ஆண்டுதோறும் நம் இந்தியாவில் சுமார் 45,000 குழந்தைகள் காணாமல் போவதாக மனித உரிமை ஆணையம் புள்ளிவிபரம் தருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான குழந்தைகள் காணாமல்போவது அதிர்ச்சியளிப்பதாக உச்சநீதிமன்றம் கவலைப்படுகிறது. அதுசரி, காணாமல் போகும் குழந்தைகள் என்னவாகிறார்கள்?
அந்தக் குழந்தைகளின் எதிர்காலம் பயங்கரமானது. ஆம், பிச்சை எடுக்கவும், பாலியல் தொழில் புரிவதற்கும், திருட்டு, வழிப்பறி போன்ற குற்றங்களில் ஈடுபடுவதற்கும்தான் பிள்ளைகளை கடத்துகிறார்கள். இதுதவிர மனித உறுப்பு தேவைக்காகவும் இப்போது குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள். பெண் பிள்ளைகளுக்கு மட்டும்தான் ஆபத்து என்ற நிலை மாறி, ஆண், பெண் என்ற வித்தியாசம் இல்லாமல் எந்தப் பிள்ளை கிடைத்தாலும் கடத்துகிறார்கள்.
அன்பைக்கொட்டி வளர்க்கப்படும் தங்கள் செல்லக்குழந்தைக்கு ஆபத்து வராமல் காக்கவேண்டியது பெற்றோரின் கடமை. நாளிதழ் செய்தியாகவும் அக்கம்பக்கம் நடந்ததாகவும் அறியப்படும் குழந்தை கடத்தல் நம் வீட்டுக் கதவையும் தட்டக்கூடாது அல்லவா? இதற்குத்தான் பயன்படுகிறது பாஸ்வேர்டு.
குழந்தைகளுக்கு மட்டுமல்ல வீட்டில் தனியே இருக்கும் பெண்களின் பாதுகாப்புக்கும் கைகொடுக்கிறது இந்த ‘பாஸ்வேர்டு. உங்கள் கம்ப்யூட்டர், வங்கிக் கணக்கு, மின்னஞ்சல் முகவரி, கைபேசிகளை எல்லாம் பாஸ்வேர்டு பாதுகாப்பது போலவே, குழந்தையையும் வீட்டில் தனியே இருக்கும் பெண்ணையும் இந்த பாஸ்வேர்டு நிச்சயம் பாதுகாக்கும். அதனால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு பாஸ்வேர்டு அவசியம் தேவை.
இப்போது குழந்தைகளை மட்டுமின்றி வீட்டில் தனித்திருக்கும் பெண்களை குறிவைத்தும் சமூகவிரோதிகள் இயங்குகிறார்கள். ஏதாவது சாக்குப்போக்கு சொல்லி வீட்டுக்குள் நுழைந்து நகை, பணம் திருடுவது மட்டுமின்றி உயிரையும் பறித்துவிடுகிறார்கள். அதனால் தனியே இருக்கும் பெண்ணுக்கும், குழந்தைகளுக்கும் பாஸ்வேர்டு பாதுகாப்பு அவசியம். ஒரு சின்ன சாவி பெரிய வீட்டை பாதுகாப்பதுபோல், பாஸ்வேர்டாக பயன்படுத்தும் ஒரே ஒரு வார்த்தை குழந்தையையும், தனியே இருக்கும் பெண்ணையும் காப்பாற்றும் சக்தி வாய்ந்தது.
குழந்தைக்கும் வீட்டில் இருக்கும் பெண்ணுக்கும் அறிமுகமில்லாத நபர்கள் மூலமாக மட்டுமின்றி சில அறிமுகமான நபர்கள் மூலமாகவும் ஆபத்து வருகிறது. ‘உன்னை அழைத்துவரும்படி அப்பா அனுப்பியிருக்கிறார்’, ‘உன் தந்தைக்கு விபத்து நேர்ந்துவிட்டது’, ‘உங்கள் கணவர் பழங்கள் கொடுக்கச்சொன்னார்’, ‘ரிப்பேர் பார்க்கச்சொன்னார்’ என்றரீதியில் நெருங்குவதற்கு முயற்சி செய்வார்கள். இந்த நேரத்தில்தான் பாஸ்வேர்டு பயன்படுகிறது.
இப்படி நெருங்கும் நபர்களிடம் தயங்காமல், ‘பாஸ்வேர்டு’ கேட்கவேண்டும். உண்மையான நபர் என்றால் சரியான பாஸ்வேர்டு சொல்வார். தவறான நபர் என்றால் எதையாவது பேசி சமாளித்து பின்வாங்குவார். இந்த நேரத்தில் அவர் சரியான நபர்தானா என்பதை புரிந்துகொண்டு, அடுத்தகட்ட நடவடிக்கைக்குத் தயாராக முடியும்.
சரியான பயன்தரும் வகையில் பாஸ்வேர்டை எப்படி உருவாக்குவது?
குடும்பத்தில் எத்தனை நபர்கள் இருக்கிறீர்களோ அத்தனை பேரும் ஒன்றாக அமர்ந்து ஒரு வார்த்தையை உருவாக்க வேண்டும். மின்னஞ்சல் பாஸ்வேர்டு போன்று அத்தனை சிக்கலாக இருக்கவேண்டாம். ஏனென்றால் குழந்தைக்கும் எப்போதும் நினைவில் இருக்கவேண்டும். அதனால் மிகவும் சிம்பிளான வார்த்தைகளையே தேர்வு செய்யுங்கள். அதற்காக அன்றாடம் சாதாரணமாக புழங்கும் வார்த்தையை பாஸ்வேர்டாக பயன்படுத்தக்கூடாது. அதாவது பள்ளிக்கூடம், புத்தகம், சாக்லேட் என்று அடிக்கடி பேசப்படும் வார்த்தையாக இருந்தால் குழந்தைக்கு குழப்பம் ஏற்பட்டுவிடலாம்.
உங்கள் குடும்பத்தினருக்கு மட்டுமே பிரத்யேகமான சில பெயர்களை பாஸ்வேர்டாக பயன்படுத்தலாம். அதாவது தாத்தாவின் பெயர், சொந்த கிராமத்தின் பெயர், குலதெய்வம் பெயர், ஊரில் உள்ள வீட்டின் பெயர், வீட்டில் வளரும் மரத்தின் பெயர் என்று ஓரளவு தனித்துவமான ஒன்றை பாஸ்வேர்டாக வைக்கலாம். இந்த பாஸ்வேர்டை குழந்தை மறந்துவிடக்கூடாது என்பது மிகவும் முக்கியம். எந்தக் காரணம்கொண்டும் பாஸ்வேர்டை நோட்டு அல்லது புத்தகத்தில் எழுதிவைக்க அனுமதிக்கக் கூடாது. இப்படி எழுதிவைப்பதே ஆபத்தை வரவழைப்பதாக மாறிவிடும்.
குழந்தையை கூட்டிவருவதற்கு யாரையாவது அனுப்புகிறீர்கள் என்றால், தெளிவாக பாஸ்வேர்டு சொல்லி அனுப்பவேண்டும். ஒருமுறை பாஸ்வேர்டு பயன்படுத்தப்பட்டால் உடனே வேறு பாஸ்வேர்டு உருவாக்கவேண்டும். அதே நபர் அழைக்கப்போகிறார் என்றாலும் புதிய பாஸ்வேர்டு சொல்லித்தான் அனுப்பவேண்டும். தெரிந்த நபர் அழைத்தாலும் பாஸ்வேர்டு இல்லாமல் உடன்செல்லக்கூடாது என்பதை அழுத்தம் திருத்தமாக குழந்தையின் மனதில் பதிக்கவேண்டும். பாஸ்வேர்டு ரகசியத்தை ஆசிரியரிடமும், நண்பர்களிடமும் பகிர்ந்துகொள்ளக் கூடாது என்பதையும் சொல்லித்தர வேண்டும்.
விபத்து, மரணம் போன்ற அவசர விஷயங்களைப் பேசினாலும், பாஸ்வேர்டு சொல்லவில்லை என்றால் உடன் செல்லக்கூடாது என்பதை தெளிவாக சொல்லிவையுங்கள்.
வீட்டில் இருக்கும் பெண்களைப் பொறுத்தவரை, ரேசன் கார்டு கணக்கெடுக்க வந்திருக்கிறோம், மக்கள் தொகை பதிவுக்காக வந்திருக்கிறோம் என்று வருபவர்களை வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டிய அவசியம் இல்லை. கேஸ் வருகிறது, தண்ணீர் கேன் கொண்டுவருகிறார்கள் என்றால் அறிமுகமான நபர்தானா என்பதை உறுதிபடுத்திக்கொண்டு கதவைத் திறக்கவேண்டும். தண்ணீர், கேஸுக்கு கொடுப்பதற்கான பணத்தை முன்னறையில் தயாராக வைத்திருந்து கொடுக்க வேண்டும். எந்தக் காரணம்கொண்டும் வெளிநபர்களை வீட்டுக்குள் வரவழைத்து ஹாலில் அமரச்சொல்லி, பீரோவைத் திறந்து பணம் எடுக்கக்கூடாது.
இன்றைய உலகம் போட்டிகளாலும் பொறாமையாலும் நிரம்பிவழிகின்றன. அதனால் ஆபத்து எந்த உருவத்தில் எப்படி வருமென சொல்லமுடியாது. குறிப்பாக குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் நிறையவே அபாயங்கள் காத்திருக்கின்றன. அதனால் பாதுகாப்புடன் வாழ்வதற்குத் தேவையான அத்தனை முன்னெச்சரிக்கை நடவடிகைகளையும் எடுக்கவேண்டியது அவசியம். இதில் ஒரு பகுதியாக பாஸ்வேர்டு எனப்படும் பாதுகாப்பு சாவியை குழந்தையிடமும் வீட்டில் இருக்கும் பெண்ணிடமும் கொடுத்துவையுங்கள். பாதுகாப்பும் நிம்மதியும் நிச்சயம் வசப்படும்.