இரவு லேட்டாக படுப்பதுதான் சுகமாக இருக்கிறது, அதேநேரம் காலையில் லேட்டாக எழுவது கடும் தொந்தரவாக இருக்கிறது. அன்றைய தினம் முழுக்கவே பரபரப்பில் நகர்கிறது. நான் என்னதான் செய்வது என்று கேட்டார் மகேந்திரன்.
அவர் முதுகை தடவிக் கொடுத்தபடி பேசத் தொடங்கினார் ஞானகுரு. ’’குறைவாக அல்லது அதிகம் தூங்கிவிட்டதாக உன்னையே நீ குற்றம் சாட்டிக்கொள்ளத் தேவையே இல்லை. உடலுக்குத் தூக்கம் தேவைப்படுகிறது என்றால், அதுவே எடுத்துக்கொள்ளும். அதேநேரம், நல்ல விழிப்பு என்பது ஒவ்வொரு நபருக்கும் அவசியம்…’’ என்றதும் இடை மறித்தார் மகேந்திரன்.
‘’அதென்ன விழிப்பில் நல்ல விழிப்பு..?’’
‘’சீக்கிரம் எழுகிறாயோ அல்லது லேட்டாக எழுகிறாயோ உன் விழிப்பின் உதயத்துக்கு கொஞ்சம் மதிப்பு கொடு. ஆம், விழிப்பு வந்ததும் படபடவென எழுந்து விடாதே… ஒரு முழு நாளுக்கு உன் உடலை ஆயத்தப்படுத்து. கண்களை நன்றாக விழித்து ஒரு நிமிடமாவது உன் சுற்றுப்புறத்தைக் கவனி.
எப்போதும் நீ படுத்திருக்கும் அறை, அதே படுக்கை, அதே தலையணை என்றாலும் எல்லாவற்றையும் பார்த்து புன்னகை புரி. கை விரல்கள், கால் விரல்களை படுத்தபடியே சில நொடிகள் மடித்து நீட்டு. இன்று உனக்கு என்னென்ன வேலைகள் இருக்கின்றன, அதனை எப்படி, எப்போது முடிக்க முடியும் என்று திட்டமிடு. அதன்பிறகு மெதுவாக எழுந்து அமர்ந்துகொள். படுக்கையில் அமர்ந்தபடி உன் கழுத்தை இடம், வலமாகவும் மேலும் கீழுமாக சில நொடிகள் அசைத்துக்கொடு. அதன்பிறகு எழுந்து நில். கைகளை நன்றாக உயர்த்தி, இறக்கு. இவற்றை எல்லாம் செய்வதற்கு மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் போதும். அதன்பிறகு எப்போதும் போல் உன் வேலையைப் பார்…’’
‘’இப்படி செய்வதால் என்னாகும்..?
‘’தினமும் நல்ல விழிப்பு கிடைக்கும். பூரணமாக தூங்கிய சந்தோஷம் கிடைக்கும். உன் உடல் அன்றைய ஓட்டத்துக்குத் தயாராகிவிடும். முதியவர்களும், நோயாளிகளும் எந்த நேரத்தில் தவறி விழுகிறார்கள் என்று கேட்டுப் பார். பெரும்பாலும் கண் விழித்ததும் அவசரமாக எழுந்து நடக்கும்போது அல்லது நீண்டநேரம் உட்கார்ந்திருந்து எழுந்து நிற்கும் போதுதான் கீழே விழுவார்கள். ஏனென்றால் உறக்கத்திற்கும் விழிப்புக்கும் இடையில் மூளை இருக்கும் நேரத்தில், அவசரமாக நடப்பது கீழே விழ வைத்துவிடும். ஆகவே, படுக்கையறையில் சில நிமிடங்கள் அமைதியாக செலவழிக்கக் கற்றுக்கொள். அன்றைய தினம் உனக்கு பரபரப்பும் இருக்காது, படபடப்பும் இருக்காது’’ என்றார் ஞானகுரு.
புன்னகைத்தார் மகேந்திரன்.