே தளர்த்தி, பாவாடை நாடாவை நன்றாக இறுக்கி சேலையை சிக்கென்று கட்டிக்கொண்டாள். நான் பார்ப்பதை அவள் கொஞ்சமும் லட்சியம் செய்யவில்லை.

அம்மா எழுந்ததைப் பார்த்ததும் ராமன், ‘’நீ இங்கே இருக்கவேணாம்.. வீட்டுக்குப் போ…’’ என்று விரட்டினான். ‘’இன்னும் கொஞ்சநேரத்தில அவ வந்திடுவா… நீ பார்க்க வேண்டாம்..’’ என்றான். அவன் சொல்வதை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் தள்ளுவண்டிக்குள் எதையோ தேடினாள். .

‘’கிளம்புன்னு சொல்றேன்…’’ என்றபடி அம்மாவின் தோளைத் தொட, சட்டனெ கோபமாகத் திரும்பினாள்.

‘’டேய்… நீ முதல்ல ஒழுங்கா இப்போ வீட்டுக்குப் போ…’’ என்று கண்டிப்புடன் பேசினாள்.

‘’அதெல்லாம் நீ சொல்லவேண்டாம்….’’ என்று ராமன் முடிக்கும்முன்பு அவன் கன்னத்தில் பொளேர் என்று அறைந்தாள். அந்த அறையை எதிர்பார்க்காதவன் சுதாரிக்கும் முன்பு மீண்டும் கன்னத்தில் அடிக்க அவள் கையை இறுக்கமாகப் பிடித்தான். அவன் மூச்சில் அடித்த விஸ்கி நெடி, அவன் அப்பனை ஞாபகப்படுத்தியது. சட்டென்று அவளை இழுத்து கீழே தள்ளி உட்கார வைத்தான்.

‘’வேணும்னா நீயும் வேடிக்கை பாரு. போலீஸ்காரன் வந்தா நீதான் அவஸ்தைப்படுவே..’’ என்றபடி விரல் நீட்டி மிரட்டியவன், சித்ரா வருகையை எட்டிப் பார்த்தான்.

ஒரு தீர்மானத்துடன் எழுந்த சாப்பாட்டுக்காரி சாக்குப் பைக்குள் இருந்து ஒரு ஆசிட் பாட்டிலை கையில் எடுத்தாள். திரும்பிப்பார்த்தவன் அதிர்ந்து கத்தினான்.

‘’யேய், அது ஆசிட்… அதை கீழே வைச்சுடு…’’ என்று பதறினான்.

‘’’நீ சித்ராவை எதுவும் செய்ய மாட்டேன்னு சொல்லு… ‘’ என்றவள் பக்கத்தில் ராமன் வர முயற்சிக்க.. உடனே பாட்டலுடன் பின்வாங்கினாள்.  

‘’உன்னை பிள்ளையாப் பெத்ததுக்கு வேற ஒரு குடும்பத்தை சிரழிய விடமாட்டேன்…’’ என்றாள்.

அம்மா, மகன் சண்டையைப் பார்க்கும் ஆட்கள் எண்ணிக்கை அதிகரித்தது. ஆட்கள் சேர்வது ஆபத்து என்பதால் மகன் பதற… அம்மா உறுதியுடன் நின்றாள். மீண்டும் அவன் செல்போன் அடிக்க… எடுத்துப் பேச யோசிக்கும் முன்பு தூரத்தில் சித்ரா வருவதைப் பார்த்து சட்டென்று ஆவேசமானான்.

‘’’ம்… அவ மேல ஆசிட் வீச முடியலைன்னா போகுது… தலையை வெட்டிட்டு வர்றேன்…’’ என்றபடி பாய்ந்து சாக்குப்பையில் இருந்து அரிவாளை வெளியே எடுத்தான். அரிவாளின் நீளத்தைப் பார்த்து கூட்டத்தினர் மிரண்டு பின்வாங்கினர். அப்போது அடி வயிற்றில் இருந்து தொண்டை கிழியக் கத்தினாள்.

‘’அடேய் நில்லு…’’’ ஆசிட் பாட்டில் மூடியை வேகமாகத் திறந்தாள். என்ன செய்யப்போகிறாள் என்று யோசிப்பதற்குள் அந்தப் பாட்டிலைத் தூக்கி அப்படியெ தன் தலையில் ஊற்றிக்கொண்டாள்…’’

அடுத்தவிநாடி எழுந்த மரண ஓலம் ஊரையே உலுக்கியது.

  • கண் திறக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *