இத்தனை நாட்கள் கோயில் பூசாரியாக இருந்தும், சொந்த வீடு இல்லை என்று வருத்தப்பட்டார் சங்கரன். அவரது சொந்த வீடு ஆசையை கேட்டதும், ‘‘எனக்கும்தான் வீடு இல்லை, நான் கவலையா படுறேன்…’’ என்று சிரித்ததும் கோபமானார்.

’’உங்களை மாதிரி நாடோடி ராஜாக்களுக்கு வீட்டின் அருமை தெரியவே தெரியாது சாமி.  சொந்தமாக ஒரு குடிசை வாங்கவும் முடியாதது, சபிக்கப்பட்ட வாழ்க்கை.  என்னுடைய சந்ததிக்கும் இந்த நிலை வந்துவிடக்கூடாது என்றுதான் கவலைப் படுகிறேன்.’’

’’இறைவன் இந்த உலகத்தையே உனக்கு எழுதி வைத்திருக்கிறான். ஆனால் நீயோ ஒரு குட்டியூண்டு வீடு கேட்கிறாய். சரி… உனக்கு எப்படிப்பட்ட ஒரு வீடு வேண்டும்?’’

’’சும்மா விளையாடாதீங்க சாமி, ஒரு சாதாரண ஓலைக்குடிசைகூட கிடைக்காமத்தான் நானே நொந்துபோய் கிடக்கேன்’’

’’சரி, நான் மலையில் இருந்து கீழே இறங்கி வந்ததும், உனக்கு ஒரு குடிசை வாங்கித் தர முடியுமா என்று பார்க்கிறேன். ஆனால் அதற்குப் பின்னராவது நீயும் உன் குடும்பத்தினரும் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். அது முடியுமா?’’ என்று புன்னகைத்தேன்.

’’அடப் போங்க சாமி, நீங்க ஆசிரமம் வைக்கிறேன்னா பணம் தருவாங்க, இடம் தருவாங்க, எங்களுக்கு எவன் தரப்போறான்?’’ என்று அலுப்புடனே பேசினார்.

நான் அமைதியாகப் புன்னகைத்தபடி, ‘‘என்னை நம்ப மாட்டாயா? அதுசரி, கீழே கிடைக்கும் தங்கத்தைத்தானே உரசி சோதித்துப் பார்ப்பார்கள். இரும்பு அல்லது பித்தளை கிடைத்தால் எந்த சோதனையும் இன்றி ஏற்றுக் கொள்வார்கள். என்னை நம்பு… நீ விரும்பும் வீட்டை கண்டிப்பாகத் தருகிறேன். எப்படிப்பட்ட வீடு வேண்டும்?’’

’’எனக்கு குடிசை வீடு போதும்…’’ என்று வேகமாக பதில் சொன்னவர், உடனே ‘‘ஆனா அது வேண்டாம்…’’  என்று முடித்தார்.

பெரிதாக சப்தம்போட்டு சிரித்தேன்.

’’சிரிக்காதீங்க, கேட்கும்போதே ஒரு பெரிய வீடாக கேட்டிருக்கலாமுன்னு பொண்டாட்டி சண்டைக்கு வருவா… என்னால சமாளிக்க முடியாது…’’ என்று அவரும் சிரித்தார்.

’’சங்கரா, வீடு மட்டுமல்ல சொத்து, பணம், உறவு, நட்பு என்று எதுவுமே மனிதனுக்கு நிரந்தரப் பாதுகாப்பாக அமைந்துவிட முடியாது. ஆனாலும் அதைத்தான் மனிதர்கள் தேடுகிறார்கள். அதுதான் விசித்திரம்…’’ என்றேன்.

’’மனித குலம் தொடங்கி இத்தனை யுகங்கள் ஆனபின்னரும் வாழ்க்கை ஏன் புரிந்து கொள்ள முடியாமலே இருக்கிறது?’’ என்று கேள்வி எழுப்பினார் சங்கரன்.

’’இப்போது உயிருடன் இருக்கும் மனிதர்கள் மட்டுமல்ல, மண்ணுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் எத்தனையோ கோடி மக்களும் சந்தோஷத்தின் வேர் என்ன என்பதை அறியவே இல்லை. ஏனென்றால் பிறக்கும் போதே சாதி, மதம், மொழி, இனம் என்று பல்வேறு தளைகளை சுற்றிக்கொண்டு பிறக்கிறான். முன்னோர்கள் காட்டிய வழிகளை சோதித்து அறிய சந்தர்ப்பம் கொடுக்கப்படாமல், எதையும் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகிறான். அவன் வாழ்க்கையின் சிக்கல்களைத் தவிர்க்கிறேன் என்று உத்தரவாதம் கொடுத்த இறைமனிதர்களும், குருமார்களும் கற்பனையான, போலியான ஆறுதல்களையே வழங்கினார்கள். அதையே தெய்வீகம் என்று ஏமாந்து நிற்கிறான் மனிதன்…’’

’’அப்படின்னா மனிதர்கள் சந்தோஷமாக இருக்கவே முடியாதா?’’

’’முடியும். ஆனால் நிரந்திர சந்தோஷம் என்று எதுவுமே இல்லை என்பதை மக்கள் அறியவேண்டும். அதைவிட முக்கியமான ஒரு விஷயம், அவன் தேடிக் கொண்டிருக்கும் இறைவனிடம் சந்தோஷம் என்பது இல்லை…’’

’’கடவுளை அடைவதுதானே பேரின்பம் என்று சொல்லியிருக்கிறார்கள்?’’

’’மனிதர்களுக்கு இன்பம் தருவதற்காக, நிம்மதி தருவதற்காகத்தான் உருவாயின மதங்கள். ஆனால் அவை எல்லாம், காலப்போக்கில் கடவுளின் சந்தோஷத்தை  போதிக்கத் தொடங்கிவிட்டது. அதனால் இந்த உலக வாழ்க்கையை ஒரு நச்சு மரம் என்று சொல்லி, மனிதனுக்கு உடல் மீது இருக்கும் ஆசையை குறைக்க வலியுறுத்தின. இறைவனை ஒவ்வொரு கணமும் நினைத்து, இறைவன் அன்பைப் பெற்றால் மட்டுமே பேரின்பம் கிட்டும் என்று இல்லாத விஷயத்தைச் சொல்லி வைத்தார்கள்.

இறைவன் சிந்தனையில் இருக்க வேண்டிய மனிதர்களுக்கு சிற்றின்பம், பாவம் என்று ஒதுக்கி வைக்கப்பட்டது. அதனால் கணவன், மனைவி உறவில் கிடைக்கும் இன்பத்தைக்கூட மனிதர்கள் குற்ற உணர்ச்சியுடன் அனுபவித்தார்கள். மனிதர்கள் இப்படி குற்ற உணர்ச்சியுடன் வாழ வேண்டும் என்பதையே மதங்கள் விரும்புகின்றது. ஆனால் உண்மையில் மனிதர்கள் பெறக்கூடியதும் அனுபவிக்கக் கூடியதும் சிற்றின்பங்கள் மட்டுமே. பேரின்பம் என்பது இல்லவே இல்லை, அவை இருந்தாலும் மனிதர்களுக்குத் தேவையில்லை…’

’’கேவலம் இந்த உடல் மற்றும் உணவுகளில் கிடைக்கும் சிற்றின்பத்தையா மதிக்கிறீர்கள்?’’

’’ஆம். மிக எளிதாகக் கிடைக்கக்கூடிய சிற்றின்பம்தான் மனிதர்களை என்றென்றும் மகிழ்ச்சியுடன் வாழ வைக்கக் கூடியது. அந்த சந்தோஷத்தைத்தான் அவனால் உறுதியாக அடையவும் முடியும்.’’ என்று சொன்னதும் ஆச்சர்யமாகவும், அதேநேரம் கொஞ்சம் கோபமாகவும் கேட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *