பொண்டாட்டியிடம் அடி வாங்கும் கணவன் பற்றி நிறைய நிறைய ஜோக்ஸ் படித்திருப்பீர்கள். நகைச்சுவைக்காக மட்டுமின்றி, புருஷன் – பொண்டாட்டிக்கு இடையே நிஜமாகவே அடிதடி இருப்பது நல்லதுதான் என்கிறது ஓர் ஆய்வு.

அதனால், சண்டையே போட்டுக்கொள்ளாத தம்பதி என்று பெயர் வாங்குவதைவிட, அடிக்கடி சண்டை போட்டாலும் சேர்ந்துக்குவாங்க என்று சுட்டிக்காட்டப்படும் தம்பதியராக வாழுங்கள். இந்த வகையான தம்பதியரே நீண்டகாலம் பிரியாமல் வாழ்கிறார்கள் என்று மனநல மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் அடிக்கடி சண்டை போடுபவர்களுக்கு ஆயுட்காலமும் அதிகரிக்கிறது என்கிறார்கள்.

பொதுவாகவே ஆண்கள் மனதளவில் தங்களை எஜமானர்கள் என்றும் மனைவியை தங்களுக்கு சேவை செய்வதற்காக படைக்கப்பட்டவள் என்ற எண்ணத்துடனே அணுகுகிறார்கள். அதனால்தான் தான் சொல்வதை எதிர்த்துப் பேசக்கூடாது என்று நினைக்கிறார்கள். ’கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்’ என்ற நிலைமை இப்போது மாறியேவிட்டது என்பதை நம்புவதற்கு மறுக்கிறார்கள். அதனால்தான் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்படும்போது, நேரடியாக நீதிமன்றத்தின் வாசலுக்கு வந்துவிடுகிறார்கள்.

சேர்ந்து வாழ்வதற்கும் இன்பம் அனுபவிப்பதற்கும் சந்தோஷத்தை பகிர்ந்துகொள்வதற்கும் கணவன் – மனைவிக்கு இடையே எப்படி உரிமை இருக்கிறதோ அப்படியே சண்டை போடவும் உரிமை உண்டு என்பதுதான் ஆய்வாளர்கள் சொல்லவரும் கருத்து.

குடும்பத்தில் ஒருவரது செயல் மற்றவருக்குப் பிடிக்காதபட்சத்தில் உடனே மனம் திறந்து பேசவேண்டும். ஆனால் நம் பெண்கள் கோபத்தை மனதுக்குள் அடக்கி வைக்கிறார்கள். ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால்கூட, அதற்கான விளக்கத்தைக் கேட்டுக்கொள்ளாமல் ஒரு குற்றமாகவே மனதில் பதிந்துகொள்கிறார்கள். ’நான் சொன்னா எதுவும் கேட்பதில்லை’ என்று நாளுக்கு நாள் அனைத்து கோபங்களையும் மனசுக்குள் பூட்டி வைக்கிறார்கள். என்றேனும் ஒரு நாள் இந்த கோபம்  ஒட்டுமொத்தமாக வெளிப்படும்போது இருவருக்கும் தாங்கமுடியாத அளவுக்கு சண்டை நடக்கிறது.

இதுவரையிலும் கணவன் என்னென்ன குற்றங்கள் செய்தார் என்று வரிசையாக எடுத்துச்சொல்வார்கள். இதில் நிறைய விஷயங்களை கணவன் மறந்தே போயிருப்பார் அல்லது குற்றமாகவே இருந்திருக்காது. இத்தனை குற்றங்கள் செய்தபிறகு சேர்ந்துவாழ்வதில் அர்த்தம் இல்லை என்று மல்லுக்கு நிற்பார்கள். மத்தியஸ்தம் செய்துவைக்க வரும் நபர்களும் கணவன் மீது வீசப்படும் இத்தனை குற்றச்சாட்டுகளையும் கண்டு மலைத்தேவிடுவார்கள்.

இப்படியொரு நிலைமை ஏற்படக்கூடாது என்றால் அவ்வப்போது மனதில் இருக்கும் கோபம், கருத்துவேறுபாடு, பழிவாங்கும் உணர்ச்சி எல்லாவற்றையும் தீர்த்துவிட வேண்டும். இதற்கு எளிமையான வழி இருக்கிறது. அதுதான் தலையணை சண்டை.

கம்ப்யூட்டர் தொழில்நுட்ப கலைஞர்களின் மன அழுத்தத்தைப் போக்குவதற்காக கண்டறியப்பட்ட தலையணை சண்டையை வீட்டில் வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை கடைப்பிடித்தால் பிரிவுக்கு இடம் இருக்காது என்கிறார்கள். இப்போது 25-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த சண்டையை தெருச்சண்டையாக ஆண்டுதோறும் நடத்துகிறார்கள். ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் இந்த வேடிக்கை நிகழ்ச்சி, சில நிமிடங்களில் இருந்து பல மணி நேரம் வரை நடக்கிறது.

தலையணை சண்டை நடக்கும்போது யாருக்கும் வேதனை, வலி, துக்கம் இருப்பதில்லை. ஆனால் சந்தோஷம், சிரிப்பு, உற்சாகம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு தொற்றிக்கொள்வதால் மன அழுத்தம் முழுமையாகக் குறைவது ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த சண்டையை எப்படி வீட்டில் நடத்துவது?

ஏதாவது ஞாயிற்றுக்கிழமையை தலையணை சண்டைக்காக தேர்வு செய்யுங்கள். வீட்டில் இருக்கும் அனைவருமே இந்த சண்டையில் பங்கெடுக்கலாம். கணவன், மனைவி, குழந்தைகள் மட்டுமின்றி வீட்டில் இருக்கும் பெரியவர்களும், நண்பர்களும் கலந்துகொள்ளலாம்.

ஓடுவதற்கும், ஒளிந்துகொள்வதற்கும் வசதியான அறையைத் தேர்வு செய்துகொள்ளுங்கள். அப்படி வசதியான அறை இல்லையெனில் மொட்டை மாடியில் சண்டையை நடத்தலாம். அக்கம்பக்கத்தினர் என்ன நினைப்பார்கள் என்று கூச்சப்படவேண்டிய அவசியம் இல்லை. எனென்றால் உங்கள் சண்டையைப் பார்த்தால் கண்டிப்பாக அடுத்த வாரம் அவர்களும் தலையணை சண்டையை வீட்டில் தொடர்வார்கள் என்பது நிச்சயம்.

ஐந்து நிமிடங்கள் மட்டுமே தலையணை சண்டை என்று நேரம் நிர்ணயித்துக்கொண்டு சண்டையைத் தொடரலாம். முதலில் கணவரை நடுவில் நிறுத்துங்கள். அவரை நோக்கி அனைவரும் தலையணையை எறியவேண்டும். எந்தக் காரணம் கொண்டும் தலையணையைக் கொண்டு நேரடியாக அடிக்கக்கூடாது. தலையணையை உடலில் எந்த பாகத்திலும் தூக்கி எறியலாம். மாற்றி மாற்றி ஆளாளுக்கு தலையணையை எறிவதும், அதில் இருந்து விலகிக்கொண்டு கணவர் ஓட முயற்சிப்பதும் நிச்சயம் சந்தோஷமான விளையாட்டாக இருக்கும்.

கணவர் மீது ஏதேனும் கோபம் இருந்தால் மனதுக்குள் அதனை நினைத்துக்கொள்ளுங்கள். ‘நான் சொல்லச்சொல்ல கேட்காமல் உங்க அக்காவுக்கு சேலை வாங்கித் தர்றீயா… இந்தா வாங்கிக்கோ’ என்று தலையணையைத் தூக்கி முகத்தில் எறியுங்கள். கையில் இருக்கும் தலையணை மட்டுமல்ல… மனதுக்குள் இருக்கும் கோபமும் சேர்ந்து ஓடிப்போய்விடும். குழந்தைகளையும் இப்போதே இந்த விளையாட்டில் கலந்துகொள்ளச் செய்யும்போது, அவர்கள் மனதில் இருக்கும் கோபமும் ஆதங்கமும் வருத்தமும் குறைந்துவிடும்.

குறிப்பாக பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு ஆசிரியர், பள்ளி மீது ஏகப்பட்ட கோபம் மனதுக்குள் தேங்கி நிற்கும். அந்தக் கோபத்தைக் காட்டுவதற்கு வழி தெரியாமல் தவிப்பார்கள். குழந்தைகளுக்கு கூடுதல் ஆர்வம் உருவாக்க வேண்டும் என்றால் தலையணையின் மீது கணிதம், அறிவியல் என்று எழுதி தூக்கி வீசச் செய்யலாம். ஒருவர் கையில் இருக்கும் தலையணையை பிடுங்குவது, தலையணையை கிழிப்பது, திருப்பித்திருப்பி தாக்குவது என அனைத்தையுமே விளையாட்டாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த விளையாட்டை தன்னுடைய திறமைக்கான விளையாட்டு போன்று கணவனும் மனைவியும் விளையாடக்கூடாது. எத்தனை அடி விழுகிறதோ… அத்தனை சந்தோஷம் என்ற பாணியில் விளையாட வேண்டும்.

கணவரை அடித்துவிட்டால் பெண்களுக்கு ஆனந்தம் பொங்கிவிடும், அதே சந்தோஷத்தை மனைவியை அடிக்கும்போது ஆணும் அனுபவிப்பான். இருவரது மனதுக்குள் இருக்கும் பழிவாங்கும் உணர்வு நிச்சயம் காணாமல் போய்விடும். இருவருக்கும் காதலும் அன்பும் மீண்டும் தலைதூக்கும். குடும்பத்தில் அனைவரும் கலந்துகொள்ளும்போது, செலவில்லாமல் ஒரு சுற்றுப்பயணம் செய்த அனுபவம் கிட்டும்.

ஆதலால் சண்டை போடுவீர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *