சோம்பேறியாக, எந்த உழைப்பும் இல்லாமல், ஊர் சுற்றித்  திரிவது கேவலமாக இல்லையா என்று வைத்தியநாதன் கேட்டதும் அவனையே உற்றுப் பார்த்தேன்.

’’உங்ககிட்ட எதைப் பத்தியும் பேசலாம், எதுக்காகவும் கோபப் படமாட்டீங்கன்னு அப்பா சொன்னார். அதான் மனசில் பட்டதைக் கேட்டேன். உங்களுக்கு பதில் சொல்ல விருப்பமில்லேன்னா வேண்டாம்…’’ என்றான்.

வைத்தியநாதன் தயங்கித்தயங்கி பேசியதைப் கேட்டதும் சிரிப்பு வந்தது.

’’விதிகள் இல்லாத விளையாட்டை உனக்குத் தெரியுமா?’’

’’அப்படின்னா…’’

’’ஒரு கால்பந்து மைதானத்தில் இறங்கினால் என்ன செய்வாய்?’’

’’பந்தை எடுத்துச் சென்று கோல் போட முயற்சி செய்வேன்’’

’’அதுதான் எழுதப்பட்ட விதி என்பது. அப்படி விதிகள் இல்லையென்று வைத்துக் கொள், அந்தப் பந்தை என்ன செய்வாய்?’’

’’என்ன செய்ய முடியும், ஏதாவது புதிய விதிகள் உருவாக்கி விளையாட வேண்டியதுதான்.’’

’’சபாஷ்… இதைத்தான் எல்லா மனிதர்களும் செய்து கொண்டிருக்கிறார்கள். மனிதர்களாகப் பிறந்து விட்டதால் படிப்பது, வேலை தேடுவது, திருமணம் முடிப்பது, குழந்தை பெறுவது, அதனை வளர்ப்பது, திருமணம் முடித்துக் கொடுப்பது என்று சக்கரத்தில் சுற்றிக் கொண்டே இருக்கிறார்கள். மனம் சலிப்படையும் போது அல்லது தோல்விகள் ஏற்படும் போது இறைவனை நினைத்துக் கொள்வது என்ற விதிகளையும் மீறாமல் விளையாகிறார்கள். மனிதகுலம் தோன்றியதில் இருந்து இந்த விளையாட்டுதான் நடைபெறுகிறது. ஆனால் நான் விதிகளற்ற ஒரு விளையாட்டை விளையாடத் தொடங்கியிருக்கிறேன்…’’

’’யாருடன் விளையாடுகிறீர்கள்?’’

’’இயற்கையுடன் மோதிக் கொண்டிருக்கிறேன். வெற்றி பெற்றால் இயற்கையின் மூலத்தைக் கண்டுபிடித்து விடுவேன், இல்லையென்றால் தோற்றுப்போய் மரணமடையலாம். ஆனால் எதுவும் எனக்குச் சம்மதமே… இதில் உழைப்பு, சோம்பேறித்தனம், உபதேசம் என்பதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. என் பதில் உனக்கு புரிகிறதா?’’ என்று வைத்தியநாதனிடம் கேட்டேன்.

’’எல்லோருக்கும் எல்லாமே புரிஞ்சுட்டா, அப்புறம் கேள்வி கேட்கிறது யாரு…? பதில் சொல்றது யாரு?’’ என்றபடி அருகே வந்து அமர்ந்தார் சங்கரன்.

திடீரென தந்தையை அருகே பார்த்ததும் எழுந்து நின்றான் வைத்தியநாதன். எதிர்பாராத அவர் வருகையை நானும் ஆச்சர்யத்துடன் பார்க்கவே, சங்கரனே பதில் சொல்லத் தொடங்கினார்.

’’நான் படிக்க ஆசைப்பட்டேன், ஆனா எங்க அப்பா ஆசைப்படி பூசாரியா மாறவேண்டியதாப் போச்சு. இப்ப நான் மனசார இந்த வேலை செஞ்சாலும், படிக்க முடியாத ஏமாற்றம், இன்னமும் இருக்கத்தான் செய்யுது. என் மகனும் என்னைப் போல கஷ்டப்படக் கூடாதுன்னு நினைச்சது உண்மைதான். அதுக்காகத்தான் அவனை உங்ககூட அனுப்பி வைச்சேன். ஆனா, அவன் மனசுலயும் கடைசி வரை ஒரு காயம் ஆறாம இருக்குமேங்கிறது இப்பத்தான் புரிஞ்சது. அதான் அவனாவது ஆசைப்பட்டபடி இருக்கட்டுமேன்னு கூப்பிட வந்தேன்…’’ என்றார்.

என்னையறியாமல் கடகடவென சிரிப்பு வர, ‘‘காலம் கடந்து போச்சே…’’ என்று மேலும் சிரித்தேன்.

’’ஆமாப்பா… இத்தனைநாளா சுயநலமா இருந்துட்டேன். நான் தேடினது எல்லாம் நிஜமான சந்தோஷம் இல்லைன்னு தெரிஞ்சிடுச்சு. இனிமேயாவது நீங்க சொல்றபடி கேட்குறேன்பா. உங்களுக்கு ரொம்பவும் தொந்தரவு கொடுத்துட்டேன்’’ என்றான்.

’’இல்லப்பா… ’’ என்று பேசமுயன்ற சங்கரனை தடுத்து நிறுத்தினேன்.

’’முதலில் அவன் மகனாக இருக்கட்டும், அப்புறம் மகானாகட்டும்…’’ என்றதும் சங்கரன் முகத்தில் பொலிவு வந்தது.

’’வைத்தியநாதா… நீ வீட்டுக்குப் போ. நான் செண்பகாதேவி வரை இவருடன் சென்றுவிட்டு வருகிறேன்…’’ என்று சங்கரன் சொன்னதும் தலையாட்டிவிட்டு கீழே இறங்கத் தொடங்கினான்.

’’சாமி… என் மகனிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றம் நல்லதா, கெட்டதான்னு தெரியலையே…?’’ என்று குழப்பத்துடன் கேட்டார் சங்கரன்.

’’அந்த சந்தேகத்தை காலத்தின் கையில் விட்டுவிடு சங்கரா… இதுதான் சரி, இது தவறு என்று நிலையானது எதுவும் உலகில் இல்லை. உனக்கு நல்லதாகத் தோன்றும் மழை, பிளாட்பாரத்தில் வசிப்பவர்களுக்கு பெரும் கொடுமையாகத் தெரிவதில்லையா?’’

கொஞ்சநேரம் அமைதியாக இருந்த சங்கரன், ‘‘சாமி… உங்களைத் தேடி மேல வரும்போது, நீங்க நொண்டிச் சாமியாருடன் பேசுனதா சொன்னாங்க, அவரைப் பத்தி உங்களுக்கு சரியா தெரியாது, அவர்…’’ என்று சொல்லத் தொடங்கியவரை பார்வையாலே நிறுத்தினேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *