அது ஒரு காலம். ஒவ்வொரு வீட்டிலும் ஏழெட்டு பிள்ளைகள் இருப்பார்கள். எப்போதும் சாப்பிடுவதில் முதல் உரிமை ஆண் பிள்ளைகளுக்குத்தான். ஏனென்றால் அவர்கள்தான் உடல் உழைப்பைக் கொடுப்பவர்களாக, உணவு சம்பாதிப்பவர்களாக இருப்பார்கள். அதனால் ஆண்கள் சாப்பிட்டபிறகான மிச்சத்தை தின்றுதான் அம்மாவில் இருந்து கடைசி பாப்பா வரையிலும் உயிர் வாழ்வார்கள் என்பதால் பெண் பிள்ளைகள் பெரும்பாலும் நோஞ்சானாகத்தான் இருப்பார்கள்.

இந்த சூழலில்தான் பெண் வயசுக்கு வந்ததை, பூப்பு விழாவாக கொண்டாடினார்கள். அவளை தனிமைப்படுத்தி ஓய்வு கொடுத்தார்கள். நிறையநிறைய சத்தான உணவுகளை சாப்பிடக்கொடுத்தார்கள். உளுந்தங்களி, நல்லெண்ணெய், பால், முட்டை, மாமிசம் போன்ற விதவிதமான உணவுகளைக் கொடுத்து உடல் கொழுக்க வைத்தார்கள். உறவுகளுக்கு எல்லாம் தகவலை சொல்லிவிட, அவர்களும் வருகைதந்து, விருந்து சாப்பிட்டு பெண்ணை நல்லபடியாக கவனித்துவிட்டுப் போனார்கள்.

பெண்ணுக்கு இந்த அளவுக்கு திடீர் முக்கியத்துவம் கொடுத்ததன் பின்னணியில் ஒரு மிகப்பெரிய அறிவியல் அல்லது சதி இருந்தது என்றே சொல்லலாம். அதாவது இப்போது பெண்ணுக்கு போதிய ஊட்டச்சத்துக்களைக் கொடுத்து வளர்த்தால்தான், அவளால் விரைவில் திருமணம் முடிக்கும் ஆணுக்கு ஈடுகொடுத்து இன்பம் தரவும், அவன் வாரிசுகளை பெற்றுத்தரவும் முடியும். இப்போது போன்று மேட்ரிமோனியல் வசதி அந்தக் காலத்தில் இல்லை. அதனால், ‘எங்களிடம் திருமண வயதில் ஒரு பெண் இருக்கிறது’ என்பதை சொல்வதற்காக வசதி படைத்தவர்களில் இருந்து ஏழைக் குடும்பத்தினர் வரையிலும் பூப்பு விழாவை ஒரு சடங்காக கொண்டாட வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள். பாவாடை கட்டத்திணறிய வயதில் சேலையைக் கட்டிவிட்டு பெரிய மனுஷியாக, காட்சிப் பொருளாக மாற்றினார்கள்.

திடீரென முள் கிரீடம் சூட்டப்படுவதால் அந்தக் குழந்தையின் மனம் என்னவாகும் என்பதைப்பற்றி யாரும் கவலைப்படுவதே இல்லை. நேற்றுவரை ரோட்டில் விளையாடிய பிள்ளை, ஒரே நாளில் பெரிய மனுஷியாக மாற்றப்பட்டு தனிமைப்படுத்தப்படுவார்கள். சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு நாய்க்குட்டிக்கு கழுத்துப்பட்டி போட்டு கட்டிவைப்பதுதான் சடங்கின் நோக்கம் என்று சொல்லலாம். இதைத்தான் பருவம் அடையும்போது ஆணுக்கு சிறகு முளைக்கிறது ஆனால் பெண்ணுக்கோ விலங்கு முளைக்கிறது என்று பாடிவைத்தார்கள்.

என்ன காரணங்களுக்காக முன்பு சாமத்திய சடங்கு கொண்டாடப்பட்டதோ, அதற்கான காரணங்களில் ஏதாவது ஒன்று இப்போது மிச்சம் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து பார்க்கலாம். இப்போது ஒவ்வொரு வீட்டுக்கும் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் மட்டுமே இருக்கிறார்கள். அதனால் உணவுக்கு குறிப்பாக சத்தான உணவுக்கு பஞ்சமே இல்லை. இன்னும் சொல்லப்போனால் இன்றைய தலைமுறையினருக்கு பசி என்றால் என்னவென்றே தெரியாது. இப்போது பிள்ளைகளிடம் இருக்கும் பெரும் குறைபாடு என்னவென்றால் அதிகம் சாப்பிடுவதுதான்.

ஆம், தேவைக்கும் அதிகமாக சாப்பிட்டு உடல் வளர்ச்சி அபரிதமாக இருப்பதால் முன்பு 13 வயதில் நிகழ்ந்த பூப்படைவு இன்று 10 வயதிலேயே நிகழ்ந்துவிடுகிறது. இப்போது பிள்ளைகளுக்கு படிப்பு தவிர வேறு வேலைகள் எதுவுமே இல்லை. அதனால் எப்போதும் தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டு ஓய்வில்தான் இருக்கிறார்கள். முன்பு வீட்டில் பெண் பிள்ளைகள் செய்துவந்த வேலைகளை எல்லாம் மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின் செய்துவிடுகிறது. முன்பு வயசுக்கு வந்தவுடன் திருமணம் முடித்துவைப்பது ஒரு கடமையாக இருந்தது. இன்று 18 வயசுக்கு முன்பு பெண்ணுக்குத் திருமணம் முடிப்பது தண்டனைக்குரிய குற்றம். அதனால் முன்பு விழா நடத்தப்பட்டதற்கான அவசியங்கள் எல்லாம் வழக்கொழிந்துவிட்டன. ஆனாலும் விழாவை மட்டும் இன்னமும் கொண்டாடுவது அவசியம்தானா என்பதை பெற்றோர்கள் நிச்சயம் யோசிக்க வேண்டும்.

வயசுக்கு வருவது என்றால் என்னவென்பதை அறிவியல் ரீதியாகத்தான் பார்க்கவேண்டும். தாயின் வயிற்றில் இருந்து பெண் குழந்தை வெளியே வரும்போது, அதன் சினைப்பையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கருமுட்டைகள் இருக்கின்றன. குறிப்பிட்ட வயதில் ஹார்மோன் சுரப்பு தூண்டப்பட்டதும் மாதம் ஒரு கருமுட்டை மட்டும் முதிர்ச்சியடைந்து சினைப்பையில் இருந்து கருப்பை நோக்கி நகர்கிறது. சினைப்பையில் இருந்து வெளியே வரும் கருமுட்டையானது, ஆணின் விந்தணுக்களை சந்திக்கவில்லை என்றால் கருப்பைக்குச் சென்று அங்கேயிருக்கும் ரத்த அணுக்களுடன் கலந்து பிறப்புறுப்பு வழியே ரத்தமாக வெளியேறுகிறது. கருமுட்டை சிதைந்து ரத்தமாக வெளியே வருவதுதான் மாதவிடாய் எனப்படுகிறது. முதன்முறையாக மாதவிடாயை பெண் சந்திக்கும் நிகழ்வுதான் பூப்படைதல் எனப்படுகிறது.

குப்புறவிழுதல், எழுந்து உட்கார்தல், நடக்கத் தொடங்குதல், பேசத் தொடங்குதல், ஓடத்தொடங்குதல் என்று உடல் அடையும் மாற்றங்களில் ஒன்றுதான் இந்த பூப்படைதல். இது அத்தனை பெண்களுக்கும் நிகழும் இயற்கையான ஒரு நிகழ்வுதான். இந்த சாதாரண உடல் மாற்றத்தை எதற்காக தண்டோரா போட்டு ஊர் முழுவதும் சொல்லவேண்டும்? தனது சமூக அந்தஸ்தை வெளிச்சம் போட்டுக் காட்டவும் ஃப்ளெக்ஸ் அடித்து விளம்பரப்படுத்தவும் பெண்ணின் உடல் மாற்றத்தை பயன்படுத்த வேண்டுமா? கொடுத்த மொய்களை வரவு வைப்பதற்கு பெண் ஒரு தூண்டில் சாதனமா?

பிறகு என்னதான் செய்யவேண்டும்?

தன்னுடைய உடலிலும் மனதிலும் ஏற்பட்டிருக்கும் திடீர் மாற்றங்களுக்கான காரணம் தெரியாமல் தடுமாறும் பெண் குழந்தைக்கு ஆறுதலும் தேறுதல் சொல்லி உண்மையைப் புரியவைக்க வேண்டும். ஆண்டாண்டு காலமாக பெண் உடலில் நிகழும் ஒரு சாதாரண மாற்றம், இதனால் சின்னச்சின்ன அசெளகரியங்கள், வேதனைகள் இருந்தாலும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று கற்றுக்கொடுக்க வேண்டும். இந்த நேரத்தில் சத்தான உணவும் ஓய்வும் அவசியம் என்பதை புரியவைக்க வேண்டும்.

மாதவிலக்கு குறித்து அருவருப்பு அடையாமல் குழந்தை பெறும் தகுதி வந்துவிட்டது என்ற பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். வயிற்றுவலி, ரத்தப்போக்கு போன்றவற்றை பிறருக்குத் தெரியாதவண்ணம் சமாளிப்பதற்கான சாதனங்களும் மருத்துவமும் வந்துவிட்டன. அதனால் பூப்புவிழா போன்ற தேவையற்ற விஷயங்களைத் தூக்கிப்போடுங்கள். வாடிக்கையாளர்களை கவரும் கவர்ச்சி பொம்மையாக அவளை மாற்றவேண்டாம்… ஆம், அவள் உங்கள் வீட்டு இளவரசி. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *