குழந்தையை தண்டிப்பதும், கொடுமைப்படுத்துவதும் தற்போது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது.. பெற்றவர்கள் என்றாலும் பிள்ளையை அடித்தால்  காவல்துறை கைது செய்யத்தான் வேண்டுமா..?

ஒவ்வொரு வீட்டிலும் ஏழெட்டு குழந்தைகள் வீட்டில் இருந்த காலகட்டம் போயேவிட்டது. ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் மட்டுமே வீடுதோறும் இருக்கிறார்கள். அதனால் அந்தக் குழந்தைகள் மீது ஒட்டுமொத்த பாசத்தையும் கொட்டி வளர்க்கிறார்கள். பெற்றோர் விருப்பப்படியெல்லாம் குழந்தைகள் செயல்படவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அந்த ஆசை நிராசையாகும்போது அதிகமாக கோபம் கொள்கிறார்கள். தங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறாத ஆத்திரத்தில் குழந்தைகளை திட்டவோ அடிக்கவோ செய்கிறார்கள்.

’நீ உருப்பட மாட்டே…’, ‘உனக்கு மூளையே இல்லை’, ‘திங்கிற அளவுக்கு அறிவு இல்லையே’ என்று தினம் தினம் திட்டித் தீர்க்கிறார்கள். இந்த வார்த்தைகள் குழந்தைகளை அப்நார்மல்  நிலைக்குத் தள்ளிவிடும்  என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். ஒருசில தாய்மார்கள் கோபத்தில் தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் கையில் கிடைக்கும் பொருட்களை வைத்து குழந்தைகளைத் தாக்குகிறார்கள். இதனால் உடலில் ரத்தக்காயம், தழும்பு போன்றவை ஏற்படுகின்றன. சில நேரங்களில் மருத்துவரிடம் அழைத்துச்செல்ல்லும் அளவுக்கு கடுமையான காயங்கள் ஏற்படுவதும் உண்டு. அப்படிப்பட்ட தருணங்களில் பிள்ளையை பொய் சொல்லித்தான் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள். விளையாடும்போது கீழே விழுந்துவிட்டான், வாசலில் முட்டிவிட்டான், சைக்கிள் பழகும்போது அடிபட்டது என்று பொய் சொல்கிறார்கள். இந்தப் பொய்யும் பிள்ளைகளின் மனதை காயப்படுத்துகிறது. பெற்ற தாயாக இருந்தாலும் குழந்தையை அடிப்பது சரியல்ல. அதுவும் காயம் ஏற்படும் வகையில் அடிப்பது குற்றமே. இப்படி விழும் ஒவ்வொரு அடியும் குழந்தைகளின் வளர்ச்சியை குன்றச்செய்துவிடும் என்றே மருத்துவர்கள் கருதுகிறார்கள்.

‘குழந்தை நல்லா வளரணும்கிற ஆசையில தானே அடிக்கிறோம்’, ‘கோழி மிதிச்சா குஞ்சு சாகப்போகுது’ என்று  வசனம் பேசுவது எல்லாம் நிஜத்தில் ஏற்கத்தக்கது அல்ல. தனக்கு இந்த உலகில் இஷ்டப்படி வாழ்வதற்கு உரிமை இல்லை, சுதந்திரமும் இல்லை என்ற எண்ணமே சின்னவயதிலேயே பிள்ளைகள் மனதில் பதிந்துவிடுகிறது. அதனாலே பிள்ளைகளுக்கு மனரீதியிலும் உடல் ரீதியிலும் பல பிரச்னைகள் உருவாகின்றன. குறிப்பாக படுக்கையில் சிறுநீர் கழிப்பது, வலிப்பு ஏற்படுவது, உடல் நடுக்கம் போன்றவை எல்லாமே தண்டனை கொடுக்கும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களால் உண்டாகிறது என்றே சொல்லலாம்.

அமெரிக்காவில் குழந்தையைத் தண்டிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் இருந்தாலும் சுமார் 70 சதவிகித குழந்தைகள் மனரீதியிலும் உடல் ரீதியிலும் பாதிக்கப்படுவதாக அந்த நாட்டு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. ஆனால் நம் நாட்டில் இதற்கென எந்தப் புள்ளிவிபரமும் கிடையாது. உண்மையை சொல்லப்போனால் கிட்டத்தட்ட 98 சதவிகித குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். அதனால்தான் வெளிநாட்டினரை ஒப்பிட்டால் நம்மவர்கள் தன்னம்பிக்கை குறைந்தே காணப்படுகிறார்கள். இதற்கு நாள்தோறும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் குழந்தைகளே  சாட்சி.

வீட்டில் மட்டுமல்ல பள்ளியில் அக்கம் பக்கத்தினர், உறவினர் என்று யாருக்குமே குழந்தையை துன்புறுத்துவதற்கு உரிமை இல்லை என்பதில் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும். குழந்தை உடலில் ஏதேனும் காயங்கள் தென்பட்டால் எப்படி ஏற்பட்டது என்பதை பரிவுடன் விசாரிக்க வேண்டும். யாரேனும் மிரட்டி பொய் சொல்ல வைத்திருக்கிறார்களா என்பதையும் அறிதல் வேண்டும்.

சில வீடுகளில் மூத்த குழந்தைகளின் கட்டுப்பாட்டில் சின்னப்பிள்ளையை விட்டுச் செல்வார்கள். அண்ணன் அல்லது அக்கா பொறுப்பாக குழந்தையைக் கவனித்துக்கொள்வார்கள் என்று சொல்வார்கள். உண்மையில் அவர்களும் சிறுவர்களே. அதனால் குழந்தைகளுக்கு சேரவேண்டிய உணவு, தின்பண்டம் முழுமையாக அவர்களுக்குக் கிடைக்காது. விளையாட்டுக்காக துன்புறுத்துவதை அம்மாவிடம் சொல்லவும் முடியாமல் தவிப்பார்கள். அதனால் பெரிய குழந்தையிடம் பிள்ளை சந்தோஷமாக பழகுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். அக்கா, அண்ணாவைப் பார்த்து குழந்தை பயப்படுகிறது என்றால் உண்மை நிலையை அறிந்து இருவருக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும்.

அதேபோன்று குழந்தைகளை பிளே ஸ்கூலில் விட்டுச்செல்லும் பெற்றோர்கள் அதிகரித்துவருகிறார்கள். குழந்தைகள் தங்கும் இடம் பெரிதாக இருக்கிறதா, போதுமான வசதி இருக்கிறதா, சத்தான உணவு கொடுக்கப்படுகிறதா என்றெல்லாம் தெளிவாக விசாரிக்கிறார்கள். குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் நபர்கள் யார், அவர்கள் என்ன படித்திருக்கிறார்கள், ஆயாக்கள் எப்படிப்பட்டவர்கள் என்றெல்லாம் விசாரிப்பதில்லை.

இதுபோன்ற பள்ளிகளில் பிள்ளையை அதட்டிமிரட்டி படுத்துத் தூங்கவைப்பதையே சாதனையாக கருதுகிறார்கள்.  கையில் பிரம்பு காட்டி சாப்பாடு ஊட்டுவதுதான் நடக்கிறது. இந்த அடக்குமுறையை சின்ன வயதிலேயே அனுபவிக்கும் குழந்தைகள் எதிர்காலத்தில் தன்னம்பிக்கை இல்லாத, மனபலம் இல்லாத, சொன்னதைக் கேட்கும் ரோபோவாகவே வெளிவருவார்கள்.

குழந்தைகள்  உங்களிடம் இருந்து வந்திருந்தாலும் அவர்கள் தனி உயிர். அவர்களுக்கென்று விருப்பங்களும் ஆசைகளும் ஆர்வங்களும் சந்தோஷங்களும் இருக்கும். அவற்றுக்கு துணை நில்லுங்கள் அல்லது தள்ளி நில்லுங்கள். குழந்தைகளின் கனவுகளை நசுக்கி குற்றவாளியாக மாறிவிடாதீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *