தேவையில்லாத ஒன்றை பேசுவதிலும், தெரியாதவற்றை பரப்புவதிலும் மனிதர்களுக்கு அலாதி ஆனந்தம் உண்டு. அப்படித்தான் நொண்டிச் சாமியார் பற்றி தான் அறிந்த தகவலை சொல்வதற்கு ஆசைப்பட்டார் சங்கரன். அவரை தடுத்து நிறுத்திக் கேட்டேன்.
’’நொண்டிச் சாமியாரைப் பற்றிச் சொல்லும் முன், நான் கேட்கும் மூன்று கேள்விகளுக்கு பதில் சொல் சங்கரா… நீ சொல்லப் போவது முழுமையான உண்மை என்பது உறுதியாகத் தெரியுமா?’’
’’அத்தனை உறுதியா சொல்ல முடியாது, ஆனா நெருப்பு இல்லாம புகையாதுங்களே…’’
’’சரி… நீ சொல்லப் போவது நல்ல விஷயமா அல்லது கெட்டதா?’’
கொஞ்சம் தயங்கியபடி ‘‘கெட்டதுதான்…’’ என்றார்.
’’நீ சொல்லப் போவதால் எனக்கு அல்லது உனக்கு அல்லது அந்த நொண்டிச் சாமியாருக்கு ஏதாவது வகையில் நன்மை கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா?’’
’’இல்லை…. எனக்கோ, உங்களுக்கோ எந்த பிரயோஜனமும் இல்லை…’’ என்று சொன்ன சங்கரனை தீர்க்கமாகப் பார்த்தேன்.
’’யாருக்கும், எதற்கும் பயன்படாத ஒன்றை பேசத்தான் வேண்டுமா? கோள் சொல்வது பாவகரமான செயல் அல்லவா?’’ என்று அழுத்தமாகக் கேட்டேன்.
’’மன்னிச்சுக்கோங்க சாமி… ஏதோ புத்தி புரண்டு போச்சு. உங்களை மாதிரி அவர் இல்லையேங்கிற ஆதங்கத்துல பேசிட்டேன்…’’ என்று முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டார்.
’’சங்கரா… இந்த உலகில் மக்கள் துன்பம் அடைவதற்கு முக்கியக் காரணம் பிறரை ஒப்பிட்டுப் பார்ப்பதுதான். ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு கிடைத்ததும் சந்தோஷப்படும் மனிதன், தன் அருகே இருப்பவனுக்கு ஆயிரத்து நூறு என்றதும் துயரம் அடையத் தொடங்குகிறான். ஆயிரம் ரூபாயில் கிடைத்த சந்தோஷத்தை நூறு ரூபாயில் தொலைத்து விடுகிறான். இந்த துன்பத்துக்கு பாதை போட்டுக் கொடுப்பது பொறாமையும், தவறான வழிகளில் கூடுதல் சம்பளம் பெற்றுவிட்டான் என்று கோள் மூட்டுவதும்தான். இந்த இரண்டையும் தவிர்த்து, உன் சந்தோஷத்துக்கும், வருத்தத்துக்கும் நீ மட்டுமே காரணமாக இரு.’’
’’சரி சாமி..’’ என்றவர் மடியில் இருந்து பொடி எடுத்துப் போட்டார். நானும் கை நீட்டி வாங்கி சத்தம் போட்டு உறிஞ்சியபடி மரத்தடியில் சாய்ந்து வசதியாக உட்கார்ந்து கொண்டேன்.
‘‘ஆரம்பத்துல பூஜை, அபிஷேகம் செய்யும்போது அக்கறையுடன், பக்தியுடன் செய்தேன். ஏதாவது தவறு நடந்து விட்டால் கடவுள் குற்றமாகிவிடும் என்று பயந்தேன். ஆனால் காலம் செல்லச்செல்ல கடவுள் மீது பயம் குறைந்து விட்டது. இப்போதும் கடவுளை நம்புகிறேன், ஆனால் நான் பூஜை செய்யும் சிலை மீது பயம் வரவில்லை. சிலையைத் தொடும்பொழுது வாயில் இருந்து மந்திரங்கள் வழிந்து கொண்டிருந்தாலும் பிரமிப்போ, சந்தோஷமோ வருவதில்லை. ஏன் இப்படி மாறிப் போனேன்?’’ என்றார்.
’’நீங்கள் ஆரம்பத்திலும் தவறு செய்தீர்கள், இப்போதும் தவறு செய்கிறீர்கள்…’’
’’என்ன சாமி சொல்றீங்க?’’ அதிர்ச்சியுடன் கேட்டார் சங்கரன்.
’’ஆரம்பத்தில் கல்லில் கடவுள் இருப்பதாக நம்பினீர்கள், இப்போது அந்த கல்லில் இல்லை என்று நம்புகிறீர்கள். இரண்டுமே உங்கள் பூசாரி என்ற கடமைக்கு தேவையில்லாத விஷயம். கல்லில்தான் கடவுள் இருக்கிறார் என்று நம்புவது எத்தனை தவறோ, அத்தனை முட்டாள்தனம்தான் கல்லில் கடவுள் இல்லை என்பதும்…’’
’’புரியலையே…’’
’’உங்களது பணி ஆலயத்தைத் தேடி வருபவர்களுக்கு கடவுளை அறிமுகப் படுத்துவதுதான். இதில் சொந்த விருப்பங்கள், எண்ணங்கள் குறுக்கே வரக்கூடாது. இத்தனை நாள் கடவுளுக்கு பூஜைகள் செய்தும் நல்லதாக எதுவும் நடக்கவில்லையே என்ற வெறுப்பு உங்கள் மனதின் ஓரத்தில் வந்துவிட்டது…’’ என்று அவரையே கூர்ந்து கவனித்தேன்.
’’ஆமாம் சாமி… காதோரம் நரைக்க ஆரம்பிச்சிடுச்சு. இன்னும் என் பொண்ணுக்கு கல்யாணம் முடிக்கலை. சொந்தமா ஒரு குடிசைகூட கிடையாது. இத்தனை நாள் கடவுளுக்கு உண்மையா பூஜை செஞ்சதுக்கு…’’ என்று தடுமாறினார்.
’’பூஜை செய்வதற்கு சம்பளம் வாங்கிக் கொண்டாய்… புத்திசாலித்தனமாக பூஜை தட்டில் விழுந்த காசுகளையும் நீயே எடுத்திருந்தால், இன்னும் சிறப்பாகவே வாழ்ந்திருக்கலாம். உன்னுடைய முட்டாள்தனத்துக்கு கடவுளை ஏன் குறை சொல்கிறாய்?’’
’’நான் நேர்மையாக இருந்தது தப்பா…?’’
’’நேர்மையாக இருந்தது தப்பில்லை, அதற்கு பலனை எதிர்பார்க்கிறாயே அதுதான் தவறு…’’
’’இத்தனை வயசாச்சேன்னு பயமா இருக்கு…’’
’’தலை நரைத்துவிட்டதே என்று கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் நரைத்த தலை என்பது ஒரு கிரீடத்தை அணிந்திருப்பதைப் போன்றது. வயதான காலம் என்பது ஆசிர்வாதங்கள் நிறைந்த வாழ்வின் உச்சகட்டம். உன் வாழ்வின் ஏமாற்றங்களுக்கு முதுமையை காரணம் காட்டாதே. இப்போது உன்னை வருத்திக் கொண்டிருக்கும் திருமணச் செலவும், வீடு கட்டும் ஆசையும் முட்டாள்தனமானவை மட்டுமல்ல ஆடம்பரத்துக்கு உன்னை அடிமையாக்குபவை. திருமணம் எத்தனை எளிமையாக நடக்கிறதோ அத்தனை தூரம் அது, இல்லாதவர்களுக்கு நல்லது…’’
’’என்ன சாமி… இப்படிச் சொல்றீங்க? ஹோமம் வளர்த்து, அம்மி மிதிச்சு, அருந்ததி பார்த்து, சடங்குகள் செஞ்சு, விருந்தினர்களை எல்லாம் ஒன்று கூட்டி விருந்து வைத்து சந்தோஷப்படும் கல்யாணத்தைப் போய் முட்டாள்தனம்னு சொல்றீங்க? எல்லோருடைய ஆசிர்வாதமும் இருந்தாத்தானே பொண்ணு நல்லா வாழமுடியும்?’’
’’அப்படி ஆசிர்வாதங்களுடன் நடத்தப்பெறும் திருமணங்கள் எதுவுமே இதுவரை தோல்வியைத் தழுவியதில்லையா?’’
என்ன பதில் சொல்வது என தெரியாமல் விழித்த சங்கரன், ‘‘வாழ்நாளில் ஒரே ஒரு முறை என்பதால், திருமணத்தை விமர்சையா கொண்டாட ஆசைப்படுறோம்.’’
’’அதற்காக வரதட்சணையாக அல்லது கடன் வாங்கி பிரமாண்டமாகச் செலவு செய்யவேண்டும் என்று எந்த வேதமும் சொல்லவில்லையே. இறைவனைப் பொறுத்தவரை கற்பூரமும், நெய் ஆரத்தியும் ஒன்றுதான் என்பது தெரியாதா?’’
இதில் சங்கரன் சமாதானம் அடையவிட்டாலும், ‘‘சரி சாமி… கோயில்ல வைச்சு தாலி கட்டினாலும் அது கல்யாணம்தான்கிறதை ஏத்துக்கிறேன். ஆனா, வீடு வேண்டாங்கிறீங்களே, நிரந்தரமா ஒரு வீடு இருக்கிறது எத்தனை பெரிய பலம்? உண்ணாமத் தின்னாம இருந்தாலும் வீட்டுக்குள்ள மானம், மரியாதையோட இருக்கலாமே?’’ என்றார்.
’’நிரந்தர வீடா… அப்படின்னா?’’ என்று நான் சிரிக்க… புரியாமல் பார்த்தார் சங்கரன்.