தன்னைக் காப்பாற்ற முடியாமல் தற்கொலை செய்துகொண்ட ஒரு பெண், இப்போது ஊர் மக்களை காப்பாற்றுகிறாளா என்று கிண்டலாகக் கேட்டதும் ஆவேசமானார்கள். உதடுகள் துடிக்கப் பேசினார்கள்.

’’சாமி.. செத்துப் போன கர்ப்பிணியை மதிப்புக் குறைவாப் பேசாதீங்க. அவ ரொம்பவும் துடியானவ, எல்லை தாண்டி வந்து ரத்தம் குடிச்சிருவா…’’ என்று அதிர்ச்சியுடன் சொன்னார்கள்.

’’அப்படின்னா, அவளோட மரணத்துக்குக் காரணமான ஆட்களை எல்லாம்  தேடிப்பிடிச்சு கொன்னுட்டாளா?’’

இருவரும் பதில் எதுவும் பேசமுடியாமல் அமைதியாக இருந்தனர். அவர்களை மேலும் சூடாக்க விரும்பாமல் பேசத் தொடங்கினேன்.

’’ஒவ்வொரு ஊரிலும் இப்படி துர்ப்பாக்கியமாக சிலர் உயிர்விட நேர்கிறது. இப்படி இறந்தவர்களை சிறு தெய்வங்களாக மக்கள் கும்பிடுவது வாடிக்கையாக நடப்பதுதான். ஆனால், அவர்களைக் கண்டு மக்கள்  பயப்படுவது ஏன் தெரியுமா? ஏதோ ஒரு வகையில் அந்த பெண்ணின் மரணத்திற்கு இந்த ஊரும், மக்களும் காரணமாகிவிட்ட குற்ற உணர்ச்சிதான். இத்தனை காலத்துக்குப் பின்னரும் உங்களுக்கு அதுபோன்ற குற்ற உணர்ச்சிகள் தேவையில்லை என்பதால் அந்த குப்பைகளைத் தூக்கி எறியுங்கள்…’’ என்றேன். 

’’அப்படின்னா… அந்த இடத்துல காளியம்மனுக்கு ஒரு கோவில் கட்டிரலாமா?’’

’’குழந்தையால் அம்மாவின் முந்தானையை பிடித்துக் கொள்ளாமல் தூங்க முடியாது என்பது போன்று எதையாவது பிடித்துக் கொள்ள ஏன் அலைகிறீர்கள்? அந்த புளிய மரத்திற்கு மஞ்சள் ஆடை அணிவித்து, சந்தனம், குங்குமம் வைத்து அலங்காரம் செய்திருப்பீர்களே…’’

’’ஆமா சாமி..’’

’’அந்த மரத்தின் அருகே இறந்துபோன பெண்ணின் நினைவாக அங்கே ஒரு இலவச மருத்துவமனை கட்டுங்கள்…” என்றேன்.

’’நீங்க சொல்றமாதிரி எல்லாம் எங்க கிராமத்துல போய் பேசமுடியாது சாமி, எங்களை பைத்தியம், முட்டாள் என்பார்கள்…’’

‘’ஒரு ராஜ்யத்தையே துறந்து புத்தர் ஓடியபோது அவரை முட்டாள் என்றும்தான் சொன்னார்கள். மன்னிப்பு கேட்க மறுத்த சாக்ரடீசையும் முட்டாள் என்றார்கள். பிறர் சொல்கிறார்கள் என்பதால் நீங்கள் முட்டாளாக மாறிவிடப் போவதில்லையே.’’

‘‘எங்க ஊருப்பக்கம் ஒரு தடவை வந்து பாருங்க, அப்பத்தான் அவங்க சூன்யம், வசியம், செய்வினைன்னு எப்படியெல்லாம், எதுக்கெல்லாம் பயப்படுறாங்கன்னு தெரியும். எங்களோட நீங்களும் வந்து மக்களுக்கு புரிய வையுங்களேன்…’’

’’எனக்குக் கால்களில் வேர்கள் கிடையாது என்பதால், எங்காவது சுற்றிக் கொண்டுதான் இருப்பேன், மலையில் கொஞ்சகாலம் இருந்துவிட்டு திரும்பும் போது உங்கள் ஊருக்கு வருகிறேன்’’ என்றதும் இருவரும் திருப்தியடைந்தார்கள். அனைவரும் எழுந்து நடக்கத் தொடங்கினோம். கொஞ்சநேரத்திலேயே செண்பகா அருவியின் சப்தம் நெஞ்சை ஜில்லென்று குளிரவைத்தது. அருவிக்கு வாசல் போன்று இருந்த செண்பகாதேவி கோயிலை நெருங்கி கொஞ்சநேரம் உற்றுப் பார்த்தேன். எந்த ஒரு சிறு மாற்றமும் தென்படவில்லை. வெளியே வந்தபோது, ஆலயத்தின் பின்புறம் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் என்னையும் அழைத்தார்கள். அவர்களை புன்னகையால் மறுதலித்துவிட்டு செண்பகா தேவி அருவியைப் பார்த்தேன். என்னை வரச்சொல்லி அழைத்தது.

அருவிக்குள் நுழைந்து ஆசைதீர ஆனந்தக் குளியல் போட்டேன். அந்தக் குளியல் மட்டும் போதாது என்று தோன்றவே, குளம் போன்று கட்டியிருந்த நீரில் குதித்து அப்படியே அமர்ந்தேன். குளிக்காமல் பாறையின் மீது அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சங்கரனிடம், ‘‘ஏன் குளிக்கவில்லை?’’ என்று கேட்டேன்.

’’உங்களை மாதிரி சந்தோஷமா அனுபவிச்சுக் குளிக்க இதுல என்ன இருக்குன்னு தெரியலை. எப்பவும் குளிக்கிறதுதானேன்னு சலிப்பா இருக்கு’’ என்றார்.

’’அதானே சாப்பிடவும், தூங்கவும்தான் எவருக்கும் சலிப்பதேயில்லை…’’ என்றதும் என்னுடன் சேர்ந்து சங்கரனும் சிரித்தார். அதற்குள் கிராமத்து இளைஞர்களும் குளித்து வந்தார்கள்.

’’குளியல் போட்டது நல்ல உற்சாகமாக இருக்கிறது, இந்த துடிப்பிலேயே தேனருவி நோக்கி நகர்ந்து விடுகிறேன்’’ என்றேன்.

’’இந்த வயதில் தேனருவி தரிசனம் அவசியம்தானா? உங்கள் உடல் தாக்குப் பிடிக்குமா? என்னுடன் கீழே வாருங்களேன் ஏதாவது உருப்படியாக செய்யலாம்’’ என்றார் சங்கரன்.

’’ஓ… உங்களுக்கு வீடு வாங்கித் தர்றதைப் பத்திச் சொல்றீங்களா?’’ என்று நான் சிரிக்க, ‘‘அடப்போங்க சாமி… மலைக்கு மேல நல்ல பாதை இல்லே, நிறைய தண்ணீர் ஓடுது, மழை வேற பெஞ்சுக்கிட்டே இருக்கு. அதான் கஷ்டமா இருக்கும்னு சொல்றேன்…’’  என்றார் சங்கரன்.

’’முயற்சி, ஆசை, அன்பு, புரிதலுடன் ஒரு காரியத்தைச் செய்யும்போது, உடல் எத்தனை சிரமம் அனுபவித்தாலும், அது துன்பமாகத் தெரியாது. எதிர்பார்ப்பதை விட வேகமாக அந்த காரியத்தை முடித்துவிட முடியும். ஆனால் துணிச்சல் அற்றவராக உங்களை நினைத்துக் கொண்டால், நீங்களே நினைத்தாலும் வெற்றிபெற முடியாது…’’

’’நீங்க சொல்றது சரிதான் சாமி… ஆனா, ஏதாவது புதுசா செய்ய நினைச்சாலே பயமா இருக்கே’’

‘’பயம் என்பது ஒரு சக்தி. அதனை பலவீனத்திற்கு மட்டும் பயன்படுத்தாமல் பலமாகவும் உபயோகப்படுத்தலாம். பயம் உடலுக்கு கூடுதலான ஆற்றலையும், கூர்மையும் கொடுக்கும் என்பதுதான் உண்மை. காட்டு விலங்குகளைக் கண்டு பயந்துபோய் நடுங்குவது பலவீனம். தப்பியோடுதலும், எதிர்த்துப் போராடுவதும் பயத்தில் இருந்து தோன்றும் பலம். அதனால் பயத்தை எதிரியாக கருதாமல் நண்பனாக நினைப்பதே நல்லது. இன்னும் சொல்லப் போனால் அவசரமாக முடிவெடுக்க வேண்டிய நேரங்களில் புத்திசாலித்தனத்தை நம்பாமல், உடல் சொல்வதைக் கேட்டாலே போதும். ஏனென்றால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டிய தேவை உடம்புக்கு இருக்கிறது.’’

’’ஆனா முழு நம்பிக்கையோடு பயமில்லாமல் செயல்படத் தொடங்கிய எத்தனையோ பேர் தோத்துப் போயிருக்காங்களே…’’

’’தோல்விக்கு மிக முக்கியமான காரணம் விடாமுயற்சி இல்லாததுதான். இன்னும் சில நொடிகளில் அல்லது சிறு இடைவெளியில் வெற்றி காத்துக் கொண்டிருப்பதுண்டு. ஆனால், அது புரியாமல் முயற்சியைக் கைவிட்டு தோற்றவர்கள்தான் ஏராளம். ஒரு முறை சூடுபட்டதும், தனக்கு இது சரிப்படாது என்று பின்வாங்குபவன் எந்த ஒரு காரியத்திலும் வெற்றிபெறப் போவதில்லை. கிடைத்த அனுபவத்தை மூலதனமாக்கிக் கொண்டவன், கீழே விழுந்ததை ஒரு பொருட்டாக கருதாதவன் மட்டுமே இந்த உலகில் வெற்றி பெறத் தகுதியானவர்கள்…’’ என்று சொன்னபடி தேனருவிக்குச் செல்லும் ஒற்றையடிப் பாதையில் நடக்கத் தொடங்கினேன்.

கொஞ்சதூரம் சென்று திரும்பிப் பார்க்க, எனக்குப் பின்னே சங்கரனும், கிராமத்து இளைஞர்கள் இருவரும் வந்து கொண்டிருந்தார்கள். நான் திரும்பியதைப் பார்த்ததும் வேகமாக அருகே வந்த சங்கரன், ‘‘நான் கடைசி வரைக்கும் மேல வரப்போறதில்லை, இன்னும் கொஞ்சதூரம் வர்றேன்’’ என்றார்.

அந்த இளைஞர்களில் ஒருவன் வேகமாக முன்வந்து, ‘‘சாமி… எனக்கு ஒரு கேள்வி இருக்கு…’’ என்று முன்வந்தான். சிரித்தபடி தலையசைத்தேன்.

’’என் பேரு ரவிக்குமார், கல்யாணம் முடிச்சு இரண்டு வருஷமாகுது. வீட்ல பார்த்து வைச்சு கல்யாணம் நல்லாத்தான் நடந்திச்சு. ஆனா என்னவோ அவளுக்கும் எனக்கும் ஆரம்பத்துல இருந்தே ஒத்துவரலை. அதனால மனசை மாத்துறதுக்காக நான் சாமி, கோயில், குளம்னு சுத்தத் தொடங்கிட்டேன். அவளை தள்ளிவச்சிட்டு இன்னொருத்தியை கட்டிக்கலாம்னு பார்க்கிறேன் சாமி. என் ஜாதகத்திலேயும் இரண்டுதார யோகம் இருக்கு’’ என்றான்.

’’இரண்டு தாரம் என்பதை யோகம் என நினைக்கிறாயா?’’ என்ற என் கேள்விக்கு பதில் சொல்லாமல் நின்றான்.

’’மீண்டும் ஒரு திருமணம் முடித்ததும் எல்லா சிக்கல்களும் தீர்ந்துவிடப் போகிறது என்று எண்ணாதே. முதல் மனைவி புகைப்படம் இருந்த இடத்தில் இன்னொருத்தியின் படத்தை மாட்டி அழகு பார்க்கப் போகிறாய். புதிய மனைவியாக ஒருத்தி வந்தால் அவளை நீ எப்படி நடத்துவாயோ, அதையே இப்போது இருப்பவளிடம் செயல்படுத்தலாமே.  உன் மனைவியிடம் பேசுவதற்குப் பயந்து கோயில், குளம் என்று சுற்றிக் கொண்டிருப்பதால் சிக்கல்கள் தீர்ந்துவிடப் போவதில்லை. அவளுக்கு எது தேவையென முதலில் தெரிந்து கொண்டு அதைக் கொடுக்கப் பார். அவளையே இரண்டாவது மனைவியாக நினைத்துக் கொள். இதுவரை நடந்தவற்றை மறந்து, அவளை ஒரு புதுப்பெண்ணாக நினைத்து உன் வாழ்க்கையைத் தொடங்கு’’ என்றேன்.

’’அவ இதுவரை என்னைப் பற்றிப் பேசியதையெல்லாம் எப்படி மறக்க முடியும்?’’ என்று ஆதங்கமாகக் கேட்டான்.

’’அவள் இதுவரை பேசியதை மட்டுமில்ல, அவளையே மறந்துவிடு என்கிறேன். அப்போதுதான் அவளை உன்னால் புதிய மனைவியாகப் பார்க்க முடியும். அது முடியாது என்று அடம்பிடித்தால், இன்னொரு மனைவியை கட்டிக் கொண்டு, இதே மாதிரி மீண்டும் பிரச்னைகளுடன் கோயில் கோயிலாக அலைந்து கொண்டிரு…’’ என்று பேசிக்கொண்டு இருந்தபோது திடீரென மேகங்கள் சேர்ந்து மழை பொழியத் தொடங்கியது.

குளித்து முடித்த ஆடை காய்வதற்குள், மீண்டும் மழையில் நனைவது சந்தோஷம் தரவே, நடையை வேகமாக எட்டிப் போட்டேன். பாதையை மறைக்கும்படி பகலிலேயே இருட்டிக் கொண்டு வருவதைப் பார்த்த இளைஞர்கள் பயந்துபோய் தயங்கி நிற்கவே… புன்னகையுடன் அவர்களை வழியனுப்பி வைத்தேன்.

’’சங்கரா உனக்குப் பயமாக இல்லையா?’’

’’சின்ன வயசுல அடிக்கடி வந்துட்டுப் போன இடம்தான். அவங்களுக்கு குற்றாலம் புதுசுங்கிறதால திடீர்னு இருட்டுனதும் பயந்துட்டாங்க. ஆமா, மேல தங்கப் போறேன்னு சொல்றீங்களே சாப்பிட என்ன செய்வீங்க?’’

’’நொண்டிச் சாமியார் சாப்பாட்டுக்கு என்ன செய்றாரு?’’

’’வேண்டாம், நான் என்னத்தையாவது சொல்வேன், உடனே கோள் சொல்லாதேன்னு பிரசங்கம் செய்வீங்க…’’ என்று சிரித்தார்.

’’பரவாயில்லை சொல்லு’’

’’காட்டு முயல், குரங்கைப்  பிடிச்சு அப்படியே கடிச்சுத் திங்கிறாருன்னு சொல்றாங்க’’

’’அவரே நொண்டியாக இருக்கும்போது ஓடும் முயலை பிடிக்க முடியுமா?’’

’’முயலோட குழியைப் பாத்து வச்சிக்கிட்டு ராத்திரி அமுக்க வேண்டியதுதான்…’’

’’நான் அவரைவிட மோசமானவன். மனிதர்களைப் பிடித்து தின்ன வேண்டியதுதான்…’’ என்று சிரித்தேன்.

’’செஞ்சாலும் செய்வீங்க… உங்களுக்குத்தான் பாவமும் கிடையாது, புண்ணியமும் கிடையாதே…’’ என்றவர் சற்று நேரம் கழித்து, ‘‘நீங்க யாரையும் குருவா நினைக்க மாட்டேங்கிறீங்க, அதுவாவது பரவாயில்லை. ஏன் யாரையும் சிஷ்யனாவும் ஏத்துக்க மாட்டேங்கிறீங்க. எனக்கு எதுவும் புரியவே இல்லை’’ என்றார்.

’’குரு, சீடர் என்ற உறவு பொய்யானது. ஆன்மிக குருக்கள் எல்லோரும் போலிச் சரக்குகளை விற்றுக் கொண்டிருக்கிறார்கள்…’’ என்றதும் எதுவும் பேசத் தோன்றாமல் சிலை போல் நின்றார் சங்கரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *