கடவுளைப் படைத்தது மனிதன்தான் என்பதால், நீயே புதிதாக ஒரு கடவுளை படைத்துக்கொள் என்றதும் சங்கரன் ஆவேசமாகிவிட்டார்.
’’நீங்க நிஜ சாமியார்தானா… இல்லைன்னா நாத்திகரா?’’ என்று இழுத்தார்.
’’ஏன்… இறைவன் மீது முழுநம்பிக்கை கொண்டவன்தான், உனக்கென்ன சந்தேகம்?’’
’’இந்த உலகத்தைப் படைச்ச கடவுளையே மனுஷன் படைச்சான்னு சொல்றீங்களே?’’
’’உண்மையைத்தான் சொல்கிறேன் சங்கரா, இன்று கோயில்களில் குடியிருக்கும் கடவுள்கள் அனைவரையும் படைத்தது மனிதர்கள்தான். முற்பிறவி, மறுபிறவி, சொர்க்கம், நரகம், வேதங்கள் எல்லாமே மனிதனின் கைவண்ணம்தான். இந்த உலகில் உலாவரும் எல்லா மதங்களையும் உருவாக்கியது மனிதன்தான்…’’
’’எப்படி சாமி இவ்வளவு உறுதியாச் சொல்றீங்க?’’
’’மனிதனால் புரிந்துகொள்ள முடியாத, வெற்றி கொள்ள முடியாத இயற்கையை பெரும்சக்தியாக நினைத்தான். அந்த சக்தியுடன் மோதி வெற்றிபெற முடியாது என்பது தெரிந்ததும், அந்த சக்திக்கு கடவுள் என்று பெயரிட்டு அழைத்து, அதனுடன் சமாதானம் செய்து கொள்ள நினைத்தான்.
தான் வேட்டையாடியதில் பங்கு கொடுத்தால், அந்த சக்தி திருப்தியடைந்துவிடும் என்று நினைத்து அதற்கும் படையல் செய்தான். அப்போது அவன் ஆடையின்றி இருந்ததால், அவன் உருவாக்கிய கடவுளும் நிர்வாணமாகவே இருந்தார். பிறகு மனிதன் இலைகளையும், மிருகத்தின் தோல்களையும் ஆடைகளாக அணிந்ததும், இறைவனுக்கும் அதனை அணிவித்து அழகு பார்த்தான். அந்த பழக்கம்தான் இன்று வரை தொடர்ந்து அம்மனுக்கு வைர மூக்குத்தி, தங்க ஒட்டியாணம் வரை வந்து நிற்கிறது.
இந்த உலகை படைத்த கடவுளுக்கு அளவுக்கதிகமான சக்தி இருக்கும் என்ற நம்பிக்கையில் பத்து கைகள், நான்கு தலைகள் என்று செய்து மனிதர்களிடம் இருந்து வித்தியாசப் படுத்திக் காட்டினான். அத்தோடு நில்லாமல் கடவுளுக்கு இதுபோன்ற எத்தனையோ உலகங்களை உருவாக்கும் சக்தி இருக்கிறது என்று நினைத்தான். அதனால்தான் சொர்க்கம், நரகம் போன்ற பல்வேறு உலகங்களையும் இறைவனுக்காக மனிதன் படைத்தான். அந்த கடவுள் எப்போதும் தனக்கும், தன்னைச் சேர்ந்தவர்களுக்கும் மட்டுமே துணையாக இருக்க வேண்டும் என்பதற்காக கோயில் கட்டி சிறை வைத்தான். மனிதன் படைத்த கடவுளையே அவன் வழிவந்த மனிதர்கள் வழிபட ஆரம்பித்தார்கள். கோயிலில் கடவுளைக் கட்டிப்போட்ட மனிதர்கள், கடவுளை கும்பிட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கத் தொடங்கி அதில் வெற்றியும் பெற்றுவிட்டார்கள்’’
’’அப்படின்னா இந்த உலகத்தைப் படைச்சது யாரு?’’
’’அந்த ஆதிமூலத்தைத்தான் கடவுள் என்று நாம் நம்புகிறேன். அந்த கடவுளுக்கும், நீங்கள் கோயிலில் வழிபடும் இறைவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை…’’
’’அதெப்படி, இத்தனை காலம் வாழ்ந்தவர்களுடைய மற்றும் இப்போது வாழும் மனிதர்களின் நம்பிக்கைகளையும் பொய் என்று சொல்கிறீர்கள். இத்தனை பேரையும் மறுக்கும் நீங்கள் சொல்வது ஏன் பொய்யாக இருக்கக் கூடாது?’’
’’அற்புதம் சங்கரா. இப்படி கேள்வி கேட்பவர்கள் இல்லாததால்தான் ஒவ்வொரு மனிதனும் ஆளுக்கொரு கடவுளை உருவாக்கிக் கொண்டு இருந்தார்கள். நீ இன்னொரு மதத்தை மதிப்பவனாக இருந்தாலும், அவர்களது வழிபாட்டு முறை உனக்கு கேலியாகத்தான் தெரியும். அவர்கள் எத்தனை கோடி மக்களாக இருந்தாலும் ஏன் இப்படி தவறான வழியில் போய்க் கொண்டு இருக்கிறார்கள் என்று சிரித்துக் கொள்வாய். எத்தனையோ கோடி மக்களது நம்பிக்கையை நீ மதிக்காத பொழுது, இதுவரை இருந்த ஒட்டுமொத்த மனித குல நம்பிக்கையையும் அசைத்துப் பார்ப்பது பெரிய விஷயமில்லை.
மேலும் கடவுள் பற்றி சந்தேகத்துடன் கேள்வி கேட்பதை அபச்சாரம் என்று பயமுறுத்துவார்கள். இறைவனை சந்தேகித்தால் நரகத் தீயில் தள்ளப்படுவாய், முதுமையில் கஷ்டப்படுவாய், சாப்பிட உணவு கிடைக்காமல் போய்விடும் என்று பயம் காட்டுவார்கள். அதனால் தேவையில்லாமல் கேள்வி கேட்டு அவஸ்தைப் படுவதைவிட, முன்னோர் சொல்வதை நம்பித் தொலைப்போமே என்று சிந்திக்க பயந்து முன்னோர் வழியில் ராஜநடை போடுகிறார்கள் மனிதர்கள். இப்பொழுது மட்டுமல்ல, இனி வரும்காலமும் மனிதர்கள் இந்த நம்பிக்கைகளுடன் சிந்திக்காமல்தான் வாழ்வார்கள். ஆனால் கடவுளை வளர வைத்ததில் முக்கிய பங்கு போட்டிக் கடவுள்களுக்குத்தான் உண்டு…’’
’’போட்டிக் கடவுள் என்றால்…?’’
’’ஒவ்வொரு ஊருக்கும், ஒவ்வொரு ஆளுக்கும் பிடித்தமான வகையில் கடவுள்கள் உருவாக்கப்பட்டதால், வலிமையுள்ளவன் அவனது கடவுளை உயர்த்திப் பிடித்தான். உடனே மற்றவர்கள் அவர்களது கடவுள்களுக்கு அதைவிட அதிக சக்திகள் இருப்பதாகக் கதை கட்டினார்கள். மனிதனுக்கு வாழ்வில் இருந்த துன்பங்களான நோய், பசி, மரணம் போன்றவைகளுக்கு தங்கள் கடவுளிடம் மட்டுமே தீர்வு இருப்பதாகச் சொன்னார்கள். தங்கள் கடவுளைத் தவிர பிற கடவுளை நம்பினால் நரகத்திற்குப் போவார்கள் என்று சொல்லவே சண்டை மூண்டது. கோடிக்கணக்கான மக்களை கடவுள் பிரச்னை கொன்று தீர்த்தது. இன்றுவரை இந்த சண்டை மதச் சண்டையாக, மதக்கலவரமாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எதிரியின் கடவுளை விட, நம்முடைய கடவுளை பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள் மனிதர்கள்…’’
’’இப்பவுமா?’’
’’ஆம். இன்று நடந்து கொண்டிருப்பவை மட்டுமல்ல, கடந்த காலங்களில் நடந்த யுத்தங்கள் அனைத்தையும் கணக்கெடுத்துப் பார்த்தால் எல்லாமே வெவ்வேறு மதங்களை பின்பற்றுபவர்களுக்கு இடையேதான் அதிக அளவில் நடந்திருக்கிறது. ஆனால் காரணங்கள்தான் தீவிரவாதம், எண்ணெய் வளம் என்று நாகரீகமாக சொல்லப்பட்டது. வெவ்வேறு மதங்கள் அடித்துக் கொள்வது போதாதென்று ஒரே மதங்களுக்குள்ளும் பல்வேறு பிரிவினை வளர்த்தும் மோதிக் கொள்கிறார்கள் மக்கள்…’’
‘’அந்த வகையில நம்ம தமிழ்நாடு எவ்வளவோ பரவாயில்லை சாமி…’’ என்றார்.
’’எல்லா நாட்டிலும் நிகழ்ந்தது போலவே கொடூரம் தமிழகத்திலும் நடந்திருக்கிறது. ஆயிரக்கணக்கான சமணர்களை ஒரே நாளில் உயிரோடு கொளுத்திய சோகம் இங்கே நடந்திருக்கிறது. ஆனால், அந்த கொடுமைகளை எல்லாம் நாம் படிக்க விரும்புவதில்லை. படிக்கவில்லை என்பதால் நம் நாடு அமைதியான நாடு என்ற அர்த்தமாகி விடாது. உலகிலேயே மிக அதிகமான மதங்களும், பிரிவினைகளும் நம் நாட்டில்தான் இருக்கிறது என்பதால், மிக அதிகமான முரண்பாடுகளும் இங்கேதான் இருக்கிறது…’’
’’பிறகு எப்படி அறிவியல் அறிஞர்களும், மகா கலைஞர்களும் கடவுள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்?’’
’’நம் நாட்டின் உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் சாமியார்களின் காலில் விழுகிறார்கள், கோயில்களில் போய் தரிசனம் செய்கிறார்கள். மாபெரும் அறிவியல் அறிஞர்களாக இருப்பவர்கள் தேங்காய், பழம் வைத்து சாமி கும்பிட்டு நல்லநேரம் பார்த்து ராக்கெட் விடுகிறார்கள். அவர்கள் சார்ந்து இருக்கும் துறையைத் தவிர வேறு எதையும் அவர்கள் சிந்திக்காமல் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதுதான் இதற்கெல்லாம் காரணம். சக்தி வாய்ந்த மனிதர்களாக இருப்பவர்களை சுற்றி வளைப்பதற்கெனவே சாமியாராக வேடம் போடுபவர்களும், கோயிலை நிர்வகித்துக் கொண்டிருப்பவர்களும் அலைகிறார்கள். அந்த நபர்களை தங்கள் ஆன்மிகப் பலத்துக்காக விளம்பரப் பொருளாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்…’’
’’அப்படின்னா சாதாரண மக்கள் என்னதான் செய்றது?’’
’’கடவுளுக்காக மனிதன் எதுவும் செய்ய வேண்டாம் என்பதைத்தான் இத்தனை காலமாகச் சொல்லிக் கொண்டு வருகிறேன். மனிதர்கள் கடவுளைக் காப்பாற்ற வேண்டிய அவசியமே இல்லை, அதே போன்று மனிதனைக் காப்பாற்றுவதும் கடவுளின் வேலை இல்லை. கடவுளை வெளியே தேடாமல் தனக்குள்ளே தேடி தன்னைத்தானே கடவுளாக அறிந்து கொள்ள வேண்டும். உயிர் வாழும் கலையை உடம்பிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். மிகவும் முக்கியமாக தண்ணீரில் தாமரை வாழ்ந்தாலும் நீர் ஒட்டாமல் இருப்பதுபோன்று எந்த பற்றும் இல்லாமல் வாழ்ந்தால் எதிர்பார்ப்பும் இருக்காது, ஏமாற்றமும் இருக்காது.’’
’’மனிதர்கள் நிம்மதியாக வாழ நினைத்தாலும் இயற்கை வாழவிடுவதில்லை. புயல், வெள்ளம், சுனாமி, எரிமலை போன்ற பேயாட்டத்தையாவது அதனை படைத்த கடவுளால் நிறுத்த முடியும் அல்லவா? அதற்கு நீங்கள் சொல்லும் உண்மையான கடவுளுக்கு என்ன செய்யவேண்டும்?’’
’’மனிதனுக்கு சுடுகாடு வரையிலும் லஞ்சம் கொடுக்கும் புத்தி போகவே போகாது என்பதைத்தான் உன்னுடைய பேச்சு காட்டுகிறது சங்கரா… இயற்கையை எதற்காக தடுத்து நிறுத்த வேண்டும். ஒவ்வொன்றும் அதனதன் வேலையை செய்து கொண்டு இருக்கிறது. உன்னால் முடிந்தால் அதனிடம் இருந்து தப்பித்துக்கொள் அல்லது செத்துப் போ’’ என்று நிறுத்தினேன்.
’’இயற்கையை கடவுள் என்கிறீர்களா?’’
’’இல்லை…’’
’’இதுவரை யாருமே கண்டறியாத கடவுளை நீங்கள் தேடிக் கண்டுபிடிக்க முடியுமா, அதுவும் இந்த தேனருவிக்குள் அல்லது அதையும் தாண்டி உங்களுக்காக காத்திருக்கிறது என்று நம்புகிறீர்களா?’’
’’ஒலியை மிஞ்சும் வாகனத்தை கண்டறியவும், இறந்த உடலை பிழைக்க வைக்கவும் விஞ்ஞானிகள் முயற்சி செய்கிறார்கள். அது சாத்தியமாகுமா இல்லையா என்பது கேள்வியே அல்ல, சாதிக்க வேண்டும் என்ற ஆசைதான் முக்கியம்’’ என்றபடி எழுந்து நின்று, சங்கரனை கிளம்பிச் செல்லும்படி சைகை காட்டினேன்.
கொஞ்சம் யோசனைக்குப் பின் எழுந்தவர், ‘‘நான் என்னோட வேலையை விட்டுட்டு உங்க கருத்துகளைத்தான் பேசப் போறேன். உங்களோட சிஷ்யன்னு சொல்லப் போறேன்…’’ என்றபடி புறப்படத் தயாரானார்.
’’என்னுடைய பெயர் உனக்குத் தெரியுமா சங்கரா?’’
’’தெரியாது…’’
‘’என்னுடைய பெயர்கூடத் தெரியாமல், யாருடைய சிஷ்யன் என்று சொல்லிக் கொள்வாய்?’’
’’உண்மையான பெயர் யாருக்கு வேண்டும். ஞானகுரு என்று உங்களை ஊருக்குள் சொல்லுவேன்.’’
கடகடவென சிரித்தேன். ‘‘நான் ஞானகுரு என்றால் நீ யார்? இந்த உலகில் ஒவ்வொரு மனிதனும் ஞானகுருதான். புதிதாக உருவாகியிருக்கும் போலி சாமியாருக்கு என் வாழ்த்துக்கள்…’’ என்றபடி நடக்கத் தொடங்கினேன்.
’’நீங்க எதிர்பார்க்கிறதை கண்டுபிடிக்க முடியலேன்னா திரும்பி வருவீங்களா?’’
சங்கரனின் குரல் வெகுதொலைவில் கேட்பது போல் இருந்தது, பதில் சொல்லாமல் நடந்து கொண்டே இருந்தேன். திடீரென சடசடவென பெரிய மழை பெய்யத் தொடங்கி, பாதை தெரியாதபடி என் கண்களை மறைத்தது.
தட்டுத்தடுமாறினாலும் முன்னோக்கி நடந்து கொண்டே இருந்தேன்.