இந்த நாட்டில் நடக்கும் பெரும்பாலான ஊழல், முறைகேடுகளுக்குக் காரணம் அரசியல்வாதிகள் மட்டுமல்ல, அவர்களை முன்னே நிறுத்தி ஆதாயம் பார்க்கும் அதிகாரிகள்தான் என்றதும் போலீஸ் அதிகாரி எபநேசர் கோபமானார். அதெப்படி அரசியல்வாதிகளைவிட அதிகாரிகள் மோசமானவர்கள் என்று மீண்டும் ஒரு கேள்வி எழுப்பினார்.

’’ஆம் எபநேசர், அரசியல்வாதிகள் பதவி நிரந்தரம் இல்லாதது. அதனால் அதில் தவறான ஆட்கள் இருந்தால் மக்களால் தூக்கி எறிந்துவிட முடியும். ஆனால் அதிகார வர்க்கத்தை மக்களாலும், அரசியல்வாதிகளாலும் எதுவும் செய்ய முடிவதில்லை. ஏனென்றால் மண்புழுவைப் போன்று அரசியல்வாதிகளுக்கு சலாம் போட்டோ, சங்கம் அமைத்தோ தப்பித்துக் கொள்கிறார்கள். நாட்டுக்கு சேவை செய்யவும், நேர்மையாக வாழவும்  அதிகாரிகள் தயாராக இருந்தால் எந்த அரசியல்வாதிக்கும் அடிமையாக வேண்டியதில்லை…’’

’’இருந்தாலும்… அரசியல்வாதிகளை நீங்கள் ஆதரிப்பதை என்னால் தாங்கவே …’’ ன்று ஆதங்கப்பட்டார் எபநேசர்.

’’நான் எவரையும் ஆதரிக்கவில்லை. வெற்றிலைக் கொடியை நட்டுவிட்டு, அதில் சுவையான மாம்பழம் முளைக்கவில்லையே என்று ஒவ்வொரு முறையும் ஏமாந்து போவது மக்கள்தான். ஆனாலும் அதிகாரவர்க்கத்தை தன் கைபிடிக்குள் வைத்துக் கொண்டு, அனைத்து மக்களுக்கும் உணவும், உடையும் கொடுக்க ஒரு நல்ல அரசினால் முடியும். ஆனால் இதுவரை அப்படியரு உறுதியான அரசு வரவே இல்லை என்பதுதான் உண்மை…’’ என்றபடி படுத்துக் கொண்டேன்.

என் அருகே எபநேசர் அமர, வைத்தியநாதன் தள்ளி நின்றான்.

’’மக்கள் பணத்தை கொள்ளையடிச்ச அரசியல்வாதிகள் எல்லோருமே செத்ததுக்கு அப்புறம் பேயாகி, பிசாசாகித் திரிவாங்கன்னு எங்கப்பா சொல்லியிருக்காரு, அதுதான் அவங்களுக்கு சரியான தண்டனை’’ என்றான் வைத்தியநாதன்.

’’பேயும் கடவுள்தானே, அதைப் போய் எதற்குத் தண்டனை என்கிறாய்?’’ என்று வைத்தியநாதனைப் பார்த்தேன்.

’’பேயும் கடவுளும் ஒண்ணுன்னு சொல்றீங்க, ஏன் இடக்குமடக்காப் பேசுறீங்க…’’என்று ஆத்திரத்துடன் எதையோ சொல்லவந்தவன் அப்படியே அடக்கிக் கொண்டான்.

’’இந்த பிரபஞ்சத்தையும் ஒவ்வொரு உயிர்களையும் படைத்தது யார்?’’

’’கடவுள்தான்…’’

’’இந்த பூமியில் இருக்கும் எல்லாமே கடவுள் படைத்தது என்றால், பேயை மட்டும் வேறு எவரும் படைத்தார்களா?’’

கொஞ்சநேரம் பதில் சொல்ல முடியாமல் தவித்த வைத்தியநாதன், ‘‘பேயைக் கடவுள் படைக்கல, மனுஷன்தான் தப்பு செஞ்சு பேயா மாறிடுறான். பேய் கடவுளுக்கும் மனிதனுக்கும் எதிரி…’’ என்றான் குழந்தைத்தனத்துடன்.

’’அப்படியென்றால் கடவுளுக்கு சவால் விட, செத்துப்போன மனிதனால் முடியும் என்கிறாயா?’’ என்று சப்தம் போட்டு சிரித்தேன்.

’’மனிதனின் பயம் எப்படி கடவுளை உருவாக்கியதோ, அதே பயம்தான் பேயையும் உருவாக்கியது. உண்மையில் மரணம் என்பது மகத்தான முற்றுப்புள்ளி, அதற்குப் பின் எதுவும் இல்லை…’’

’’அப்படின்னா தப்புச் செஞ்சவங்களுக்குத் தண்டனை கிடையாதா?’’ என்று தலைகுனிந்து கேட்டான் வைத்தியநாதன்.

’’அரசியல்வாதிகள், கொலைகாரர்கள், கொள்ளையர்கள், போன்ற கொடூர மனிதர்களிடம் இருந்த தீராத பயம்தான் பேயை உருவாக்கியது. அவர்களை நேரடியாகத் தண்டிக்க முடியாததால், அவர்களிடம் கோபத்தைக் காட்ட முடியாத ஆதங்கத்தை செத்தபிறகு பேயாக மாறுவார்கள் என்று சொல்லி ஆறுதல் அடைந்து கொண்டார்கள். உண்மையில் மரணத்துக்குப்பின் எதுவும் இல்லை.’’ என்றேன்.

’’இல்லை சாமி… மரணத்துக்குப் பிறகு, தவறுக்கு ஏற்றபடி தண்டனை கொடுக்கப்படும்னு எங்க மதத்துல சொல்லியிருக்காங்க, அதுதானே நியாயம்?’’ என்று கேட்டார் எபநேசர்.

’’மனிதர்களுடைய விருப்பத்தை எல்லாம் கடவுள் செயல்படுத்த வேண்டியதில்லை. ஒரு கொலை செய்த காரணத்தால், இந்த பிறவியில் ஜெயில் தண்டனை அடைந்தவனுக்கு மரணத்துக்குப் பிறகும் கடவுள் நரகம் தருவாரா? அப்படியென்றால் அது என்ன நியாயம்?’’

இருவரும் பதில் சொல்லாமல் இருந்தார்கள்.

’’மனிதர்களின் பயம்தான் பேயாக மாறியிருக்கிறது. சொர்க்கம், நரகம் போன்றவையும் மனிதனின் ஆசை மட்டுமே. அதனால் இல்லாதவற்றைப் பற்றி கவலைப் படாமல் வாழ்க்கையை சுலபமாக்கிக் கொள்ளுங்கள்…’’ என்றதும் கிளம்பத் தயாரானார் எபிநேசர்.

 ‘‘நீ விடுப்பில் வந்துவிட்டாயே, உன்னுடைய பணிகள் என்னாகும்?’’

’’கொஞ்சம் தடுமாறத்தான் செய்வாங்க… ரெண்டு நாள்ல சரி பண்ணிடுவேன்…’’ என்று பெருமிதமாகச் சொன்னார்.

’’தப்பு எபநேசர், எல்லோருடைய இடமும் உடனே இட்டு நிரப்பப்பட்டு விடும். நீ இல்லாமல் எதுவும் நடக்காது என்று நினைக்காதே, உன் இடத்தில் உன்னைவிட திறமையாக வேலை செய்ய இன்னொருவன் வந்து விடுவான். அப்படித்தான் இந்த உலகம் இன்று வரை இயங்கிக் கொண்டிருக்கிறது. இதனை மட்டும் நெஞ்சில் நிறுத்திக் கொண்டு உன் வேலையை கவனி. உன்னுடைய பணி போராட்டம் நிறைந்ததுதான். ஆனாலும் சிரித்துக் கொண்டே போரிடு, எல்லாம் இனிமையாக நடக்கும்…’’ என்று வழியனுப்பி வைத்தேன்.

சுகமான காற்று உடலை வருடவே ஒரு குட்டித்தூக்கம் போட நினைத்தேன்.

’’வைத்தியநாதா, நீயும் தூங்கலாமே…’’ என்றேன்.

’’வேண்டாம் சாமி… நீங்க தூங்குங்க…’’ என்றபடி கூழாங்கற்களை கையில் வைத்து விளையாடியவன் ‘‘ஒரு மோசமான கேள்வி இருக்கிறது, கேட்கலாமா?’’ என்று தயங்கினான்.

’’வேகமாக கேட்டுவிடு… உன் வயிறு வெடித்துவிடப் போகிறது…’’ என்று சிரித்தேன்.

’’ஒரு வேலையும் செய்யாம, கிடைக்கிறதைத் தின்னுக்கிட்டு இப்படி ஒரு சோம்பேறியா இருக்கிறது தப்பில்லையா? மத்தவங்களை எல்லாம் உழைக்கச் சொல்லிட்டு நீங்க மட்டும் வெட்டியா இருக்கீங்க?’’ என்று கேட்டான்  அதிரடியாக.

Leave a Reply

Your email address will not be published.