மரங்களுக்கு இடையில் நொண்டிச்சாமியாரைப் பார்த்ததும் சட்டென எனக்குள் ஏனோ சந்தோஷம் வந்தது. அருணாவின் கையில் இருந்த உணவுப் பாத்திரத்தை பிடுங்கிக்கொண்டு காட்டுக்குள் நுழைந்தேன்.

நொண்டிச் சாமியார் கடந்தமுறை பார்த்ததைவிட ரொம்பவும் தளர்ந்து போயிருந்தார். கண்கள் உள்ளே போயிருந்தது. ஆனால், வயதுக்கு சம்பந்தமில்லாமல் முடியும் தாடியும் நரைக்காமல் சடைசடையாக சிக்கலுடன் மார்பு வரை தொங்கியது. இடுப்பில் அரதக்காலத்து வேட்டியைக் கட்டியிருந்தார். அது கழட்டவே முடியாதபடி உடம்பில் ஒட்டிப் பிறந்தது போல, அவரது கரும் நிறத்திற்கு மாறியிருந்தது. தேனருவியின் அருகே கூடு கட்டியிருந்த மலைத்தேனை எடுக்க முயற்சித்தபோது, கீழே விழுந்து காலை உடைத்துக் கொண்டவர். அதனால் ஒரு கால் செயல்படவே முடியாமல் போனாலும், அதைப் பற்றி கொஞ்சமும் கவலைப் படாமல் இரண்டு கைகளையும் கீழே ஊன்றி விலங்கினைப் போன்று நடப்பார்.

உடல் ஒடிந்து விழுந்துவிடுவது போன்று மெலிந்து அத்தனை எலும்புகளும் தெரிந்தது. என்னைப் பார்த்த சந்தோஷத்தில் கை நீட்டி சுருட்டு கேட்டார். என்னிடம் இல்லை என்பதை சொல்ல முயலும் முன்னர், எனக்குப் பின்னே வந்த எபநேசர் உயர்ரக சிகரெட் ஒன்றை எடுத்துக் கொடுத்தார்.

அப்போதுதான் எனக்குப் பின்னே எபநேசரும், வைத்தியநாதனும் நிற்பதைப் பார்த்தேன். எபநேசரின் குடும்பத்தார் அருவியை நோக்கி நகரத் தொடங்கியிருந்தார்கள்.

நானும் ஒரு சிகரெட் வாங்கி பற்றவைத்துக் கொண்டு, எபநேசரையும் புகைக்கச் சொன்னேன். மூவரும் எந்த பேச்சும் இல்லாமல் சந்தோஷமாக புகைத்தோம்.

’’ஒரு துறவியா இருந்துக்கிட்டு சிகரெட் பிடிக்கிறது தப்பில்லையா..?’’ என்று மெதுவாக என்னிடம் கேட்டான் வைத்தியநாதன்.

’’பழக்கப்படுத்திக் கொண்டால்தான் எதுவுமே தப்பு வைத்தியநாதா. சிலர் அதிகாலையில் எழுவது, சுடுநீர்க் குளியல், குளித்தபின் உணவு, சைவம் மட்டுமே சாப்பிடுவது, வலதுகாலை எடுத்துவைத்து வெளியே கிளம்புவது போன்ற சில பழக்கங்களை அட்டவணை போட்டுச் செய்வார்கள். இவை எல்லாம் மேலோட்டமாகப் பார்க்கும் போது நல்ல பழக்கம் என்று தெரிந்தாலும், குளிக்காமல் காபிகூட குடிக்க முடியாது என்று யாராவது சொன்னால், அது நல்ல பழக்கமல்ல.’’ என்றபடி புகைத்தேன்.

என்னை உற்றுப் பார்த்தார் நொண்டிச் சாமியார்.

அவரது பார்வையில், ‘நீ பேச்சை விடவே மாட்டாயா?’ என்ற கேள்வி தெரிந்தது.

’’வழி கேட்பவர்களுக்கு தெரிந்ததைச் சொல்கிறேன், உங்களைப் போன்று விட்டேத்தியாகத் திரிய முடியவில்லை…’’ என்று அவரைப் பார்த்துச் சொன்னேன்.

நொண்டிச் சாமியார் எதுவுமே கேட்காதபொழுது, சம்பந்தமில்லாமல் நான் பதில் சொன்னதை இருவரும் விசித்திரமாகப் பார்த்தார்கள்.

’’பரந்தாமன், மகாவீரர், புத்தர், இயேசு, நபி இன்னும் எத்தனை எத்தனையோ மகான்கள் சொல்லியே கேட்காத மக்களை நீ பேசி திருத்தப் போகிறாயா? அதுகூட பரவாயில்லை, நீ சொல்வதுதான் உண்மை என்று எப்படி நம்புகிறாய்?’’ என்று முதல்முறையாக வாய் திறந்தார் நொண்டிச் சாமியார்.

’’நான் உலகியல் உண்மையை இன்னமும் தேடிக் கொண்டுதான் இருக்கிறேன், ஒரு வேளை உண்மை என்பதே இல்லாமலும் இருக்கலாம் என்பதையும் அறிந்தே தேடுகிறேன். அதற்காக எல்லாம் புரிந்த பின்புதான் பேசுவேன் என்றால் காலம் கடந்து விடும்.  எனக்குத் தெரிந்ததை மழை போல் பொழிந்து கொண்டு போகிறேன், தேவைப்படுபவன் நனையட்டும். நான் சொல்வதெல்லாம் உண்மையா என்பதைப் பற்றிய கவலை எனக்கில்லை, அது கேட்பவனைப் பொறுத்தது…’’

’’ நீயும் ஒரு புதிய கடவுளாகப் போகிறாயா?’’

’’மக்கள் இனி எவரையும் புதிய கடவுளாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். கடவுள் இல்லை என்று சொன்ன புத்தரையே கடவுளாக்கிய காலமெல்லாம் போய்விட்டது. இஷ்டப்பட்டவர்கள் எல்லாம் ஆளுக்கொன்று என்று கடவுள்களை உருவாக்கியதால், இப்போது உலகில் லட்சத்திற்கும் மேற்பட்ட கடவுள்கள் இருக்கிறார்கள்.  இன்று தொலைத் தொடர்பு உச்சத்தில் இருப்பதால், இனிமேல் புதிதாக எந்தக் கடவுளும் முளைக்க முடியாது. அதனால் தன்னைக் கடவுள் என்று எவராவது சொல்லிக் கொண்டால் அவன் மனநிலை தவறியவனாகத்தான் இருப்பான்.’’

’’உன்னிடமுள்ள ஒரே கெட்ட பழக்கம் பேச்சுத்தான். அதை விடும்வரை, அமைதியை உன்னால் தரிசிக்க முடியாது. உன்னை என்னுடன் அழைத்துச் செல்லும் ஆசையுடன் வந்தேன், ஆனால் இன்னும் நீ மாறவே இல்லை. மாறவும் மாட்டாய்’’ என்று கோபத்துடன் சொல்லிவிட்டு கைகளை ஊன்றி நடக்க ஆயத்தமானவரை தடுத்து நிறுத்தினேன்.

’’நானும் அமைதியின் ரசிகன், ஆனால் இரைச்சலான ஜனசமுத்திரத்தின் நடுவிலும் அமைதியை ரசிக்க முடியுமென நம்புபவன். நீங்கள் அழைத்தாலும் நான் வருவதாக இல்லை. உங்களை மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி’’  என்று விடை கொடுப்பது போன்று சொன்னதும் என்னை கோபமாகப் பார்த்தார் நொண்டிச்சாமியார்.

’’மனிதர்களை நம்பாதே என்று நான் சொல்வதை விளையாட்டாக எடுத்துக் கொள்கிறாய். சுட்டால்தான் தீயென்று புரியும்.. அனுபவித்தபின்பு மலைக்கு மேல் வா. அங்கே பறவைகளும் மரங்களும் உனக்காகக் காத்திருக்கிறது’’ என்று கோபத்துடன் சொன்ன நொண்டிச் சாமியார் நான் கையில் வைத்திருந்த உணவை வாங்கிக்கொள்ளாமல், போயே விட்டார்.

அவர் போனதிசையையே பார்த்துக் கொண்டிருந்த வைத்தியநாதன், ‘‘சாமி… இவர் யாரு? நான் இவரை கீழே பார்த்ததில்லை, அப்பாவும் சொன்னதில்லை. ஆனா உங்களுக்கு மட்டும் தெரிஞ்சிருக்கே…’’ எனக் கேட்டான்.

’’அவருக்கு மலைக்குக் கீழே இருக்கும் மனிதர்களைப் பிடிப்பதில்லை, எல்லோருமே சுயநலமிகள் என்று ஆத்திரப்படுவார். நான் முன்பு பொதிகை மலையில் சுற்றித் திருந்தபோது சந்தித்திருக்கிறேன் என்றாலும், அவருடன் எனக்கு பெரிய உறவும் இல்லை, உடன்பாடும் இல்லை…’’ என்றபடி மலை மேல் நடக்கத் தொடங்கினோம்.

’’உண்மையில் எல்லா மனிதர்களுமே சுயநலமிகள்தானா?’’ எபநேசர் கேட்டார்.

’’ஆம். இதோ இந்தக் கணத்தில் எதிரே ஒரு யானை அல்லது சிங்கம் வருகிறது என்றால் ஆளுக்கொரு திசைக்கு ஓடி, தன்னை மட்டும் பாதுகாத்துக் கொள்ளும் மிருக குணம்தான் எல்லா மனிதருக்குமான இயல்பு, அதையே சுயநலம் என்றும் சொல்லலாம். உடுத்துவதற்கு நான்கு உடைகள் போதுமென்றாலும், எத்தனை முடியுமோ அத்தனை வாங்கி அடுக்குவதும், வசிப்பதற்கு இரண்டு அறையே நியாயமானது என்றாலும்,  நிறைய அறைகள் கட்டிக் கொள்வதும் சுயநலம்தான்.

ஆடம்பர ஹோட்டலில் விருந்துண்ணச் செல்லும் போது அல்லது நண்பனுக்குப் பிறந்தநாள் பரிசு வாங்குவதற்கு பணம் வைத்திருக்கும்போது, எவராவது ஏழ்மையின் அத்தியாவசிய தேவைக்காக கேட்டாலும் கொடுப்பவர்கள் எவரும் இல்லை. ஏனென்றால் மனிதர்களைப் பொறுத்தவரை, அந்த கணத்தில் ஏழைகளை விட உறவினர்களும், நண்பர்களும்தான் முக்கியம். ஆனால் தனக்கொரு ஆபத்து வரும்பொழுது நண்பர்களையும், உறவினர்களையும் விட்டு ஓடுவதற்கு எந்த மனிதனும் தயங்குவதில்லை…’’

’’இதுல ஒண்ணும் தப்பில்லையே சாமி, தகுதியுள்ளவன் அவனது திறமையால அதிகமா சம்பாதிச்சு நிறைய வாங்குறான், வசதியா இருக்குறான். அதில் எதுக்காக சம்பந்தமே இல்லாத ஒருவனுக்கு பங்கு தரவேண்டும்?’’

’’அப்படியென்றால் நீ ரத்த சம்பந்தம் இருப்பவனுக்கு மட்டும் பங்கு கொடுத்து விடுவாயா? நீ சம்பாதித்து வாங்கிய சொத்துக்களை உன் தம்பிக்கோ, தங்கைக்கோ உன்னால் தாரை வார்க்கமுடியுமா? இன்று நீதிமன்றங்களில் நடக்கும் பெரும்பாலான சொத்து வழக்குகள், உறவுகளுக்கு இடையேயான பாகப் பிரிவினைதான். கூட்டுக் குடும்பமாக இருந்த வாழ்க்கை முறை, இப்போது சிதறிப்போய் ஒண்டிக் குடித்தனமாக மாறியிருப்பதற்குக் காரணமும் சுயநலம்தான். பக்கத்துல இருக்கிற பையன் பென்சில், ரப்பர் கேட்டா கொடுக்கக் கூடாது என்று சிறுவர்களிடமும் சொல்லி வளர்க்கிற இந்த சமூகம், இன்னும் மோசமான சுயநலத்தோடுதான் இருக்கப் போகிறது.’’

’’இந்த சுயநலத்தை மாத்த முடியாதா சாமி…’’

’’எல்லா சந்தோஷத்தையும், தான் மட்டுமே அடைய வேண்டும் என்ற பேராசை காரணமாகத்தான் மனிதன் சுயநலமாக இருக்கிறான். பிறரது அன்பு, ஒத்துழைப்பு மூலம் கிடைப்பதுதான் உண்மையான ஆனந்தம் என்பதை ஒவ்வொரு மனிதனும் உணர வேண்டும். மிகவும் குறுகிய காலத்தில் வாழ்நாள் முடியப்போகிறது என்பதை ஒவ்வொரு மனிதனும் மனதார உணர வேண்டும். விரைவில் மரணம் வரப்போகிறது என்று நம்பத் தொடங்கிவிட்டால், அவனால் பிறருக்கு துன்பம் விளைவிக்க முடியாது. வேறுவழியின்றி உறவினர்கள், நண்பர்களுடன் சந்தோஷமாக சேர்ந்து வாழத் தொடங்கிவிடுவான். அதுபோலவே வாழ்வில் சிலரையாவது சந்தோஷப் படுத்திப் பார்க்கும் ஆனந்தத்தையும் பெற்று விடுவான்.

தெரிந்தோ தெரியாமலோ இந்த உலகத்தில் சுயநலமற்று இருப்பவர்கள் காதலர்கள் மட்டும்தான். ஏனென்றால் அவர்கள்தான் தன்னைவிட, தன் அன்புக்குரியவர் சந்தோஷப் படவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். சுயநலமற்ற காதல் உலகம் முழுவதும் பரவ வேண்டும். மனைவி, குழந்தை, நண்பர், அண்டை வீட்டார், அடுத்த மதம், அடுத்த நாடு என்று அத்தனை மனிதர்களையும் அன்போடு பார்க்கத் தொடங்கும் போதுதான் சுயநலமற்ற சமுதாயம் உருவாகும், மனிதர்களும் சந்தோஷமாக இருக்க முடியும்…’’ என்றேன்.

’’சாமி… மனிதர்கள் சந்தோஷமா இருக்க முடியும்னு சொல்றீங்க, ஆனா அந்த நொண்டிச் சாமியார் ஏன் கோபமா இருக்கார். அவர் மட்டுமில்ல, துர்வாசர், வசிஷ்டர், விசுவாமித்ரர் என்று வேதகால ரிஷிகளும் எப்பவும் கோபமாவே இருக்காங்க. யாரைப் பார்த்தாலும் சாபம் கொடுக்கிறாங்க.. ஏன் அப்படி?’’ விளக்கம் கேட்டான் வைத்தியநாதன்.

’’அமைதியாக உட்கார்ந்து தியானம் செய்து கொண்டிருந்தாலும், அவர்கள் நுனிமூக்கில் எப்போதும் கோபம்தான் சம்மணம் போட்டு அமர்ந்திருக்கும், ஏனென்றால் அவர்கள் பொறாமைக்காரர்கள். கோபத்தைக்கூட அடக்கத் தெரியாத அப்பாவிகள்’’  என்று சொன்னதும் வைத்தியநாதன் ஆவேசமானான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *