முட்டையிட்டு அடைகாக்கும் பறவையானது, குஞ்சு பொரித்ததும் தேடித்தேடி இரைகளைக் கொண்டுவந்து கொடுக்கும். அவற்றைத் தின்று வளரும் குஞ்சுகளுக்கு கொஞ்சம்கொஞ்சமாக இறக்கை முளைக்கத் தொடங்கும். அதன்பிறகும் சில நாட்கள் கூட்டுக்கு அருகிலேயே உட்கார்ந்து தாயிடம் இரை பெற்றுக்கொள்ளும். நன்றாக இறக்கை முளைத்து தானே பறந்து இரை தேடத்தொடங்கியதும், மீண்டும் அந்த கூட்டுக்கு குஞ்சுப் பறவைகள் வருவதில்லை. ஆனால் தாய் பறவை மட்டும் கூட்டையே சுற்றிச்சுற்றி வரும். இந்தப் பறவையின் மனநிலையில்தான் இப்போது வயதான மனிதர்கள் தத்தளிக்கிறார்கள். ஆம், படிப்புக்காக, வேலைக்காக, திருமணம் முடித்து பிள்ளைகள் பிரிந்துசென்றதும் பெற்றோர்கள் தனிமையைத் தாங்கமுடியாமல் மனநல பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இதனை மனநல மருத்துவம், எம்டி நெஸ்ட் சிண்ட்ரோம் (Empty Nest Syndrome)  என்று அழைக்கிறது.

கூட்டுக்குடும்ப நடைமுறையில் ஒரு பிள்ளை திருமணம் முடித்து வெளியே போனாலும், வீட்டில் எப்போதும் ஆட்கள் நடமாட்டம் இருக்கும். அதனால் தலைக்கு மேல் வேலைகளும் இருக்கும். அதனால் முன்பு தனிமையால் பெற்றோர் பாதிப்படைவதில்லை. ஆனால் இன்று வீட்டுக்கு ஒரு பிள்ளை என்று குடும்பம் சுருங்கிவிட்டது. பொருளாதார சூழல் காரணமாக வீட்டில் வேறு யாரையும் வைத்துக்கொள்ளும் முடிவதில்லை. அதனால் தான், தன் கணவன், தன் பிள்ளை என்ற குட்டி வட்டத்துக்குள்ளே வாழ்கிறார்கள்.

பிள்ளைகள் வளர்ந்து மேற்படிப்புக்காக அல்லது வேலைக்காக வெளிநாடு செல்லும்போது தடுமாற்றம் அடைகிறார்கள். பிள்ளையை மனதார சந்தோஷமாக வழியனுப்பி வைத்தாலும் மனதுக்குள் புலம்புகிறார்கள். தனியே இருக்கும் பிள்ளைக்கு ஆபத்து நிகழ்ந்துவிடும் என்று அச்சப்படுகிறார்கள். ஒரு நாள் பேசவில்லை என்றாலும் பெரிய சிக்கல் என்று பதட்டம் அடைகிறார்கள். ஆண், பெண் இருவருக்கும் இந்தப் பாதிப்பு இருந்தாலும், அதிகம் பாதிக்கப்படுவது பெண் மட்டுமே. ஏனென்றால் குழந்தை வளர்ப்பு என்பதில் ஆண் எப்போதுமே தள்ளித்தான் நிற்கிறான். அதனால் பிரிவின் வலியும் வேதனையும் அவனை அதிகம் பாதிப்பதில்லை. வீட்டுக்கு வெளியே பலருடன் கலந்துபேசும் வாய்ப்பு ஆணுக்கு இருப்பதாலும் அவனை இந்த சோகம் அதிகம் தாக்குவதில்லை.

ஆனால் பெண் மனதளவில் அதிகம் பாதிக்கப்படுகிறாள். இதுபோன்ற பிரிவுகள் பெரும்பாலும் பெண்ணுக்கு 45 முதல் 55 வயதாகும்போதுதான் நடக்கின்றன. இந்த வயதில் பெண்ணுக்கு மெனோபாஸ் மாற்றமும் உடலில் நிகழ்கிறது. உடல் மற்றும் மனநல மாற்றம் காரணமாக பிரிவைத் தாங்கும் வலிமையை இழந்துவிடுகிறாள். பிள்ளை பாசத்தில் தத்தளிக்கிறாள். வெளிநாட்டில் இருந்து பேசும் மகன் அல்லது மகள், ‘அம்மா… நாம் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன்’ என்று சொன்னால் அதுவும் பெண்ணை அதிகம் பாதிக்கிறது. ’நான் இங்கே எந்த நேரமும் அவன் நினைவில்… கவலையில் இருக்கிறேன், ஆனால் அவன் ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறான். அவனுக்கு என் மீது பாசமே இல்லை. எனக்கு பிள்ளை வளர்க்கத் தெரியவில்லை… என்னை மறந்துவிட்டான்… அனாதையாகிவிட்டேன்’ என்று தன்னைத்தானே நொந்துகொள்கிறாள்.

இந்த குழப்பமும் சிக்கலும் நீடிக்கும்போது தன் மீதான அக்கறையை பெண் குறைத்துக்கொள்கிறாள். போதிய உணவு சாப்பிடாமால் ஆரோக்கியத்தைக் கெடுக்கிறாள். கணவரிடம் அன்பு செலுத்துவதைக் குறைக்கிறாள். பொழுதுபோக்கு, வேடிக்கைகளைக் கண்டு வேதனைப்படுகிறாள். தன் வாழ்க்கையில் இனி எப்போதும் வசந்தம் கிடையாது என்று பயப்படுகிறாள். தனக்குத்தானே பேசுகிறாள். யாராவது அன்பாக பேசினாலும் எரிந்து விழுகிறாள். எதிர்த்துப்பேசுபவர்களுடன் சண்டை போடுகிறாள். கிட்டத்தட்ட மனநோயாளியாக மாறிவிடுகிறாள்.

பெண்ணை என்னதான் செய்வது?

இரவுக்குப் பின் பகல் என்பதுபோல் உறவுக்குப் பின் பிரிவு என்பது தவிர்க்கமுடியாத  சூழல் என்பதை புரியவைக்க வேண்டும். பாலூட்டி, சோறூட்டி, சீராட்டி வளர்த்தாலும் பிள்ளை என்பது சுதந்திரமான தனி உயிர். பிள்ளை தனியே வாழ்வதற்கு பலம் கொடுப்பதும் வழி காட்டுவதுமே பெற்றோர் செய்யவேண்டிய கடமை என்பதை அறியவேண்டும். பெண்ணின் மனதை வேறு திசையில் திருப்பவேண்டும். 

இதுவரை பிள்ளைக்காகவும் கணவருக்காகவும் நிறையவே உழைத்திருப்பாள். அவள் இனி தனக்கென்று வாழவேண்டும். தினமும் காலை பத்து மணி வரைக்கும் தூங்கும் ஆசை இருந்தாலும், பிள்ளைக்காக அதிகாலை எழவேண்டிய அவசியம் இருந்தது. இனி இதுபோன்ற விலங்குகள் இல்லை என்பதால் மனதில் தோன்றும் ஆசைகளை சந்தோஷமாக நிறைவேற்றிக்கொள்ள வேண்டும்.

அதற்காக பிள்ளைகளை மறக்க வேண்டியதில்லை. அவர்களுடன் நொடியில் தொடர்புகொள்ளும் வகையில் தொலைபேசி மட்டுமின்றி வாட்ஸ்-அப், ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற நவீன இணைப்புகளை கற்றுக்கொண்டால் பிள்ளைகளை நினைத்த நொடியில் சந்தித்த திருப்தி கிடைக்கும்.

ஊர் சுற்றிப் பார்க்கும் ஆசையை குறிப்பாக ஆன்மிக பயணம், குளிர் பிரதேச பயணம், உறவுகள் சந்திப்பு என்று பிரித்து பயணம் செய்யலாம். கணவருடன் மட்டும் செல்வது வெறுமையைக் கொடுக்கும் என்று தோன்றினால் சுற்றுலா நிறுவனங்களில் இணையலாம். 40 முதல் 50 பேர் குழுவாக சுற்றுலா செல்லும்போது இளமையை திரும்பப்பெறலாம். செடி, மீன், நாய், பூனை வளர்ப்பு போன்றவற்றில் ஈடுபட்டால் தனிமையின் கொடுமை தெரியாது.  அனாதை ஆசிரமங்கள், முதியோர் இல்லங்களுக்கு சென்றுவந்தால், உங்களைவிட மோசமான நிலையில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது புரியும்.

இவற்றை எல்லாம் மனம் நாடாமல் வெறுமை உணர்வு மட்டுமே மிஞ்சியிருக்கிறதா… எதற்கெடுத்தாலும் அழுகை வருகிறதா… இனிமேல் இந்த உலகில் எனக்கு என்ன வேலை என்ற நெகடிவ் எண்ணம் தோன்றுகிறதா… எப்போதும் கெட்ட சிந்தனைகளும் தீய கனவுகளும் வருகிறதா… தனியே அழுகை வருகிறதா… தற்கொலை செய்யும் சிந்தனை வருகிறதா உடனே ஒரு மனநல மருத்துவரை சந்தியுங்கள். கவுன்சிலிங் எடுத்துக்கொள்ளுங்கள். இதில் எந்தத் தவறும் இல்லை. நல்ல ஓய்வும், மருந்தும் எடுத்துக்கொண்டால் நிச்சயம் இந்தப் பிரச்னைகளில் இருந்து விடுதலை பெறமுடியும். கோபம், எரிச்சல், ஆத்திரம், வெறுமை போன்றவற்றை விரட்டமுடியும்.

நாளை பிள்ளைகள் வரலாம் அல்லது வராமல் போகலாம். ஆனாலும் நாம் வாழ்ந்துதான் தீரவேண்டும். ஏனென்றால் அடுத்த நொடியில் ஏதேனும் அதிசயத்தை காலம் உங்களுக்காக முடிந்து வைத்திருக்கலாம். இன்னும் எத்தனையோ பேருக்கு நீங்கள் உதவவேண்டிய அவசியம் இருக்கலாம். அதனால் வாழ்க்கை நதியின் ஓட்டத்தில் சந்தோஷமாக கலந்து செல்லுங்கள். வாழ்க்கையின் கடுமையான பக்கத்தை கடந்துசெல்லுங்கள். பாரதியின் வரிகளில்… காற்று இனிது, நீர் இனிது, வாழ்வு இனிது என்று வாழ்ந்துபாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *