சங்கரனின் கோபத்தைப் பார்த்து சிரிப்பு வந்தது.

’’மாமிசக் கடைக்காரன் ஆடு வெட்டுவதை ஒரு தொழிலாகச் செய்வது போன்று நீ கோயிலில் பூஜை செய்யும் வேலை செய்கிறாய். இதற்கு சம்பளம் தவிர வேறு எதை எதிர்பார்க்கிறாய்?’’

’’என்ன சாமி, என்னோட வேலையையும் கசாப்புக் கடைக்காரன் வேலையையும் ஒண்ணாச் சொல்றீங்க! சாதாரண பூஜையை வேலைன்னு சொன்னாக்கூட பரவாயில்லை. விஷேச தினத்திலும் ராப்பகலா சிரத்தையுடன் உழைச்சதுக்கு எதுவும் கிடைக்காதுன்னு சொல்றீங்களா?’’

’’சிறப்பு என்று எதுவும் கிடையாது. அமாவாசை இரவில் குபேரனுக்கு பூஜை செய்தால் பணம் கொட்டும் என்பது உண்மையானால் எவரும் உழைக்கவே வேண்டியதில்லை. எல்லோரும் பூஜை செய்துவிட்டு ஒரு பையுடன் வானத்தில் இருந்து கொட்டும் தங்கத்திற்காக காத்திருக்க வேண்டியதுதான். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மனித்துணியும் சிறப்பானவையே…’’ என்று சிரித்ததும் சிந்தனையில் ஆழ்ந்தார் சங்கரன்.

’’மந்திரங்களுக்காவது மகிமைகள் இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?’’

’’நான் எதை ஒப்புக்கொள்கிறேன் என்பது முக்கியமல்ல. ஆனால், மகிமையுள்ள வார்த்தைகள் இருக்கின்றன. ஆனால் அவற்றை மந்திரங்கள் என்று மதிக்க வேண்டியதில்லை. ஒருவரை காலில் பலமாக மிதித்துவிட்டு அவரிடமே, ‘மன்னித்துக் கொள்ளுங்கள்…’ என்று பதற்றத்துடன் உண்மையாகவும் மனப்பூர்வமாகவும்  கேட்டுக் கொண்டால், அந்த வார்த்தைகள் மந்திரம் போன்று ஏற்றுக் கொள்ளப்படும். அதே நபரிடம், ‘குறுக்கே  எருமை மாடு மாதிரி நிக்கிறியே’ என்று கோபப்பட்டால், எதிர்மறை விளைவு கண்டிப்பாக இருக்கும். ஒரே ஒரு கெட்டவார்த்தை கொலை செய்யத் தூண்டலாம் என்பது போலவே ஒரே ஒரு வார்த்தை உயிரை காப்பாற்றவும் செய்யலாம். ஆனால் இந்த வார்த்தைகள் எல்லாம் மனிதர்களுக்குத்தான் தேவைப்படுமே தவிர கடவுளுக்கு அல்ல. குறிப்பிட்ட மொழியில், குறிப்பிட்ட எழுத்துக்களை மந்திரமாக பூஜித்தால் மட்டுமே கடவுள் அருள் பெற முடியும் என்று சொல்வது கடவுளுக்குச் செய்யும் அவமானம்!’’  

’’அப்படின்னா நான் பூஜையின் போது சொல்லும் மந்திரங்கள் எல்லாம் கடவுளுக்குப் போய்ச் சேராதா?’’

’’பேசத் தெரியாத குழந்தையைக் கொஞ்சுவதற்கு தாயும், தந்தையும் மழலை மொழியில் என்னென்னவோ வார்த்தைகளை பேசுவார்கள். அதற்கெல்லாம் அர்த்தம் இல்லை என்பதாலே அவற்றை வீண் வார்த்தைகள் என்று சொல்ல முடியாது. கும்பிட வருபவர்களுக்கு நிம்மதி கொடுப்பதால், உன்னுடைய மந்திரத்திற்கும் பலன் இருப்பதாகவே எடுத்துக் கொள்…’’

பூசாரியாக இருப்பதால் மட்டும் கடவுளிடம் தனியே மதிப்பும்  பலனும் கிடைக்காது என்பதில் சங்கரன் மிகவும் கவலை அடைந்திருந்தார். அவரை திசைதிருப்பும் விதமாக அவரது குடும்பம் பற்றி விசாரித்தேன்.

’’பொம்பளைங்களை புரிஞ்சுக்கவே முடியாதா சாமி, தேவதை மாதிரி இருக்கிற என் பொண்டாட்டி சில நேரத்தில பேய் மாதிரியும் இருக்கா…’’ என்றார்.

’’இதைத்தான் அவரும் சொல்லுவார். பெண்களை தெய்வமாக வைத்து பூஜிக்கும் இதே மனிதகுலம்தானே, அவளை சதைப் பொருளாக வைத்து வியாபாரமும் செய்கிறது. அவளை உயரத்தில் தூக்கி வைப்பது அல்லது கீழே போட்டு மிதிப்பது என்று இரண்டு துருவங்களில்தான் கையாளுகிறது உலகம். அதனாலே அவள் அதிசயமாகவும், ரகசியமாகவும் மட்டுமல்ல ஆபத்தாகவும் மாறிப் போனாள். தன்னை அடக்கியாள நினைக்கும் ஆண்களின் சுயநலத்தை வெறுத்து, அவர்களிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள பல்வேறு அவதாரம் எடுக்கிறாள். அதனாலே அவள் ஒவ்வொரு கணமும் பெண் புரியாத புதிராகத்தான் இருப்பாள். அவளை முழுமையாக அறிந்துகொள்ள நினைக்காதே, நீ காணாமல் போய்விடுவாய்…’’

’’நான் கேட்கிறதால் எங்க வீட்டுப் பிரச்சினைன்னு நினைக்காதீங்க, ஏன் இப்ப பெண்கள் தப்பு பண்றது அதிகமாயிடுச்சு?’’

’’பெண்களும் ஆண்களும் சேர்ந்துதானே தப்பு செய்ய முடியும்? அப்படியென்றால் தப்பு செய்யும் ஆண்களின் எண்ணிக்கையும் அதிகமாயிருக்கிறது என்றுதானே அர்த்தம்? தனியாகப் பெண்களை பிரித்து குற்றம் சாட்டாதே. ஒவ்வொரு பெண்ணின் தவறுக்குப் பின்னாலும் கண்டிப்பாக ஆண் இருப்பான்’’  என்றதும் அமைதியடைந்தார்.

ஆளரவமற்ற அந்த நேரத்தை மரங்களின் அசைவும், வண்டுகளின் சப்தங்களும் இன்னும் அழகாக்கின. உடம்பை அசைக்கவும் சோம்பேறித்தனமாக இருந்தாலும், அதுவும் சுகமாக இருந்தது.

’’சாமி… சுனாமி, புயல்னு அடிக்கடி வர்றதைப் பார்த்தா விரைவில் மனிதர்களே இல்லாத நிலை வரும் போலிருக்கே?’’

’’மனிதர்களுக்கு உயிர் பயம் இருக்கும் வரை, மனித குலம் அழியவே அழியாது. பயம்தான் மனிதகுலத்தை இன்னமும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது…’’

’’புரியலையே சாமி’’

’’ஆரம்ப காலங்களில் காட்டு மிருகங்களுக்குப் பயந்து மனிதன் ஒன்று சேர்ந்து வாழத் தொடங்கினான். அதற்குப்பின் எதிரி குழுவினருக்குப் பயந்து ஒற்றுமையாக வாழத் தொடங்கினான். இன்று அண்டை நாட்டுக்காக, அரசுக்காக, சட்டத்துக்காக பயந்து குடும்பமாக, தெருவாக, ஊராக சேர்ந்து வாழ்கிறார்கள்…’’

’’மனிதன் எதற்குமே பயப்பட வேண்டியதில்லை எனும் அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்து விட்டதே..?’’

’’இப்பொழுது மனிதனை பயமுறுத்துவதே விஞ்ஞானம்தானே. பயணிகள் விமானத்தை விட போர் விமானங்கள்தான் அதிகம். நேருக்கு நேராக சண்டை போட்ட காலம் போய், இன்று உயிர் அணுக்களை காற்றில் அனுப்பியே மனிதகுலத்தை பயமுறுத்த முடிகிறது. இன்னும் சொல்லப் போனால் அணுகுண்டு பயத்தினால்தான் பல நாடுகள் போர் நிகழ்த்தாமல் இருக்கிறது. இந்த பயம்தான் மனிதகுலத்தை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது…’’

‘’அப்படின்னா, அறிவியல் வளர்ச்சி நல்லதுக்கு இல்லைன்னு சொல்றீங்களா?’’

’’நான் சொல்வதால் எந்த அறிவியல் வளர்ச்சியும் நின்றுவிடப் போவதில்லை. வளர்ச்சி என்பது நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். ஆனால் ஒவ்வொரு வளர்ச்சியின் மறுபக்கமும் அழிவும் சேர்ந்தே வளரும். தொழிலில், விவசாயத்தில் பெரும் புரட்சி நடந்திருப்பது தெரிகிறது. ஆனால் அதனுடைய எச்சமான புகையும், மாசு கலந்த நீரும்தான் இன்றைய மனிதனுக்கு உண்டாகும் பல்வேறு நோய்களுக்கும் காரணம். ஒருபுறம் மனிதனுக்கு நிறைய சம்பளம் கொடுக்கும் பிரமாண்டமான தொழிற்சாலைகள்தான், விஷத்தன்மை நிறைந்த காற்றையும், நீரையும் வெளியே அனுப்புகின்றது. இவற்றையெல்லாம்விட மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த அறிவியல் வளர்ச்சிகளால் பெறும் பயன்கள் எல்லாமே மேல் மட்ட மக்களுக்கு மட்டும்தான். ஆனாலும் இவற்றில் இருந்து தப்பித்து மனிதனால் மீண்டும் காட்டுவாசியாக வாழமுடியாது என்பதால் அறிவியல் புரட்சிகளுக்கான விலையை கொடுத்துத்தான் தீரவேண்டும்…’’

’’அதான் உலகை காப்பாற்ற சுற்றுச்சூழல் இயக்கம் வந்தாச்சே… அரசாங்கமும் நிறைய உதவி செய்றாங்க…’’

‘’ஒருபுறம் கடன்களை அள்ளிக் கொடுத்து தொழிற்சாலைகளை வளர்த்துவரும் அரசுகள், அந்த பாவத்திற்கு பிராயசித்தம் போன்று பசுமை இயக்கங்களுக்கு உதவி செய்கிறது. ஆனால் இந்த இயக்கங்களால் நிலைமையை மாற்றிவிட முடியாது என்பது அந்த இயக்கத்தினருக்குத் தெரியும், அரசுக்கு தெரியும், ஏன் அந்த தொழிற்சாலைகளுக்கும் தெரியும். ஏனென்றால் அந்த பசுமை இயக்கங்களை செயல்படுத்துவதும் பெரும் முதலைகளே. ஆனால், மக்கள் மட்டும் ஏதோ நடந்துவிடப் போகிறது என்று ஆவலோடு காத்துக்கொண்டே இருப்பார்கள்.’’

’’நீங்க சொல்றதைப் பார்த்தா இந்த உலகமே தவறான பாதையில் போகுது போலிருக்கே…’’

’’இந்த உலகம் முழுமையுமே தங்களுக்காக படைக்கப் பட்டது என்ற எண்ணத்தில் மனிதர்கள், எதையும் செய்யும் உரிமையுடன் செயல்படுகிறார்கள். அவன் செய்யும் தவறுகளால் என்றாவது ஒரு நாள் இந்த உலகில் மனிதர்கள் மட்டுமின்றி, வேறு எந்த உயிர்களுமே இல்லாமல் போகலாம். எந்த உயிருமே வாழ லாயக்கில்லாமல் போனாலும் பூமிக்கு எதுவும் நேராது. அது மீண்டும் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும். அப்போது மீண்டும் மரமும், பறவையும், விலங்குகளும், மனிதர்களும் தோன்றலாம். அதற்காக எந்த கடவுளும் அவதாரம் எடுத்து வரவேண்டியதில்லை, எல்லாம் தானே நடந்துவிடும்.’’

’’யாரோ சிலர் செஞ்ச தப்புக்கு எதுக்காக எல்லா மனிதர்களுக்கும் தண்டனையா?’’

’’ஆம் சங்கரா. மனிதர்கள் நன்மைக்காகவே உழைத்த இயேசு, காந்தி போன்றவர்களுக்கு இந்த உலகம் என்ன பரிசு கொடுத்தது என்று தெரியாதா? நல்லவராக வாழ்வதும், கெட்டவராக வாழ்வதும் அவரவர் இயல்பு என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். நல்லதுக்கு பாராட்டுப் பத்திரம் கொடுப்பதும், கெட்டவர்களைத் தண்டிப்பதும் கடவுளின் வேலையில்லை. மாட்டிக் கொள்ளாமல் தவறு செய்பவன், சட்டத்திடம் இருந்து தப்பித்துக் கொள்வது உண்டு. அதுபோலவே நல்லவன் வாழ்நாள் முழுவதும் துன்பப்படுவதும் உண்டு. இதற்கு முற்பிறவியை காரணம் காட்டித்தான் பல மதங்கள் இன்னமும் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறது. சில இடங்களில் எத்தனை அடி தோண்டினாலும் தண்ணீர் வருவதில்லை, ஆனால் தோண்டியதும் தண்ணீர் வரும் இடங்களும் உண்டு. அப்படித்தான் மனிதர்களுக்கு வாழ்க்கை அமைந்து விடுகிறது. சிலர் எத்தனை நல்லவராக இருந்தாலும் மிகப்பெரிய நன்மை பெற்று விடுவதில்லை. இதுபோன்ற பிரச்னைகளுக்கு யாரிடமும் தீர்வு இல்லை என்பதுதான் உண்மை’’

’’எதிர்காலத்துக்காக ஒழுங்காகத் திட்டம் போட்டு வாழ்ந்தால்..?’’

’’எதிர்காலத்துக்காக திட்டம் போடுபவனால் நிகழ்காலத்தில் வாழவே முடியாது சங்கரா…’’

’’வங்கிகளில் சேமிப்பது, இன்சூரன்ஸ் எடுப்பதுகூட அபத்தம் என்கிறீர்களா?’’

’’இன்று சாப்பிடாமல் நாளைய உணவுக்காக சேமிக்காதே என்கிறேன். ஒருவேளை அந்த ‘நாளை’ வராமலே போகலாம்’’

’’உங்ககூட பேசிக்கிட்டு இருந்தா வாழ்க்கை மேல பயம்தான் வருது. நீங்கள் எதையுமே தோல்விக் கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்கள், எதிர்மறையாகவே சிந்தனை செய்கிறீர்கள்’’  என்று குற்றம் சாட்டினார் சங்கரன்.

’’இத்தனை நேரம் என்னிடம் பேசிய பின்னரும் இப்படிப் பேசத் தோன்றுகிறதா? இந்த மனிதகுலம் அழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்று நான் சொல்வது தீர்க்கதரிசனம் அல்ல. இன்றைய நிகழ்வு இப்படியே தொடர்ந்தால் நடக்கப் போவதைச் சொல்கிறேன்.  உண்மையைச் சொன்னால் எதிர்மறை சிந்தனையாகத் தெரிகிறது.

ஆனால், மக்கள் அனைவரையும் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் வழி என்னிடம் இருக்கிறது, என்னை பின்பற்றுங்கள். நான் சொல்லும் நேரத்தில் தியானம் செய்யுங்கள், பூஜை செய்யுங்கள், மந்திரம் ஓதுங்கள் என்றால் என்னை தீர்க்கதரிசி என்று கொண்டாடுவீர்கள் அப்படித்தானே? உண்மையைச் சொல்வதற்காக நான் கவலைப்படவில்லை. மனிதகுலம் தோல்வியை நோக்கிப் போவது எத்தனை உண்மையோ, அத்தனை உண்மை இந்த மண்ணிலேயே ஒவ்வொரு மனிதனும் எத்தனை நெருக்கடிகள், துன்பங்கள் வந்தாலும் சொர்க்கத்தைக் காணமுடியும் என்பதும். சின்னச் சின்ன சந்தோஷங்களை பேரின்பமாக நினைத்து மனிதர்கள் வாழ்வதைப் பார்ப்பதுதான் என் ஆவல்…’’ என்று சாய்ந்து கொண்டேன்.

’’சாமி நீங்க தடுத்தாலும் நான் கேட்கப் போறதில்லை. உங்ககிட்ட பேசுனதை மனசுல வைச்சுக்கிட்டு இனி நான் ஊரெல்லாம் போய்பேசப் போறேன். நான் உங்களோட சீடன்னு சொல்லப்போறேன். அதேநேரம் ஏதாவது ஒரு கடவுளை ஆதர்சமா வச்சிக்கிடலாம், அது யாரா இருக்கலாம்னு மட்டும் சொல்லுங்க…’’  என்று கேட்டார் சங்கரன்.

 ‘‘எல்லா கடவுளுமே மனிதர்களால் படைக்கப் பட்டவர்கள்தானே, அதனால் உனக்குப் பிடித்த ஒன்றை நீயே தேர்வு செய்துகொள். இல்லையென்றால் நீயே புதிதாக ஒன்றை உருவாக்கிக் கொள்…’’  என்றேன்.

’’என்ன சாமி… இப்படிச் சொல்றீங்க…’’ என்று வாய் பிளந்தார் சங்கரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *