‘அவன் வெளியே வரட்டும்… ஃபிராடு சாமியாரை பார்த்துக்கிறேன்…’ என்று பாண்டியன் கதவுக்குப் பின்னே கொந்தளிப்பது என் காது வரை கேட்டது. புன்முறுவலுடன் எதிரே அமர்ந்திருந்த முரளி, ராமானுஜத்தை பார்த்தேன். பாண்டியனின் கூச்சல் காதில் விழாததுபோல் கமுக்கமாக இருந்தனர்.
‘’பாண்டியனை நான் இந்தப் பதவிக்குத் தேர்வு செய்திருந்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?’’ இருவருக்கும் பொதுவாக கேள்விகளை வீசினேன். எதிர்பார்த்தபடி அமைதிதான் பதிலாக கிடைத்தது.
‘’பாண்டியனிடம் உங்களுக்கு அத்தனை பயமா…?’’
‘’பாண்டியனுக்கு இந்தப் பதவி கிடைக்காது என்பது முன்கூட்டியே எனக்குத் தெரியும்..?’’ முரளி தெளிவாகப் பேசினான். புருவத்தை மட்டும் உயர்த்தி காரணம் கேட்டேன்.
‘’அவர் எம்.டி-யின் உறவினர். கம்பெனி தொடங்கிய காலம் முதல் இருப்பவர். அவருக்கு கொடுப்பதாக இருந்தால் எம்.டி-யே குடுத்திருப்பார். யாரும் தடுக்க முடியாது. ஆனால், அவருக்கு இந்தப் பதவி இல்லை என்று சொல்வதற்கு எம்.டி. தர்மசங்கடப்படுகிறார். அதனால்தான் உங்களை அழைத்திருக்கிறார்… ’’
‘’நான் எம்.டி. உத்தரவை நிறைவேற்றும் அடியாளா முரளி…?’’
‘’அப்படியும் இருக்கலாம்..’’ மேலும் முரளி பேசுவதற்கு முன், ‘’நீங்களும் முரளி சொல்வதை ஆமோதிக்கிறீர்களா?’’ என்று ராமானுஜத்தைப் பார்த்தேன்.
‘’இல்லே சார். எதையும் சிஸ்டமேடிக்கா செய்றது எம்.டி-யின் பழக்கம். அதனால எங்களுக்கு அறிமுகமில்லாத உங்களை வைச்சு எங்களை எடை போடுறார். உறவினரா இருந்தாலும் பாண்டியன் உழைச்சுத்தான் முன்னேறியிருக்கார். பாண்டியனிடம் சின்னச்சின்ன மைனஸ் இருந்தாலும், இந்தப் பதவிக்கு ஃபிட்டான நபர்தான்..’’ குழப்பம் இல்லாமல் பேசி முடித்தார்.
‘’சரி… ஒரு ஆன்மிக கேள்வியுடன் இந்த இன்டர்வியூவை முடிக்கலாம். மன்னரின் மூத்த மகன் அரசனாக வருவது மரபாக இருந்த காலத்தில் குரு வம்சத்தின் மூத்த மகனாகப் பிறக்கிறார் திருதராஷ்டிரன். நியாயமாக அவருக்குக் கிடைக்கவேண்டிய பதவி குருடன் என்பதால் மறுக்கப்படுகிறது. பின்னர் காலத்தின் மகிமையால் திருதன் அரசனாகிறார். அவருக்குப் பின்னே அவரது மகன் துரியோதனன்தானே அரசனாக வரவேண்டும்? பாண்டவர்கள் பங்கு கேட்டதும், அனைத்து கெளரவர்களையும் கொன்று குவித்ததும் சரிதானா?’’
‘’தர்மன்தான் முதலில் பிறந்தான், அதனால் குரு வம்சத்தின் முதல் வாரிசு தர்மர்தான்…’’ ராமானுஜம் வேகமாக சொன்னான்.
‘’வம்சம் என்பது தாய்வழியிலா அல்லது தந்தை வழியிலா?’’
‘’தந்தை வழியில்தான் தீர்மானிக்கப்படும்…’’
‘’சரி, தர்மரின் தந்தை யார்?’’
‘’எமதர்மன்…’’
‘’அப்படியென்றால் எமலோகத்தில்தானே அவன் பங்கு கேட்க வேண்டும், குரு வம்சத்தில் எதற்காக பங்கு கேட்டான்…?’’
ஒரு கணம் திடுக்கிட்ட ராமானுஜம் உதடு துடிக்க, ‘’இப்படி அபச்சாரமா கேள்வி கேட்காதீங்க……’’ என்றவன் மேலும் ஏதோ சொல்லமுயன்று அடக்கிக்கொண்டான்.
‘’முரளி…?’’ சட்டென்று பார்வையை ராமானுஜத்திடம் இருந்து மாற்றினேன்.
மென்மையான புன்னகையுடன், ‘’எனக்கு நீங்க கேட்கிறது மகாபாரதமா, ராமயாணமான்னு கூட தெளிவா தெரியாது….’’ என்றான்.
‘’நழுவுகிறாய் முரளி… அப்படியென்றால் இந்தக் கேள்விக்கு பதில் சொல். இன்னும் 10 வருடங்களில் நீ என்னவாக இருப்பாய்?’’
‘’சொந்தமாக ஒரு தொழில் தொடங்கி நடத்திக்கொண்டு இருப்பேன்…’’ தயக்கம் இல்லாமல் சொன்னான்.
அடுத்து ராமானுஜத்தைப் பார்க்க, ‘’இந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பேன்…’’ என்று உறுதியுடன் சொன்னான்..
கண்களை மூடி கணக்குப் போடுவது போல் நிதானித்தேன். ராமானுஜத்தின் கையில் நிறுவனத்தைக் கொடுத்தால், இப்போது செல்லும் பாதையில் வெற்றிகரமாக நடை போடும். முரளியின் கையில் ஒப்படைத்தால் நிச்சயம் புதிய பாதையில் நடக்கும். அந்த மாற்றம் நிறுவனத்தை உச்சிக்கு கொண்டு செல்லலாம் அல்லது பாதாளத்திலும் தள்ளலாம். 10 வருடங்களில் புதிய நிறுவனம் தொடங்குவதற்கான அனுபவ பாடமாக இந்தப் பதவியை நினைக்கிறான். இந்த அனுபவம் அவனுக்கு என்னவெல்லாம் கற்றுத்தரும் என்பதை காலம் மட்டுமே அறியும். கண்களைத் திறந்து…. புன்னகையுடன் கைகளை முரளியை நோக்கி நீட்டினேன்.
‘’ஓ.கே. முரளி…’’ என்று முடிக்கும்முன்பு படக்கென்று எழுந்து கை கொடுத்துவிட்டு வெளியேற முனைந்தான்.
‘’அமருங்கள் முரளி.. உங்களுக்கு வாழ்த்து சொல்லவே கை கொடுத்தேன்…’’ என்றதும் முகத்தில் முறுவலுடன் அமர்ந்தான். அருகில் இருந்த ராமானுஜத்திடம் கை கொடுத்து, ‘’’ஆசிர்வாதம் பண்ணுங்க சார்…’’ என்று சகஜமாகக் கேட்டான்.
‘’ஆல் த பெஸ்ட்’’ என்று முரளிக்கு கை கொடுத்த ராமானுஜம், என்னை திரும்பிக்கூட பார்க்காமல் வெளியேறினான்.
‘’என்னை எப்படி தேர்வு செஞ்சீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா…?’’ முரளி ஆர்வமாகக் கேட்டான்.
‘’இந்த நிறுவனத்தில் நீ பொறுப்புக்கு வந்தவுடன் என்ன மாற்றம் நிகழும்…’’ மீண்டும் ஒரு கேள்வி கேட்டேன்.
‘’என்னால் எந்த மாற்றமும் செய்ய முடியாது. எல்லாமே எம்.டி. தர்மராஜ் விருப்பப்படிதான் நடக்கும்…’’
‘’அவர்தான் வெளிநாட்டுக்குப் போய்விடுவாரே…’’
‘’அவர் அதிகபட்சம் மூன்று மாதங்கள் அங்கு இருப்பார். அதன்பிறகு தென்னாப்பிரிக்காவுக்கு நான் போகவேண்டி வரும். நான் அங்கே வெற்றி கொடுத்தால் எனக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்கும், அதன்பிறகு என் இஷ்டப்படி நிறுவனத்தில் மாற்றம் செய்ய முடியலாம்…’’
‘’உனக்கு நெற்றிக்கண் திறந்திருக்கிறது முரளி…’’
‘’என்ன சொல்றீங்கன்னு புரியலை…’’
‘’எல்லோருக்கும் மூன்று கண்கள் உண்டு முரளி. பெரும்பாலோருக்கு மூன்றாவது கண் வாழ்நாள் முழுவதும் திறப்பதே இல்லை. வெல்லத்துடிக்கும் ஒருசிலர் மட்டுமே நெற்றிக்கண் மூலம் காலத்தைப் பார்க்கிறார்கள்,..…’’
நான் சொன்னதைக் கேட்டு சிரித்துக்கொண்டான். ‘’நீங்கள் என்னை தவறாக தேர்வு செய்துவிட்டீர்கள். நெற்றிக்கண் சமாச்சாரத்தை நான் நம்புவதில்லை..’’ என்றான்.
‘’குட்… தூக்கம் வரும் தருணத்தை யாரும் உணரமுடியாது. அதுபோல் நெற்றிக்கண் திறப்பும் உனக்குத் தெரியவேண்டிய அவசியமில்லை. சரி, உன்னை ஏன் தேர்வு செய்தேன் என்று நீயே சொல்…?’’
‘’தர்மன் கேள்வியில் ராமானுஜம் சறுக்கினார், நான் மெளனமாகி சுதாரித்துக்கொண்டேன்…’’
‘’சரி நீ சொல்.. தலைமைக்குத் தகுதியானவன் துரியனா, தருமனா?’’
‘காலம் தலைமையைத் தீர்மானிக்கும். யார் தன் மடியில் அமரவேண்டும் என்பதை சிம்மாசனமே முடிவு செய்யும். வாரிசு, திறமை, நேர்மை, சிபாரிசு போன்றவற்றால் மட்டும் பதவி அடைய முடியாது…’’
‘’இந்தப் பதிலை ஏன் அப்போது சொல்லவில்லை…’’
‘அதிகப்பிரசங்கித்தனமாகத் தெரியும். இப்போதும் நீங்கள் கேட்டதால் சொல்கிறேன், சரி, என்னை எப்படி தேர்வு செய்தீர்கள் என்று சொல்லுங்கள்…’’
‘’ம்… பவித்ரனை நான் வெளியே அனுப்பிய விதத்தைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியில் இருந்தீர்கள். அந்த நேரத்தில், நான் சுருட்டு புகைப்பது தவறு என்று உறுதியுடன் சொன்னாய். தேவையான இடத்தில் பேசவும், தேவையில்லாத இடத்தில் அமைதி காக்கவும் உனக்குத் தெரிந்திருக்கிறது. உனக்கு உடல் முழுவதும் கண்கள் திறந்திருக்கிறது முரளி… நீயும் அதனை விரைவில் உணர்வாய்.. வா, பட்டாபிஷேகம் நடத்திவிடலாம்…’’ என்றபடி முரளியுடன் வெளியேறினேன்.
சகல சம்பிரதாயங்களும் அலுவலகத்தில் நடைபெற்ற நேரத்தில், புகைக்கப்போவதாக சொல்லிவிட்டு பின்வாசல் வழியே யாருக்கும் தெரியாமல் வெளியே நழுவினேன். வாசலுக்கு அருகே மறைவாக நின்றபடி ஆஜானுபாகுவான சிலருடன் தீவிரமாக பேசிக்கொண்டு இருந்த பாண்டியனை பார்த்து… அருகே நெருங்கினேன்.
‘என்ன பாண்டியன்… இவங்கதான் என்னை அடிக்கப்போறாங்களா?’’ ஆர்வமுடன் கேட்டேன்…
- கண் திறக்கும்