பெரும்பாலான ரிஷிகள், ஞானிகள் கோபக்காரர்களாகவே இருக்கிறார்கள். அற்ப காரணங்களுக்காக சந்தோஷப்படும் மனிதர்களைக் கண்டு பொறாமைப்படுகிறார்கள். அதனால், கோபத்தை அடக்கத்தெரியாமல் காட்டுகிறார்கள் என்று ஞானகுரு சொன்னதும் ஆவேசமானான் வைத்தி.
’’நமக்கு முன்னே வாழ்ந்த ரிஷிகளோட மகிமை தெரியாம குற்றம் சொல்லாதீங்கோ…’’ என்று கோபத்துடன் சீறினான் வைத்தியநாதன்.
’’மனித வாழ்வை சிற்றின்பம் என்று ஒதுக்கி, இறைவனை அடைவதே பேரின்பம் என்று வாழ்ந்தவர்கள் ரிஷிகள். அவர்கள் வேண்டாம் என்று ஒதுக்கிய குடும்பம், காமம், உணவு, உழைப்பு போன்றவை, சாதாரண மனிதர்களுக்கு சந்தோஷம் தருகிறது. அந்த சந்தோஷத்தைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார்கள்.
வேலையை இழந்த ஒருவனுக்கு, வேலைக்குச் செல்லும் மனிதர்களைப் பார்க்கும் போதெல்லாம் இழந்ததுதான் நினைவுக்கு வரும். அதுபோலவே ரிஷிகளுக்கு மனிதர்களைப் பார்க்கும்போதெல்லாம், அவர்கள் இழந்த குடும்பமும், உணவும், குழந்தைகளும்தான் கண்களுக்குத் தெரியும். அதனால் நெஞ்சுக்குள் அடக்கிவைத்த ஆதங்கத்தை, ஏமாற்றத்தைக் கோபமாக வெளிப்படுத்துகிறார்கள். கோபம்தான் உயிர்களின் முதல் சத்ரு, அதை மனதில் இருந்து அப்புறப்படுத்துவதுதான் துறவியாவதற்கு முதல்படி. அதனால் அந்தக் கோபத்தை அடக்கத் தெரியாதவர்களை ஞானிகள் என்று சொல்லி அவமானப்படுத்தாதே…” என்றேன்.
’’கோபப்படுபவர் ரிஷியாகத் தகுதி இல்லாதவர்ன்னு சொல்றீங்க, ஆனா எல்லா ரிஷிகளும் சொர்க்கத்தில் இருப்பதாகத்தானே வேதம் சொல்லுது…’’ என்றான்.
’’உன்னுடைய ஆசைப்படி சொர்க்கம், நரகம் போன்ற உலகங்கள் இருக்கின்றன என்று வைத்துக் கொண்டால் கூட, மனிதர்களாகப் பிறந்துவிட்ட காரணத்தாலே ரிஷிகள் எல்லோருமே கண்டிப்பாக நரகத்திற்குத்தான் போயிருப்பார்கள். ஏனென்றால் மனிதர்கள் படைப்பில் மரணத்துக்குப் பின் அனைவரும் செல்லும் இடம் நரகம் மட்டும்தான்…” என்றதும் புரியாமல் விழித்தான் வைத்தியநாதன்.
’’புரியலையே சாமி…’’ என்றான்.
’’சொர்க்கத்தில் நுழைய தன்னைத் தவிர இன்னொருவரை தகுதியானவராக, எந்த மனிதரும், அது ரிஷியாக இருந்தாலும் கூட நினைப்பதில்லை. ஏனென்றால் கட்டிய மனைவி, பெற்ற பிள்ளை, பெற்றோர், நட்பு, உறவு, ஆசான், சீடன் என்று எத்தனையோ பேரிடம் பழகியிருந்தாலும், எல்லோர் மீதும் ஏதாவது ஒரு வகையில் மனக்குறையுடன், அதிருப்தியுடன்தான் வாழ்கிறார்கள் மனிதர்கள். எவரையும் முழுமையானவராக நினைப்பதே இல்லை. சின்னவயதில் ஆசிரியரை பார்த்து பிரமிக்கும் மாணவன், வளர்ந்ததும் ஆசிரியர் வாக்குக்கு மதிப்பு கொடுக்காமல் குற்றம் சொல்கிறான். தாய், தந்தையர் மீது பாசமழை பொழியும் மகள், திருமணமானதும் பெற்றோர் மீது அதிருப்தி கொள்கிறாள். அதனால் சொர்க்கத்தில் கடவுளுக்குப் பக்கத்தில் இருப்பதற்கு, தகுதி படைத்தவன் என்று, தன்னை மட்டுமே நினைப்பான் மனிதன். ஒவ்வொரு மனிதனும் இப்படியே நினைப்பதால், எந்த மனிதனுக்கும் சொர்க்கத்தில் நுழையும் தகுதி இருப்பதில்லை. இன்னும் வெளிப்படையாகச் சொல்வதென்றால் மனிதனின் உண்மையான குணம் என்ன தெரியுமா? தான் நரகத்திற்குப் போனாலும் பரவாயில்லை, தனக்குத் தெரிந்தவர் எவரும் சொர்க்கத்திற்குப் போய்விடக் கூடாது என்பதுதான். அதனால் கடவுள் மட்டும்தான் சொர்க்கத்தில் எப்போதும் தனிமையில் இருப்பார்…. பாவம்’’ என்று சிரித்தேன்.
என் பதிலை ஜீரணிக்க முடியாத சிந்தனையில் ஆழ்ந்தான் வைத்தியநாதன். வழியில் பட்டாணி விற்றுக் கொண்டிருந்தவனைப் பார்த்ததும் எங்கள் பயணம் தடைபட்டது. அவனுக்கு சற்றுத் தொலைவில் சில குரங்குகள், சிதறிவிழும் பட்டாணிகளுக்காக காத்து நின்றது. அவனிடம் கை நீட்டினேன். ஏற இறங்கப் பார்த்தபடி சிறு கரண்டியில் பட்டாணியை எடுத்து கையில் வைத்தான். இரண்டை மட்டும் வாயில் போட்டுவிட்டு மீதியை குரங்குகளிடம் வீசினேன். எபநேசர் பணம் கொடுத்து பட்டாணி வாங்கி என்னிடம் கொடுத்தார். அதையும் குரங்குகளிடம் வீசினேன்.
’’எபநேசர்… உன் குடும்பத்துடன் சேர்ந்து போகலாமே, எனக்குத்தான் வைத்தியநாதன் இருக்கிறானே…’’ என்றேன்.
கொஞ்சநேரம் தயங்கியபின், ‘‘சாமி… காவல் துறை மேல நிறைய தப்பு சொன்னீங்க, ஆனா அவங்களை தப்பு செய்யத் தூண்டி விடுற அரசியல்வாதிகளைப் பத்தி எதுவும் சொல்லலையே. ஏன் அரசியல்வாதிகள் இத்தனை கெட்டவர்களாக இருக்கிறார்கள்?’’ என்று ஆதங்கத்துடன் கேட்டார்.
’’இந்த உலகில் எதுவும் நிரந்தரமில்லை என்ற மந்திரத்தை மிகத் தெளிவாக புரிந்து கொண்ட புத்திசாலிகள் அரசியல்வாதிகள் மட்டும்தான்…’’ என்றேன்.
’’சாமி.. நீங்க எந்தக் காலத்துல இருக்கீங்க? இப்ப ரவுடித்தனம் பண்றவங்கதான் அரசியலுக்கு வர்றாங்க. அங்கேயும் தப்புத்தண்டா செஞ்சி பதவி வாங்குறாங்க, அதை வைச்சு பணமும் சம்பாதிச்சுடுறாங்க, அவங்களைப் போய்…’’ என்று இழுத்தான் வைத்தியநாதன். அவன்கூட அரசியல்வாதிகள் மீது கோபம் காட்டுவது ஆச்சர்யமாக இருந்தது.
’’அரசு என்பது ஒரு தனிமனித சாம்ராஜ்யமல்ல. வெவ்வேறு குணமும், மதமும், ஜாதியும், சிந்தனையும் சேர்ந்த ஆயிரமாயிரம் அதிகாரிகள் கொண்ட பல்சக்கரம். அந்த அரசு இயந்திரத்தை தன் இஷ்டப்படி செயல்படுத்த முயன்ற அரசுகள் எல்லாம் இதுவரை தோற்றுப் போய்விட்டது. ஏனென்றால் ஒவ்வொரு அரசும் குறிப்பிட்ட ஆயுள் என்ற கயற்றில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இது தவிரவும் எந்த நேரமும் அரசுக்கு ஆபத்து வரும் என்று பயத்தில், அரசியல்வாதிகள் சுயதேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு முதலிடம் கொடுத்து விடுகிறார்கள். அதற்காக தாய் நாட்டை வல்லரசுகளிடம் காட்டிக் கொடுக்கவும், உலக வங்கியிடம் அடமானம் வைக்கவும் தயங்க மாட்டார்கள். நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதங்கள் வாங்குவதை விட, கமிஷனுக்காகத்தான் வாங்குகிறார்கள், மக்களுக்காக ரோடு போடுவதை விட, கான்டிராக்ட்டில் பணம் புரளுமே என்றுதான் அனுமதி கொடுக்கிறார்கள். இதற்கெல்லாம் மௌன சாட்சியாகவும், சில இடங்களில் காரணமுமாக இருக்கிறது அதிகார வர்க்கம்.
இதையெல்லாம் பார்த்துக் கோபப்பட்டு, ஆதங்கப்பட்டு புதிதாக கட்சி தொடங்கி, ‘மக்களுக்காக ஊழல் இல்லாத, திறமையான ஆட்சியைத் தருவேன்’ என்று சூளுரைத்து எத்தனையோ நபர்கள் கிளம்பி வந்தார்கள். ஆனால் அவர்கள் அத்தனை பேரும் அதிகார வர்க்கம் என்ற ஆக்டோபஸிடம் மோத முடியாமல் தோற்றுப் போய்விட்டார்கள்…’’
’’அப்படின்னா, எல்லா தப்புக்கும் காரணம் அதிகாரிகள்தான் என்கிறீர்களா? அவர்கள் ஆட்சிதான் நடக்கிறதா?’’ உஷ்ணமாகக் கேட்டார் எபநேசர்.