தன் மகளின் தாய்மைக் காலத்தை எண்ணி கவலைப்படுவது ஒவ்வொரு தாய்க்கும் உள்ள இயல்புதான். அப்படித்தான் தன் மகளின் பிரசவ காலத்தை எண்ணி கவலைப்பட்டாள் அருணா.
’’சரி, இந்த உலகத்தில் எந்தப் பெண்ணுமே இதுவரை குழந்தையே பெற்றதில்லை. அப்படியொரு சாதனையை உன் மகள்தானே முதன்முதலில் செய்யப் போகிறாள். அதனால் பயம் வரத்தானே செய்யும்?’’ என்று புன்னகைத்தேன். என் நகைச்சுவையை ரசிக்க முடியாமல் பொசுக்கென கண்ணீர் வடித்தாள்.
’’ஒவ்வொரு பிரசவமும் பொண்ணுக்கு மறுபிறவி. குழந்தையை வயித்துல சுமந்திருந்து வெளியேத்துற வரைக்கும் அவ படுற வேதனை கடவுளுக்குக்கூடப் புரியாது!’’ என்றாள்.
’’வலி தாங்க மாட்டாங்கிறதால, சிசேரியன் செய்ய ஏற்கெனவே முடிவு செஞ்சுட்டோமே… பிறகு ஏம்மா பயப்படுறீங்க?’’ என்று மகன் ஆறுதல் சொன்னான்.
’’சிசேரியன்னாலும் வேதனையை தாங்கனுமே, அதுக்கும் அவ உடம்புல சக்தி இல்லையே…’’ என்று அழுதாள்.
’’பூக்கள், கனிகளின் கனத்தைத் தாங்க முடியாமல், ஒடிந்துபோன செடிகளை எங்காவது பார்த்து இருக்கிறாயா? பறவைகள் முட்டை இடுவதைப் போன்று, விலங்குகள் குட்டி போடுவது போன்று பெண்களும் சிறிதளவே சிரமத்துடன் குழந்தை பெற்றுக் கொள்ளும்படிதான் அவர்களது உடல் படைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அவள் மீது அன்பு கொண்டவர்கள்தான் பிரசவ வலி பற்றி தவறான தகவல்களை முன்கூட்டியே சொல்லிக் கொடுத்து கலவரப்படுத்தி விடுகிறார்கள்.
பட்டாம்பூச்சி போன்று பறந்து திரிந்து வேலை செய்ய வேண்டிய கர்ப்பிணிகளை, கூட்டுப்புழுவைப் போன்று நெளிய வைத்து விடுகிறார்கள். பணம் கறக்கும் மருத்துவர்களும் அவர்கள் பங்குக்கு, கர்ப்பிணிகளை சோம்பேறிகளாக்கி பயத்தை விதைக்கிறார்கள். அதனால்தான் ஒவ்வொரு பெண்ணும் வயிற்றுக்குள் வெடிகுண்டு சுமப்பது போன்று அதிகபட்சம் பயந்து நடுங்குகிறாள்.
வெற்றி பற்றிய சந்தேகத்துடன் பந்தயத்தில் கலந்து கொண்டவன் ஜெயிக்கவே முடியாது. பிரசவத்தை மகா துன்பமாக, தாங்கமுடியாத வலியாக கற்பனை செய்து கொள்ளும் பெண்களுக்கும் வலியற்ற இயல்பான பிரசவம் சாத்தியமில்லாமல் போகிறது…’’ என்றேன்.
’’இயற்கையா பிரசவம் நடக்கும்போது நிறைய பெண்கள் இறந்து போக வாய்ப்பு இருக்குதே சாமி…’’ மருமகள் விளக்கம் கேட்டாள்.
’’அன்போடும், புரிதலோடும், காதலோடும் ஒரு வேலையைச் செய்யும் போது தேகம் எத்தனை சிரமம் அனுபவித்தாலும், அது வேதனையாகத் தோன்றாது. அப்படித்தான் பிரசவத்தையும் காதலுடன் எதிர்கொள்ள வேண்டும். அதற்கு முதல்கட்டமாக பிரசவ நேரம் வரை, செய்ய முடிந்த எல்லா வேலைகளையும் செய்து, உடம்பில் கொழுப்பு சேராமல் வைத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் பள்ளியில் இருந்து வீட்டுக்கு வரும் நேரத்திற்காக ஆர்வமாக காத்திருப்பது போன்று வயிற்றுக்குள் இருக்கும் தன்னுடைய இன்னொரு உயிர், வெளிவரும் நேரத்தை கர்ப்பிணி ஆர்வமுடன் எதிர் கொள்ள வேண்டும். ஆசை இருந்தால் பிரசவ வலியையும் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளும் மனம் வரும். மருத்துவர்கள் மேற்பார்வையில் நடக்கும் அறுவைச் சிகிச்சை பிரசவத்திலும் சிலநேரம் மரணம் நிகழ்வதைப் போன்று, இயற்கை பிரசவத்திலும் விதிவிலக்காக மரணங்கள் நேரலாம். விதிவிலக்குகள் எப்போதும் உதாரணங்கள் ஆகாது…’’
’’நீங்க சொன்னதை அப்படியே என் பொண்ணுகிட்டே சொல்றேன், அப்புறம்..’’ என்று இழுத்தபடி கணவனைப் பார்த்தாள்.
’’ம்.. உன் கணவருக்கு என்ன வேண்டும்?’’
’’என் வீட்டுக்காரர் இன்னும் பெரிய பதவிக்குப் போகணும், இந்த தமிழ்நாட்டுலேயே பெரிய அதிகாரியா இருந்து, எல்லோருக்கும் நல்லவரா இருக்கணும். தினமும் டி.வி.யில அவரைப் பத்தி பெருமையா காட்டணும்..’’ என்று குழந்தை போன்று ஆசைப் பட்டாள்.
’’உங்களுக்கு ஒரு அற்புதம் காட்டுகிறேன். ஒரே ஒரு கணம் எல்லோரும் கண்ணை மூடுங்கள்…’’ என்றதும் எல்லோரும் ஆர்வமாக கண்களை மூடினார்கள்.
’’நான் சொல்லும் வரை யாருமே கண்ணைத் திறக்காதீர்கள். இதோ… எபநேசருக்கு உயர் பதவிக்கான அரசு ஆணை வந்துவிட்டது. ஆம், அவர் தமிழகத்தின் தலைமை போலீஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டு பதவியும் ஏற்றுவிட்டார். அதை எல்லா தொலைக்காட்சியிலும் காட்டுகிறார்கள். அருணாதேவி ஆனந்தக் கண்ணீருடன் அந்த நிகழ்ச்சியைப் பார்க்கிறார். அதோ, எபநேசரின் உத்தரவுக்கு அனைத்து காவலர்களும் அடிபணிந்து நடக்கிறார்கள். அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் அவர் முன் ஏதாவதொரு வேண்டுகோளுடன் நிற்கிறார்கள். நினைத்த பதவியை பிடித்த திருப்தியில் எபநேசர் இருக்கிறார். அவரது சந்தோஷத்தில் குடும்பத்தில் இருக்கும் எல்லோரும் பங்கெடுத்து ஆனந்தமயமாக இருக்கிறீர்கள். சரி, இப்படியே சில மாதங்கள் ஆகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். கண்ணைத் திறக்காமலே பதில் சொல்லுங்கள், உங்களது அடுத்த ஆசை என்ன?’’
கொஞ்சநேரம் அந்த இடம் அமைதியாக இருந்தது.
’’அடுத்ததா அவர் இந்திய அளவுல பெரிய ஆபிஸராப் போகணும்…’’ என்றாள் அருணா.
’’ஆஹா… நன்றாகச் சொன்னீர்கள். இப்போது கனவு முடிந்தது, கண்களைத் திறங்கள்’’ என்றதும் அனைவரும் கண் திறந்தார்கள்.
’’கண்ணை மூடியபடி நீங்கள் பெற்ற சந்தோஷம் சில நொடிகள் நீடிக்கும் முன்னரே உங்கள் கணவரின் அடுத்த பதவி குறித்த ஆசை வந்துவிட்டது அல்லவா? அந்த அகில இந்திய பதவி கிடைத்தால் மட்டும் நிரந்தரமாக சந்தோஷப்படப் போகிறீர்களா? இல்லை, அதற்கும் அடுத்த பதவிக்காக ஏங்கி வருத்தப்படத்தான் போகிறீர்கள். நாளை கிடைக்க இருக்கும் ஒன்றில்தான் மகிழ்ச்சி இருக்கிறதென நினைத்தால், அந்த ‘நாளை கடைசிவரை உங்களுக்கு வரவே வராது.
மன்னர்கள் எல்லோருமே வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக இருந்ததே கிடையாது. ஏனென்றால் அக்கம்பக்கத்தில் இருக்கும் எல்லா நாட்டையும் பிடித்தால்தான், நிம்மதியாக இருக்க முடியும் சந்தோஷம் கிடைக்கும் என்று வாழ்நாள் முழுவதும் சண்டை போட்டுக் கொண்டே இருந்தார்கள். உலகையே தன் ராஜ்ஜியத்திற்குள் கொண்டுவர வேண்டும் என நினைத்த அலெக்ஸாண்டர் பெற்றதெல்லாம் வெற்றியல்ல, தோல்விதான். அதனால் இன்றைய நிஜத்தை மட்டும் கொண்டாடுங்கள். நாளைய பொழுதை விடிந்தபின்னர் பார்த்துக் கொள்ளலாம்…’’ என்றேன்.
’’ரொம்பவும் நல்லா சொன்னீங்க சாமி. உண்மையில நான் இதுவரை இந்தப் பதவியை பெருசா எடுத்துக்காம, அடுத்த பதவி மீது மட்டுமே குறியாக இருந்தேன்…’’ என்று எபநேசர் என் கையைப் பிடித்து ஆனந்தப்பட்டார்.