சிற்றின்பங்களை அனுபவிப்பதுதான் மனிதர்களுக்கு எளிதில் கிடைக்கும் இன்பம் அதனை அனுபவிப்பது குறித்து கொஞ்சமும் குற்றவுணர்வு வேண்டியதில்லை என்ற என் பதில் சங்கரனுக்கு முழு திருப்தி தரவில்லை.

’’இந்த இன்பங்கள் மீண்டும் மீண்டும் தோன்றக் கூடியதுதானே’’

’’இருக்கட்டுமே. அதனையே பேரின்பமாக நினைத்துக் கொள்ளவேண்டியதுதான். ஒரு கோடி ரூபாய் சேர்க்க வேண்டும் என்பதை ஆசையாக வைத்து அவஸ்தைப் படுவதை விட, இன்று இரவு ஹோட்டலில் இட்லி சாப்பிடவேண்டும் என்பதை ஆசையாக வைத்துக் கொண்டால் அதனை எளிதில் அடைந்து விடலாம், சந்தோசமும் நிச்சயம்.

ஒவ்வொரு மனிதனும் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பதற்கு மிக எளிய வழி, திருப்தியுடன் வாழ்வதுதான். ஒரே ஒரு சட்டைதான் இருக்கிறதே என்று கவலைப் படாமல், ‘என்னிடம் ஒரு சட்டையாவது இருக்கிறதே’ என்று பெருமிதப் படலாம். பறவைகள், நட்சத்திரங்கள், மழை போன்றவற்றை பார்க்க நேரும் போதெல்லாம் ‘அடடா’ என்று உச்சுக்கொட்டி ரசிக்கலாம். இன்னும் வாழ்வில் எது நடந்தாலும், இயல்பாக எடுத்துக் கொள்வது, எல்லோரையும் அனுசரித்துப் போவது, அமைதியாக வெளிப்படையாக இருப்பது, எதையும் துணிச்சலுடன் செய்வது போன்ற குணங்களை வளர்த்துக் கொண்டால் சந்தோஷத்தை ஒவ்வொரு கணமும் அனுபவிக்க முடியும்.’’

’’நீங்க சொல்றது எல்லாம் சரியாகவே இருக்கட்டும், பசியோடு இருப்பவனிடம் இதை நீங்கள் சொல்ல முடியுமா?’’ என்று கேட்டார் சங்கரன்.

’’ஏன் இல்லை. விழிப்பு அடைந்தவன் மட்டுமே சந்தோஷத்தைத் தேடுவான். அவனால் பசியையும் சந்தோஷமாக உணர முடியும். துன்பத்தையும் இன்பத்தையும் ஒரே நிகழ்வாகவே எடுத்துக் கொள்வான்…’’.

நான் இத்தனை நேரம் பேசியதைக் கேட்டு நாலைந்துபேர் கூடிவிடவே, மேற்கொண்டு பேசவேண்டாம் என நினைத்து கண் மூடினேன். ஒரு குட்டித் தூக்கம் போட்டபின் கண்ணைத் திறந்து பார்த்தேன். பலர் கலைந்து போயிருக்க இருவர் மட்டும் சற்று தள்ளியமர்ந்து சங்கரனுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரும் நாலைந்து நாளுக்கு முன்னர் மொட்டை போட்டிருக்க வேண்டும். என்ன காரணத்திற்காக அவர்கள் மொட்டை போட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் தலையைத் தொட்டுக்காட்டி புருவம் உயர்த்தினேன்.

என் அருகே வந்து அமர்ந்தவர்கள், ‘‘நாங்கள் ஒரு ஆன்மிக இயக்கத்தில் இருந்தபோது மாதம் ஒரு முறை தலைமுடியை மழித்துக் கொள்வதுண்டு, இப்போதும் அதையே பின்பற்றுகிறோம். இப்படி இருந்தால் அகந்தை இல்லாமல் இருக்கலாம்…’’ என்றனர்.

’’எங்களுக்கு அகந்தை இல்லை என்று சொல்வதுதான் அகந்தை, சரி உங்கள் குருவும் தலைமுடியை மாதம் ஒருமுறை மழித்து கொள்வதுண்டா?’’

’’அவர் ஆன்மிகத்தில் உச்சநிலையை அடைந்துவிட்டார். மேலும் தோற்றத்தில் அக்கறை செலுத்தாதவர் என்பதால் தலைமுடியை மழிக்க வேண்டியதில்லை…’’ என்றார் ஒருவர்.

’’ஓ… அப்படியானால் மீசை, தாடி, தலைமுடி, உடைகள் மீது அக்கறை செலுத்தவே மாட்டார் என்று சொல்லுங்கள்…’’

’’இல்லை சாமி, மிகுந்த அக்கறை செலுத்துவார். தினமும் தாடியை சீராக வெட்டிக் கொள்வதில் இருந்து புத்தம்புதிய ஆடை அணிந்து கொள்வது என்று எல்லாவற்றிலும் மிகவும் கவனமாக இருப்பார். சீடர்களுக்கு மட்டும் ஏன் கட்டுப்பாடுகள் என்று சந்தேகம் கேட்டால், மிக நன்றாக விளக்கம் சொல்வார். ஆனால், உங்களுக்குப் பதில் சொல்லும்படி விளக்கத்தான் எங்களுக்குத் தெரியவில்லை…’’  என்றான் ஒருவன்.

’’அதாவது வார்த்தை ஜாலங்களில் உங்களை மயக்கி, புரியாதபடி பதில் கொடுத்துவிடுவார் சரிதானே…?’’ என்று சிரித்தேன்.

’’ஆமாம் சாமி’’ என்று சிரித்தவர்கள் ‘‘இதுதவிர சிரிக்கக் கூடாது, வகுப்பு நடக்கும் போது அக்கம்பக்கம் பார்க்கக் கூடாது, நேரம் கழித்து வரக்கூடாது, விவாதம் செய்யக்கூடாது, கத்தக்கூடாதுன்னு நிறைய கட்டளைகள். அதனாலதான் தாக்குப்பிடிக்க முடியாம வெளியேறிட்டோம். நாங்க செஞ்சது தப்பா?’’ என்றனர்.

’’நீங்கள் அங்கே சேர்ந்தது தப்பு என்றால் வெளியே வந்தது அதை விட பெரிய தவறு. சேர்ந்தது தவறில்லை என்றால் வெளியேறியதிலும் தவறில்லை…’’ என்றதும் இருவரும் புரியாமல் விழித்தனர். ஒருவன் எதற்காக வந்தானோ அதைக் கேட்கத் தொடங்கினான்.

’’சாமி… எங்க கிராமத்துல ஒரு கோயில் கட்ட இருக்கிறோம், அதுவிஷயமா ஊருக்குள்ள ஆளுக்கொரு அபிப்பிராயம் சொல்றாங்க. அதான் யாராவது ஒரு சாமியார்கிட்ட விவரம் கேட்கலாமுன்னு வந்தோம். அடிவாரத்துல உங்களைப் பத்திச் சொன்னாங்க…’’ என்றனர்.

நான் எதுவும் பேசாமல் தலையசைக்கவே பேசத் தொடங்கினார்கள்.

’’நூறு வருஷத்துக்கு முந்தி எங்க ஊர்ல ஒரு அசம்பாவிதம் நடந்துபோச்சு. ஒரு பொண்ணு கர்ப்பிணியா இருந்தப்ப, நாலைஞ்சு திருடனுங்க சேர்ந்து கற்பழிச்சு நகையைப் புடுங்கிட்டாங்க. இதனால அவமானப்பட்டவ ஊருக்கு ஒதுக்குப் புறமா இருக்கிற புளியமரத்துல தற்கொலை செஞ்சுக்கிட்டா. இப்பவும் ராத்திரியானா அந்தப்பக்கம் பச்சைக் குழந்தையும், அம்மாவும் அழுவுற சத்தம் கேட்குது. அந்தப் பொண்ணுக்காக வருஷாவருஷம் படையல் போட்டு பூஜை செஞ்சாலும் உக்கிரம் குறைஞ்ச மாதிரி தெரியலை. ஊருக்குள்ள அவ்வப்போது திடீர்னு ஆளுங்க செத்துப் போறாங்க… அதான் அவளுக்கு கோவில் கட்டி குளிரவைக்கலாமுன்னு நினைக்கிறோம். ஆனா அவளுக்குக் கோவில் கட்டினா, ஊருக்கு நிறைய பிரச்சனை வரும்னு கொஞ்சபேர் பயம் காட்றாங்க. நாங்க என்ன செய்றது?’’ என்று கேட்டனர்.

’’தன்னையே காப்பாத்திக்க முடியாம தற்கொலை செஞ்சுக்கிட்டவ, கோயில்ல உட்கார்ந்து உங்களையும் ஊரையும் காப்பாத்தப் போறாளா?’’ என்று எழுந்து உட்கார்ந்து கேட்டதும் மிரண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *