ஹாலிங்பெல் அலறியது. தூங்கிக்கொண்டிருந்த பவித்ரா சட்டென்று கண் விழித்தாள். பக்கத்தில் கணவனும், குழந்தையும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். இரவு 1 மணி. இந்த நேரத்தில் யார் ஹாலிங் பெல் அடிப்பது என்று ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள். அண்ணனின் மகள் ஷாலு முகம் முழுக்க கோபத்துடன் நிற்பது தெரிந்தது. 

கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறாள். வீட்டு வாசலுக்கு வெளியே அவள் வந்த ஸ்கூட்டி தாறுமாறாகக் கிடந்தது. ஏதோ சண்டை நடந்திருக்கிறது, கடும் கோபத்தில் வீட்டைவிட்டு ஓடிவந்திருக்கிறாள் என்பது புரிய, சட்டென்று கதவைத் திறந்து உள்ளே இழுத்தாள்.

’’அத்தை, உங்க அண்ணன் போன் செஞ்சா, நான் இங்கே இல்லைன்னு சொல்லணும், அதுக்கு சரின்னா…  இருக்கேன். இல்லைன்னா சொல்லுங்க, எனக்குன்னு ஆளுங்க இருக்காங்க… நான்  போய்க்கிட்டே இருக்கேன்…’’ இன்னமும் சூடாக குதித்தாள். அவள் சொல்லி முடிக்கும் முன்னரே செல்போன் சிணுங்கியது. சட்டென்று எடுத்துப் பேசினாள்.

’’என்னண்ணா..?’’

……………………………..

’’எதுக்கு அவகிட்டே சண்டை போடுறே…?”

……………………………

’’சரி, வந்தா சொல்றேன்.  யாராவது ஃப்ரண்ட் வீட்டுல பத்திரமா இருப்பா.  காலையில பேசிக்கலாம், இப்ப யாரையும் எழுப்பாம நிம்மதியா தூங்கு’’  என்று செல்போனை அணைத்துவைத்தவள், ‘’ பதறிப்போய் கேட்குறாரு…’’ என்றாள்.

’’ம்.. நான் எங்காவது விழுந்து செத்தா நல்லதுன்னு நினைப்பாரு உங்க அண்ணன், அவருக்கு ஜோடியா வந்து சேர்ந்திருக்கு பாரு, அம்மான்னு எனக்குன்னு…’’ என்றபடி சோபாவில் அமர்ந்தாள்.

’’ஏதாவது சாப்பிட்டியா.. ஏதாச்சும் ரெடி செய்யவா?’’

’’அதெல்லாம் முடிஞ்சதும்தான் சண்டை…’’

’’என்னதான் உன் பிரச்னை…’’ என்றபடி ஷாலுவின் அருகே அமர்ந்து அவள் கைகளைப் பற்றியதும் ‘கோ’வென அழத்தொடங்கினாள். அவள் அழுதுமுடிக்கட்டும் என்று அமைதியாக காத்திருந்தாள் பவித்ரா.

’’என் மேல யாருக்கும் அன்பே இல்லை. நான் மெடிக்கல் படிக்கிறேன்னு சொன்னேன். கொஞ்சம் மார்க்ல போயிடுச்சு, எப்படியாவது பணம் கட்டி சீட் வாங்கியிருக்கலாம். அதுதான் இல்லை. அவங்க சொன்னதுக்காகத்தான் பி.எஸ்.சி. சேர்ந்தேன். இப்ப எதுக்கெடுத்தாலும் சந்தேகம், கோபம். ஃப்ரண்ட்ஸ்கூட பீச்சுக்குப் போகக்கூடாதாம், வெளியே சுத்தக் கூடாதாம்… என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து கோவா போறாங்க, என்னை போகக்கூடாதுன்னு சொல்றாங்க..’’

’’அதான் சண்டையா?’’

’’அது போன மாசமே முடிஞ்சிடுச்சு, இப்போ போன் புதுசு வாங்கித்தர மாட்டாங்களாம்.. எல்லாப் பொண்ணும் மூணு மாசத்துக்கு ஒண்ணு மாத்துறாங்க, நான் இதை வச்சிக்கிட்டே ரெண்டு வருஷமா அழுவுறேன். ஒன் ப்ள்ஸ் புதுசா வந்திருக்கு, வாங்கித்தர மாட்டாங்களாம். போன வாரம் ட்ரெஸ் வாங்கித்தர்றேன்னு கூட்டிட்டுப் போனாங்க. ஏழாயிரம் ரூபாய்க்கு வாங்கித்தர மாட்டாங்களாம்.

 நாளைக்கு என் ஃப்ரண்ட் ஒருத்திக்கு பர்த் டே. எல்லோரும் சேர்ந்து கிஃப்ட் வாங்கித் தரப்போறோம், அதனால ரெண்டாயிரம் கேட்டா சண்டைக்கு வர்றாங்க, நாளைக்கு நைட் 12 மணிக்கு சர்ப்ரைசா அவ வீட்டுக்குப் போகவும் விட மாட்டாங்களாம், அதான் இன்னைக்கே ஓடி வந்துட்டேன்… இனிமே நான் அங்கே போறதா இல்லை. காலையில என் ஃப்ரண்ட்ஸ்கூட சேர்ந்து ஏதாச்சும் ஒரு ஹாஸ்டல்ல தங்கப் போறேன்… இன்னைக்கு ஒரு நைட் மட்டும் இடம் குடுத்தா போதும்…’’ என்று கண் நிறைய அழுகையுடன் பேசி முடித்தாள்.

டீன் ஏஜ் வயதுக்கே உரிய பிடிவாதம். நிஜம் தெரியாத வயசு. இப்போது அவளிடம் என்ன பேசினாலும், அதற்கு ஒரு பதில் வைத்திருப்பாள் என்பதால், அத்தனையையும் அமைதியாக கேட்டுவிட்டு எழுந்தாள்.

’’நான் இத்தனை தூரம் சொல்றேன், கேட்டுட்டு பேசாமப் போறீங்க, நீங்களும் உங்க அண்ணனுக்குத்தான் சப்போர்ட்டா…?’’ என்று ஷாலு எழுந்தரிக்க முயல, சட்டென்று அவளருகே மீண்டும் அமர்ந்தாள்.

’’இல்லேம்மா… திடீர்னு நைட் 12 மணிக்கு வயசுப் பொண்ணு வெளியே போறதை அண்ணனால ஏத்துக்க முடிஞ்சிருக்காது, ஆமா , நீ பொண்ணுங்ககூட மட்டும்தான போறே…’’

’’ம்… கிளாஸ்ல பசங்க படிக்க மாட்டாங்களா, அவங்களும்தான் வருவாங்க, ஒரு பையன் கார்ல கூப்பிட வருவான், நாலு பசங்க மூணு பொண்ணுங்க சேர்ந்து நைட் 12 மணிக்கு என் ஃப்ரெண்ட் வீட்டுக்குப் போய் கேக் வெட்டிட்டு ஜாலியா கொஞ்சநேரம் பேசிட்டு நைட் 2 மணிக்கு வந்துடுவோம்…’’

ஷாலுவின் அசட்டுத் துணிச்சலைக் கேட்க பயமாக இருந்தாலும், அதை சொல்லமுடியாமல் வெறுமனே சிரித்துவைத்தாள்.

’’நான் செகண்ட் ஷோ போறதுக்கே எங்கண்ணன் விட மாட்டான், நான் பேசுறேன்.. .நீ தூங்கு..’’

’’இல்லை, நான் வீட்டுக்குப் போகமாட்டேன்’’ என்றாள்.

’’சரிம்மா… நீ வீட்டுக்குப் போகவேண்டாம், காலையில பார்த்துக்கலாம்… ரெஸ்ட் ரூம் போயிட்டு வா… நான் போர்வை எடுத்துட்டு வர்றேன், ரெண்டு பேரும் ஹால்ல படுத்துக்கலாம்”  என்றபடி எழுந்தாள்.

ஷாலு பாத்ரூம் போய்வர  பாலை சுட வைத்துக் கொடுத்தாள். முகத்தைக் கழுவிவிட்டு பளீச்சென வந்து பெட்ஷீட்டில் அமர்ந்த ஷாலு கையில் பாலை கொடுத்ததும், ஆர்வமாக வாங்கிக் குடித்தாள்.

’’தேங்க்ஸ் அத்தை… எங்கே பாலு தூங்கிட்டு இருக்கானா..?’’

’’ம்.. பாலு, மாமா ரெண்டு பேரும் டி.வி.யில ஏதோ படம் பார்த்துட்டு லேட்டாத்தான் படுத்தாங்க… பாவம், அண்ணன் யாருக்கெல்லாம் போன் போட்டு கொடுமைப் படுத்துதோ..?’’

’’யாரு, உங்க அண்ணனா..?  அவருக்கு நான் செத்தாலும் கவலை இல்லை… இந்நேரம் ரெண்டு பேரும் நிம்மதியா தூங்குவாங்க…’’

’’அப்படி பேசாத ஷாலு, உனக்காகத்தான் ரெண்டு பேரும் வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க… உன்னைவிட்டா அவங்களுக்கு யாரு இருக்கா…?’’

’’நல்லா சொல்றீங்க, எங்க அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நான் வேண்டாம். தினமும் நாலு கோயிலுக்குப் போயிட்டு வந்தா போதும்… கோபத்தைக் கிளறாதீங்க… இப்ப தூங்கியிருப்பாங்க… வேணும்னா போன் செஞ்சு பாருங்க’’

’’இன்னும் தூங்கியிருக்க மாட்டாங்க ஷாலு, ஒண்ணு செய்யலாம், நேர போய் பார்க்கலாமா? தூங்கியிருந்தா நீ சொல்றது சரி, அப்படியே என் கூட வந்திரு… நாளைக்கு உனக்கு நானே ஒரு நல்ல ஹாஸ்டல் பார்த்து தங்க வைக்கிறேன்…’’

’’நிஜமா…?’’ சட்டென்று எழுந்தால் ஷாலு. ‘‘சரி, வாங்க… ரெண்டு பேரும் போய் பார்ப்போம். தூங்கிக்கிட்டுதான் இருப்பாங்க. நானே ஒரு ஹாஸ்டலுக்குத்தான் போகலாம்னுதான் இருக்கேன். சொல்றதை செய்வீங்கன்னு  பிராமிஸ் பண்ணுங்க.. நான் வர்றேன்…’’ எழுந்தாள்.

பவித்ராவுக்கு சந்தோஷமாக இருந்தது. அவளுக்கு அண்ணனைப் பற்றி நன்றாகத் தெரியும். அதனால் சத்தம் போடாமல் சுடிதார் மாட்டிக்கொண்டு வந்தாள். வீட்டைப் பூட்டினார்கள்.

’’என் ஸ்கூட்டியிலே போயிடலாம், எப்படியும் திரும்பித்தானே வரப்போறோம்” என்று தன்னுடைய ஸ்கூட்டியைக் கிளப்பினாள் பவித்ரா. தாவி ஏறிக்கொண்டாள் ஷாலு.

தூரத்தில் அபார்ட்மென்ட்டைப் பார்த்ததுமே பவித்ராவுக்கு நெஞ்சுக்குள் பகீரென்றது. அத்தனை வீடுகளிலும் லைட் எரிந்துகொண்டிருக்க, வாசலில் நின்றபடி அண்ணி அழுதுகொண்டிருந்தாள். அருகே போலீஸ் ஜீப்பில் இன்ஸ்பெக்டரிடம் அண்ணன் பேசுவது தெரிய, அருகே போய் வண்டியை நிறுத்தினாள் பவித்ரா.

’’யாருக்கும் தெரியாம கண்டுபிடிங்க சார்,  பொம்பளைப் பிள்ளை சார். அந்தப் பொண்ணுக்கு எதுவும் தெரியாது… சின்னக் குழந்தை சார்’’ கிட்டத்தட்ட அழும் நிலையில் இருந்த அப்பாவைப் பார்த்ததும் ஷாலு சட்டென்று வண்டியில் இருந்து குதித்து அப்பாவைக் கட்டிப் பிடித்தாள்.

 நட்சத்திரங்களைக் காண இருள் தேவைப்படத்தான் செய்கிறது என்று சிரித்துக்கொண்டாள் பவித்ரா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *