- என்ன தொழில் செய்தாலும் எனக்கு மட்டும் பின்னடைவுதான் கிடைக்கிறது. நான் என்னதான் செய்வது? ஏ.ஆர்.கார்த்தி, ஏலகிரி.
ஞானகுரு :
புலி வேட்டையாடுவதை தொலைக்காட்சியில் கவனித்திருக்கிறாயா? நூறு மான்கள் திரிந்தாலும் ஏதாவது ஒரு மானை மட்டுமே குறிவைக்கும். அந்த மான் எத்தனை தூரம் ஓடினாலும், எத்தனை வேகமாக ஓடினாலும் அதன் பின்னேதான் ஓடும். அந்தப் புலியின் பாதையில் வேறு மான்கள் குறுக்கேவந்தாலும் தன் பார்வையையும் பாதையையும் மாற்றிக்கொள்ளாது. அத்தனை தீவிரமாக விரட்டினால்தான் வயிற்றுக்கு உணவு கிடைக்கும்.
நீ தோல்வியைக் கண்டு பயந்து தொழிலை மாற்றினால் மட்டும் வெற்றி கிடைத்துவிடுமா? ஒவ்வொரு தோல்வியும் உனக்கு விலைமதிக்க முடியாத அனுபவத்தைக் கற்றுக்கொடுத்திருக்கும். தோல்விக்கான காரணங்களைக் கண்டுபிடி. அவற்றை வெற்றிகொள்ளும் வழியை ஆராய்ந்துபார். மீண்டும் அதே தொழிலில் முழுமையான ஈடுபாட்டுடன் இறங்கு. தோல்வி என்பது கற்றுக்கொள்வது. வெற்றி என்பது பெற்றுக்கொள்வது. கற்றுக்கொண்டவரால்தான் பெற்றுக்கொள்ள முடியும்.