பெண்ணுரிமைக்காக குரல் கொடுக்கும் புரட்சிப்புலிகள்(?) இப்போது புதிய கோஷம் எழுப்புகிறார்கள். ‘பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் வேண்டும்’ என்று உரக்க குரல் எழுப்புகிறார்கள். இதனால் பாலியல் வன்முறை, கள்ள உறவு, ஈவ் டீசிங் போன்ற குற்றங்கள் குறைந்துவிடும் என்கிறார்கள். 

பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்கினால் குற்றங்களும் கொலைகளும் குறைந்துபோகுமா… அப்படி அங்கீகரிக்கப்பட்ட இடங்கள் எல்லாம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறதா என்பதைப் பார்க்கும்முன்பு இந்தத் தொழில் குறித்த சில உண்மைகளைத் தெரிந்துகொள்ளலாம்.

மனிதகுலம் தொடங்கிய காலத்தில் இருந்தே பாலியல் தொழில் இருக்கிறது என்றே சொல்லலாம். இப்போது பாலியல் தொழிலுக்காக வருடந்தோறும் 2 மில்லியன் பெண்கள் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு வலுக்கட்டாயமாக கடத்தப்படுகிறார்கள் என்று  ஐக்கியநாடுகள் சபை அறிவித்துள்ளது. இந்தத் தொழிலில் ஈடுபடும் சாதாரண பெண்கள் காலம் முழுவதும் கடுமையாக வஞ்சிக்கப்படுகிறார்கள். வாடிக்கையாளரின் திருப்திக்காக உழைக்கும் இந்தப் பெண்களின் உழைப்புக்கு மரியாதையும் மதிப்பும் எப்போதும் கிடைப்பதில்லை. இவர்களுக்குக் கிடைப்பது வியாதியும் கொடிய மரணமும்தான். இதே தொழிலில் ஆண்களும், சிறுவர், சிறுமிகளும் இருக்கிறார்கள் என்றாலும் இவர்களின் சதவிகிதம் மிகவும் குறைவானதே. இதனை தொழிலாக செய்பவர்களைவிட, இவர்களைவைத்து தொழில் செய்பவர்களும், இந்தத் தொழிலை தடுக்கவேண்டிய காவல் துறையினரும்தான் அதிகம் சம்பாதிக்கின்றனர்.

காதலன் அல்லது கணவனின் நம்பிக்கைத் துரோகம் மூலம் நிறையப் பெண்கள் இந்தத் தொழிலுக்குள் அடியெடுத்துவைக்கிறார்கள். கடத்தப்படுதல், ஏமாற்றி அழைத்துவருதல், சினிமா மோகம், பண மோகம் காரணமாகவும் இந்தத் தொழிலில் பலர் ஈடுபடுகிறார்கள். தங்கள் சுயவிருப்பத்துடன் இந்தத் தொழிலில் ஈடுபடும் மேல்தட்டு மக்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். எப்படியாயினும் பாலியில் தொழிலில் ஈடுபடும் பெண்களின் வருமானம் திருப்திகரமாக இல்லை என்பதுதான் உண்மை. ஏனென்றால் அவர்களது உழைப்பு முழுமையாக சுரண்டப்படுகிறது.

இந்தப் பெண்களை விளையாட்டுப் பொம்மையாகவும் தங்கள் பாலியல் ஆசைகளை நிறைவேற்றவேண்டிய அடிமையாகவுமே ஆண்கள் பார்க்கிறார்கள். அதனால் இங்கே ஆண்களின் திருப்தி மட்டுமே முக்கியம். பெண்களுக்கு தங்கள் உடல் மீது இங்கே எந்த அதிகாரமும் கிடையாது. தங்களை இப்படித்தான் பயன்படுத்தவேண்டும் என்று கட்டளையிடும் பெண்ணுக்கு இங்கே கடுமையான தண்டனை மட்டுமே பரிசாகக் கிடைக்கும். முழுக்கமுழுக்க ஆண்களின் தேவைக்காக மட்டுமே இந்தப் பெண்கள் பயன்படுத்தப்படுவதால்,இங்கே பெண்ணுக்கு எந்த இன்பமும் கிடைப்பதில்லை, அனுபவிக்க முடிவதும் இல்லை என்பதுதான் விசித்திரமான உண்மை.

சட்ட அங்கீகாரம் இல்லை என்பதால் இந்தப் பெண்கள் ரகசியமாக இயங்கவேண்டியிருக்கிறது. இருட்டாக இருக்கும் கழிவறை, கட்டாந்தரை, ஹைவே, பூங்கா, கார், பீச் போன்ற இடங்களில் பதுங்கியிருந்து பெரும்பாலும் இரவு நேரங்களில் தொழில் செய்கிறார்கள். அதனாலே ஆண்களின் கைப்பாவையாக மாறி துன்புறுத்தலுக்கும் கேலிக்கும் ஆளாகிறார்கள். தங்கள் உடல் எனும் பொருளை விற்பனை செய்வதற்கு எந்த இடத்துக்கும் செல்ல தயாராக இருப்பதால் துன்புறுத்தலுக்கும் அச்சுறுத்தலுக்கும் எளிதில் ஆளாகிறார்கள். ‘அழகிகள்’ மட்டுமே கைது செய்யப்படும் விசித்திர சட்டம் நம் காவல் துறையில் இருக்கிறது. அதனால் இந்தத் தொழில் பார்ட்னராக இருக்கும் ஆண்கள் சட்டத்தின் பிடியில் இருந்து எளிதில் தப்பித்துவிடுகிறார்கள். அதாவது இந்தத் தொழிலில் முழுக்க முழுக்க பாதிக்கப்படுவது பெண் மட்டுமே.

பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் கிடைத்துவிட்டால் இந்தக் கொடுமைகளிலிருந்து பெண் முற்றிலும் விடுதலை அடைந்துவிடுவாள் என்பது நிஜமல்ல. ஏனென்றால் சட்ட அங்கீகாரத்துடன் பாலியல் தொழில் நடக்கும் நாடுகளில், எந்தக் குற்றமும் குறைந்துவிடவில்லை. அங்கே பெண் சட்டரீதியாக துன்புறுத்தப்படுகிறாள் என்பதுதான் உண்மை. கள்ளச்சாராயம் என்றாலும் நல்ல சாராயம் என்றாலும் உடலுக்குக் கேடு விளைவிக்கத்தான் செய்யும். ஏனென்றால் இந்த சட்டங்களை இயற்றியது ஆண்கள். பணம் கொடுத்து வாங்கிய பொருளை வாடிக்கையாளர் எதுவும் செய்துகொள்ளலாம் என்ற வியாபார தந்திரமே இப்போது செல்லுபடியாகிறது.

நம் நாட்டில் கொல்கத்தாவின் சோனாக்காச்சியும் மும்பையின் தாராவியும் சிவப்பு விளக்குப் பகுதியாக அறியப்படுகிறது. இங்கே சட்ட அங்கீகாரம் இல்லை என்றாலும் இங்கே பாலியல் தொழில் கொடிகட்டிப் பறக்கத்தான் செய்கிறது. திடீரென அதிரடி ரெய்டு, பாலியல் தொழிலாளர்கள் மீட்பு போன்ற கண் துடைப்பு நாடங்களுக்கும் அவ்வப்போது நடக்கவே செய்கிறது. சட்டப் பாதுகாப்பு கொடுக்கப்பட்டாலும் இதுபோன்ற செயல்கள் நடக்கத்தான் செய்யும். அப்போது கடத்தப்பட்ட பெண்களை மீட்பதாக அல்லது வேறு ஏதேனும் காரணம் சொல்லி ரெய்டு நடத்தி மாமூல் வசூலிப்பார்கள். அதனால் இந்தத் தொழிலை சட்டரீதியாக முறைப்படுத்தினால், பெண்களுக்கு எதிரான அத்தனை கொடுமைகளும் தீர்ந்துபோகும் என்பது வீண் கற்பனையே. 

நம் நாட்டில் மது விற்பனை செய்கிறது அரசு. அங்கேயே வைத்து குடிப்பதற்காக பார் நடத்துகிறது. அங்கே குடித்துவிட்டு வரும் வாடிக்கையாளர்களை தெரு முனையில் நின்று கைது செய்கிறது தமிழக அரசின் காவல்துறை. இந்த முரண்பாடு பாலியில் தொழிலும் இருக்கவே செய்யும். பாலியல் தொழிலாளர்களை பாதுகாக்கவேண்டிய காவல் துறை, அவர்களை பணம் கொட்டும் அட்சயப் பாத்திரமாக நடத்துமே தவிர, பெண்ணுரிமைக்காக குரல் கொடுக்காது. அதனால் பாலியல் தொழிலுக்கு எப்போதும் பாதுகாப்பு கிடைக்காது என்பதுதான் உண்மை.

சட்டரீதியான அங்கீகாரம் கிடைக்கும்போது, பாலியல் தொழில் குற்றமாக கருதப்படாது, அவர்களது உடல்நிலை மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்படும், நோய்த் தாக்குதல்களில் இருந்து விடுதலை கிடைக்கும், அரசுக்கு வருமானம் கிடைக்கும் என்று சொல்லப்படுவதை மேலோட்டமாக பார்க்கும்போது பெண்ணுக்கு நன்மை தருவதாகத் தோன்றும். ஆனால் உண்மையில் இவை எல்லாமே ஆணுக்கு மட்டுமே சாதகமான அம்சங்கள். அவன் நிம்மதியாகவும் நோய் பயம் இன்றியும் பாலியல் தொழிலாளியை பயன்படுத்தவே உதவும்.

இந்த சமுகத்தில் இருந்து பாலியல் தொழிலை முற்றிலும் அழிக்கமுடியாது என்பதுதான் உண்மை. ஆனால் இந்தத் தொழிலில் கட்டாயமாக இறக்கப்படும் பெண்களைத் தடுக்கமுடியும். சந்தர்ப்பவசத்தால் இந்தத் தொழிலில் இறங்கும் பெண்களை மீட்டு புதிய வாழ்வு தரமுடியும். இந்தத் தொழிலால் ஆதாயம் அடையும் ஆண்கள் மற்றும் காவல் துறையை கட்டுப்படுத்த முடியும். சின்ன வயதில் இருந்தே ஆண் பிள்ளைகளுக்கு பாலியல் கற்றுத்தந்து பாலியல் வெறியைத் தணிக்க முடியும்.

இதுபோன்ற ஆக்கப்பூர்வமான காரியங்களைவிடுத்து, பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்கவேண்டும் என்று போராடும் அறிவுஜீவிகளுக்கு ஒரே ஒரு கேள்வி. சட்டபூர்வ அனுமதி கிடைக்கும்போது உங்கள் மகளை இந்தத் தொழிலில் இறங்கி பணம் சம்பாதிக்க ஒப்புக்கொள்வீர்களா? இந்தக் கேள்விக்கு மனப்பூர்வமாக பதில் சொல்லிவிட்டு போராடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *