அன்று அலுவலக ஆண்டு விழா. ஊழியர்களின் பெரும்பாலானோர் குடும்பத்துடன் வந்திருந்தனர். பெரியவர்களுக்கு மியூசிக்கல் சேர், குழந்தைகளுக்கு பலூன் உடைத்தல் போன்ற விளையாட்டுகள் நடந்து முடிந்தது. வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு கொடுத்துவிட்டு, நிர்வாகத்தலைவர் ராகுலன் ஓர் அற்புதமான சிறப்புரை வழங்கினார். தன்னிடம் பணியாற்றும் ஊழியர்கள், அவரது குடும்பத்தினருக்கு ஏதேனும் குறைகள் இருந்தால், தன்னிடம் தயங்காமல் தெரிவிக்கலாம் என்று அன்புடன் சொல்லி முடித்தார். இப்போது அவரது மகனே நிர்வாகம் கவனிப்பதால் ஏராளமான அந்நிய முகங்களைக் கண்டார்

விழா முடிந்ததும் பலரும் உணவருந்தச் சென்றனர். ராகுலன் மேடையில் இருந்து கீழே வந்த நேரத்தில், அவரை வழிமறித்தாள் வைதேஹி. அதைப் பார்த்ததும், எங்கிருந்தோ வேகவேகமாக ஓடிவந்தான் ராமமூர்த்தி.

‘’சொல்லுங்க. என்ன விஷயம்?” என்று ராகுலன் கேட்டவிதமே வைதேஹிக்கு இனிப்பாயிருந்தது. அதற்குள் அங்கே வந்த ராகவன், அவள் ஏதாவது ஏடாகூடமாக பேசிவிடப் போகிறாள் என்று அவளை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டான். .

‘’சார், இவங்க என் மனைவி. நீங்க நல்லா பேசுனீங்கன்னு பாராட்ட வந்திருக்கா…… உண்மையிலே நல்லா பேசுனீங்க… வா வைதேஹி போகலாம்” என்று அழைத்துச்செல்ல முற்பட, அவர்களை தடுத்து நிறுத்தினார் ராகுலன்.

‘’நீ உண்மையில் சொல்ல விரும்பியதை சொல்லும்மா… இங்கே வேணாம், எல்லோரும் பாப்பாங்க. பக்கத்து அறைக்குப் போகலாம்” என்று காலியாக இருந்த அறைக்குள் சென்று அமர, அவர் எதிரே தயக்கத்துடன் அமர்ந்தாள் வைதேஹி. ராமமூர்த்தியும் பக்கத்தில் அமர்ந்துகொண்டான்..

‘’சார், இவர் இங்கே அசிஸ்டெண்ட் மேனஜரா இருக்கார். இவரை பத்தி புகார் சொல்ல வரலை, ஆனா எனக்கு ஆலோசனை தேவை…’’ என்று தயங்க, மேலே பேசுமாறு கண்ணாலே ஜாடை காட்டினார்.  காலையில எழுந்தரிச்சதும் யார் யாருக்கோ போன் பேசுவார், 9 மணிக்கு ஆபிஸ் கிளம்புவார். நைட் 7 மணிக்கு வருவார்… அப்புறம் கொஞ்ச நேரம் போன் பேசுவார். சாப்பிட்டு அரை மணி நேரம் டி.வி. பார்த்துட்டு படுத்து தூங்கிடுவார்..”

‘’சார், ஆபிஸ் விஷயமாத்தான் போன் பேசுறேன்..” என்று உள்ளே நுழைந்தான் ராமமூர்த்தி.

‘’ஆமா சார். அவர் ஆபிஸ் சமாச்சாரம்தான் பேசுறார். ஆனா, எப்பப் பார்த்தாலும் ஆபிஸ் விவகாரம்னா பொண்டாட்டி எதுக்கு சார், குடும்பம் எதுக்கு, கல்யாணம் முடிச்சு 3 வருஷமாச்சு, இன்னமும் குழந்தை பிறக்கலை, ஒரு ஆஸ்பத்திரிக்குப் போகலாம்னு சொன்னாகூட கேட்கிறதில்லை. நாலு நாள் லீவு போட்டு அம்மா வீட்டுக்குப் போகலாம்னு சொன்னா வர மாட்டேங்கிறாரு” என்று நிறுத்தினாள்.

’’சார், இதையெல்லாம் ஒரு குத்தமா… அவங்களை தனியா போகச் சொன்னாலும் போக மாட்டேங்கிறாங்க, இதை ஒரு குத்தமா சொல்ல வந்துட்டா. இப்படி உழைச்சாத்தான் சார் ரெண்டு வருஷத்துல மேனேஜர் ஆகலாம், அதுக்குப் பிறகு வைஸ் பிரசிடென்ட், இன்னும் நிறைய வேலை இருக்கு சார், சொன்னா புரிஞ்சுக்க மாட்டேங்கிறா. நான் குடிக்கிறேனா, சீட்டாடுறேனா… இல்லை இவங்களை நல்லா சமைக்கலைன்னு திட்டுறேனா..? வேலை பார்க்கிறது தப்பா சார்… இன்னும் லேட்டா பிள்ளை பெத்துக்கலாம், பெரிய ஸ்கூல்ல படிக்க வைக்கணும், சொந்த வீடு வேணும், நல்ல இடத்துக்கு வந்தாச்சுன்னா அதுக்கப்புறம் நிம்மதியா இருக்கலாம்” என்று  புன்னகைத்தான்.

இப்போது வைதேஹியைப் பார்த்தார். ‘’எனக்குப் புரியுது சார்… ஆனா, நான் என்ன செய்றது? மெஷின் மாதிரி இவர் அலையுறதைப் பார்க்க எனக்கு பயமா இருக்கு…”

‘’வேலைக்குப் போன்னு சொல்றேன், கேட்க மாட்டேங்கிறா சார்…”

‘’நான் வீட்ல இருந்து சமைச்சுப் போடுறப்பவே சரியா சாப்பிடுறதில்லை, நானும் வேலைக்குப் போயிட்டா அம்புட்டுத்தான்… உங்க உடம்பு என்னத்துக்கு ஆகும்” என்று சலித்துக்கொண்டாள். ராகுலன் எதுவும் பேசாமல் இருந்ததைப் பார்த்ததும் வைதேஹிக்கு அவநம்பிக்கை வந்துவிட்டது. என்ன இருந்தாலும் முதலாளிதானே என்று சலிப்புடன் எழ இருந்தவளை புன்னகையால் உட்கார வைத்தார் ராகுலன்.

‘’சரியான நேரத்துக்கு சரக்கு டெலிவரி பண்ணலைன்னா என்னவாகும் ராமமூர்த்தி” என்று கேட்டார்.

‘’ஆர்டரை கேன்சலாயிடும் அந்த சரக்கை வேறு யாருக்கும் குடுக்க முடியலேன்னா பெரிய லாஸ் ஆகும்…”

‘’ஆனால், எல்லா நேரமும் அப்படி கொடுக்க முடியுமா?’’

‘’மெஷின் பிரச்னை, மூலப்பொருள் ஸ்டாக்ன்னு பிரச்னை வரும், அப்போத பகுதி பகுதியாக அனுப்பி வைப்போம்.. அல்லது முன்கூட்டியே தகவல் சொல்லிவிடுவோம்…’’

‘’ஒரு முக்கியமான மெஷின் பழுதாகிவிட்டால், தொழிற்சாலையை மூடிவிடுவீர்களா?’’

‘’இதென்ன சார் கேள்வி.. மெஷினை சரிசெய்வோமே தவிர மூட மாட்டோம்…’’

‘’சரி, அனுபவஸ்தரான ஒரு மெஷின் மேன் திடீரென இறந்துவிட்டால்..?’’

‘’உடனே வேறு யாரையாவது கொண்டுவந்து மெஷினை ஓட்ட வைப்போம். இங்கு தொழிற்சாலைதான் முக்கியம், தனி மனிதன் யாரும் அல்ல…’’

‘’இந்த விஷயம் உனக்கு நன்றாக தெரிந்திருந்தும் ஏன், சந்தோஷத்தை தள்ளிப் போடுகிறாய். நீ இல்லையென்றாலும் அலுவலகம் நன்றாகவே இயங்கும். நீ மேனேஜர் பதவிக்கு வந்தாலும் உன் ஓட்டம் நிற்கப் போவதில்லை, அடுத்த பதவிக்காக ஓடுவாய். அதனால் முதலில் உதவி மேனேஜர் பணியை சந்தோஷமாக அனுபவித்து செய். ஒரு வேலையை நாளை செய்ய முடியும் என்றால் தள்ளிப்போடு, ஆனால் சந்தோஷத்தை தள்ளிப் போடாதே… வாழும் காலம் குறைவு என்பதை புரிந்துகொள்..” ’

‘’கஷ்டப்பட்டு உழைப்பது தவறா…’’

‘’நீ எட்டு மணி நேரம் உழைக்கத்தான் சம்பளம் தரப்படுகிறது, அதனால் இப்போது பார்க்கும் வேலையை புத்திசாலித்தனமாக குறைந்த நேரத்தில் உழைக்கக் கற்றுக்கொள். அலுவலகத்தை வீட்டுக்குக் கொண்டு செல்லாதே. வீட்டில்தான் உனக்கு சந்தோஷம் காத்திருக்கிறது. அதனை தொடர்ந்து நீ தள்ளிப் போட்டால், விரும்பத்தகாத விளைவுகள் உருவாகலாம், அதன்பிறகு சந்தோஷம் நிரந்தரமாக விலகிவிடும்…”

ராமமூர்த்திக்கு பளீச்சென உண்மை புரிய, வைதேஹியின் கையை அழுத்தமாகப் பிடித்துக்கொண்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *