மகேந்திரன் மிகுந்த சிந்தனையுடன் ஞானகுருவின் அருகே வந்து அமர்ந்தார். ‘எங்கள் வீட்டுக்கு அருகே ஒரு துப்புரவுத் தொழிலாளி வசிக்கிறான். தினமும் காலை முதல் மாலை வரையிலும் பல சாக்கடை அடைப்புகளை நீக்குகிறான், தேவைப்பட்டால் குழியில் இறங்கியும் அடைப்புகளை சரி செய்கிறான். வேலை முடிந்ததும் மது வாங்கிக் குடித்துவிட்டு வருகிறான். மனைவியிடம் கொஞ்சநேரம் சண்டை போட்டுவிட்டு, நிம்மதியாக உறக்கத்திற்குப் போய்விடுகிறான். அவனுக்குப் போதை நல்லதுதானே செய்கிறது..? அவன் நிம்மதியாக இருக்க போதை உதவுகிறது என்பதுதானே உண்மை?’’ கேள்வியைக் கேட்டுவிட்டு பதிலுக்காக காத்திருந்தார்.

‘’கடுமையாக உழைக்கும் தொழிலாளி, உடல் அலுப்பை மறைப்பதற்கு மது குடிப்பது தவறு இல்லை, பிறந்த நாள், திருமணநாள் போன்ற விழாக்களில் குடிப்பது தவறு இல்லை, ஆண்கள் பீர் குடிப்பதும் பெண்கள் ஒயின் குடிப்பதும் தவறு இல்லை என்பதெல்லாமே மது குடிப்பதற்கு ஏற்படுத்திக்கொள்ளும் வாய்புகள்தானே தவிர உண்மை இல்லை.

கடுமையாக உழைக்கும் மனிதனுக்கு மது குடித்தால்தான் என்றில்லை, சாதாரணமாகவே தூக்கம் எளிதில் வந்துவிடும். ஆகவே, அவன் மது குடிக்க வேண்டியதில்லை. ஒருவேளை, அவன் பார்க்கும் வேலையை நினைத்து வருத்தப்பட்டு, கவலைப்பட்டு, கேவலப்பட்டு அதற்காக குடிக்கிறான் என்றால், அது தீர்வு இல்லை. ஏனென்றால், மது குடிப்பதால் அவனுடைய பிரச்னை அப்படியேதான் இருக்கிறது. அவன் நாளைக்கும் அதே வேலைக்குப் போவான், நாளைக்கும் அதே மாதிரி குடிப்பான்.

குடிப்பதால் கொஞ்சநேரம் தன்னையே மனிதன் மறக்கிறான் என்பது உண்மைதான். நல்ல தூக்கத்தில் அப்படித்தான் நிகழ்கிறது.. ஒரு நல்ல சினிமா பார்க்கும்போது தன்னையே மறந்துவிடுகிறான். ஒரு விறுவிறுப்பான புத்தகம் படிக்கும்போதும் தன்னையே மறந்துவிடுகிறான். கோயிலுக்குப் போய் பூஜையில் கலந்துகொள்ளும் போதும் தன்னை மறக்கிறான். அப்படித்தானே போதையிலும் நடக்கிறது. ஆனால், மற்றவற்றில் இல்லாத அபாயம் குடியில் இருக்கிறது. ஆம், ஒவ்வொரு நாள் குடிக்கும் மதுவும் உடலில் கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சாக மாறுகிறது.

ஒரு கட்டத்தில் என்ன பிரச்னைக்காக குடிக்கத் தொடங்கினான் என்பது மறைந்துவிடும், குடிப்பதுதான் பிரச்னையாக மாறிவிடும். குடிப்பதற்கு பணம் இல்லாதது மிகப்பெரிய சிக்கலாகத் தெரியும். ஆகவே, எந்த குடிகாரனையும் நியாயப்படுத்தாதே. காதல் தோல்வி, வியாபார நஷ்டம், உறவினர் மரணம் போன்ற பிரச்னைகளுக்கும் குடி தீர்வு கிடையாது. ஏதேனும் பிரச்னையை மறக்க நினைப்பதைவிட, அந்த பிரச்னையை ஆராய்வதுதான் நல்லது.

தாங்கமுடியாத பிரச்னை வரும்போது குடிப்பது, நேரடியாக தோல்விக்கு அழைத்துச்சென்றுவிடும். ஆகவே குடிகாரனை எந்த காலத்திலும், எந்த காரணத்துக்காகவும் ஆதரிக்க வேண்டாம்’’ என்றார் ஞானகுரு.

தெளிவுக்கு வந்திருந்தார் மகேந்திரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *