பெரியார் தாடி, விவேகானந்தரின் காவி, சேகுவாராவின் சுருட்டு போன்ற கலவையுடன் ஒரு சாமியார், அறைக்குள் நுழைவதைப் பார்த்த நான்கு பேரும் நம்பமுடியாமல் குழம்பினர். அவர்கள் தடுமாற்றத்தை ரசித்தபடி எம்.டி. ஸீட்டில் அமர்ந்தேன்..

‘’ஏய்…. அது எங்க எம்.டி. ஸீட் , எந்திரி… செக்யூரிட்டி..’’ என்று சத்தம் போட்ட பவித்ரன், உடனே இன்டர்காமில் யாரையோ அழைத்தான். அதற்குள் கதவைத் திறந்து வேகமாக உள்ளே வந்த எம்.டி. தர்மலிங்கத்தைப் பார்த்ததும் நான்கு பேரும் எழுந்து நின்றனர். தெனாவெட்டாக உட்கார்ந்திருந்த எனக்கு வணக்கம் வைத்துவிட்டு, நின்றபடியே அவர்களிடம் பேசினார்.

‘’நம்ம கார்மென்ட் எக்ஸ்போர்ட் கம்பெனிக்கு ஆப்பிரிக்காவில் ஒரு யூனிட் திறக்கப்போறோம், நான் முழுசா அதை பார்த்துக்கப் போறதால இந்தியாவில் இருக்கிற 53 யூனிட் தலைமைக்கும் எனக்குப் பதிலா ஒருத்தரை தேர்வு செய்யணும். எனக்கு நீங்க நாலு பேரும் வேணும். உங்க அசாத்திய திறமை எனக்குத் தெரியும். ஆனா, இப்போ சரியான நபரை தேர்வு செய்ய என்னால முடியலை. அதனால இவரைக் கூட்டி வந்திருக்கேன். ப்ளீஸ் கோ-ஆபரேட்…’’ மீண்டும் எனக்கு ஒரு வணக்கம் வைத்து தர்மலிங்கம் வெளியேற முயற்சிக்க…

‘’ஒரு நிமிஷம்… இந்த பவித்ரனை வெளியே கூட்டிப் போயிடுங்க……ஃபர்ஸ்ட் எலிமினேசன்…’’ என்றேன். காரணம் புரியாமல் தர்மலிங்கம் விழிக்க… பவித்ரன் பதறி எழுந்து நின்றான்.

‘’அவசரப்படுவது நிர்வாகத்திற்கும் நிறுவனத்திற்கும் ஆகாது தர்மா… எம்.டி. அறைக்கு ஒரு சாமியார் எப்படி வரமுடியும் என்று யோசிக்க முடியாதவன் தலைமைப் பொறுப்புக்குத் தாங்க மாட்டான்…’’’ என்றபடி சுருட்டை பற்றவைத்தேன். மறுபேச்சு பேசாமல் பவித்ரனை வெளியே அழைத்துச்சென்றார் தர்மலிங்கம். நடப்பதை ஜீரணிக்க முடியாமல் மற்ற மூவரும் அமைதி காத்தனர். புகை வளையம் வளையமாகச் சுழன்றது.

‘’இங்க சுருட்டு பிடிக்காதீங்க… ஏசி ரூம் புகை வெளியே போகாது’’ என்று மெளனம் கலைத்த முரளியை உற்றுப் பார்த்தேன்..

ஃபைலில் இவர்கள் போட்டோ, தகவல்களை பார்த்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன். சுருட்டு புகையை நுரையீரல் முழுக்க இரண்டு இழு இழுத்துவிட்டு அணைத்தேன்.

‘’ஆப்பிரிக்காவில் எந்த மடையனாவது துணிக்கடை போடுவானா..?’’ கேள்வியைக் கேட்டு அவர்கள் முகத்தையும் பார்த்தேன்.

‘’நிச்சயம் லாபம் வரும்…’’ ரத்தினபாண்டியன் மட்டும் பவ்யமாக பதில் சொன்னான். மற்றவர்கள் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல விரும்பவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது பாண்டியன் தன்னுடைய தூரத்து உறவினன் என்று தர்மலிங்கம் சொன்னது ஞாபகம் வந்தது. .

‘’தியானம், யோகா பண்ற பழக்கம் யாருக்கு இருக்கு…?’’

‘’தினமும் காலையில யோகா பண்றேன். சனிக்கிழமை மட்டும் ஒரு மணி நேரம் தியானம் இருப்பேன்..’’’ ராமானுஜம் சந்தோஷமாகப் பகிர்ந்தான்.

‘’ஏதாவது பிரச்னை, சிக்கல் வரும்போது கண் மூடி தியானம் இருப்பேன். அந்தப் பிரச்னைக்கு உடனே எனக்கு தீர்வு கிடைச்சிடும்…’’’ ரத்தினபாண்டியன் பேசினான்

‘’அந்தத் தீர்வு வெற்றி குடுத்திருக்கா…?’’’

நான் கேட்டதன் அர்த்தம் புரியாத ரத்தின பாண்டியன், ‘’தீர்வு கிடைக்கிறதே வெற்றிதானே..?’’ என்றான். சிரித்துக்கொண்டேன்.

‘’ம்.. நீங்க முரளி..?’’

‘’தியானம், யோகாவில் பெரிசா ஈடுபாடு கிடையாது. வேலையை முடிச்சிட்டு வீட்டுக்குப் போய் படுத்ததும் நிம்மதியா தூக்கம் வருது, எனக்குத் தெரிஞ்சு அதுதான் பெஸ்ட் தியானம்…’’

‘’அப்படின்னா யோகா..?’’

‘’வேலையை முழு ஈடுபாட்டோட செய்றதை யோகான்னு சொல்லலாம்…’’

‘’இப்பவே உங்களுக்கு கை நிறைய சம்பளம், வசதிகள் இருக்கு, எதுக்காக இந்த பதவிக்கு ஆசைப்படுறீங்க.?’’

‘’இந்தக் கேள்வியை ஒவ்வொருத்தரிடமும் தனியா கேட்டீங்கன்னா எங்களுக்கு பதில் சொல்றது கம்ஃபர்டபிளா இருக்கும்..’’ ராமானுஜம் இடை மறித்தான்.

‘’எங்களுக்குன்னா..?’’ அழுத்திக் கேட்டேன்.

‘’எனக்கு’’ என்று வேகமாகத் திருத்தினான். மற்றவர்கள் முகத்திலும் அவன் கோரிக்கை எதிரொலித்தது.

‘’இங்கே பதில் சொல்ல விரும்பாதவர்கள் வெளியே போகலாம்…’’

சட்டென்று முகத்தில் அறைந்த பதிலால் ராமானுஜம் உறைந்தான். சகஜநிலைக்கு வந்ததுபோல் அசட்டு சிரிப்புடன் பதில் சொன்னான்.

‘’குளம் போல ஒரே இடத்தில் தேங்கியிருக்கிறதைவிட ஆறு போல ஓடிக்கிட்டே இருக்கணும். அதனால்தான் அடுத்த பதவிக்கு ஆசைப்படுறேன்.’’ நல்ல பதில்தானா என்ற திருப்தியுடன் என் முகம் பார்த்தான்.

நான் முரளியின் முகம் பார்த்தேன். ‘’பணம், அதிகாரத்துக்கு நான் ஆசைப்படலை. ஆனா, இந்தப் பதவிக்கு நான் தகுதின்னு நினைக்கிறேன், என்னால சிறப்பா வழிநடத்த முடியும்னு நம்புறேன்…’’

‘’நான் செய்ய நினைக்கும் மாற்றங்கள், புகுத்த நினைக்கும் புதிய யுக்திகளுக்கு  கூடுதல் அதிகாரம் தேவை. அதற்குத்தான் இந்தப் போட்டியில் இருக்கிறேன்…’’

யாருடைய பதிலை சிறப்பானதாக தேர்வு செய்வேன் என்று தெரிந்துகொள்ள மூவரும் துடித்ததை கண்டுகொள்ளாமல் அடுத்த கேள்விக்குப் போனேன்.

‘’உங்களுக்குப் பிடிச்ச ஏதாவது ஒரு நிறம் சொல்லுங்கள்…’’ என்று நான் முடிப்பதற்குள் முரளி புன்னகைத்தான்.

‘’இந்தக் கேள்வி சிரிப்பதற்கல்ல முரளி… பதில் சொல்லுங்கள்…’’

‘’வெண்மை காரணம் நம்பிக்கை’’

‘’எனக்குப் பிடித்தது நீலம் ஏதோ ரகசியம் உள்ளடக்கியது போன்ற அடர் நிறம் அது…’’ ராமானுஜம் சொன்னதும் ‘’குட்’’ என்றபடி ரத்தினபாண்டியனைப் பார்த்தேன்

‘’மஞ்சள். மங்களகரமானது’’ ரத்தினபாண்டியன் சட்டையிலும் மஞ்சள் இருந்தது. வெள்ளை பிடிக்கும் என்று சொன்ன முரளி நீல நிறத்திலும், ராமானுஜம் வெள்ளை நிறத்திலும் சட்டை போட்டிருந்தனர். மூவரும் அறியும்படி அவர்கள் சட்டை நிறத்தை உன்னிப்பாகக் கவனித்தேன்.

‘’சரி, இந்த பதவி கிடைக்கவில்லை என்றால் அதிக வருத்தம் யாருக்கு இருக்கும்..?’’ மூவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர். சற்றுநேரத்தில் ரத்தினபாண்டியன் வாய் திறந்தான்.

‘’இந்தப் பதவி கிடைச்சதும் செயல்படுத்த நிறைய திட்டம் தயாரா வைச்சிருக்கேன். அதனால் இந்தப் பதவி கிடைக்கவில்லை என்றால் நிச்சயம் அதிகம் வருத்தப்படுவேன்…’’ நிஜமான ஆதங்கம் அவன் முகத்தில் தெளிவாகத் தெரிந்தது.

‘’வெரிகுட் ரத்தினபாண்டியன். எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்று அதிகம் வருத்தப்படும் மனிதனால் நிச்சயம் ஒரு நிறுவனத்தை உயரத்துக்கு கொண்டுசெல்ல முடியாது. உங்கள் ஆசை, கனவுகளை எல்லாம் நிறுவனத்தின் மீது திணிப்பது சரியில்லை. மேலும் தியானம் மூலம் முடிவெடுப்பது முட்டாள்தனம். தியானத்தை எப்படி செய்வது, அதன் மூலம் எப்படி சாதிப்பது என்பதை பிறகு சொல்லித்தருகிறேன். இப்போது ப்ளீஸ் கெட் அவுட்…’’ என்று சிரித்தபடி கை கொடுக்க நீட்டினேன். நான் சொல்வதை நம்பமுடியாமல் திக்பிரமையுடன் பார்த்தான்.

‘’ப்ளீஸ் கெட் அவுட் பாண்டியன்.. நான் இன்டர்வியூ தொடரவேண்டும்’’ என்று குரல் மாற்றி கண்டிப்பு காட்டியதும், கைகுலுக்காமல் வெளியே சென்றான்.

வாசலுக்கு வெளியே நின்ற தர்மலிங்கத்தின் பி.ஏ-விடம் பாண்டியன் கத்தியது கேட்டது. ‘’யாருங்க அவன்.. காட்டான் மாதிரி கேள்வி கேட்கிறான்.. இங்கே என்ன காமெடி ஷோவா நடக்குது. அவன் யாரு?’’ என்று கொதித்தான்.

‘’அவர் ஞானகுரு. கோயில் குளத்துமேட்டுல வெட்டியா படுத்துக்கிடந்தவரை, நம்ம எம்.டி. கண்டுபிடிச்சு கூட்டிட்டு வந்தார்…’’ என்று பவ்யமாக பதில் வந்தது

‘’அவன் வெளியே வரட்டும்… நான் யாருன்னு காட்டுறேன்…’’ பாண்டியன் வீரத்தைக் கண்டு சிரிப்பு வந்தது.

  • தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *