சென்னை புறநகர் பகுதியில் 15 வயது நிரம்பிய ஒன்பதாம் வகுப்பு மாணவி சுகன்யா தற்கொலை செய்துகொண்ட செய்தியை யாரும் அக்கறையாக படித்திருக்கமாட்டீர்கள். படிப்பு சரியாக வரவில்லை என்று பெற்றோர் திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதாக வெளியான செய்தி உண்மையல்ல. ஆம், அவள் முறையற்ற உறவால் கர்ப்பம் அடைந்ததுதான் உண்மை. வயசுக் கோளாறு காரணமாக காதல் போதையில் விழுந்து, நண்பனுடன் உறவுகொண்டு எதிர்பாராதவிதமாக கர்ப்பம் அடைந்துவிட்டாள். அந்த உண்மை பெற்றோருக்குத் தெரியக்கூடாது என்று பயந்து தூக்கில் தொங்கிவிட்டாள். இது எங்கேயோ ஓர் இடத்தில் அரிதாக நடக்கும் சம்பவம் அல்ல என்பதுதான் அதிர்ச்சியான செய்தி. ஆம், திருமணம் ஆகாமல் கர்ப்பம் அடைபவர்கள் எண்ணிக்கை நாள்தோறும் பெருகிவருகிறது. சென்னையைச் சேர்ந்த பிரபல மருத்துவமனையின் பெண் மருத்துவரின் வாக்குமூலம்தான் இதற்கு அத்தாட்சி.

’கருவை கலைப்பதற்காக எங்கள் மருத்துவமனையைத் தேடிவரும் 13 வயதில் இருந்து 25 வயது வரையிலுமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் எண்ணிக்கை தினமும் அதிகரித்துவருகிறது. நடந்துவிட்ட தவறுக்கான வருத்தமோ, கவலையோ பெரும்பாலான பிள்ளைகளுக்கு இருப்பதில்லை. தோழிகளுடன், காதலனுடன் ஏன் பெற்றோருடனும் வந்து கருக்கலைப்பு செய்துகொள்கிறார்கள். கொழுத்த பணம் வருகிறது என்பதால் எந்த மருத்துவமனையும் கருக்கலைப்பு செய்வதற்கு மறுப்பதில்லை. 20 வாரங்களைக் கடந்த கருவை கலைக்கக்கூடாது என்ற சட்டம் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. இந்த சூழலுக்கான காரணங்களைக் கண்டறிந்து பெற்றோரும் அரசாங்கமும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இன்னும் மோசமான விளைவுகளை பெண் சந்திக்க நேரிடும்’ என்று ஆதங்கப்படுகிறார்.

ஆண்டாண்டு காலமாக ஆண்களால் ஏமாற்றப்பட்டு கர்ப்பம் சுமப்பது பெண்களுக்கு வாடிக்கைதான். கருக்கலைப்பினால் உயிர்விட்ட பெண்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. எத்தனையோ பெண்கள் குழந்தையைப் பெற்று குப்பைத் தொட்டியில் வீசிவிட்டுப் போயிருக்கிறார்கள். ஆனால் இவையெல்லாம் ஒட்டுமொத்த சமுகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே முன்பு நடந்தன. ஆனால் இப்போது மருத்துவமனைதோறும் கருக்கலைப்புக்கு பெண்கள் வரிசையில் நிற்பதற்கு காரணம் என்ன?

முக்கியமான முதல் காரணமாக செல்போனைத்தான் சொல்கிறார்கள் மனநல ஆய்வாளர்கள். கேமரா, இண்டர்நெட், கேம்ஸ், தொலைக்காட்சி, சாட் என சகலமும் செல்போனில் அடங்கிவிட்டது. அதனால் உட்கார்ந்த இடத்தில் இருந்தே உலகின் எந்த மூலையிலும் நடக்கும் நல்லதையும் கெட்டதையும் பார்த்துவிட முடிகிறது. மூடிய அறைக்குள் நடந்த மன்மத ரகசியங்கள் எல்லாமே வெட்டவெளியில் கொட்டிக்கிடக்கின்றன. தேடிச் செல்லாவிட்டாலும் இண்டர்நெட் தேடுதலில் இறங்கும்போது பாலியல் பக்கங்களைத் தாண்டி எவராலும் சென்றுவிட முடியாது.

இந்த பாலியல் பக்கங்களில் சுவாரஸ்யம் கொடுப்பதற்காக வித்தியாசமான தகவல்களே கொட்டிக்கிடக்கின்றன. அதாவது முறை தவறிய உறவு, சிறுவயது உறவு, ஒருபால் உறவு போன்றவை தவறு இல்லை என்பதை சொல்லும்வண்ணம் கதைகளும் படங்களும் வீடியோக்களும் நிறைந்துகிடக்கின்றன. இவற்றைப் படிக்கும் டீன் ஏஜ் பையன்களும் பிள்ளைகளும் இந்த உறவுக்காக ஏக்கம் கொள்கிறார்கள். உடலுறவு குறித்த தெளிவான புரிதல் இல்லாமை, உறவுக்குப் பின் ஏற்படும் சிக்கல் குறித்த அறியாமை, கர்ப்பம் குறித்த தெளிவு இல்லாமல் செயலில் இறங்கிவிடுகிறார்கள்.

’கர்ப்பம் அடையமாட்டோம்… அப்படியே அடைந்தாலும் எளிதில் கலைத்துவிடலாம்’ என்ற அசட்டு நம்பிக்கை காரணமாக எல்லை தாண்டுகிறார்கள். இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. முன்பு ஆணும் பெண்ணும் நெருங்கமுடியாத தூரத்தில் பிரித்து வைக்கப்பட்டு இருந்தார்கள். இன்று படிப்பதில் தொடங்கி வேலை செய்வது வரையிலும் ஆணும் பெண்ணும் இணைந்து பணியாற்றுகிறார்கள். பாக்கெட் மணி என்ற பெயரில் பெரும்பாலான நபர்களிடம் பணம் இருக்கிறது. நேரம் கிடைக்கிறது. அதனால் எளிதில் பிறபாலினத்தவரால் ஈர்க்கப்படுகிறார்கள்.

ஆண் நண்பர்களுடன் பேசுவதில் தப்பில்லை, ஆணுடன் சேர்ந்து சாப்பிடுவதில் தப்பில்லை, ஆண் நண்பனுடன் பீச் செல்வது தப்பில்லை, ஆண் நண்பனுடன் பிக்னிக் செல்வது தப்பில்லை என்று தங்கள் எல்லைக்கோட்டை கொஞ்சம்கொஞ்சமாக விரிவாக்கி படுக்கைக்கும் போகிறார்கள்.

பதின்ம வயது சாகஸங்களைத் தேடும் வயது என்பதுதான் உண்மை. இந்த வயதில் உடலும் மனமும்  ரகசிய உறவில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளத் துடிக்கும். என்ன விளைவுகள் நடந்தாலும் பரவாயில்லை என்று ஹார்மோன்கள் உசுப்பேற்றும். இவற்றை  எல்லாம், ‘கற்பு’ என்ற கயிற்றில் கட்டிப்போட்டு இருந்த மாயையும் இப்போது உடைந்துவிட்டது. அதனால் தைரியமாக  எல்லை மீறுகிறார்கள். அதில் சிலர் மட்டுமே மாட்டிக்கொள்கிறார்கள்.

மாட்டிக்கொள்பவர்களில் அதிகம் பாதிக்கப்படுவது எப்ப்போதும்போல் பெண் மட்டும்தான். அவளுக்கு கருக்கலைப்பில் இருக்கும் அபாயம், எதிர்விளைவுகள் புரிவதில்லை. கருவைக் கலைத்துவிட்டு இரண்டொரு நாட்கள் ஓய்வு எடுத்துக்கொண்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று அசட்டையாக நம்புகிறாள். உண்மையில் கருக்கலைப்பில் என்ன நடக்கிறது தெரியுமா?

கூர்மையான குழாய் போன்ற ஆயுதம் கருப்பைக்குள் செலுத்தப்பட்டு சிசுவின் உடல் உறுப்புகள் உறிஞ்சி எடுக்கப்படுகின்றன. சிசுவின் வளர்ச்சியைப் பொறுத்து, அதனை சின்னஞ்சிறு பகுதியாக வெட்டியெடுக்கவேண்டிய சூழலும் ஏற்படலாம். இதனால் தாய்க்கும் பக்கவிளைவுகள் உண்டாகின்றன. இந்த கொடூரம் காரணமாகத்தான் உலகில் இன்னும் பல நாடுகள் கருக்கலைப்பை சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளவில்லை. சரியாக சொல்வது என்றால் 79 நாடுகள் மட்டுமே கருக்கலைப்பை சட்டரீதியாக அங்கீகாரம் அளித்துள்ளன. நம் இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் சுமார் 20 லட்சம் சிசுக்கள் கலைக்கப்படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கணக்கில் காட்டப்படாத கருக்கலைப்புகள் இந்த எண்ணிக்கையில் அடங்குவதில்லை.

இந்த நிலையை மாற்றுவதற்கு பெற்றோர்தான் முதல் அடியை எடுத்துவைக்க வேண்டும். செல்போனை பிடுங்குவது அல்லது இண்டர்நெட் தொடர்பை துண்டிப்பது தீர்வாக இருக்காது. அதற்குப்பதிலாக பாலியல் கல்வி குறித்த விழிப்புணர்வு பிள்ளைகளுக்கு கிடைக்கச்செய்ய வேண்டும்.  இதனை செயல்படுத்த வேண்டிய அரசுகள் மெளனமாக இருப்பதால், பெற்றோரே ஆசிரியராக இருந்து கற்றுத்தர வேண்டும். பெற்றோரால் முடியாதபட்சத்தில் மருத்துவர்களின் உதவியை நாடவேண்டும்.

மேலும் சுதந்திரமாக வளர்ப்பதன் மதிப்பை புரியவைக்க வேண்டும். கற்பு என்பதை ஒரு கலாச்சார காவலனாக நினைக்காமல், மதிப்புக்குரிய அந்தஸ்தாக கருத சொல்லித்தர வேண்டும். இளவயது கர்ப்பம் காரணமாக பாலியல் நோய் தொடங்கி குழந்தையின்மை, மரணம் வரை ஏராளமான பிரச்னைகள் ஏற்படலாம் என்பதை புரியவைக்க வேண்டும். தாயும் தந்தையும் ஆசிரியராக மாறினால்தான் பெருகிவரும் இளவயது கர்ப்பத்தைக் குறைக்க முடியும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *