வீட்டைவிட்டு வெளியே வந்ததும் சட்டென சுதந்திரக் காற்று முகத்தில் மோதியதுபோல் உணர்ந்தாள் உமா. தலையில் இருந்த சுமையை கொஞ்சநேரம் இறக்கிவைக்கும் தற்காலிக நிம்மதி கிடைத்தது. கையில் இருந்த கூடைக்குள் பூ, பழம், கற்பூரம் வாங்கி போட்டுகொண்டு  துர்க்கையம்மன் கோயில் நோக்கி விடுவிடுவென நடை போட்டாள்.

கோயிலுக்குள் நுழையும் முன்பு அவளைப் பற்றி கொஞ்சம் பார்த்துவிடலாம். உமாவுக்கு நாற்பது வயதைத் தொட்டுவிட்டது. குடும்பத் தலைவி என்று பெருமையாக சொல்லிக்கொள்ளும்முழுநேரத் தொழிலாளி.  மாமனார், மாமியாருடன் உமாவின் அம்மாவும் இவளுடனே  இருக்கிறார்கள். மூத்த பெண் கல்லூரி முதல் ஆண்டும் அடுத்த பையன் எட்டாம் வகுப்பும் படிக்கிறார்கள். கணவன் டூ வீலர் மெக்கானிக் ஷாப் வைத்து தேவைக்கேற்ப சம்பாதிக்கிறான். 

உமாவின் அம்மாவுக்கும், மாமனாருக்கும் பென்ஷன் வருகிறது. கணவனும் கேட்கும்போதெல்லாம் பணம் கொடுத்துவிடுவதால், வீட்டில் காசுக்குப் பஞ்சமில்லை. உமாவுக்கு முதுகுவலி வந்ததில் இருந்து பாத்திரம் கழுவவும், துணி துவைக்கவும் வேலைக்கு ஒரு பெண் வருகிறாள். ஆக, வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு ஒரு நிறைவான குடும்பம் போல் தோன்றும், உண்மையில் இந்தக் குடும்பத்தில் யாருமே நிம்மதியாக இல்லை என்பதுதான் உண்மை.

மூன்று பெரிசுகளுக்கும் நேரத்துக்கு நேரம் தேவையான உணவு, மாத்திரை, மருந்து கொடுத்து சமாளிப்பது உமாவுக்கு சவால் என்றால் தோளுக்கு மேல் வளர்ந்த பெண் பிள்ளை, காபி குடித்த டம்ளரைக்கூட கழுவி வைப்பதில்லை, எந்த நேரமும் செல்போனில் இருந்து நிமிர்வதே கிடையாது. சின்னவனைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை, எதற்கெடுத்தாலும் கத்திக்கத்தி காரியம் சாதிக்கிறான். 

கணவன் எப்போது வெளியே போவான், எப்போது  வருவான் என்று தெரியாது. காலை 5 மணிக்கு எழுந்துகொள்ளும் உமா இரவு வரை எதையாவது செய்துகொண்டே இருந்தாலும், இன்னமும் வேலை மிச்சமிருப்பதாகவே தெரியும்.  ஏதேனும் குறை சொல்வது மட்டும்தான் அந்த வீட்டில் பேச்சாக இருக்குமே தவிர, சிரிப்போ குதூகலமோ கேட்பதில்லை.

இந்தக் குடும்பம் ஏதோ மேஜிக்கால் மட்டுமே ஒட்டியிருப்பதாக அவ்வப்போது நினைத்துக்கொள்வாள் உமா. இந்த ஒற்றுமைக்காக வாரம் மூன்று நாட்கள் கோயிலுக்கு ஓடுவாள். 

துர்க்கைக்கு விளக்கு போட்டால் மகளுக்கு நல்ல வரன் கிடைக்கும், வீடு சுகப்படும் என்று சொன்னதைக் கேட்டு, தொடர்ந்து செவ்வாய்க் கிழமைகளில் மதிய நேரம் விளக்கு போட்டு வருகிறாள். கோயிலுக்கு வந்தாலும் வீட்டு நினைப்புதான் உமாவுக்கு இருக்கும். கிச்சனில் தேடுகிறேன் என்று மாமியார் கிழம் எதையாவது கீழே கொட்டிவிடும். அம்மாவையும் தன்னுடன் யாரையும் ஒரு வார்த்தைகூட சொல்ல முடிவதில்லை.

முன்பு உமாவின் அம்மா சமையல் வேலையில் நல்லபடியாக உதவி செய்துகொண்டு இருந்தாள். அவள் பாத்ரூமில் விழுந்து கையை உடைத்துக்கொண்டதில் இருந்து அதுவும் நின்றுபோனது. அதனால் தினம்தினம் உமாவைப் பொறுத்தவரை குடும்பம் நடத்துவது போர்க்களம் போன்றதுதான். யாரேனும் ஒருவர் கத்துவதும், உமா திருப்பிக் கத்துவதும் வீட்டில் சகஜமான விஷயம். தொலைக்காட்சியில் வரும் வடிவேலு நகைச்சுவைகூட உமாவை சிரிக்க வைப்பதில்லை என்பதிலிருந்தே அவள் எத்தனை தூரம் நொந்து கிடக்கிறாள் என்பதை அறிந்துகொள்ளலாம்.

இதோ கோயிலுக்குள் நுழைந்துவிட்டாள் உமா. மனமுருக துர்க்கையைக் கும்பிட்டாள். வீட்டில் ஒவ்வொரு நபருடைய நலனுக்கும் ஒரு கோரிக்கை வைத்துவிட்டு, கொஞ்சநேரம் வசந்த மண்டபத்தில்  உட்கார்ந்தாள். கோயிலுக்கு வருவதுதான்  உமாவுக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு. இந்த வசந்த மண்டபத்தில் கிடைக்கும் நிம்மதி வீட்டில் ஏன் கிடைப்பதில்லை என்று யோசித்தாள். அவளுக்குப் பதில் சொல்வது போல் ஒரு குரல் பக்கத்தில் ஒலித்தது.

’’யாருக்குத்தான் பிரச்னை இல்லை… நீ வாழ்க்கையிலே இருக்கிற பிரச்னைகளை மட்டும் பார்த்துக்கிட்டே இருந்தா,  அதிலே இருக்கிற சந்தோஷம் கண்ணில் படவே செய்யாது. தினமும் ஏதாச்சும் ஒரே சந்தோஷம் உன்னைச் சுத்தி நடந்துக்கிட்டுத்தான் இருக்கும். நீ அதை தேடிக் கண்டுபிடி. அதை மத்தவங்ககிட்டே சொல்லு. உன் வாழ்க்கையே மாறிப் போகும்’’ என்று அந்தக் கோயிலின்  பூசாரி, யாரோ ஒரு இளம்  பெண்ணிடம் பேசிக்கொண்டு இருந்தார்.

ஏதோ, இந்த வார்த்தைகள் தனக்காகவே சொல்லப்பட்டதாகத் தோன்றியது. இதை ஏன் நம் வீட்டில் அமல்படுத்தக் கூடாது என்ற சிந்தனை எழுந்ததும் விருட்டென எழுந்து வீட்டுக்கு சந்தோஷமாகத் திரும்பினாள்  உமா. 

வீட்டுக்குள் நுழைந்ததும் கோயில் பிரசாதத்தை அனைவருக்கும் கொடுத்துவிட்டு அம்மா அருகே வந்தவள், ‘’அம்மா… இன்னைக்கு நடந்த ஏதாவது ஒரே ஒரு நல்ல விஷயம்  சொல்லு…’’ என்று கேட்டாள். திடீரென எதற்காக கேட்கிறாள் என்று புரியாமல் அம்மா விழிக்க, ‘‘கண்டிப்பா சொல்லணும், யோசிச்சு சொல்லும்மா…’‘ என்று அவசரப்படுத்தினாள்.

‘‘இன்னைக்கு காலையில  நீ வைச்ச பொங்கல் ரொம்பவும் டேஸ்டா இருந்திச்சு. உனக்குத் தெரியாம கூடுதலா கொஞ்சம் போட்டு சாப்பிட்டேன்… ரொம்பவும் சந்தோஷமா இருந்திச்சு’’ என்று சொல்லி புன்முறுவல் செய்தார். அது உமாவுக்கும் சந்தோஷமாக இருந்தது. அதே கேள்வியை அத்தையிடம் கேட்டாள்.

‘‘இன்னைக்கு பேப்பர்ல ராசி பலன் பார்த்தேன். ஏதோ யோகம் அடிக்கப்போகுதாம். அடிக்குதோ இல்லையோ… அதை படிக்கும்போது சந்தோஷமா இருந்திச்சு’’ என்றார். இருவரும் சொன்னதும் மாமனார் தானே முந்திக்கொண்டு, ‘‘நானே சொல்றேம்மா… இன்னைக்குக் காலையில நான் எழுந்தரிக்கும்போது தலைசுற்று வரலை. ரொம்பவும் சந்தோஷமா இருந்திச்சு’’ என்றவர், ‘‘ஆமா.. ஏன் கேட்குற… உன் சந்தோஷத்தை சொல்லலையே’’ என்று கேட்டார்.

‘‘கோயில்ல எனக்கு சாமி அருள் வாக்கு சொன்னதுபோல ஒருத்தர் பேசினார். அதைக் கேட்டதும் சந்தோஷமா இருந்திச்சு. இனிமே நீங்க தினமும் எனக்கு ஒரே ஒரு சந்தோஷத்தை சொல்லியே ஆகணும்… அதைக் கேட்டா எனக்கு நிறைய சந்தோஷம் கிடைக்கும்’’ என்று  நிபந்தனை போட மூவரும் சந்தோஷமாகத் தலையாட்டினார்கள்.

இதே விஷயத்தை மாலையில் பிள்ளைகளிடமும் இரவு கணவனிடமும்  கேட்க வேண்டும் என்று நினைத்தபோதே உமாவுக்கு இனித்தது. தினமும் நம்மைச் சுற்றி ஏதேனும் சந்தோஷம் இருக்கத்தான் செய்கிறது, அதைக் கவனிக்காமலே வாழ்ந்திருக்கிறோம் என்றபடி,  தன் தலையில் தானே குட்டிக்கொண்டாள் உமா.

இனி, உமா கண்களுக்கு பூக்கள் மட்டும்தான் தெரியும், முட்கள் காணாமல் போகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *